Friday, January 09, 2015

நிசகர்தாமா-திபெத் மோனாஸ்டரி

மடிக்கேரின் இரண்டாவது நாளில் முதல் பாதி தலைக்காவிரி பக்கம் சுற்றிய பிறகு மைசூர் பக்கம் இருக்கும் சில சுற்றுலா தளங்களை பார்க்க அப்படியே கிளம்பினோம்.

முதலில் போனது திபெத் மோன்ஸ்டரி,கிட்டத்தட்ட திபெத்க்கே வந்த மாதிரி இருக்கு.பெரிய ஹால் ஒன்றில் புத்தருடன் இன்னும் இருவர் அவர் பக்கம் உட்கார்ந்திருக்கார்கள்.வேறு சில அறைகளில் மந்திரானம் நடந்துகொண்டிருந்தது.நல்ல பராமரிப்புடன் சுத்தமாக வைத்திருக்கார்கள்.







இங்கு சுமார் 1 மணி நேரம் சுற்றிய பிறகு அங்கிருந்து கிளம்பி நிசகர்தாமா என்ற இடத்துக்கு போனோம்.சாலையில் இருந்து ஒரு தொங்கு பாலம் வழியாக காவிரியை தாண்டி ஒரு மணல் மேடு பகுதிக்கு போனோம்.படகு சவாரி,யானை சவாரி,கயிற்றில் தொங்கிக்கொண்டு பரணில் இருந்து கீழே வருவது போன்றவை இருந்தது.சிறுவர்கள் பொழுது போக்க சுமாரான இடம்.

இங்கிருந்து வெளியே வரவே மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் விடுதிக்கு செல்ல 6 மணியாகிவிடும் என்பதாலும் ஊர் சுற்றலை இத்தோடு முடித்துக்கொண்டோம்.வரும் வழியில் டிரைவருக்கு தெரிந்த கடை,விலை மலிவு என்று சொல்லி இறக்கிவிட்டார்,பல ஐட்டங்கள் சென்னையிலேயே சல்லிசாக கிடைப்பதால் வந்த வேளைக்காக ஒரு காப்பிப்பொடி பாக்கேட் மட்டும் வாங்கிக்கொண்டார் மனைவி.
மறுநாள் விடியற்காலை இங்கிருந்து மைசூருக்கு பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்ததால் வேறு எந்த வேலையையும் வைத்துக்கொள்ளமால் ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம்.

அடுத்த இடம் மைசூர்.

Tuesday, January 06, 2015

மடிக்கேரி -தலைக்காவேரி

மடிக்கேரியில் இரண்டாவது நாள். முதலிலேயே சொல்லியபடி ஓட்டுனர் காலை 8.30 மணிக்கு விடுதிக்கு வந்தார்.சிற்றுண்டிக்கு பக்கத்தில் உள்ள உணவகத்தில் முதல் நபராக முடித்தோம்.

மடிக்கேரியில் இருந்து சுமார் 1.30 மணி நேர பயணத்தில் மூன்று நதிகள் கலக்கும் சங்கமம் என்று கருதப்படும் திரிவேணி சங்கமம் சென்றடைந்தோம்.இரண்டு வாய்கால்கள் சேர்வதை மட்டுமே பார்க்கமுடியும்.மூன்றாவதாக உள்ளது நிலத்துக்கு அடியில் ஓடுவதாக ஐதீகம்.வடக்கில் உள்ள அதே ஐதீகத்தை இங்கு போட்டு அதை ஒரு சுற்றுலா இடமாக மாற்றிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.இங்கும் ஒரு கோவில் உள்ளது அதுவும் கேரள பாணியில் இருந்தது.

திரிவேணி சங்கமம்.




கேரள பாணியில் அமைந்துள்ள கோவில்.


இங்கு ஒரு 40 நிமிடம் செலவு செய்த பிறகு அங்கிருந்து ஒரு 30 நிமிடத்தில் தலைக்காவிரி சென்றடைந்தோம்.இரண்டு குளங்கள் உள்ளது.இதுவும் ஒரு ஐதீகம் தான்.நதி மூலம் பார்க்ககூடாது என்ற சொல்லாடல் பழைய கால பாடல்களில் வரும் அதனால் பலரும் நம்புவதை நாமும் ஏற்றுக்கொண்டு மேலே போவோம். இதற்கு அருகிலேயே சுமார் 300 படிகள் ஒரு மலை மீது போய்கொண்டிருக்கும்.முதலில் சுமார் 25 படி ஏறும் முன்பே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பிக்கும் அதையெல்லாம் கடந்தால்,மலை உச்சியில் அழகான காட்சிகள் காண கிடைக்கும்.நாங்கள் போன சமயம் சும்மா அட்டகாசமாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.அங்கு எடுத்த சில படங்கள் கீழே.

தலைக்காவேரி.






 ஏறி இறங்க மற்றும் சுற்றிப்பார்க்க 1.30 மணி நேரம் ஆனது.இங்கிருந்து திரும்பும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி டீ /காபி குடித்தோம்.அந்த கடைக்கு பின்புறம் சின்ன தோட்டம் வைத்துள்ளார்கள் அதில் காபி/அன்னாசி/சப்போட்டா/மிளகு என்று பல செடிகள் பயிரிட்டிருந்தார்கள். காபியில் இருவகை ரோபஸ்டா மற்றும் அரபி என்றும் மிளகு பயிரியில் இருந்து வரும் பணம் எஸ்டேடில் வேலை மற்றும் நிர்வாக செலவுக்கு சரியாகிவிடும் என்றும் காபி விற்பனை முழுவதும் லாபம் என்று ஓட்டுனர் சொன்னார்.

காபி பழம்



கொடி மிளகு.

காபிச்செடி


இது அனைத்தும் தலைக்காவிரி பக்கம் என்பதால் மதியம் வரை சுற்றிவிட்டு மதிய சாப்பாட்டுக்கு மடிக்கரி வந்து சேர்ந்தோம்.இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.