Saturday, September 26, 2009

நக்கீல் வென்னீர் ஊற்று.

23/9/09
இன்று போகலாம் என்று நினைத்திருந்த இடம் வெகுதூரம் என்பதால் முன்னமே முடிவு செய்து காலை 10 மணிக்கு கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்து மகிழுந்தை வரவழைத்தோம்,அவரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

இது நாள் வரை மஸ்கட்டின் கிழக்கு பகுதியை மட்டுமே சுற்றி வந்ததால் இன்று மேற்கு பகுதியை சுற்றுவோம் என்று கிளம்பினோம்.அவ்வளவாக போக்குவரத்து இல்லாததால் வாகனம் அவ்வபோது எச்சரிக்கும் மணி ஒலித்தாலும் 120 கி.மீட்டருக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தது.




சுமார் 130 கிமீட்டர் தள்ளி ஒரு வலதுபக்க வளைவில் திரும்பியது.வளைவில் இருந்து 10 கி.மீட்டர் உள்ளே போனதும் சாலை கடலின் மீது முடிந்தது,இங்கும் சில பாறைகள் நடுக்கடலில் தனித்திருந்தது.இன்னும் கொஞ்ச வருடங்கள் கடல் அரிப்பை மீறி இருக்கும் என்று தோன்றுகிறது.மகிழுந்தை பார்த்ததும் படகு சவாரிக்கு ஆள் பிடிக்க ஒருவர் ஓடி வந்து அரபிக் ஏதோ கேட்டார்,நாங்கள் யாரும் போகும் நிலையில் இல்லாததால் வரவில்லை என்று சொன்னோம்.கொஞ்சம் வருத்ததுடன் சென்றார்.அவ்வப்போது வேறு சிலரும் வந்து படகு சவாரிக்கு கூப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.நீண்ட கடற்கரை,ஆரவாரமில்லாத அலை,.கரையில் இருந்து வெகுதூரம் ஆழமே இல்லாத்தால் பலர் உட்கார்ந்து குளித்துக்கொண்டு அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.





குடும்பம் உல்லாசமாக பொழுது போக்க உகந்ததாக இருந்தாலும் முழுமையாக அனுபவிக்க மற்ற பிற வசதிகள் இல்லை.இங்குள்ள நில அமைப்பே சாலையில்லாவிட்டாலும் 4 வீல் வண்டியை வடக்கு பக்கம் திருப்பி ஓட்டிக்கொண்டிருந்தால் கடற்கரை வந்துவிடுகிறது அப்படியே அது பீச்சாகிவிடுகிறது.விவசாய நிலம் கிடையாது,பொட்டக்காடு அதனால் கேட்க ஆள் கிடையாது.
இவ்வளவு பெரிய கடற்கரை இருந்தாலும் தண்ணீர் குடிக்க 2 கடைகளே இருந்தன,குப்பை போடக்கூட சரியான வசதியில்லை.கருப்பு நெகிழியுடன் ஒருவர் சுற்றி குப்பைகளை பொருக்குகிறார். கீழே உள்ளது தான் குப்பை கூடை.




கடலில் உள்ளே இறங்க ஆசை இருந்தாலும் நீச்சல் ஆடை எடுத்துவராததாலும் கரை பக்கமே நின்றுவிட்டு திரும்பினோம்.





