நான் காலை 7 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டால் என் நண்பர் 10 மணிக்கு சாப்பிடுகிறார்,மதிய சாப்பாடு எனக்கு 12 மணி என்றால் அவருக்கு 2 மணி,இரவு எனக்கு 8 மணி அவருக்கு 9.30.இப்படி ஏறுமாறாக இருப்பதால் இருவரும் வெளியில் கிளம்பலாம் என்றால் மதியம் அல்லது மாலை தான் ஒத்துவருகிறது இதனாலேயே காலை முழுவதும் தங்கும் அறையிலே கழிந்து விடுகிறது.ஒருவழியாக பிளான் பண்ணி...
இருவரும் சேர்ந்து மாலை 3 மணிக்கு கிளம்பி புது அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்கிறதா என்று பார்த்துவிட்டு அப்படியே லுலு செண்டர் போய் மின்சார அரிசி குக்கர் வாங்கிவிட்டு, மாலை முத்ரா பகுதியில் ஏதோ கோட்டை என்று போட்டிருக்கிறார்களே அதையும் பார்த்துவிட்டு வருவோம் என்று புறப்பட்டோம்.
ஈத் விடுமுறையில் இருப்பதால் நகரத்தில் அவ்வளவு நடமாட்டம் தென்படவில்லை,சாலைகளில் வாகனங்களும் குறைவாக தென்படுகின்றன.கடை தொகுதிகளில் நம்முடைய ஆட்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதலில் புது அலுவலகத்துக்கு போய் பார்த்த போது யாரும் இல்லை ஆனால் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்டதற்கான டிபன் கேரியர் அடையாளமாக இருந்ததுஅப்படியே வெளியே வந்த போது பக்கத்து அறையில் இருந்தவரிடம் விஜாரித்த போது இன்று ஆட்கள் யாரும் உங்கள் இடத்தில் வேலை செய்யவில்லை என்றார்.டிபன் கேரியர் இருந்ததே என்று சுட்டிக்காட்டிய போது,அது வேறு வேலை ஆட்களுடையது என்றார்.எங்களுக்கும் அங்கு வேறு வேலையில்லாத்தால் அப்படியே லுலு செண்டருக்கு வண்டியை விட்டோம்.
லுலு செண்டர் மிகப்பெரிய கடை தொகுதியாக இருந்தது.இரண்டு தளங்களில் சாமான்களை பரப்பி வைத்துள்ளார்கள்.காய்கறிகள் கொஞ்சம் புதியனவாக இருந்தது.சிங்கையில் தெரு ஓரத்தில் கிடைக்கும் காய்கறிகளை காட்டிலும் மோசமாகவே இருக்கிறது.
மிக முக்கியமாக தக்காளியை பற்றி சொல்லனும்.ஐக்கிய அரசு எமிரேட்சிலும் சரி இங்கும் சரி சாதாரண மக்கள் வாங்கும் தக்காளி மாத்திரம் வாடி வதங்கியே காணப்படுகிறது.சிகப்பு நிற வண்ணமே சிலவற்றில் மட்டுமே காணப்படுகிறது.விலை உயர்ந்த தக்காளிகள் பார்க்க அழகாகவும் நன்றாகவும் உள்ளன அவை கிலோ 250 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
காய்கறிகளை வாங்கிக்கொண்டு அதோடு சில பாத்திரங்களும் கண்ணில் பட்டதால் அதையும் போட்டுக்கொண்டு மின்சார குக்கர் எங்கிருக்கு என்று கேட்டோம் அது முதல் மாடியில் என்றார்கள்.கீழ்தளத்தில் வாங்கியவற்றுக்கு பில் போட்டு அதை முதல் மாடியில் நுழையும் இடத்தில் கொடுத்துவிட்டு உள்ளே போனோம்.அதிக அலைச்சல் இல்லாமல் 11.900 ரியாலுக்கு குக்கர் கிடைத்ததை வாங்கினோம்.பணம் எல்லாம் கட்டி முடித்து கீழே வந்த போது என்னுடைய தொலைப்பேசி(Nawras) நிறுவனத்தின் சின்ன கடை இருந்தது அதுவே வாடிக்கையாளர் மையமும் கூட என்று நினைக்கிறேன்.இருவரில் ஒருவர் கணினியை நோண்டிக்கொண்டிருந்தார் மற்றொருவர் வாடிக்கையாளருடன் பேசிக்கொண்டிருந்தார்.சும்மா இருந்தவரிடம் முன் நின்றோம்,நின்றோம்,நின்றோம்.ஹூம்! ஒரு வாடிக்கையாளர் முன் நிற்கிறார் என்ன செய்ய வேண்டும் என்று அந்த உள்ளூர்காரருக்கு சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.மனிதர் கணினியில் இருந்து கண்ணை எடுக்கவில்லை.நிறுவனம் மற்றொரு வாடிக்கையாளரை இழந்தது.
இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை போல் இருக்கு.கையில் கொண்டுவந்த பணம் கம்பெனிக்கு சாமான் வாங்க செலவாகி போனதால், கொஞ்சம் சிங்கை டாலரை ஓமன் ரியாலுக்கு மாற்றலாம் என்று UAE Exchange க்கு போய் கேட்டேன்.0.245 என்றார்.எப்படியும் மாற்றனும் குறைவா/அதிகமா என்று சோதிக்கவில்லை. 400 வெள்ளியை கொடுத்தேன்,புண்ணியவான் 98 ரியால் கொடுத்தார்,கணக்கு பண்ணி பார்க்கும் போது சிங்கையில் மாற்றியதற்கும் இதற்கும் 9.5 ரியால் குறைந்துவிட்டது.சுமார் 1300 ரூபாய் காலி.துபாயில் இறங்கிய போதே மாற்றியிருக்கனும், இன்னும் கொஞ்சம் கூட கிடைத்திருக்கும். நேரம்!!
No comments:
Post a Comment