Wednesday, May 31, 2006

கணிணி அனுபவம்-2

கணிணி அனுபவம்-2 (அனுபவம்--1 இங்கே சொடுக்கவும்)


என்ன இது அந்த பெண் ஏதோ Shut Down என்று சொன்னாள் எங்கு போவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் முழித்துவிட்டு "Powerஐ" மொத்தமாக Off செய்துவிட்டேன்.இதே போல் சில நாட்கள் சென்றன.எனக்கும் எப்படி செய்வது என்று கேட்க வெட்கம் மற்றும் யாரும் எதுவும் சொல்லாததால் நான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஒரு நாள் காலை அந்த பெண் காலை வந்தவுடன் கொஞ்சம் சத்தமாக பேச ஆரம்பித்து பிறகு நேற்று யார் Computerஐ shutdown செய்தது என்று விஜாரித்து பிறகு எனக்கு சொல்லிக்கொடுத்தாள்.

"Start" என்று ஒன்று இருப்பதும் அதன் மூலம் தான் எல்லாம் ஆரம்பம் ஆகிறது என்று தெரிந்து கொண்டேன்.அதன்பிறகு MS Office மற்றும் softwareஐயும் கற்றுக்கொண்டேன்.

MS Windows என்ன என்பது புரிவதற்கு எனக்கு பல காலம் பிடித்தது.

2000ம் ஆண்டு வரை எனக்கு ஒரு கனிணி அவசியம் என்று தெரியவில்லை.அவசியம் வரவில்லை.

என்னுடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தான் ஒரு கணிணி assemble பண்ணப்போவதாகவும் என்னையும் வேண்டுமானால் join செய்யுமாறு அழைத்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு Pentium 2 கணிணி assemble செய்தோம்.எல்லாம் செய்த பிறகு தான் அவர் சொன்னார் தனக்கு Operating System எப்படி நிறுவுவது தெரியாது என்று.அப்படியே 2 மாதங்கள் CPU மூடியே கிடந்தது.

ஒரு நாள் அந்த நண்பர் தான் தெரிந்துகொண்ட Operating System installationஐ எனது systemத்திலும் நிறுவினார்.வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.அதை முடித்தவுடன் சில காலம் உபயோகப்படுத்தியவுடன்...நம்ம கை சும்மாகயில்லை.அவர் சொல்லிக்கொடுத்த Format,partition முதலியவற்றை முயற்சிக்க தொடங்கினேன்.

ஆரம்பித்தது வினை..முதல் சில தடவைகள் சரியாக வந்து பிறகு காலை வாரிவிட்டது.Concept புரிந்து கொள்ளாமல் செய்தால் இப்படித்தான் என்று தெளிந்து கொண்டு மேலும் அந்த நண்பரின் உதவியுடன் மீண்டும் நன்றாக தெரிந்துகொண்டேன்.

இந்த சமயத்தில் மிக முக்கியமாக நினைவுகூற வேண்டியது, அப்போது சிங்கப்பூரில் ஒவ்வொறு செவ்வாய் கிழமையும் வெளிவரும் "Computer Times" என்ற துணை ஆங்கில இதழ் தான்.இதில் வரும் பல கட்டுரைகள் புதியவர்களுக்கு எளிமையாக புரியுமாறு கொடுத்திருப்பார்கள்.மற்றும் சிங்கப்பூர் நூலகம்--இதன் மூலமும் என்னுடைய Knowledgeஐ வளர்த்துக்கொண்டேன்.

தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்,முயற்சியும் நல்ல பலன்களை கொடுக்கும்.முயன்று கொண்டே இருங்கள்.

இப்போது எனது கணிணியில் இப்போது ஒரு Window,2 linux (Fedora 5 and Suse 9.3) மற்றும் சில Partitions உள்ளது.இவை எல்லாம் ஒரே Harddiskயில்.

நான் XOSL-Boot loader போட்டுள்ளேன்.மிக அருமையான software.ஒரே ஒரு harddisk உள்ளவர்கள் முயற்சித்துப்பார்கலாம்.புது disk ஆக இருந்தால் நல்லது.
QT parted live cd உள்ளது,இதுவும் ok தான்.

Fedora Core 5-தமிழ் fontsஐ அழகாக கையாள்கிறது.Mozillaவில் தமிழ் unicode நன்றாக தெரிகிறது ஆனால் Windows இல் தமிழ் Unicode fonts Mozilla சரியாக காண்பிக்க தவறுகிறது.
Win98 & MEயில் தான் இந்த பிரச்சனையா என்று தெரியவில்லை.Latha fonts, winxp தவிர மட்டவற்றில் சரியாக தெரியவில்லை.

Tuesday, May 30, 2006

கணிணி அனுபவம்

முதன் முதலில் நான் கணிணிஐ நேரில் பார்த்தது 1990வாக்கில்,தனி Room, குளிர்சாதன வசதியுடன்.செருப்பை கயட்டி வைத்துவிட்டுத்தான் போகவேண்டும்.
அதை பயன் படுத்துவதற்கு என்று ஒரே ஒருவர்.
கனிணியைப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கொடுத்த பதில்கள் ஏனோ மண்டையில் ஏறவில்லை.புரியவும் இல்லை.

1995 ஜனவரி மாதம் சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு போகும் முன்பு,இங்கு எனது உறவினர் வீட்டில் ஒரு கனிணியை பார்த்தேன்...கைக்கு அருகில்,திறந்தவெளியில்!
65வயது இளைஞர்(இவரைப்பற்றி பிறகு எழுதுகிறேன்) அதை எனக்கு புரிய வைத்துக்கொண்டு இருந்தார். அவர் என்னுடைய CVஐ மாற்றியமைத்து அதை எனக்கு விளக்கிக்கொண்டு இருந்தார்.

இப்போதும் பெரிய கவர்ச்சி ஒன்றும் அதன்மீது வரவில்லை.அவருடைய பேரன் ஏதோ Game விளையாடிக் கொண்டிருந்தான்.எப்படி விளையாடுகிறான் என்றும் புரியவில்லை. "ஆ" என்று வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தோம்.ஏனென்றால் வந்திருப்பது "social visit pass"யில் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பவேண்டும்.Computer வாங்கமுடியும் என்ற நம்பிக்கையும் இல்லை,அவசியமும் ஏற்படவில்லை.

காலம் புரட்டிப்போட 3 மாதங்களுக்குள் வேலைக்காக சிங்கப்பூர் வரநேர்ந்தது.

அப்போது Site Officeயில் அதிக பட்சமாக 2 கணிணிதான் இருக்கும்.ஒன்று Admin Assistant உபயோகிப்பார் மற்றதை Quantity Surveyor உபயோகிப்பார்.இது Projectன் அளவைப் பொருத்து மாறுபடும்.


புதிதாக வந்த இடம்,வேலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதால் கணிணி பக்கம்கூட தலை வைத்து படுக்கவில்லை.ஆனால் எனது மலேசிய நண்பர் அதை அனாசயமாக உபயோகப்படுத்து வதைப் பார்த்தேன்.அவர் அதில் Mine Sweeper & Free Cell games விளையாடிக் கொண்டிருந்தார்.அவருக்கு அதைத்தவிர வேறு ஏதும் அவ்வளவாகத் தெரியாது என்பது பிற்பாடு தான் தெரிந்தது.அந்த Gamesஐ பற்றி சொல்லிக்கொடுத்தார்,அதுவும் ஓரளவே புரிந்தது.பிறகு அங்குள்ள Admin Assistantகளிடம் கேட்டுக்கேட்டு தெரிந்து கொண்டேன்.


எங்கள் கான்கிறீட் வேலை சில சமயம் மாலை ஆரம்பித்து இரவு முழுவது ஓடும்.அந்த மாதிரி சமயங்களில் நிறைய Spare time கிடைக்கும்.இந்த மாதிரி சமயங்களில் கணிணிஐ உபயோகிக்க கற்றுக்கொண்டேன்.பல நாட்கள் Games தான் விளையாடினேன்,அதற்கு மேல் போகத்தெரியவில்லை.

ஒரு நாள் அந்த Admin Assistant வீட்டுக்குப் போகும் போது.."நீ உபயோகப்படுத்திய பிறகு "Shut Down" செய்துவிடு" என்று சொன்னாள். நானும் சரி என்று சொல்லிவிட்டு,விளையாட ஆரம்பித்தேன்.ஆடிமுடித்த பிறகு...

தெரிந்துகொள்ள வாருங்கள் அடுத்த பதிவுக்கு.

Monday, May 29, 2006

சிங்கப்பூரில் சினேகா

இது என் நண்பர் சொன்னது..
நேற்று நடிகை சினேகா அவர்கள் ஒரு கடைத்திறப்புக்காக் வருவதாக இருந்ததாக கேள்விப்பட்டவுடன் அங்கு மக்கள் திரளாக வந்து சேர்ந்துவிட்டனர்.
மாலை 7 மணி அளவில் வந்தவர் கூட்ட மிகுதியால், காரின் உள்ளேயே இருந்து கொண்டு பட்டனை அழுத்தி திறந்துவைத்தார்.
கூட்டம் கலைந்தபிறகு மெதுவாக வந்தார் சினேகா-அவர் கடைக்குள் இருப்பதாக செய்தி வந்தவுடன் திரும்பவும் கூட்டம் கூடியது.மிகச்சிலருடன் இருந்த போலிசார் கூட்டத்தை கண்டவுடன் மேலும் பலரை அழைக்க வேண்டியிருந்தது.
ஆண்டவா!!! இந்த மக்களைக் காப்பாற்று.

Saturday, May 27, 2006

பாலகுமாரன் கதைகள்

எனக்கு சிறுவயதில் இருந்தே கதை புத்தங்கள் படிப்பதில் அவ்வளவு interst இல்லை.பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சின்ன சின்ன படம் போட்ட புஸ்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு இருந்தேன்.
நான் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
SSLC வரை
கடல் புறா
பொன்னியின் செல்வன்
சில சுஜாதா கதைகள்
அர்த்தமுள்ள இந்துமதம்
சில விவேகானந்தர் புத்தங்கள்.

SSLC Exam முடித்தவுடன் உள்ள விடுமுறையின் போது அப்பா வாங்கிக்கொடுத்த புத்தகங்கள் தான் " அர்த்தமுள்ள இந்துமதம்".திரு. கண்ணதாசனின் அருமையான புத்தகம்.மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது.பல பாகங்களைக் கொண்டது எனது வாழ்கையில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது.
புட்டபர்த்தியில் வேலை செய்யும் போது நிறைய ஆன்மிக புத்தகங்கள் வாங்கிப்படிப்பதுண்டு.நல்ல விலைக்கழிப்புடன் ஆசிரமதில் வாங்கும் புத்தகங்களை படித்தவுடன் யாரிடமாவது கொடுத்துவிடுவதுண்டு.
சிங்கப்பூர் வந்தவுடன் அவ்வளவு Time கிடைக்காததால் புத்தககங்கள் படிப்பது குறைந்தது.எனது மனைவிக்கு யாரோ Library வசதிகளை காண்பித்துக் கொடுத்து தேவையான Registration cardம் வாங்கிக்கொடுத்த பிறகு தான் நிறைய தமிழ் புத்தகங்கள் இங்கும் இருப்பது தெரிந்தது.அப்படிக் கிடைத்த ஒரு புத்தகம் தான் திரு.பாலகுமாரன் எழுதியது.அதற்கு முன்பு இவர் யார் என்று கூட தெரியாது.
இவர் எழுதும் நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை நான் சொல்வதைவிட என் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்,ஏனென்றால் அவருக்கு இவர் எழுதும் நடை பிடிக்காது.
"என்ன? யாரோ பக்கத்தில் நின்று பேசுவது போல் உள்ளது"என்றார்-4 வருடங்களுக்கு முன்பு.
போன வருடம் இவர் எழுதிய "என் அன்புக் காதலா" என்ற கதையை படிக்க நேர்ந்தது.என் வாழ்கையின் பல நிகழ்வுகள் ஒத்துப்போனவுடன் அதை மனைவியிடம் சொன்னேன்.அதை ஞாபகம் வைத்துக்கொண்டு இங்கு(Yishun) உள்ள நூலகத்தில் தேடினோம்,கிடைக்கவில்லை.நூலகத்தில் உள்ள கனிணி மூலம் Locate செய்த பொழுது அந்த புத்தகம் வேறு ஒரு நூலகத்தில் இருப்பதாக காட்டியது.
சிங்கப்பூர் நூலக வசதிகளை வேறொறு பதிப்பில் பார்க்கலாம்.
மனைவி, Ang Mo Kio வில் உள்ள நூலக்கத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை என்றார்.சரி நான் வேறு ஒரு நூலகத்தில் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு Bukit Batok நூலகத்தில் பார்த்தேன் மற்ற எல்லா புக்குகள் உள்ளது இதுமட்டும் இல்லை.மறுபடியும் கனிணியில் பார்த்தால் அங்கு தான் உள்ளது என்று காண்பித்தது.திரும்ப தேடினேன் ஆனாலும் கிடைக்கவில்லை,சோர்வுடன் வெறொரு Book ஐ எடுத்துக்கொண்டு திரும்பலாம் என்னும் போது....மின்னல் Idea
நூலகப் புஸ்தககங்களின் பின்புறம் கொஞ்சம் gap இருக்கும் அதில் சில புத்தகங்கள் விழ வாய்ப்புண்டு.இது ஞாபகம் வந்தவுடன் திரும்பிப்போய் பார்த்தால் அங்கு இருந்தது.
அதை நேற்று படித்து முடித்தவுடன் மனைவி சொன்னது
"இவரால் எப்படி மற்றவர்கள் உணர்வுகளை எழுத முடிகிறது?நான் என்ன என்ன பண்ண நினைக்கிறோனோ அதை இவர் எழுதியிருக்கிறார்"என்றார்
திரு பாலகுமாரனை பிடித்த ஒருவர் விமர்சனம் பண்ணுவதைவிட பிடிக்காத ஒருவர் சொல்வதுதான் நிஜமான விமர்சனமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
இது தான் பாலகுமாரன் கதையின் பலமும் கூட.

Friday, May 26, 2006

இரண்டாவது வேலை.

Tambaram siteயில் (கட்டுமான வேலை நடைபெரும் இடத்திற்கு பெயர் Site என்போம்) இருந்த எனது மேலதிகாரிக்கு தேனீர் என்றால் உயிர் போலும்,20 நிமிடங்களுக்கு ஒருமுறை குடித்தே ஆகவேண்டும்,ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு 2 தடவை மாத்திரம் தான்.இது எனக்கு நானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள்.

அவருக்கு நல்ல மனது,தான் எப்பொழுதெல்லாம் Tea குடிக்கிறாறோ அப்பொழுதெல்லாம் நமக்கும் சேர்த்து Order செய்துவிடுவார்.அதற்கு காசும் கொடுக்கவிடமாட்டார்.இப்படித்தான் முதல் வலை சுற்றப்படும்,இப்படியே உங்கள் Charactorம் அளக்கப்படும்.1 வாரம் பார்த்தேன்,கண்டதை கொட்டிவைக்க என் வயிற்றில் இடம் இல்லை என்பதால்,அவரிடம்,ஸார்,என்னுடைய லிமிட் ஒரு நாளைக்கு 2 தான் அதனால் தயவுசெய்து எனக்கு இனிமேல் Tea order செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.நான் சொன்னவிதமோ,இடமோ அவரை காயப்படுதியிருக்க வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக உறவுகள் தேயத்தொடங்கின.என்னை கயட்டி விட காரணங்களை தேடத்தொடங்கிருந்தார்.