அடுத்து ஒரு மலைபக்கம் போகலாம் என்று ஓட்டுனர் சொன்னார்.ஓட்டுனரும் என் நண்பரும் மலையாளத்தில் சம்சாரித்துக்கொண்டிருந்ததால் முழுவதும் விளங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் பெரிய இழப்பொன்றும் இல்லை.மலைவாசற் தலமாச்சே மலைக்கு மேல் வண்டி போகும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.இதற்கிடையில் வண்டிக்கு பெட்ரோல் போடும் நேரம் வந்துவிட்டதால் பங்க் உள்ளே நுழைந்தது.நண்பர் அப்படியே கடைகு போய் செய்தித்தாள் வாங்கிவந்தார்.பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 16 ரூபாய் என்று சொன்னது.இதை படிக்கும் உள்ளூர் மக்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுகிங்க.அதென்னவோ ஓடும் வண்டியில் பேப்பர் படிக்கமுடிவதில்லை,வாந்தி வரும் போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.நண்பர் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார் அதில் நாங்கள் போய்கொண்டிருக்கும் இடத்தின் பெயர் போட்டு அங்கிருக்கும் வென்னீர் உற்றை பற்றியும் எழுதி/படம் போட்டிருந்தார்கள்.அப்போது தான் தெரிந்தது அங்கு வென்னீர் உற்று இருக்கிறது என்று.பெட்ரோல் பங்கில் இருந்து 15 கிமீட்டர் தொலைவில் தான் இருந்தது.மலையை நோக்கி போகும் பாதை குறுகலாகவும் பழங்கால வீடுகளாகவும் இருந்தது.பேரீட்சை மரத்தில் குலை குலையாக பழங்கள்.இன்று வரை ஒரு கடைத்தொகுதியிலும் பேரிட்சை காய்களை பார்க்கமுடியவில்லை.

ஒரு வழியாக வண்டி நிறுத்தும் இடம் கிடைத்து நிறுத்திவிட்டு அந்த வென்னீர் ஊற்று இருக்கும் இடத்துக்கு போனோம். பூ! இவ்வளவு தானா? படத்தை பாருங்கள்.மிஞ்சிப்போனா 3மீட்டருக்கு 2.5 மீட்டர் இருக்கும்.வெளியேறும் தண்ணீர் வாய்கால் மாதிரி ஓடுகிறது அதில் பல மீன்களும் இருக்கிறது.மீன்களை பார்க்கும் போது எப்படி இந்த நீரில் வாழ முடியும் என்ற சந்தேகத்துடன் தண்ணீரை தொட்டுப்பார்த்தால் சூடே இல்லை.










இதற்கு முன்னால் ஒருமுறை இந்தோனேஷியாவில ஒரு முறை வென்னீர் ஊற்றில் குளித்திருக்கேன்.செம சூடாக இருக்கும்.தோலே வயன்டுவிடும் போல் சூடு இருந்தாலும் ஒரு முறை முக்கிவிட்டால் அதற்கு பிறகு தெரியாது.இந்த மாதிரி வென்னீர் உற்றுகளில் இருந்து வரும் ஆவியும் இங்கு இல்லை.இப்படிப்பட்ட இடத்தை பெரிய பில்டப் கொடுத்து செய்தித்தாளில் போட்டிருந்தார்கள்.இவ்விடத்தில் பல இந்திய குடும்பங்களை பார்க்கமுடிந்தது.கட்டுச்சோறுடன் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.வெய்யில் வேறு பின்னிக்கொண்டிருந்தால் உட்கார சரியான இடமும் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பி வெளியேற ஆரம்பித்தோம்.

மதிய நேரம் நெருங்கியதாலும் என் நண்பர் சக்கரை வியாதியால் கஷ்டப்படுவதாலும் நேரத்துக்கு சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உணவு விடுதி எங்காவது இருக்கா என்று பார்த்துக்கொண்டு வந்தோம் அதுவும் எனக்காக சைவ விடுதியாக பார்த்தார்கள்.மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.பாலைவன ஊரில் அதுவும் பொட்டக்காட்டில் சைவ சாப்பாட்டு விடுதியா?எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர்கள் எனக்காக ஹோட்டலை தேடி அலைந்து ஓய்ந்து பிறகு ஒரு கடையில் நிறுத்தினார்கள்.எனக்கு பழங்கள் மட்டும் போதும் என்று கடைக்குள் போனால் பழமெல்லாம் வாடி வதங்கி பார்க்கவே பிடிக்காமல், கேக்,கொஞ்சம் பாதம் பருப்பு & ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டேன்.அவர்கள் அசைவ உணவு விடுதிக்கு போய் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டார்கள்.சரியாகவே இல்லை “தெண்டம்” என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

வீடு வந்து சேரும் போது மதியம் 3 மணி.

மறுபடியும் 5.30 மணிக்கு கடற்கரையில் மெது நடை போகவேண்டும்.தூங்க ஆரம்பித்து விட்ட நண்பர் வருவாரா என்று தெரியவில்லை.

No comments: