Wednesday, September 30, 2009

வடுவூர் துரைசாமி அய்யங்கார்

இவர் என்ன தான் என் அம்மா வழி ஊரில் பக்கத்துவீட்டில் இருந்தாலும் இவரை பற்றி குறைந்த அளவே தெரிந்துவைத்திருந்தேன்.இவர் எழுதிய எந்த புத்தகத்தையும் படித்ததில்லை.இம்முறை ஊருக்கு போன போது என்னுடைய மாமாவிடம் இவரைப் பற்றி கேட்ட போது இவர் எழுத்தைப் பற்றி அவ்வளவாக சொல்லாவிட்டாலும் நமது பக்கத்து வீட்டில் தான் அவர் இருந்ததாகவும் பிறகு சென்னை சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் சொன்னர்.அதில் ஓரளவு உண்மை என்பது கிழ்கண்ட புத்தகம் உறுதிப்படுத்தியது.இப்புத்தகத்தை படிக்கும் போது இவரின் எழுத்து அப்படியே “தேவனின்” எழுத்து போலவே இருந்தது.சிரிக்க சிரிக்க நிறுத்தவே முடியாத அளவுக்கு இருக்கு.Long Missing Links என்னும் ஆங்கில புத்தகத்தை தன் சொந்த செலவிலேயே வெளியிட முயன்று அது சரிவர போகாமல் திரும்ப ஊருக்கே போனதாக சொல்லப்படுகிறது.இவருடைய பல நாவல்கள் ஆங்கில மூலத்தில் இருந்தே தழுவி எடுக்கப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார்,இவருடைய கதை “மேனகா” & “மைனர் ராஜாமணி” திரைப்படங்களாகவும் வந்துள்ளது.

இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆங்கில புத்தகத்தின் கருத்தை அறிய கூகிளிடம் போட்ட போது எதேச்சையாக இந்த வலைப் பதிவு விழுந்தது.அய்யையோ!! என்ன மாதிரி அலசல்/விபரங்கள்!! முதல் பத்தியில் உள்ளதை டிஸ்கியாக எடுத்து படித்துப்பாருங்கள்.நமது சரித்திரத்தையை எப்படியெல்லாம் மாற்றி நம்மை நம்பவைத்துள்ளார்கள் என்று ஆச்சரியமாக இருக்கு.

நிஜத்தை பார்க்க இங்கு அழுத்தவும்.

மறுபடியும்....இச்சுட்டி யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் அல்ல.

அப்பதிவை எழுதியவரே அந்த பக்கம் வருவதில்லை போலும்,அனுமதி கேட்டும் பதில் இல்லை.மௌனம் சம்மதிற்கு அறிகுறி என்று எடுத்துக்கொண்டு வெளியிடுகிறேன்.

காலை நேர மீட்டிங்

நான் தங்கியிருந்த அறைக்கு வெளியே தினமும் காலை 7 மணிக்கெல்லாம் ஆட்கள் வந்து வேலை ஆரம்பித்துவிடுவார்கள் ஆனால் இன்று பார்க்கும் போது....இது வேறு ஒன்றும் அல்ல. Tool Box Meeting.

கட்டுமானத்துறையில் Tool Box Meeting என்பது மிகவும் முக்கியமானது அதை கடைபிடிப்பது அவசியம்.அன்றன்று வேலையை ஆரம்பிக்கும் போது செய்யப்போகிற வேலை அதன் பாதுகாப்பு நடவடிக்களை அந்தந்த பாதுகாப்பு அதிகாரி அல்லது மேற்பார்வையாளர் தொழிலாளர்களுக்கு விவரிப்பார்.அந்த நிகழ்ச்சி தான் மேலே உள்ள படத்தில் இருக்கிறது போலும்.

மஸ்கட் சில படங்கள்.

முதன் முதலில் போன கடற்கரை.இங்கும் படகு சவாரி இருக்கு.இந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது.அதே இடம் மேலிருந்து பார்கும் போது.மஸ்கட் கோட்டை.பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் Gate வரை போய் பார்க்கலாம்.கீழே உள்ள இரண்டு படங்களும் மத்ரா என்ற இடத்திலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகள்.Saturday, September 26, 2009

நக்கீல் வென்னீர் ஊற்று.

23/9/09
இன்று போகலாம் என்று நினைத்திருந்த இடம் வெகுதூரம் என்பதால் முன்னமே முடிவு செய்து காலை 10 மணிக்கு கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்து மகிழுந்தை வரவழைத்தோம்,அவரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

இது நாள் வரை மஸ்கட்டின் கிழக்கு பகுதியை மட்டுமே சுற்றி வந்ததால் இன்று மேற்கு பகுதியை சுற்றுவோம் என்று கிளம்பினோம்.அவ்வளவாக போக்குவரத்து இல்லாததால் வாகனம் அவ்வபோது எச்சரிக்கும் மணி ஒலித்தாலும் 120 கி.மீட்டருக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தது.
சுமார் 130 கிமீட்டர் தள்ளி ஒரு வலதுபக்க வளைவில் திரும்பியது.வளைவில் இருந்து 10 கி.மீட்டர் உள்ளே போனதும் சாலை கடலின் மீது முடிந்தது,இங்கும் சில பாறைகள் நடுக்கடலில் தனித்திருந்தது.இன்னும் கொஞ்ச வருடங்கள் கடல் அரிப்பை மீறி இருக்கும் என்று தோன்றுகிறது.மகிழுந்தை பார்த்ததும் படகு சவாரிக்கு ஆள் பிடிக்க ஒருவர் ஓடி வந்து அரபிக் ஏதோ கேட்டார்,நாங்கள் யாரும் போகும் நிலையில் இல்லாததால் வரவில்லை என்று சொன்னோம்.கொஞ்சம் வருத்ததுடன் சென்றார்.அவ்வப்போது வேறு சிலரும் வந்து படகு சவாரிக்கு கூப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.நீண்ட கடற்கரை,ஆரவாரமில்லாத அலை,.கரையில் இருந்து வெகுதூரம் ஆழமே இல்லாத்தால் பலர் உட்கார்ந்து குளித்துக்கொண்டு அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

குடும்பம் உல்லாசமாக பொழுது போக்க உகந்ததாக இருந்தாலும் முழுமையாக அனுபவிக்க மற்ற பிற வசதிகள் இல்லை.இங்குள்ள நில அமைப்பே சாலையில்லாவிட்டாலும் 4 வீல் வண்டியை வடக்கு பக்கம் திருப்பி ஓட்டிக்கொண்டிருந்தால் கடற்கரை வந்துவிடுகிறது அப்படியே அது பீச்சாகிவிடுகிறது.விவசாய நிலம் கிடையாது,பொட்டக்காடு அதனால் கேட்க ஆள் கிடையாது.
இவ்வளவு பெரிய கடற்கரை இருந்தாலும் தண்ணீர் குடிக்க 2 கடைகளே இருந்தன,குப்பை போடக்கூட சரியான வசதியில்லை.கருப்பு நெகிழியுடன் ஒருவர் சுற்றி குப்பைகளை பொருக்குகிறார். கீழே உள்ளது தான் குப்பை கூடை.
கடலில் உள்ளே இறங்க ஆசை இருந்தாலும் நீச்சல் ஆடை எடுத்துவராததாலும் கரை பக்கமே நின்றுவிட்டு திரும்பினோம்.

அடுத்து ஒரு மலைபக்கம் போகலாம் என்று ஓட்டுனர் சொன்னார்.ஓட்டுனரும் என் நண்பரும் மலையாளத்தில் சம்சாரித்துக்கொண்டிருந்ததால் முழுவதும் விளங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் பெரிய இழப்பொன்றும் இல்லை.மலைவாசற் தலமாச்சே மலைக்கு மேல் வண்டி போகும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.இதற்கிடையில் வண்டிக்கு பெட்ரோல் போடும் நேரம் வந்துவிட்டதால் பங்க் உள்ளே நுழைந்தது.நண்பர் அப்படியே கடைகு போய் செய்தித்தாள் வாங்கிவந்தார்.பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 16 ரூபாய் என்று சொன்னது.இதை படிக்கும் உள்ளூர் மக்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுகிங்க.அதென்னவோ ஓடும் வண்டியில் பேப்பர் படிக்கமுடிவதில்லை,வாந்தி வரும் போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.நண்பர் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார் அதில் நாங்கள் போய்கொண்டிருக்கும் இடத்தின் பெயர் போட்டு அங்கிருக்கும் வென்னீர் உற்றை பற்றியும் எழுதி/படம் போட்டிருந்தார்கள்.அப்போது தான் தெரிந்தது அங்கு வென்னீர் உற்று இருக்கிறது என்று.பெட்ரோல் பங்கில் இருந்து 15 கிமீட்டர் தொலைவில் தான் இருந்தது.மலையை நோக்கி போகும் பாதை குறுகலாகவும் பழங்கால வீடுகளாகவும் இருந்தது.பேரீட்சை மரத்தில் குலை குலையாக பழங்கள்.இன்று வரை ஒரு கடைத்தொகுதியிலும் பேரிட்சை காய்களை பார்க்கமுடியவில்லை.

ஒரு வழியாக வண்டி நிறுத்தும் இடம் கிடைத்து நிறுத்திவிட்டு அந்த வென்னீர் ஊற்று இருக்கும் இடத்துக்கு போனோம். பூ! இவ்வளவு தானா? படத்தை பாருங்கள்.மிஞ்சிப்போனா 3மீட்டருக்கு 2.5 மீட்டர் இருக்கும்.வெளியேறும் தண்ணீர் வாய்கால் மாதிரி ஓடுகிறது அதில் பல மீன்களும் இருக்கிறது.மீன்களை பார்க்கும் போது எப்படி இந்த நீரில் வாழ முடியும் என்ற சந்தேகத்துடன் தண்ணீரை தொட்டுப்பார்த்தால் சூடே இல்லை.


இதற்கு முன்னால் ஒருமுறை இந்தோனேஷியாவில ஒரு முறை வென்னீர் ஊற்றில் குளித்திருக்கேன்.செம சூடாக இருக்கும்.தோலே வயன்டுவிடும் போல் சூடு இருந்தாலும் ஒரு முறை முக்கிவிட்டால் அதற்கு பிறகு தெரியாது.இந்த மாதிரி வென்னீர் உற்றுகளில் இருந்து வரும் ஆவியும் இங்கு இல்லை.இப்படிப்பட்ட இடத்தை பெரிய பில்டப் கொடுத்து செய்தித்தாளில் போட்டிருந்தார்கள்.இவ்விடத்தில் பல இந்திய குடும்பங்களை பார்க்கமுடிந்தது.கட்டுச்சோறுடன் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.வெய்யில் வேறு பின்னிக்கொண்டிருந்தால் உட்கார சரியான இடமும் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பி வெளியேற ஆரம்பித்தோம்.