இபபடியே ஒடிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் நான் cycle இல் வந்துகொண்டு இருக்கும்போது,எங்கள் site contractor ஒரு வண்டியில் சிமிண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எங்கோ போய்கொண்டு இருந்தார்.என்னைப்பார்த்ததும் அவருக்கு கொஞ்சம் "திக்" என்றிருந்தது.விஜாரித்ததில் அவை நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரிந்தது.இது நடந்தது ஞாயிறு ஆதலால் மறுநாள் எனது அதிகாரியிடம் சொன்னேன்.அவரும் Godown போய் stockஐ சரி பார்க்கச்சொன்னார்.கணக்கு சரியாக இல்லை.மற்றும் இதைச்செய்யச்சொன்னதே அந்த அதிகாரிதான் என்றார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
உறவுகள் விரியத்தொடங்கியது.அவருக்கு ஒரு புதிய எதிரி இருப்பதாக நினைக்கத் தொடங்கினார்.பழிவாங்கும் பகுதிகள் மறைமுகமாகத் தொடங்கியது.வேறுவழி தெரியாமல் யாரோ கொடுத்த Ideaப் படி அவருக்கு மேல் உள்ள அதிகாரிஐ பார்த்துச் சொன்னால் ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்று அவரிடம் சொன்னேன்.

அவரும் பொறுமையாக நடந்ததெல்லாம் கேட்டுவிட்டு ஆவன செய்வதாக கூறினார்.
சில நாட்கள் கழிந்த பிறகு அவர் சொன்ன சொல்லை காப்பாற்றி என்னை பக்கத்தில் உள்ள இன்னொரு Site க்கு மாற்றினார்கள்.

இங்கு இருந்த Assistant Engineer (திரு.நாரயணசாமி) மற்றும் Technical Assistant (திரு.ஜெகன்நாதன்)ம் எனக்கு மிகவும் உதவினார்கள்.இவர்கள் இல்லாமல் இருந்தால் இன்று அந்தக்குட்டையில் மூழ்கிருப்பேன்.காப்பாற்றியதற்கு நன்றி.நன்றி.

ஒரு நாள் திரு.ஜெகன்நாதன் என்னைப் பார்த்து இந்த வேலை உனக்கு சரிப்பட்டு வராது, ECC என்ற Companyயில் ஆள் எடுக்கிறார்கள்,Apply செய்துபாரேன் என்றார்.
இங்கிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற நோக்கத்துடன் apply செய்தேன்.இதற்கிடையில் மற்ற இடங்களுக்கும் Try செய்தேன்.அப்படி போன இடத்தில் நடந்த சுவாரஸயமான விவரம்....
அடுத்த பதிப்பில்...

Wednesday, May 24, 2006

முதல் வேலை-First Job

எது எப்படியோ...நடப்பது நல்லவற்றிற்கே என்று நினைத்து துவங்குவோம்.

முதலில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கு வணக்கம்.

வாருங்கள் வேலைதேடும் படலத்துக்குள் நுழைவோம்..

நான் முதலில் பார்த்த வேலை "Port Trust" இல் Technical Assistant.

எவ்வளவு நாள் பார்த்தேன் தெரியுமா?

ஒரே ஒரு நாள்.என்ன அப்படி பார்க்கிறீர்கள்?

தெரிந்தவர்கள் மூலமாக சேர்த்துக்கொண்டு அன்று சாயங்காலமே "Assistant Engineer"-Permission இல்லாமல் இப்படி வேலைக்கு வைக்கக்கூடாது என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள்.நல்ல வேலை இவ்வளவு சீக்கிரம் புரிந்துகொண்டு அனுப்பிவிட்டார்கள்.ஆண்டவன் அருளாள் பிழைத்தேன்.

சில மாதங்கள் ஊரை சுற்றிவிட்டு இங்கு சரிப்பட்டு வராது என்று Chennai கிளம்பி வந்தேன்.

மாமாவீட்டில் (நங்கநல்லூர்) தங்கி முதலில் "Employment Exchange" இல் பதிவு செய்துகொண்டேன்.2 மாதங்கள் கழித்து சில நேர்கானல்கள் வந்தது.அதில் Tiruvallurயில் வந்த நேர்கானலில் தகுதிபெற்று அந்த பிரபலமான-மக்களுக்காக சேவை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
மக்களுக்காக சேவை செய்துகொண்டு மக்கள் பணத்தை சாப்பிடுவதாக ஊழல் நிறைந்ததாக சொல்லப்படும் மிக பிரபலமான நிறுவனம் தான்.இப்படி தகுதி பெருவதற்கும் Echangeயில் இருந்து letter பெறுவதற்கும் சில குறுக்கு வழிகளை போக நேரிட்டது.தலைகுனிந்து வெட்கப்படவேண்டும்.வேறு வழியில்லை.எப்போது தகுதிக்கு %age போட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே நிறைய Compromise செய்யவேண்டியுள்ளது.வயிறு,பசி மற்றும் வேலை தேடவேண்டும் என்ற வெறி.

இது யாரையும் குறைசொல்வதற்காக அல்ல.ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதனின் நிகழ்வுகள்.அவ்வளவு தான்.

இந்த நிறுவனத்தில் சேர்ந்து நான் கற்றுக்கொண்டது மிக மிகக்குறைவு bill book எழுதுவது,புது வேலைகளுக்கு வேண்டிய Papersஐ பல Departmentயில் இருந்து வாங்கிக்கொண்டுவருவது,ஏதாவது Drawings போடுவது என்று ஒடிக்கொண்டு இருந்தது.Mr Subramani என்ற கீழ்நிலை பொறியாளர் தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்.Soft hearted Person-இந்த குணநலங்களுடன் இவர் எப்படி இங்கு வேலைப் பார்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கேன்.அந்த Project முடிந்தது.

அடுத்த Project --Tambarத்தில்.இன்னும் அதே நிறுவனம் தான்.இங்கு நான் பார்த்த கட்டிடங்கள்-- பொதுக் கார்கள் வந்து போகும் இடம் மற்றும் ஒரு Shopping Complexம்.
எங்கள் Office ஒரு கீத்துக்கொட்டகை உள்ளே ஒரு Benchம் சில நாற்காலிகளும் தான்.

