Friday, August 13, 2010

சென்னையில் Sink Hole?

Sink Hole இதுக்கு தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை ஆனால் கீழ்கண்ட படங்களை பாருங்கள்.முதல் படம் குவாண்டமாலா எனும் இடத்தில் ஏற்பட்டது ஆனால் இரண்டாம் படம் விருகம்பாக்கம் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் ஏற்பட்டுள்ளது,அதிசியமாக யாரோ புண்ணியவான் அதை சுற்றி பாதுகாப்பு பட்டையை கட்டியுள்ளார்கள்.

முதல் படம் குவாண்டமாலாவில் ஏற்பட்டது.
நம்மூர் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த மாதிரி பூமி உள்வாங்குவது என்பது சாதரண நிகழ்வு தான் ஆதாவது தொலைப்பேசி அல்லது கழிவு நீர் பாதைகளை ஏற்படுத்திவிட்டு பிறகு அதை முறையாக மூடாமல் விட்டால் அந்த இடமே செயற்கையாக தாழ்ந்திருக்கும்.இவ்விடம் அப்படியில்லாமல் மொத்தமாக இறங்கியிருப்பது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்று அஞ்சவேண்டியிருக்கு.


Monday, August 09, 2010

இது சரியல்ல.

ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.

முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.

இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.

முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.

தவறான முறைகள்.

சரியான முறை கீழே.

Sunday, August 01, 2010

புது மாதிரியான செங்கல்.

கடந்த ஒரு வருடமாக வீடு வாங்க சுற்றி சுற்றி வந்த பல இடங்களிலும் நான் கண்டது இருவகைகளை கொண்ட சுவர்களை மட்டுமே,ஒன்று சுட்ட/பாரம்பரிய செங்கல் மற்றொன்றுஃபிளை ஆஸ் மூலம் செய்யப்படும் செங்கல்.முந்தையது அளவில் சிறியது அடுத்தது அளவில் பெரியது ஆனால் மற்றது சுவர் வேலைகள் சுலபமாக முடிக்கக்கூடியது.இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மட்டுமே மனதில் இருந்த வேலையில் இன்று மதியம் படப்பை அருகே ஒரு வீடு கட்டுமானத்தளத்துக்கு போன போது எதேச்சையாக கண்ணில் பட்டது அவர்கள் செய்திருந்த சுவர் வேலை.

கீழே உள்ளது ஒரு கல்லின் நீள,அகல உயரங்கள்,சுமாராக 18x18x36 செ.மீட்டர்.

இதனுள் இருக்கும் ஓட்டைகள் அப்படியே இருக்கும் என்பதால் வெளிப்புற சூடு உள்ளே வராது அதோடு உள்ளிருக்கும் குளுமையும் அவ்வளவாக வெளியே போகாது.அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேற்பூச்சு கூட தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.

இப்படம் முகப்பில் எடுக்கப்பட்டது.

நிலை வாசலில் சுவர் முடியும் பாகம் இது,இதன் மூலம் அதன் வேலை முறையை அறிந்துகொள்ளலாம்.