மதிய நேரம் நெருங்கியதாலும் என் நண்பர் சக்கரை வியாதியால் கஷ்டப்படுவதாலும் நேரத்துக்கு சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உணவு விடுதி எங்காவது இருக்கா என்று பார்த்துக்கொண்டு வந்தோம் அதுவும் எனக்காக சைவ விடுதியாக பார்த்தார்கள்.மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.பாலைவன ஊரில் அதுவும் பொட்டக்காட்டில் சைவ சாப்பாட்டு விடுதியா?எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர்கள் எனக்காக ஹோட்டலை தேடி அலைந்து ஓய்ந்து பிறகு ஒரு கடையில் நிறுத்தினார்கள்.எனக்கு பழங்கள் மட்டும் போதும் என்று கடைக்குள் போனால் பழமெல்லாம் வாடி வதங்கி பார்க்கவே பிடிக்காமல், கேக்,கொஞ்சம் பாதம் பருப்பு & ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டேன்.அவர்கள் அசைவ உணவு விடுதிக்கு போய் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டார்கள்.சரியாகவே இல்லை “தெண்டம்” என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

வீடு வந்து சேரும் போது மதியம் 3 மணி.

மறுபடியும் 5.30 மணிக்கு கடற்கரையில் மெது நடை போகவேண்டும்.தூங்க ஆரம்பித்து விட்ட நண்பர் வருவாரா என்று தெரியவில்லை.

Friday, September 25, 2009

தக்காளி

நான் காலை 7 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டால் என் நண்பர் 10 மணிக்கு சாப்பிடுகிறார்,மதிய சாப்பாடு எனக்கு 12 மணி என்றால் அவருக்கு 2 மணி,இரவு எனக்கு 8 மணி அவருக்கு 9.30.இப்படி ஏறுமாறாக இருப்பதால் இருவரும் வெளியில் கிளம்பலாம் என்றால் மதியம் அல்லது மாலை தான் ஒத்துவருகிறது இதனாலேயே காலை முழுவதும் தங்கும் அறையிலே கழிந்து விடுகிறது.ஒருவழியாக பிளான் பண்ணி...

இருவரும் சேர்ந்து மாலை 3 மணிக்கு கிளம்பி புது அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்கிறதா என்று பார்த்துவிட்டு அப்படியே லுலு செண்டர் போய் மின்சார அரிசி குக்கர் வாங்கிவிட்டு, மாலை முத்ரா பகுதியில் ஏதோ கோட்டை என்று போட்டிருக்கிறார்களே அதையும் பார்த்துவிட்டு வருவோம் என்று புறப்பட்டோம்.

ஈத் விடுமுறையில் இருப்பதால் நகரத்தில் அவ்வளவு நடமாட்டம் தென்படவில்லை,சாலைகளில் வாகனங்களும் குறைவாக தென்படுகின்றன.கடை தொகுதிகளில் நம்முடைய ஆட்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

முதலில் புது அலுவலகத்துக்கு போய் பார்த்த போது யாரும் இல்லை ஆனால் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்டதற்கான டிபன் கேரியர் அடையாளமாக இருந்ததுஅப்படியே வெளியே வந்த போது பக்கத்து அறையில் இருந்தவரிடம் விஜாரித்த போது இன்று ஆட்கள் யாரும் உங்கள் இடத்தில் வேலை செய்யவில்லை என்றார்.டிபன் கேரியர் இருந்ததே என்று சுட்டிக்காட்டிய போது,அது வேறு வேலை ஆட்களுடையது என்றார்.எங்களுக்கும் அங்கு வேறு வேலையில்லாத்தால் அப்படியே லுலு செண்டருக்கு வண்டியை விட்டோம்.

லுலு செண்டர் மிகப்பெரிய கடை தொகுதியாக இருந்தது.இரண்டு தளங்களில் சாமான்களை பரப்பி வைத்துள்ளார்கள்.காய்கறிகள் கொஞ்சம் புதியனவாக இருந்தது.சிங்கையில் தெரு ஓரத்தில் கிடைக்கும் காய்கறிகளை காட்டிலும் மோசமாகவே இருக்கிறது.

மிக முக்கியமாக தக்காளியை பற்றி சொல்லனும்.ஐக்கிய அரசு எமிரேட்சிலும் சரி இங்கும் சரி சாதாரண மக்கள் வாங்கும் தக்காளி மாத்திரம் வாடி வதங்கியே காணப்படுகிறது.சிகப்பு நிற வண்ணமே சிலவற்றில் மட்டுமே காணப்படுகிறது.விலை உயர்ந்த தக்காளிகள் பார்க்க அழகாகவும் நன்றாகவும் உள்ளன அவை கிலோ 250 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

காய்கறிகளை வாங்கிக்கொண்டு அதோடு சில பாத்திரங்களும் கண்ணில் பட்டதால் அதையும் போட்டுக்கொண்டு மின்சார குக்கர் எங்கிருக்கு என்று கேட்டோம் அது முதல் மாடியில் என்றார்கள்.கீழ்தளத்தில் வாங்கியவற்றுக்கு பில் போட்டு அதை முதல் மாடியில் நுழையும் இடத்தில் கொடுத்துவிட்டு உள்ளே போனோம்.அதிக அலைச்சல் இல்லாமல் 11.900 ரியாலுக்கு குக்கர் கிடைத்ததை வாங்கினோம்.பணம் எல்லாம் கட்டி முடித்து கீழே வந்த போது என்னுடைய தொலைப்பேசி(Nawras) நிறுவனத்தின் சின்ன கடை இருந்தது அதுவே வாடிக்கையாளர் மையமும் கூட என்று நினைக்கிறேன்.இருவரில் ஒருவர் கணினியை நோண்டிக்கொண்டிருந்தார் மற்றொருவர் வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டிருந்தார்.சும்மா இருந்தவரிடம் முன் நின்றோம்,நின்றோம்,நின்றோம்.ஹூம்! ஒரு வாடிக்கையாளர் முன் நிற்கிறார் என்ன செய்ய வேண்டும் என்று அந்த உள்ளூர்காரருக்கு சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.மனிதர் கணினியில் இருந்து கண்ணை எடுக்கவில்லை.நிறுவனம் மற்றொரு வாடிக்கையாளரை இழந்தது.

இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை போல் இருக்கு.கையில் கொண்டுவந்த பணம் கம்பெனிக்கு சாமான் வாங்க செலவாகி போனதால், கொஞ்சம் சிங்கை டாலரை ஓமன் ரியாலுக்கு மாற்றலாம் என்று UAE Exchange க்கு போய் கேட்டேன்.0.245 என்றார்.எப்படியும் மாற்றனும் குறைவா/அதிகமா என்று சோதிக்கவில்லை. 400 வெள்ளியை கொடுத்தேன்,புண்ணியவான் 98 ரியால் கொடுத்தார்,கணக்கு பண்ணி பார்க்கும் போது சிங்கையில் மாற்றியதற்கும் இதற்கும் 9.5 ரியால் குறைந்துவிட்டது.சுமார் 1300 ரூபாய் காலி.துபாயில் இறங்கிய போதே மாற்றியிருக்கனும், இன்னும் கொஞ்சம் கூட கிடைத்திருக்கும். நேரம்!!

Sunday, September 20, 2009

Ruwi - ரூவி

இதுவரை பார்த்ததில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடம் இது தான்.மஸ்கட் வந்த முதல் நாள் சாப்பாட்டுக்கு அலைந்த போது எங்கள் பொது நல அதிகாரியிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.நான் ஏற்கனவே அலசி வைத்திருந்த விபரங்கள் மூலம் “காமத்” மற்றும் “சரவண பவன்” உணவகங்கள் இங்கு தான் இருக்கின்றன என்று தெரிந்தது.

மூன்றாம் நாள்: புதிதாக குடியேற உள்ள வீட்டுக்கு படுக்கை/இருக்கை சாமான்கள் வாங்க கடை கடையாக அலைந்தோம்.ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை.மாடலை பார்த்து விலை முடிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.புதிதாக பொருட்கள் வாங்க அல் ஹாமாரியா என்ற இடத்துக்கு எங்கள் பொது தொடர்பு அதிகாரி அழைத்துப்போனார்.கடையின் உள்ளே நாங்கள் நுழைந்ததையோ நாங்கள் என்ன செய்கிறோம் என்றோ யாரும் கவலைப்படவில்லை.பொருட்களும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால் வெளியேறினோம்.கொஞ்சம் வெளியில் நடந்தால் அதே பெயருடைய கடை பளபளப்புடன் இருந்தது அப்போ இதற்கு முன் நுழைந்த கடை? அது ஸ்டாக் குடோனாக இருக்ககூடும்.விலை விபரங்களை வாங்கிக்கொண்டோம்.இதெல்லாம் முடியவே இரவு 8.30 மணியாகிவிட்டது வயிறு வேறு சத்தம் போட ஆரம்பித்துவிட்டது.ஒட்டுனரிடம் சொல்லி Ruwi க்கு போகச்சொன்னோம்.இங்கு தான் பலதரப்பட்ட தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.கடைகளும் அதிகமாக காணப்பட்டது அதில் ஒரு கடைக்கு 123 என்று பெயர் ஏனென்றால் அங்கு விற்கப்படும் பொருட்களின் மதிப்பு 1,2 & 3 ரியாலில் இருக்குமாம்.சிங்கையிலும் இந்த மாதிரி ABC என்ற மலிவு விலை கடை கூட உள்ளது.டாக்ஸி நிறுத்தும் இடத்துக்கு பக்கத்தில் இறங்கி அங்குள்ள ஒருவரிடம் ஆங்கிலத்தில் விஜாரிக்க கை காட்டிய இடத்தில் பச்சைவிளக்கு விளம்பர பலகையில் சரவண பவன் தெரிந்தது.முதலில் இட்லி சாப்பிட்டுவிட்டு எனக்கு ஊத்தப்பம் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்யும் போது Chilli வேணுமா வேண்டாமா? என்று கேட்டார்கள்.நம்ம தான் ஆந்திராவிலேயே குப்பை கொட்டியிருக்கோம் இங்க என்ன ஆகிவிடபோகிறது என்ற தைரியத்தில் சில்லி இருக்கட்டும் என்று சொன்னேன்.சொன்னதற்கு தண்டனையாக அழவைத்துவிட்டார்கள். ஒரு நிலைக்கு மேல் தோசையில் பாதிக்கு மேல் மிளாகாயுடன் பிச்சு போட்டுவிட்டு சாப்பிட்டு முடித்தோம். சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது மணி 10.45 ஆகியிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் ஆண்/பெண் கழிப்பறையை ஒன்றாக வைக்கலாமா என்ற பிரச்சனை எழுந்த போது காரசாரமாக உலகம் முழுவதும் விவாதம் நடைபெற்றது ஆனால் ரூவியில் உள்ள சரவணபவன் மற்றும் காமத் உணவங்களில் சத்தமே செய்யாமல் இந்த புரட்சியை செய்துள்ளார்கள்.

இந்த இடம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடம்.நடந்து போனாலேயே சீக்கிரம் போக முடியும்.இங்கு இருக்கும் கடைகள் துபாய் கிரீக்கை ஞாபகபடுத்துகிறது.சேட்டன்களின் சாய் கடை,நகைகடை, “எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கு ரிப்பேர் செய்யப்படும்”,”இது தான் சிங்கப்பூர் கடை” போன்ற கடைகளும் நிரம்பியிருக்கின்றன.

முதல் நாள் இரவு வெகுநேரமாகிவிட்டதால் முழுமையாக சுற்ற முடியாத கவலையை போக்க மறு நாள் சாயங்காலம் வாடகை மகிழுந்து எடுத்து சென்றோம்.இம்முறை மகிழுந்து பிடிக்கும் முன்பு நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 9 கி.மீ. இருப்பதை கூகிள் எர்த் மூலம் தெரிந்துகொண்டோம்.மகிழுந்து வந்தது

ரூபி - OK Centre போகனும்,எவ்வளவு?

4 ரியால்

மிகவும் அதிகம்- 1.50 ரியால் தான் (இது என் நண்பர்)

முடியாது,2 ரியால் என்றால் வருகிறேன் என்றார் ஓட்டுனர்.

முதல் பேரம் படிந்து 2 ரியாலுக்கு போனோம்.

Friday, September 18, 2009

Engaged??

முதல் நாள் பார்த்த வீடுகளை மனதில் அசை போட்டுக்கொண்டிருகும் நேரத்தில் அன்றிரவு எங்களுடன் பணிபுரிய மற்றொரு இந்தியர் கொச்சினில் இருந்து வந்து சேர்ந்தார்.அவர் வருவது தெரிந்திருந்தாலும் வீட்டின் உள்ளே வர அவரை அழைத்து வரும் முகவரிடம் சாவி இருக்கா இல்லையா என்பது தெரியாததாலும் எண் அறை கதவை சாத்தாமல் குளிரூட்டும் சாதனத்தை 24 இல் வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.முதல் நாள் விமானத்தில் தூங்காததால் நல்ல அசதி யாரோ வருவதும் கதை திறப்பதும் தெரிந்திருந்தாலும் எழுந்து பார்க்க அசதி அப்படியே தூங்கிவிட்டேன்.

கொச்சினில் இருந்து வந்த நண்பர் நன்றாகவே தமிழ் பேசினார் (மனைவி திண்டுக்கல்லாம்),பேச வைத்துவிட்டார்கள் போலும்.லிபியாவில் 5 வருட அனுபவத்துடன் அரபி பேசும் திறனும் இருந்தது.நன்றாக அளவாக பேசுவதால் பழுகுவதில் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்.

மறுநாள் காலை எங்கள் நிறுவனத்தை சேர்ந்த 3 வரும் ஓமானியர் ஒருவரும் மகிழுந்தில் கிளம்பி மேலும் சில வீடுகளை பார்க்க போனோம்.அதில் ஒரு வீடு கடலுக்கு பக்கத்தில் 4 மாடிகளுடன் இருக்கும் இடத்தை போய் பார்த்தோம்.கீழ் நிலையில் இருந்த அறைகள் போன பதிவில் சொல்லியிருந்த மாதிரியே இருந்தன அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது முகவர்,மேலே ஒரு வீடு இருக்கு பார்க்கலாமா என்றார்,சரி என்று லிப்ட் மூலம் சென்றோம்.சாதாரண அளவில் இருக்கும் மூவர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் இருந்த லிப்ட் அது.ஆறு அறை ஒரு ஹால் என்று அட்டகாசமாக இருந்தது மாத வாடகை 1000 ரியால் என்றார். எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவே அவ்வளவு ஆட்கள் தான் இருப்பார்கள் என்பதால் ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தோம்.நாங்கள் பார்த்த அவ்வளவு வீடுகளும் நகர வாழ்கையில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புரமாகவே இருந்தது,மகிழுந்து இல்லாமல் அங்கு வாழ்வது கடினம்.பொண்டாட்டி குழந்தைகள் வந்தால் நிச்சயம் "House Arrest" தான். தனியாக எங்கும் வெளியில் போக முடியாது.

மஸ்கட் நெடுஞ்சாலைகளில் மிகவும் பரிட்சயமானது என்றால் அது கடற்கறையை ஒட்டி அமைந்துள்ள சாலை தான்.இச்சாலை பல நகரங்களையும் இணைக்கிறது.சாலை வழியாகவே துபாயில் இருந்து இங்கு வரமுடியும் என்பது சிறப்பு.துபாயில் இருந்து சாலை வழியாக இங்கு வர 5 மணி நேரமாகும்.

மஸ்கட்டில் அப்படிப்பட்ட சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் கம்பெனி PRO – பொதுநல தொடர்பு அதிகாரி பல விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.அப்போது இங்குள்ள வாடகை மகிழுந்துவை பற்றி சொல்லும் போது இதன் நிறமும் இராக்கில் இருக்கும் மகிழுந்துவின் நிறமும் ஒன்று என்றார்.வாடகை மகிழுந்துவைப் பற்றி சொல்லும் போது இங்குள்ளவற்றில் கட்டணம் காண்பிக்க ஏதும் மிஷின் இல்லை என்றும் உங்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையில் பேசி முடிவெடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது,அதோடு ஓட்டுனர் உங்களிடம் Engaged என்று கேட்டால் அதர்கு தகுந்த மாதிரி பதில் சொலுங்கள் என்றார். அதென்ன Engaged என்றேன்.என்கேஜ் என்றால் அந்த மகிழுந்து உங்களுக்கு மட்டும் பிரத்யோகமானது இல்லாவிட்டால் shareAuto மாதிரி டாக்ஸியை அவர்கள் உபயோகிக்க முடியும் என்பதாகும். இவ்வளவு சொல்லியும் முதல் பயணமே 50% அதிகமாக கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம்.

சரி,ஈத் வருகிறது அதன் தொடர்பில் இருக்கும் விடுமுறை நாட்களை எப்படி போக்கலாம் என்று யோசித்து அந்த PRO விடம் இங்குள்ள சுற்றுலா தளங்களை பற்றி கேட்ட போது கொஞ்சம் அமைதி நிலவியது.ஏதாவது கேட்ககூடாததை கேட்டுவிட்டமோ என்ற தொனியில் மீண்டும் கேட்ட போது, மஸ்கட் உள்ளே அவ்வளவு இடங்கள் இல்லை கொஞ்சம் தள்ளிப்போகனும் என்றார்.போச்சுடா! என்றேன்.கொஞ்சம் தள்ளி என்றால் இங்கு 50 கி.மீட்டருக்கு மேல்.பெரிய மசூதிகள், வழ வழ சாலைகள், கொஞ்சம் மலை,குறைவான பசுமை என்று பொதுவான சமாச்சாரங்கள் தான் இருக்கின்றனவே தவிர பளிச் என்று கண்ணில் பட இதுவரை எதுவும் தெரியவில்லை.

