Thursday, January 03, 2008

வீடு கட்டுவதில் அவஸ்தைகள்

பத்து வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த Flat முறை பிரபலபட தொடங்கியது,அதுவரை எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் தான் அதிகம்.கொஞ்சம் பணமும், இடமும் கிடைத்தவுடன் இந்த கிணற்றில் குத்தித்து நீந்தவும் முடியாமல் மூழ்கவும் இஷ்டமில்லாமல் படும் அவஸ்தையை வார்த்தைகளால் சிலரால் மட்டுமே விவரிக்க முடியும்.

நான் பார்த்தவரை இந்த வலைப்பதிப்புகளில் திரு டி பி ஆர் ஜோசப் ( தி.பார்க்கிறேன் - தேடி அலுத்துவிட்டேன்)மற்றும் துளசி கோபாலின் (இங்கு சொடுக்கி அவர்களின் கடைசி பதிவை பார்த்து அங்கிருந்து நூல் பிடிச்சி முதலில் இருந்து படிக்கவும்)நியூசிலாந்து வீடு கட்டி அதன் அனுபவங்களை நகைச்சுவையுடன் கொடுத்து அவர்கள் வலியை கொஞ்சம் மறந்தார்கள்.நான் வேலை பார்ப்பது கட்டுமானத்துறை என்றாலும் என்னுடைய வேலைகள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களின் மேற்பார்வையில் கட்டப்படும் அளவில் பெரிய கட்டிடங்கள்.இதில் கொத்தனார் வரை போய் வேலையை பார்க்கவேண்டி வராது.வேலை ஆட்களை மேற்பார்வையிட அந்த குத்தைக்காரர் ஆள் இருப்பதால் என்னுடைய நேரடி அனுபவம் குறைவு.

இதே வீடு கட்டவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கு தகுந்த குத்தைக்காரரை கண்டுபிடித்து வேலை ஒப்படைத்துவிட்டு சும்மா இருக்க முடியாது,ஏனென்றால் இந்த வேலை செய்யும் பலர் முன் அனுபவ முறையிலேயே கற்றுக்கொண்டு வேலை செய்வார்கள்.அவர்களுக்கு என்று ஒரு குழுமம் இருக்கும் அந்த ஆட்களை வைத்து தான் வேலை பார்ப்பார்கள்,இந்த வேலைக்கு வாங்கிய சாமான்களை கொஞ்சமும் லட்ஜை இல்லாமல் அடுத்த இடத்தில் கொடுத்து வேலை பார்ப்பார்கள்.அவர்களுக்கு வேலை தெரியுமே தவிர காரண காரியம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள்.இது இந்த துறையின் உள்ள பெரும் குறை.உடல் உழைப்பு சார்ந்த வேலை அதிகம் என்பதால் படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள்.இவர்களுக்கு மேஸ்திரியாக இருப்பவர்களும் இவர்களுக்கு முழுமையாக சொல்லித்தர மாட்டார்கள்.கண்ணுக்குத்தெரியாத அடிமைத்தனம் இங்கும் இருக்கும்.எல்லா சாமான்களும் திருட்டு போகும்.டிபன் பாக்ஸில் சிமின்ட் திருட்டு போவதை திரு ஜோசப் அழகாக சொல்லியிருந்தார்.நினைத்தது ஒன்று அமைந்தது ஒன்று என்று இருந்தாலும் வேறு வழியின்று அமைந்ததை வைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் என்று துளசி முடித்திருந்தார்.

ஆமாம் இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா?

போன வாரம் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது அதுவும் எதேச்சையாக,திரு தேவன் எழுதியது.



அவர் அனுபவித்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் எழுதிய முறையில் பார்த்தால் நிச்சயம் அப்படித்தான் வீடு கட்டியிருப்பார் என்று தோனுகிறது.அந்த புத்தகத்தின் சில படங்களை இங்கு போட்டுள்ளேன் முடிந்தால் படிக்கவும் அதுவும் வீடு கட்டும் யோஜனையில் இருந்தால் அதற்கு முன்பு படித்துவிடவும்.




முதல் பக்கத்தில் இப்படி..படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.



பி.கு: நல்ல வேளை நடுத்தர குடும்பங்கள் இப்போதெல்லாம் Flat ஐ தான் நாடுகிறார்கள்.