என்னுடைய அதிகாரி நன்கு படித்த ஒரு இடைநிலை பொறியாளர்.திரு ராஜன் என்று வைத்துக்கொள்வோம்.
இவரிடம் நான் மொத்தமாக 9 மாதங்கள் தான் வேலை பார்த்தேன்.இந்த சமயத்தில் நாங்கள் வெறும் தம்மாத்துண்டு செங்கல் கட்டுவேலை மாத்திரம் தான் போட்டோம்.இதற்குள் 5 or 6 times budget போட்டுவிட்டோம்.இந்த Project முடிக்க 5 வருடங்கள் ஆகியிறுக்கும் அதற்குள் நான் வேறு Companயில் சேர்ந்து 3 வருடத்தில் ஒரு Cement Plant முடித்துவிட்டேன்.

இந்த மாதிரி நிருவனங்களில் வேலை செய்ய சில முக்கியமான தகுதிகள் வேண்டும்.

1.மனசாட்சியை கழற்றி வைத்து விட வேண்டும்
2.யாரும் யாரையும் காட்டிக்கொடுக்க கூடாது.
3.யார், எவருடைய Group என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
4.திருட்டு போவதை,திருடுபவர்களை தெரிந்தாலும் காட்டிக்கொள்ளக்கூடாது.நம்முடைய பங்கு சரியாக கிடைக்கிறதா என்பதில் மட்டும் குறியாக இருக்கவேண்டும்.இதில் நாம் ஏமாந்துவிடக்கூடாது.இல்லாவிட்டால் "பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டம் கேட்காமல் கிடைக்கும்.
5.உனக்கு அறிவு இருந்தாலும் அதை நிருபிக்க முயலக்கூடாது.
6.இது ஒரு சிலந்தி வலைப்பின்னல் யாரும் வெளியில் போக முடியாது.
7.நேர்மையாக இருக்க முயற்சிக்க கூடாது.
8.கொஞ்சம் Rouge ஆக இருப்பது நல்லது.
9.கை தாராளமாக நீள வேண்டும்.

ஆமாம் இவ்வளவு எழுதுகிறாயே,அங்கு நேர்மையானவர்களே கிடையாதா?

நிச்சயம் உண்டு,1000 அல்லது 10000யில் ஒன்று,அவரை கண்டுபிடித்து நம் திறமையை நிருபிப்பதற்கு முன்பு உன்னைச்சுற்றி மிகப்பலமாக வலை சுற்றப்பட்டு இருக்கும்.
இதில் இருந்து மீள்வது பிரம்ம பிரயத்னம்.

சரி,நீ எப்படி மீண்டாய்?

ஆரம்ப நிலையில் உள்ள ஊழியன்,Temporary Staff என்ற தகுதி,நல்ல நண்பன்(Mr.Jagannathan) மற்றும் அங்கிருந்த நேர்மையான அதிகாரி.

மீண்ட கதை அடுத்த பதிவில்..

Tamil FM

FM ரேடியோ

சிங்கப்பூரில் நிறைய FM stations உள்ளது அதுவும் தமிழுக்கு என்று ஒலி-96.8 மட்டும் தான்.நிறைய Buildings உள்ளதால் நல்ல Receptionக்கு வீட்டின் உள்ளேயே கபடி ஆடவேண்டும்.நீங்கள் ரேடியோ இருக்கும் பக்கம் போனால் ஒலி அளவு குறையும் / கூடும்.
இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சனையா அல்லது வீட்டில் எல்லோருக்கும் உள்ளதா என்று தெரியவில்லை.அதென்னவோ அதற்கு மிக பக்கத்தில் உள்ள Station மிக சுத்தமாகக்கேட்கிறது.அப்போது பக்கதில் இருக்கும் Buildings என்னாகிறது என்று தெரியவில்லை.

வெளியில் போனால் மேல் சொன்னதை தவிர Malaysiaவின்
101.1 & THR Ragga ம் கேட்கமுடியும்.இதில் THRஐ பற்றி பார்ப்போம்.

THR-FM ரேடியோ...இதன் நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.நிகழ்ச்சிகள் பல சும்மா அட்டகாசமாக இருக்கும்.அதுவும் Geetha படைக்கும் நிகழ்ச்சி என்றாலே ஒரு கல கலப்புதான்.

நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில் Malaysiaவில் இருந்து ஒலிபரப்பாகும் THR-FM ரேடியோவை கேட்கநேர்ந்தது.நடந்தது இது தான்,

ஒரு பெண் குரல் ஒரு ஆணை Phoneயில் கூப்பிட்டு

அத்தான் (கொஞ்சும் குரலில்) நான் Bus இல் ஏறி வந்தேனா,இங்கு இறக்கிவிட்டுட்டு போயிவிட்டார்கள்,எனக்கு இடம் தெரியவில்லை,வந்து அழைத்துக்கொண்டு போகிறீகளா? இங்கு யாருமே இல்லை.

அவர்: ஆமாம்மா,பக்கத்தில் ஏதாவது Buildings உள்ளதா?

ஒன்றும் இல்லை

அவர்:Bus stopயில் பெயர் எழுதியுள்ளதா?

இல்லிங்களே!!!

அவர்:பக்கத்தில் நிறைய காடி(கார்கள்) போகிறதா? (Highway க்கு பக்கத்திலா என்று கண்டுபிடிக்கிறார் போலும்)

ஆமாம்

அவர்:நீ எந்த பஸ்ஸில் ஏறினாய்?

(இவர் ஒவ்வொன்றாக இந்தமாதிரி கேட்டுக்கொண்டே போக அந்த பெண் எரிச்சலில்)

என்னங்க நான் இங்கு தனியாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கேன் நீங்க கேள்வி மேல் கேள்வி கேக்றீங்களே என்று பதட்டப்பட

அவர்:ஏம்மா நீ எங்கு இருக்கிற என்று தெரிந்தால் தானே நான் கூட்டிவர முடியும்.(ஐயா செம Cool,கொஞ்சம் கூட பதட்டப்படவில்லை)

நான் ஒரு திசையில் போய் நீ வேறு திசையில் இருந்தால் என்ன பண்ணுவது?

பெண்:கொஞ்சம் இருங்க,ஒருவர் வருகிறார் அவரிடம் பேசுங்கள் என்று அடுத்தவரிடம் Phone போகிறது.

3வது நபர்:ஹலோ

ஹலோ,நீங்க யார் பேசுவது?

இதற்கு மேலும் அவரை வெறுப்பேற்ற வேண்டாம் என்று Miss Geetha (DJ) உண்மையை உடைக்கிறார்.

அந்த ஆண் கொஞ்சும் குரலில்

என்ன கீதா இப்படி பண்ணீட்டிங்க,நான் பயந்துட்டேன் என்றார்.

இந்த phone conversationயில் அந்த பெண்ணின் குரல், நிஜமாகவே பேசுவது போல அட்டகாசமாக இருந்தது.

இத்தனைக்கும் இவர்கள் இருவரும் கல்யாணம் ஆகாதவர்கள்,அந்த ஆணின் அக்கா கல்யாணம் முடிவதற்காக காத்திருக்கும் வருங்கால தம்பதிகள்.

பொறுமை இருந்தால் போதும்-நிச்சயமாக ஜெயிக்கலாம்.

உங்கள் இருவருக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Monday, May 22, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-3

Principal முன்பு உட்கார்ந்து இருந்த அப்பா நெற்றியில் உள்ள ஸ்ரீசுர்ணத்தைப் பார்திருப்பார்போலும்,

சார்,சில பையன்கள் BE போனாலும் அந்த seat எல்லாம் "Backward"க்கு மாத்திரம் தான் என்றார்.அப்படியெல்லாம் rules இருந்ததா என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

எனது முன்னோர்களின் Actionயின் "Equivalent opposite reaction" இப்போது தெரிந்தது.

(இந்த சமயத்தில் அனாவசியமாக,யாரோ ஒருவர் எழுதிய "IITகளை மூட வேண்டும்"என்ற பதிப்பை பார்க்க நேரிட்டது)
ஆமாம்! உலகம் உட்பட எல்லாமே உருண்டைதான்...செய்த தவறை மீண்டும் மீண்டும் பல மக்கள் வெவ்வெறு விதங்களில் செய்து வருகிறோம்.

இதன் மூலம் எனது Mechanical ஆசை முற்றாக முழுகிப்போனது.

சரி,அடுத்தது என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கு போது இன்னும் 1வார அவகாசம்(decide செய்வதற்கு) இருப்பது நினைவுக்கு வந்தது.

மறுநாள்..சரி "Electrical Engineering" வகுப்பில் உட்கார்ந்து பார்க்கலாம் என்று போய் பாதி நாள் தான் இருந்தேன்.
Volt,Amps & Current என்று கண்ணுக்கு தெரியாத சமாச்சாரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.சுத்தமாக மண்டையில் ஏறவில்லை.காலை பகுதி இப்படி போய்கொண்டுறிக்கும் போதே மாலை பகுதியை எங்கு செலவழிப்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Lunch Time..

Canteen பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கும் போது புதிய நண்பர் கிடைத்தார்.அவர் நிலமை என்னைவிட மோசமில்லை ஏனென்றால் அவர் முதலிலே Decide பண்ணிவிட்டார் தனக்கு Civil தான் என்று.அவரிடம் பேசியபிறகு,சரி மதியம் Civil Classக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.அரை மனதுதான் ஏனென்றால் Civil என்றாலே ஒரு மாதிரியான "Students" என்ற நல்மதிப்பை முன்னால் மாணவர்கள் ஏற்படுத்திவைத்திருந்தார்கள்.

மதியம் Classயில் ஏதோ புரிவது போல தெரிந்தது மற்றும் அந்த நண்பரும் வற்புறுத்தினதால் அங்கேயே தொடரலாம் என்று முடிவுசெய்தேன்.

Futureஐ Decide பண்ணிய விதத்தை பார்த்தீர்களா?? Reservation என்னை பாதி துரத்த மீதி எனக்கு பிடிக்காத Course துரத்த வந்து Civil மடியில் விழுந்தேன்.

Civil Engineering - என்றால் என்ன? இதைப்பற்றி எனக்கு "அ" என்ற அட்சரம் கூடத்தெரியாது.அதற்கு உதாரணம்...

ஒரு நாள் Classயில் பாடம் நடந்துகொண்டு இருக்குபோது சொன்னார் "Building கட்டும்போது கம்பி கட்டுவதை பார்த்திருப்பீர்கள்"என்று,நான் குழப்பிப்போனேன் ஏனென்றால் நான் பார்த்ததேயில்லை.இப்படித்தான் என்னுடைய "Civil Engineering " படிப்பு தொடங்கியது.

2 வருட Diploma, 4 Semesters பலவிதமான பாடங்கள்,கடைசி Semesterயில் Project Work ஒன்று பண்ணவேண்டும்.எங்கள் Groupயில் நாங்கள் ஒரு சின்ன Pavilion கட்டினோம் அது இன்றும் அந்த Play Ground பக்கத்தில் உள்ளது.இதற்கு Design பண்ணியது Mr.Natarajan அப்போதய Head of Civil Department.இவர் தற்போது Principal ஆக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பொருமைசாலி. நல்ல மனிதர்.

வரும் பதிவுகளில் நான் பார்த்த Companyகள்,மற்றும் கட்டுமானத்துறையின் நெளிவு சுளிவுகளை பார்க்கலாம்.

Thursday, May 18, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-2

முதல் வருடப்படிப்பில் 2 ஆசிரியர்களைப் பார்த்தோம்...

3.திரு.கோவிந்தராஜு:இவர் தான் பாலிடெக்னிக் முதல்வர்.முதல்வருடம் ஆதலால் இவருடன் பழகும் வாய்ப்பு குறைவு.ஆனால் இவர்மூலம் தான் நம் வாழ்க்கை தடம் மாறப்போகிறது என்று அப்போது தெரியாது.
தடிமனான கண்ணாடி,மிக ஒடிசலான தேகம்.நிறைய சிகரெட் பிடிப்பார் என நினைக்கிறேன்.
சில சமயம் Mechanical Engineering யில் வகுப்பு எடுப்பார்.

4.திரு.PT Master-பெயர் சரியாகத் தெரியவில்லை.
Mr.Kanakaraj Master என்று நினைக்கிறேன். மிகவும் நல்ல மனிதர்.எங்களை நன்றாக விளையாடத் தூண்டி அதற்கு வேண்டியவற்றை வாங்கிக்கொடுத்தார்.அதன் மூலம் என்னால் 3 வருடமும் Cricketயில் "Inter Polytechnic Tournament" யில் கலந்துகொள்ள முடிந்தது.3ம் வருடம் நான் தான் Captain.முதல் ஆட்டத்திலே மகா மோசமாகத் தோற்றோம்.அதைப்பிறகு பார்ப்போம்.

இவர்களைத் தவிர Physics,English எடுத்த ஆசிரியர்கள் பெயர் நினைவில் வரவில்லை.மன்னிக்கவும்.

நான் படித்த சமயத்தில் முதல் வருடம் 2 semester ஆக இருந்தது.2 வது வருடத்தில் நமக்கு வேண்டிய/பிடித்த course எடுத்து படிக்கலாம்.

அந்த சமயத்தில் அங்கு Civil,Electrical & Mechanical என்று 3 courses மட்டும் தான் இருந்தது.Mechanicalக்கு மட்டும் போட்டோ போட்டி அதனால் அதைப்படிக்க விரும்புவோர் Meritயில் வரவேண்டும்.அதுவும் முதல் 31 இடங்களில் வருபவருக்கு மட்டும் தான்.ஆனால் நான் வாங்கிய Marks, என்னை 32வது இடத்திற்கு தள்ளியிருந்தது.இங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது.

எனக்கோ Mechanical மீது தீராத காதல்,எப்படியும் Seat வாங்கிவிட நானே பல ஆசிரியர்கள் மூலம் முயற்சித்துக் கொண்டு இருந்தேன்.

சில Canditates BE க்கு செல்வதால் அந்த இடம் எனக்கு கிடைக்கலாம் என்றார்கள்.

நாட்கள் சென்றன,Mechanical இல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது.இதற்கிடையில் சிலர் BE சீட் கிடைத்து போயினர்.இந்த விஷயம் தெரிந்து Head of the Department-Mechanical யிடம் போய் கேட்டேன்.அதற்கு அவர் "நீ வேண்டுமானால் உன் அப்பாவை அழைத்துக்கொண்டு Principalஐ பார்" என்றார்.

இது என்ன புது தலைவலி என்று நினைத்துக்கொண்டு...வீட்டில் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.ஏனென்றால் அப்பாவிடம் சொல்ல பயம்.ஒழுங்காக படித்திருந்தால் இந்த தொல்லை வந்திருக்காது என்று சொல்லித் திட்டுவார்.

கடைசியாக ஒருவாறு மனதை திடப்படித்துக்கொண்டு வீட்டில் அம்மாவிடம் சொன்னேன்,அது அப்பாவிடம் போய்.. வழக்கம் போல் அர்ச்சனைதான்.
அவர் பங்குக்கு ஒரு நாள் இழுத்தடித்துவிட்டு Ploytechnic வந்தார்.

Principal Room

பரஸ்பரம் குசலம் விஸாரனை முடிந்த பிறகு எனது அப்பா தான் ஆரம்பித்தார்.

"என் பையன் Mechanical படிக்க ஆசைபடுகிறான்,நீங்கள் தான் பார்த்து அவனுக்கு seat கொடுக்கவேண்டும்"

seat எல்லாம் முடித்துவிட்டதே?

BEக்கு போனவர்கள் சீட் காலியாக இருக்குமே,அதில் கொடுக்கலாமே? என்றார்.

அப்படியெல்லாம் கொடுக்கமுடியாது என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.

வாழ்கையில் முதல் இடி விழுந்தது.

இந்த மாதிரி இடிகள் தொடரப்போவது தெரியாமல் சிலையாக நின்றேன்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்........அடுத்த பதிப்பில் காணலாம்.

Wednesday, May 10, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-1

கட்டுமானத்துறை பற்றி பார்பதற்கு முன்பு

நான் வந்த சில வழித்தடங்கள்...

தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப்பள்ளி (இப்பொழுது பெயர் மாற்றம் கண்டுவிட்டது)---இங்கு தான் 6 வதிலிருந்து 11 வது வரை படித்தேன்.இங்கு என்னை நேர்படுத்திய நண்பர்களையும் மற்றும் AAசிரியர்களையும் பிரிதொரு சமயத்தில் பார்ப்போம்.

1977-இந்த வருடம் தான் பள்ளி இறுதி ண்டு தேர்வு எழுதினேன்.நாங்கள் தான் கடைசி SSLC மாணவர்கள்.தேர்வு முடிவுகள் வந்தது 68% தான்.சில கல்லூரிகள்,Polytechnics ம் விண்ணப்பம் போட்டேன்.கடைசியில் அம்மாவின் யோஜனையின்படி Polytechnicயில் சேர்ந்தேன்.பக்கத்துவீட்டு "ரகு"Polytechnicயில் படித்ததால் அங்கு படிக்கச்சொன்னார்கள் என்று நினைக்கிறேன். எதற்கு சொல்கிறேன் என்றால் ஒரு ideaவும் இல்லாமல் Polytechnicல் சேர்ந்தேன்.வாழ்ந்த காலம் அப்படி.

இப்பொழுது மாணவர்களுக்கு "Aspire" மாதிரி இடங்கள் உள்ளது அதனால் உள்ள வழிகள் சில தெளிவாக தெரிகிறது.என்ன செய்யப்போகிறோம் என்று ஒரளவு தெரிகிறது.னாலும், இன்று கூட "எதிர்காலத்துகு உகந்த படிப்பு" என்பது யாராலும் உறுதியாக கூறமுடியாமல் தான் உள்ளது.அப்படியே கண்டுபிடித்து படித்தாலும் வேலை கிடைக்கும் என்பது நிச்சயம் கிடையாது.இப்பொழுது வாழும் முறை இப்படி உள்ளது.

1977-1980 Valivalam Desikar Polytechnicயில் படித்தேன்.

முதலாண்டு எல்லோருக்கும் பொது என்பதால் படிப்பதில் மட்டும் தான் கவனம் இருந்தது.வீட்டில் அப்பா "Strict" என்பதால்.... session mark விஷயத்தில்."விளையாடினால் தான் session mark போடுவார்கள் என்று"- பொய் சொல்லி cricket விளையாடிக்கொண்டு இருந்தேன்.சில சமயங்களில் Table Tennis ம்
விளையாட கற்றுக்கொன்டேன்.

இங்கு எனக்கு கற்பித்த சில AAசான்களை நினைவுகூர்வது மிக அவசியம்.

திரு.சம்பத்--கணக்கு இவர் circle போடுவது அவ்வளவு சரியாக இருக்கும்.Board யில் ஒரு புள்ளி வைத்து அட்டகாசமாக circle போடுவார்.அவர் சொல்லிக்கொடுக்கும் விதமே அலாதியே தான்.தவறு என்றால் அதை அப்படியே ஒப்புக்கொள்ளும் தன்மை அவரிடம் இருந்தது.
எப்படி??
முதல் வருட exam முடிவுகள் வந்தது.அவர் subjectயில் நான் 100 எடுத்திருந்தேன் னால் அவர் எனக்கு session mark 72 தான் போட்டிருந்தார்.அதில் யாரும் தவறு சொல்லமுடியாது ஏனென்றால் அது என்னுடைய பழைய performance வைத்து அவர் போட்டது.னால் Principal பார்த்துவிட்டு அவரிடம் "ஏன்?" என்று கேட்டிருகிறார்.இதை அப்படியே என்னிடம் சொல்லி அவர் வருந்துவதாகச் சொன்னார்.அவர் எனக்கு 80/85 போட்டிருந்தாலும் பெரிதாக ஏதும் நடந்திருக்காது.
இருந்தாலும் அவருடைய நேர்மை என்னை வியக்கவைக்கிறது.அவர் motor cycle விபத்தில் காயப்பட்டு காலமானார் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

திரு.கணபதி
இவரும் கணக்கு தான் எடுத்தார்.சும்மா பெரிய பெரிய கணக்குகளை அனாயசமாக சொல்லித்தருவார்.அவரிடம் குட்டு வாங்காத பையன்களே கிடையாது.கடன்காரா,நீ தேர மாட்டே,நீயெல்லாம் என்னத்த படித்து உருப்படபோற.. இப்படித்தான் அவர் அர்ச்சனை.னால் classஐ விட்டு வெளியில் வந்தால் ஜாலியாக பழகுவார்.பொதுவாக நல்ல மனிதர்.

மற்றவர்களை வரும் பதிப்புகளில் பார்க்கலாம்.

Monday, May 08, 2006

Latha-font Problems

தமிழ் letters சரியாக தெரியவில்லையா?
நீங்கள் win95/win98/winme உபயோகிப்பவரா?
உங்கள் கனினியில் "லதா" font இருந்தால் அதை நீக்கிவிடவும்.

Friday, May 05, 2006

முதல் பதிவு


நிறைய Blogs படித்துவிட்டு,சரி நாமும் சிலவற்றை எழுத முயற்சிக்கலாம் என்றுள்ளேன்.
மீதி அடுத்த பதிவில்.
வடுவூர் குமார்