ஏகப்பட்ட நேரம் கிடைக்கிறது.. வெளியே சுற்றிப்பார்க்க மகிழுந்தில் வேண்டிய நிலை என்றிருக்கிறது.எத்தனை நேரம் தான் கணினியில் கண்ணை வைத்து உருட்டிக்கொண்டிருக்கிறது? மாலை சற்று சூரியன் தாழ்ந்த பிறகு சக ஊழியரை வெளியே போய் வர அழைத்தேன்.என் நிலையில் தான் அவரும் இருந்தார் போலும் கிளம்பிவிட்டார்.அறையில் இருந்து பார்க்கும் தூரத்தில் கடல் இருந்ததால் பொடி நடையாக போனோம்.சின்னச்சின்ன அலைகள் கடலுக்கு மத்தியில் ஒரு பெரிய பாறை மட்டும் நீட்டிக்கொண்டு தனித்துவிடப்பட்டிருந்தது.


வந்திருந்த ஆட்களை இரண்டு பேர் கைவிரலுக்குள் அடக்கிவிடலாம்.சிலர் அப்போது தான் காற்பந்து விளையாடிவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள்.அங்கு எடுத்த சில படங்கள் கீழே.சூரியனை நோக்கி படம் எடுக்கும் போது Flash அடிக்கிறது,என்ன பிரச்சனையோ!!

சாப்பாட்டு பிரச்சனையில் இருந்து மீள திரும்பவும் கை சமையல் ஆரம்பிக்கலாம் என்று நானும் சக நண்பரும் முடிவு செய்து சாமான்கள் வாங்க இடம் தேடி அலைந்தோம் பிறகு ஒரு நண்பருக்கு தொலை பேசியவுடன் அவர் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கடை தொகுதியின் பெயரை சொன்னார்.

கடற்கரையை முடித்துவிட்டு அந்த கடை தொகுதியை நோக்கி கால் நடையாக ஒரு 15 நிமிடம் நடந்தோம்.சாலையில் அது சின்னதாக இருந்தாலும் நடப்பது மிக மிக அபாயம்.வீட்டில் கணினி முன்பு விளையாடிய கார் கேமை சாலையிலும் முயற்சிக்கிறார்களோ என்று தோனும் அளவுக்கு ஓட்டுகிறார்கள்.விபத்தும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டு வருவதாக ரிப்போர்ட் சொல்கிறது.
ஒரு வழியாக கடைதொகுதியில் வேண்டிய சாமான்கள் வாங்கிக்கொண்டு மகிழுந்துவுக்காக காத்திருந்தோம்.நாங்கள் ஒரு திசையை பார்த்துக்கொண்டு இருக்க மறுதிசையில் இருந்து சரக் என்று திரும்பி எங்களை பார்த்தது மகிழுந்து.இவர் எப்படி நம்மை பார்த்தார் என்று ஆச்சரியமாக இருந்தது.

Barreq Al Shitti? - உள்ளே வா என்றார்.

இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இறக்கிவிட்டு 1 ரியால் (132 ரூபாய்) வாங்கிக்கொண்டு பறந்துவிட்டார்.பேரமே பேசலையே என்று இறங்கிய பிறகு தான் தோன்றியது.இன்றைக்கு அவருக்கு யோக நாள் போலும்.

கொசுறு படம்: பக்கத்தில் நடக்கும் ஒரு கட்டுமான வேலை.

மஸ்கட்

இன்று தான்(13/9/09) மஸ்கட்டுக்கான விசா மின் அஞ்சல் மூலம் வந்தது.அலுவலகத்தில் சும்மாவாகவே இருந்தது முடிவுக்கு வந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான்.நேரத்தை இன்னும் விரயமாக்காமல் 15ம் தேதி விடியற்காலை வானூர்த்தியில் இடம்பிடிக்க மனித வள அதிகாரிகளிடம் சொல்லிவிட்டேன்.அதிக கூட்டம் இல்லாததால் என்னவோ கேட்ட தேதியில் கிடைத்தது.விடியற்காலை விமானம் என்பதால் முதல் நாள் இரவே கிளம்பவேண்டிய கட்டாயம் அதுவும் இல்லாமல் சிங்கப்பூரில் இருந்து நேரடியான விமான சேவை இல்லாத்தால் துபாய் மூலம் வந்து அங்கு 3 மணி நேரம் தங்கி பிறகு மற்றொரு விமானம் மூலம் மஸ்கட் வரவேண்டும்.

துபாய் விமான நிலையம் எப்போதும் போல் பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கி நிரம்பிக்கொண்டிருந்தது.நான் உட்கார்ந்திருந்த இடத்தில் சுமார் 30 பிலிப்பினோக்கள் இருந்தார்கள் அதோடு நாற்காலில் உட்கார்ந்து தூங்க முடியாத பல ஐரோப்பியர்கள் கீழே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.விடியற்காலை பொழுதென்றாலும் பல கடைகளில் வியாபாரம் ஓரளவு சுருசுருப்பாகவே இருந்தது.22K தங்கம் U$ 34.19 போட்டிருந்தது.சிங்கப்பூரை Compare செய்தால் விலை குறைவு என்று தோனியது.