17 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னளவில் தேவனைப் போன்று நகைச்சுவையாய் எழுத இன்னும் யாரும் வரவில்லை. அவர் நடையில் எனக்குத் தீராத மோகம்.

cheena (சீனா) said...

சும்மாவா சொன்னார்கள் - வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணம் பண்ணிப் பார் என்று. ஒரு வீடு கட்டுவதற்குள் உயிர் போய் விடுகிறது. சில பேர் அத்ர்ஷ்டக்காரர்கள் - ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொள்கிறார்கள் -

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்
இவரைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேனே தவிர இது தான் நான் படிக்கும் முதல் புத்தகம்.சும்மா அங்குலம் அங்குலமாக சொல்லியிருக்கார்.
அந்த துறையில் இருப்பவர் அல்லது வீடு கட்டி சூடு பட்டவர்கள் மட்டுமே இவ்வளவு விவரமாக எழுதமுடியும்.
வீடு கட்ட 20 ஆயிரம் என்று சொல்லும் போது இது 60 களில் நடந்த மாதிரி எழுதியுள்ளார்.

வடுவூர் குமார் said...

வாங்க சீனா
முதல் முறை வருகைக்கு நன்றி.
மொத்தமாக பழைய பதிவுகள் எல்லாம் பார்த்துவிட்டீர்கள் போலும்!!
கருத்துக்கு நன்றி.
கடைசியில் தேவன் மாதிரி சிலர் பல வீடு கட்டுகிறார்கள் என்று சிரிப்பு வெடியை கொளுத்திப்போட்டு போயிருக்கீங்க.. :-))

sury siva said...

என்னுடைய 65 வருட கால அனுபவத்தில் ஒரு வீடு கட்டி, முடிவில்
மன திருப்தியுடன், அமைதியுடன் இருப்பவர்கள் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும்
மிகவும் குறைவுதான். வீடு கட்டறபோது போடற ப்ளான், திருமணத்திற்கு முன்னாடி
நம்மோட பார்ட்னர் இப்படி இப்படி இருக்கணும்னு ஒரு மனசுலே கோட்டை கட்டறோம்ல,
அதுபோலத்தான்.
வீடு கட்டும்போது எப்படி மன நிலை இருக்குதுன்னா, நம்ம கலியாணம்
கட்டப்போற பெண்ணை (அல்லது பையனை) தேடித்தேடி அலுத்துப்போய், ஒவ்வொண்ணா
விட்டுக்கொடுத்துண்டே வந்து, சரிடா போதும், இனிமே தேடறதுக்கு டயம் இல்லை (அதற்குள்ளே
கிழவனாகிவிடுவோமோ என்ற பயம் வந்து ) கடைசியா மாட்டின ( டெலிபரேட்டாவே இந்த வார்த்தையை
போடறேன்.) ஒண்ணு ரண்டிலே ஒண்ணை 50 பர் சென்ட் திருப்தியோட தாலி கட்டற (அல்லது கழுத்தை
நீட்டற) மாதிரிதான். முடிச்சா போதும்டா சாமின்னு தோணிப்போடும்.
வீடு கட்டிட்டு கிரக ப்பிரவேசம் (புதுமனை புகுவிழா) நடக்கும்போதே வந்த மாமன்,சித்தி எல்லாம்
ஏண்டா யாருகிட்ட கான்ட்ராக்ட் கொடுத்தேன்னு புரிஞ்சும் புரியாமலும் பேசறது எப்படி இருக்கும்னா
சாந்தி முகூர்த்தம் (முதல் இரவு) போது ஏதாவது உளரப்போய் அதை தப்பும் தவறுமா அதர் பார்ட்டி புரிஞ்சுண்ட
நிலையிலே ஆகத்தியம் பண்ணி சரி,சரி அதையெல்லாம் அப்பறம் பாத்துப்போம், இப்ப இந்த வேலையை
மட்டும் கவனிப்போம் என்ற மாதிரி ஒரு நிலை ஏற்படும்.
கலியாணம் கட்டி ஒரு முதல் 30 நாள் கழிஞ்சப்புறம் தான் அந்த வீட்டு லட்சணம் முதல்லே லேசாவும், பின்னே பிரகாசமும் தெரிய ஆரம்பிக்கும். "அப்பவே எங்க அத்தை சொன்னாங்க .. நன்னா விசாரிச்சையான்னு,, செய்யலையே..இப்ப யாரைசொல்லி என்ன செய்யறதுன்னு" பினாத்திறது அடிக்கடி காதுலே விழும். இது எப்படின்னா,
பிறகு, வீட்டிலே போய், சாமான் செட்டெல்லாம் வைத்து குடித்தனம் ஆரம்பிக்கும்போது தான், பல பல‌
குறை பாடுகள் தெரியவரும். அப்பவே சொன்னேன். நீங்க தான் என் வாயை அடைச்சுப்போட்டீங்களே
என்று பெட்டர் ஹாஃப் சத்தம் போடுவது எப்படி இருக்கும் அது போலத்தான்.
ஆறு மாதம் ஆயிடுத்துன்னு வைச்சுக்கோங்க.
கொஞ்சம் பேர் ஹூம் அதுக்கெல்லாம் கொடுத்து வைச்சுருக்கணும்னு மனசுக்குள்ளே ரோதனை படறாங்களே
அது போல இருக்கும்.

மொத்ததிலே பாத்தா, ஒரு வீடு கட்டறதை விட, வள்ளுவன் சொன்ன அறம், பொருள், இன்பம் எல்லாம்
கடந்து வீடு அதாவது மோட்சத்தை அடைவது தான் இன்னும் சுலபம் என்று தோணும்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

வடுவூர் குமார் said...

வாங்க சூரி
முதல் வருகைக்கும் நீளமான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொன்ன விஷயம் பலருக்கும் பொருந்தும் என்றாலும் மனைவி விஷயத்தில் எனக்கு அனுபவம் இல்லை ஏனென்றால் எந்த எதிர்பார்ப்பும் கல்யாணத்துக்கு முன்பு இல்லை.

sury siva said...

மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....கண்ணதாசன்.

கல்யாணம் கட்டிப்பார். வீட்டைக்கட்டிப்பார்.. முதுமொழி.

எதிர்பார்ப்புகளே இல்லை எனச்சொல்வது human psychology
க்கு புறம்பான விஷயம். சில சமயம் ஒருவேளை சொந்தத்திலேயே
திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இது பொருந்தலாம்.

ஆனால் எதிர்பார்ப்புகளே இல்லாம இருந்ததும்
எதிரில்லே பார்க்கிறது எதிர்பார்ப்புக்கு மேலே அமைந்தது
நீங்கள் கொடுத்து வைத்தவர் எனத்தான்
சொல்லாமலே சொல்லுகிறது.
God Bless You.
நீங்கள் எனது வலைப்பதிவு வந்ததாக புலனாய்வுத்துறை
தகவல் கிடைப்பதால்,
செல்லவும்.
மனமும் நேரமும் இருந்தால், எனது வலைப்பதிவுகள்

கர்னாடிக் இசை திரைஇசையில் அதன் தாக்கம்
http://movieraghas.blogspot.com

ஆன்மீகம்.
http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
புதுமையில் தினம் தினம்.
http://anewworldeveryday.blogspot.com
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
http://meenasury.googlepages.com
சும்மா இரு. சொல்லற.
http://thesilentzonewithin.spaces.live com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

வடுவூர் குமார் said...

உங்களை சூரி என்று ஒருமையில் எழுதிவிட்டேனே.. மன்னிக்கவும்.
உங்கள் பக்கங்களை போய் பார்த்தபிறகு தான் உங்கள் பல முகங்கள் தெரிந்தது.
தொடருங்கள்.

துளசி கோபால் said...

ஆஹா....நம்ம சுப்புரத்தினம் சொன்னதுலே முக்காவாசிக்கு ஒரு ரிப்பீட்டேய்....:-)))))


நானும் இன்னும் கொஞ்சம் கொஞ்சமா வீட்டை இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருக்கேன். 100 % வேலையை முடிச்சோம் என்ற திருப்தி இன்னும் இல்லை.

அடுக்களைப் பக்கத்து 'டெக்' கில் சூரியன் படுத்தறான்னு 'ஷேட் க்ளாத்' போட்டுருக்கோம்.

வருசத்துலே ஒரு பத்து அல்லது பதினைஞ்சுநாள்தான் சூடுவருதுன்னாலும், அப்படியே மயக்கம் வரும் எரிச்சலான சூடு. இத்தனைக்கும் 26/27 டிகிரிதான்.


இன்னும் தேவனோட புத்தகம் படிக்கலை. அடுத்தமுறை வாங்க முயற்சிக்கிறென்.

sury siva said...

ஒருமை உரிமையின் பால் வரும் சொல். அது
இதயத்தாள் மட்டுமன்றி
இமையத்தோனையும்
இனிமையாய் அழைக்கும் சொல்.

அது இருக்கட்டும். எனது தஞ்சை வீட்டை (3 க்ரவுண்ட், 1100 ச.அடி கார்பெட் ஏரியா)
நான் 1983ல் ரூ 20 ஆயிரத்திற்குத்தான் கட்டி முடித்தேன். 2001ல் ஓய்வு பெற்றபின்
ரூ 50000 செலவழித்து அதே வீட்டிற்கு பெயிண்ட் அடித்தேன்..

அன்புடன்
சுப்பு ரத்தினம்
தஞ்சை.

வடுவூர் குமார் said...

துளசி
உங்கள் பதிவில் அனேகமாக அவ்வளவு பதிவையும் படித்திருப்பேன் என்று நம்புகிறேன்,எவ்வளவு மாற்றங்கள்,தேவைக்கு ஏற்ற மாற்றி அமைத்து என்று பல வித தொந்தரவை யார் சொல்வார்கள்.எனக்கு தெரியாத பல விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
மிக்க நன்றி.
ஒரு வேளை அந்த புத்தகத்தை படித்த பிறகு நமக்கு இப்படியெல்லாம் ஆகவில்லை என்று நிச்சயம் சந்தோஷப்படலாம்.ஆனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் சிரிப்பு வெடி போட்டு வைத்திருக்கார்..தேவன்.

வடுவூர் குமார் said...

சூரி சார்
புரிதலையும் கவிதையாகவே சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்.
நீங்கள் சொன்ன மாதிரி நேரம் கிடைக்கும் போது வந்து செல்கிறேன்.
இந்த கர்நாட்டிக் சங்கீதத்தை மாத்திரம் ரசிக்ககூடிய ஜீன் ஏனோ என்னிடம் இல்லை போலும். :-))
20000 க்கு கட்டின வீட்டுக்கு 50000 கொடுத்து வர்ணம் பூசினீர்களா?கொடுமை தான்.
என் அம்மா உறவினர்கள் அனைவரும் தஞ்சையில் தான் இருந்தார்கள்.அப்போது சின்ன ஊராக இருந்ததால் ஒருவேளை தெரிந்திருக்கக்கூடும்.
என் அம்மாவும் நீங்களும் சமவயது காரர்கள் என்பதால் சொல்கிறேன்.

காட்டாறு said...

ம்ம்... வீடு கட்டும் போது இதையெல்ல்லாம் திரும்ப வந்து வாசிக்கிறேன். இப்போ ஜகா வாங்கிக்கிறேன் குமார் சாரே. :-)

சூரி அவர்களின் வாழ்வுநெறி ப்ளாக் கிடைத்ததற்கு நன்றி!
இங்கு செல்ல இயலவில்லை:
http://thesilentzonewithin.spaces.live com

வடுவூர் குமார் said...

காட்டாறு
திரு சூரி பெரிய பொக்கிஷமே வைத்திருக்கார்,சில நம் காலத்தை கடந்தவை, தேடினாலும் கிடைக்காதவை.

காட்டாறு said...

நீங்க சூரி அய்யாவை பற்றி சொல்வது சரிதான். நேத்து அவரது பதிவுகள் எல்லாவற்றையும் முழுமூச்சா வாசிச்சாச்சே... நமக்கு பிடிச்ச திருவள்ளுவரும், தாயுமானவரும் அவர் பதிவுலே சாரளமா விளையாடியிருக்காங்க.

திவாண்ணா said...

நான் மிகவும் ரசித்து படித்த புத்தகங்களில் ஒன்று! ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பே ஒரு சுவை. இந்த காலத்தில் படிக்கும்போது லஞ்சம் இல்லாமல் "அப்ரூவல்" கொடுத்தது நம்ப முடியாமல் இருக்கும். வரட்டுமா? வணக்கம் பல.....

திவா

வடுவூர் குமார் said...

வாங்க திவா,
உண்மை தான், லஞ்சம் கொடுக்காமல் அப்போதெல்லாம் அப்ரூவல் கொடுத்திருத்திருக்கிறார்கள்.
முதல் வருகைக்கு மிக்க நன்றி.