மணி காலை 6 ஆனது,சரி தெரிந்த மக்கள் யாருக்காவது தொலைப்பேசலாம் என்று Etisalat அட்டையை பணம் மாற்றி வாங்கினேன்.மினிமமே 30 திராம் தானாம்,பகல் கொள்ளையாக தோனியது,வேறு வழியில்லாமல் வாங்கினேன்.உறவினர் வீட்டுக்கு,நண்பர்கள் பலரிடம் பேசிய பிறகு அட்டை 25 திராம் சொச்சம் காண்பித்தது.கடைசியாக ஒரு நண்பருக்கு தொலைப்பேசினால் வாய்ஸ் மெயில் வந்தது அதற்கு தேவையான விபரங்களை கொடுத்துவிட்டு எனக்கு உண்டான விமான நுழைவு வாயிலுக்கு போகலாம் என்று லிப்ட் பக்கம் காத்திருந்தேன் அப்போது தான் உறவினர்க்கு இன்னும் 30 நிமிடங்களில் தொலைபேச வேண்டும் என்ற ஞாபகம் வந்தது.கடைசியாக பேசிய பிறகு அட்டையை எடுத்தோமா?!
போச்சு ..திரும்ப போய் அந்த தொலைப்பேசியில் பார்த்த போது அதில் இல்லை.துபாய்க்கு தெண்டம் அழதாகிவிட்டது.

விமான சோதனைகளை முடித்த பிறகு மஸ்கட் போகும் விமானத்தில் உட்கார்ந்த வெகு நேரமாக விமானம் கிளம்பவில்லை அப்போது விமானியிடம் இருந்து அறிவிப்பு ஆதாவது தெரிவிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள ஒரு பொருளை ஏற்றுவதில் குழப்பமாம் இன்னும் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று.துபாயை விட்டு எழும்பும் போதே விமானத்தில் இருந்து எனக்கு பழக்கப்பட்ட இடங்களை பார்த்துக்கொண்டு வந்தேன்.ஓரிடத்தில் மணல் நிறம் மாறுபட்டு சிகப்பு நிறத்தில் இருந்தது அந்த இடத்தில் மட்டும் ஏன் அப்படி மாறுகிறது என்று தெரியவில்லை.சுமார் 8 நிமிடங்களுக்கு பிறகு பாலைவன மணல் போய் மலைக்குன்றுகள் ஆரம்பித்துவிடுகிறது.இதை முன்னிருத்தி வேறு என்ன வியாபாரம் பண்ணப்போகிறார்களோ!!

என்ன தான் விமான நேரம் 1 மணி என்று போட்டிருந்தாலும் 40 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது அதனால் வெறும் 5 நிமிட கால தாமதமாக மஸ்கட் வந்து சேர்ந்தேன்.அளவில் சிறிய விமான நிலையம்.

என்னை அழைத்துப்போக எங்கள் நிறுவனத்தில் இருந்து ஒருவர் வந்து இருந்தார்.வந்த உடனேயே ஏதாவது ஒரு தொலைப்பேசி நிறுவனத்தில் சிம் கார்டு வாங்கிக்கச்சொன்னார்.அதிசியமாக இருந்தது என்னுடைய கடவுச்சீட்டை மட்டும் அடையாளப்படுத்தி சிம் கார்ட் கொடுத்தது.எல்லாம் 2 ரியால்,3 ரியால் என்று கேட்கும் போது நம்மூர் 1 ரூபாய்/2 ரூபாய் மாதிரி தெரிகிறது.ஆனால் 1 ரியால் = 130 ரூபாய் (கிட்டத்தட்ட).சிம் கார்ட் போட்டு வண்டியில் 120 கிமீட்டர் வேகத்தில் போய்கொண்டிருக்கும் போதே வீட்டுக்கு தொலைப்பேசி விபரத்தை சொன்னேன்.மஸ்கட்டில் இது பிரதான சாலை கடற்கறையை ஒட்டியபடியே பல நூறு கிலோமீட்டர்கள் ஓடுகிறது.வழவழப்பான சாலை,அதிக பட்ச வேகம் 120 கி.மீட்டர் என்று காண்பிக்கிறது.வெய்யிலின் சூடு இப்போது தணிய ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள்.

அலுவலக கெஸ்ட் ஹவுஸ் சுமார் 40 கிமீட்டர் தூரத்தில் இருந்தது. படுவேக ஸ்பீடில் வந்தது தெரியவில்லை. பரூக் அல் செட்டி என்னும் கட்டிடம்.கொஞ்சம் எம்மி பார்த்தா கடல் தெரியும்.

ஒரு மணி நேர அவகாசத்தில் குளித்து அலுவலகம் செல்ல தயாரானேன்.ஒவ்வொருவராக அறிமுகம் ஆனது.உடனே வீடு பார்க்கும் வேலை ஆரம்பித்துவிட்டார் இங்குள்ள அதிகாரி.பல வீடுகள் Flat இல் காலியாக உள்ளன அதுவும் புதிதாக கட்டியவை.பெரிய அறைகள் சதுரம்,முக்கோணம் என்ற பல வடிவங்களில் இருந்தன.பெரும்பாலான அறைகள் கூடவே கழிப்பறையும் இருந்தது.ஒரு அறையில் வரும் கழிப்பறை/குளியல் அறையில் Tub முறையும் இருந்தது.முழுகி,ஊறி குளிக்கும் அளவுக்கு காலை வேளைகளில் நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனாலும் அதில் குளிக்கும் ஆர்வம் இப்போது வந்துள்ளது.

2 அறை வீடுகள் 450 ரியால் சொல்கிறார்கள்,3 அறை 500 ரியால் சொல்கிறார்கள்.பல இடங்கள் நடந்து போய் சாமான்கள் வாங்கி வரக்கூடிய நிலையில் இல்லை.வண்டி மிக மிக அவசியம்.இது வரை பொது பேருந்து கண்ணில் படவில்லை.

இன்னும் வரும்...

Sunday, September 13, 2009

மேலிருந்து கீழ்(Top Down)

புதுப்புது தொழிற்நுட்பங்கள் கட்டுமானத்துறைக்கு புதிதல்ல ஆனால் அதை வெளிக்கொணர்ந்து பொதுவில் வைக்கும் போது தான் சாதரண மக்கள் அதுவும் தொழிற்சார் பதிவுகளை படிக்கும் மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்,அந்த வகையில்..

க‌ட்டிட‌ங்க‌ள் அஸ்திவார‌த்தில் இருந்து ஆர‌ம்பித்து மேலே வ‌ருவார்க‌ள்.இது பொதுவாக‌ க‌டைபிடிக்கும் முறை.இம்முறையை கொஞ்ச‌ம் மாற்றி மேலிருந்து கீழேயும் அதே ச‌ம‌ய‌த்தில் மேலேயும் (இரு முனை தாக்குதல்) வேலை ந‌டைபெற‌ வைக்கும் முறை தான் இந்த‌ டாப் ட‌வுன் என்ற‌ முறை.

சிங்கையில் இம்முறை ஒரு சில‌ வேலைக‌ளில் ம‌ட்டுமே செய‌ற்ப‌டுத்த‌ப்ப‌ட்டது.ஒப‌யாஷி க‌ட்டுமான‌ நிருவ‌ன‌ம் த‌ன்னுடைய‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தை இம்முறையில் க‌ட்டிய‌போது அது ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேச‌ப்ப‌ட்ட‌து.சிங்கை க‌ட்டுமான‌த்துறை முத‌ன் முத‌லுலில் இங்கு தான் செய‌ற்ப‌டுத்திய‌து என்று நினைக்கிறேன் அத‌ன் பிற‌கு அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இம்முறையை பல இடங்களில் க‌டைபிடித்து வ‌ருகிறார்க‌ள் அதில் முக்கிய‌மான‌வை

சாங்கி விமான‌ நிலைய‌த்தின் மூன்றாம் முனைய‌ம்.

ச‌மீப‌த்தில் திற‌க்க‌ப்ப‌ட்ட‌ ஆர்ச‌ட் சாலையில் இருக்கும் க‌டைத்தொகுதி.


ஆமாம்,இதை எப்ப‌டி செய்கிறார்க‌ள்?

முத‌லில் க‌ட்ட‌ப்ப‌ட‌வேண்டிய‌ க‌ட்டிட‌த்தை சுற்றி டய‌ப‌ர‌ம்(Diaphram) சுவ‌ரை க‌ட்டி வெளி ம‌ண் ச‌ரியாம‌ல் இருக்க‌ க‌ட்ட‌ப்ப‌ட‌வேண்டும்.அத‌ன் பிற‌கு த‌ரை ம‌ட்ட‌த்தில் இருக்கும் நிலையில் உள்ள‌ ஸ்லேப்யை(Slab) போட‌வேண்டும்.இப்ப‌டி செய்வ‌து க‌ட்டிட‌த்தை சுற்றி உள்ள‌ டைய‌ப‌ர‌ம் சுவ‌ருக்கு முட்டுக்கொடுத்த‌ மாதிரியும் இருக்கும் அதே ச‌மய‌த்தில் த‌ரைக்கு கீழே/மேலே உள்ள‌ வேலைக‌ளை ஆர‌ம்பிக்க‌வும் உத‌வியாக‌ இருக்கும்.

டையபரம் சுவர் எப்படி செய்கிறார்கள்? கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
த‌ரை ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ஸ்லாபில் போதிய‌ அள‌வு துவார‌ம் கொடுத்து அத‌ன் மூல‌ம் கீழே தோண்டும் ம‌ண் ம‌ற்றும் போட‌ப்போகும் கான்கிரீட்க‌ள் கொண்டு செல்ல‌ப்ப‌டும்.போதிய‌ அள‌வு ம‌ண் தோண்டிய‌வுட‌ன் திரும்ப‌வும் வெளிச்சுவ‌ருக்கு முட்டுக்கொடுத்துவிட்டு த‌ள‌ கான்கிரீட்டை போட்டுவிடுவார்க‌ள்.

கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளை பாருங்க‌ள் மிக‌ எளிதாக‌ புரியும்.ச‌ந்தேக‌ம் இருந்தால் கேளுங்க‌ள் என‌க்கு தெரிந்த‌ அள‌வில் சொல்கிறேன்.

நன்றி:LTA

Thursday, September 10, 2009

கான்கிரீட் இப்படியும் போடலாம்...

இப்போதெல்லாம் எவ்வளவு தான் சின்ன கான்கிரீட் என்றாலும் கிரேன் என்ற பாரம் தூக்கியை உபயோகப்படுத்தி ஆட்பலத்தை குறைத்து சீக்கிரமாக முடிக்கிறார்கள்.இப்படிப்பட்ட கால கட்டத்திலும் கீழே உள்ள படத்திலும் காண்பித்திருக்கும்படி போடுகிற நாடுகளும் இன்று இருக்கு.இம்முறையை நம் நாடுகளில் 1980 ஆண்டுகளில் இம்முறை மிக சகஜம்.
நண்பரிடம் இருந்து கிடைத்த நகர்படம் இது,இதில் உள்ள சுட்டியை போய் பார்த்து என்னை திட்டாதீர்கள்.அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.முதல் முறையில் கான்கிரீட் சிதறும் என்பதால் அதன் தரம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது ஆனால் அதற்கு அடுத்த முறையில் சிறிய வாளியில் வைத்து தூக்கிப்போடுவதால் அதன் சிதறல் இருக்காது என்பதால் இரண்டாவது முறை பாதுகாப்பானது.