Thursday, October 29, 2009

பிரித்து மேய்வது

தலைப்பில் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் இஷ்டமான வேலை அதில் வெற்றியோ தோல்வியோ அது இரண்டாம் பட்சம் தான்.அதனால் நான் அடைந்த அனுபவமே எனக்கு முக்கியம் இதற்காகவே பல சாமான்களை கழற்றிபோட்டிருக்கேன்.

சில மாதங்களுக்கு முன்பு வெப் கேமை பிரித்ததை இங்கு போட்டிருந்தேன்,அப்பதிவில் அடுத்தது DVD Recorder என்று சொல்லியிருந்தேன் அதற்கு இன்னும் நேரம் வராததால் வேறு ஒன்றை முயற்சிக்க வாய்ப்பு இப்படி கிடைத்தது.

ஒரு 8 மாதம் பின்னோக்கி போவாம்.அப்போது சிங்கையில் இருந்தேன்.
மச்சினர் தனக்கு ஒரு டிஜிடல் கேமிரா வேண்டும் என்றும் அதன் விலை 5000 ~ 6000 வரைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் என்றார்.எனக்கு தெரிந்த சிம் லிம் ஸ்கொயர்,முஸ்தாபா மற்றும் நரேந்திரன் (சிங் கடை) யில் முதல் சுற்று பார்த்துவிட்டு கடைசியில் சிங் கடையில் 200 வெள்ளிக்கு Samsung S630 என்ற மாடலை வாங்கினேன்.சிங் கடை பொருட்களில் மீது பொதுவான குற்றச்சாட்டையும் மீறி வாங்கினேன் ஏனென்றால் எனக்கு அவர்கள் சொன்ன மாதிரி தரக்குறைவு ஏற்படவில்லை.ஊருக்கு வந்து மச்சினரிடம் கொடுத்து அவர்கள் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்,எவ்வித சோதனையும் வரவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்கு போயிருந்த போது மச்சினர் போன் செய்து நான் வாங்கிக்கொடுத்த காமிராவில் LCD மட்டும் வேலை செய்யவில்லை அதை மாற்ற இங்கு 2500 கேட்கிறார்கள் என்றார்.கேமிராவை ரிப்பேர் செய்யாதீர்கள் அதற்கு பதில் புதிதாக கொஞ்சம் பணம் போட்டு வாங்கிவிடலாம் என்றேன் அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு மீண்டும் என்னிடமே வேறு ஒரு கேமிரா வாங்கச்சொன்னார்.நான் மஸ்கட் போவதால் அங்கிருந்து வாங்கி வருவதாக சொல்லியிருந்தேன் அதே மாதிரி வேறு ஒரு புதிய கேமிராவையும் வாங்கிக்கொடுத்தேன்.

போன வாரம் அவரை ஒரு விழாவில் சந்தித்த போது அந்த பழைய கேமிராவை என்னிடம் காட்டி மஸ்கட்டில் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள் அல்லது தூக்கிப்போட்டு விடுங்கள் என்று சொன்னார்.அதை வாங்கி வந்து நானும் இயக்கி பார்த்த போது,உதட்டை பிதுக்கி தூக்கி போட வேண்டியது தான் போல் இருக்கு என்று நினைத்து அதற்கு முன்பு அதை பிரித்து அதனுள் எப்படி உள்ளது என்று பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அதை மறு நாளுக்கு ஒத்திப்போட்டேன்.இதற்கிடையில் அதன் மின்கலத்தை கொஞ்சம் மினேற்றம் செய்து அதனால் எதுவும் பலன் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று மின்னேற்றினேன்.

மறு நாள் காலை மின்னேற்றிய கலங்களுடன் கேமிராவை இயக்கிய போது LCD யில் மிக மிக மெலிதாக படம் தெரியந்தது ஆனால் அதை வைத்து பெரிதாக ஏதும் செய்ய முடியாது என்று தோனியது.சில Shot எடுத்த போது Flash & Camera ஷாட் எடுப்பது நிச்சயமானது.LCD இல்லை என்றால் இந்த கேமிரா வேஸ்ட் என்பது புரிந்தது.கேமிராவை கழற்றலாம் என்று என்னிடம் இருந்த சிறிய மற்றும் பெரிய Screw driver அனைத்தையும் முயற்சித்தும் முடியவில்லை.இங்குள்ள பல கடைகள் ஏறி இறங்கி வெறும் கையுடன் தான் திரும்பினேன்.சில கடைக்காரர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெளியில் போன மனைவியிடம் சொல்லி வடபழனியில் உள்ள மெர்சி எலக்டானிக்ஸில் கேட்கச்சொன்னேன் அதிலும் தோல்வி தான். கடைசியாக முயற்சிக்க வேண்டிய ஒரே இடம் ரிட்சி தெரு மட்டுமே என்ற நினைப்பில் ஒரு நாள் இடைவெளி விட்டேன்.நான் எவ்வப்போது தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது நடுவில் கிடைக்கும் ஒரு நாள் அதன் போக்கை மாற்றிவிடுவதை பல முறை கண்டிருக்கிறேன் அது இம்முறை பலன் அளிக்குமா என்று தெரியவில்லை.

மறு நாள் சாயங்காலம் தேடுதல் வேட்டையின் நடுவில் ஒரு பேன்ஸி ஸ்டோரில் நுழைந்து இந்த கேமிராவை காண்பித்து இதற்கு தகுந்த ஸ்குரு டிரைவர் இருக்கா என்ற அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது இல்லை என்றே பதில் வந்தது,கடைசியாக கடை முதலாளியிடமே கேட்போம் என்று கேட்ட போது அவர் மற்றவரிடம் சொல்லி தேடி பார்க்கச்சொன்னார்.அந்த மற்றொருவர் கொண்டு வந்த செட்டில் ஒரு ஸ்குரு டிரைவர் இல்லை இருந்தாலும் எனக்கு தேவையானது கிடைத்தது. நாற்பது ரூபாய் மதிப்புள்ளது ஒரு டிரைவர் இல்லாத்தால் முப்பது ரூபாய்க்கு கைமாறியது.

கேமிராவை பிரிப்பதற்கு முன்பு இந்த மாதிரி யாருக்காவது நேர்ந்துள்ளதா அதை எப்படி தீர்த்தார்கள் என்ற தீர்வு அகப்படுதா என்று இணையத்தில் தேடியதில் பல விபரங்கள் கிடைத்தது,மிக முக்கியமாக எப்படி கேமிராவை பிரிக்க வேண்டும் என்பது.பார்தத பதிவுகளை மனதில் நிறுத்தி மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு ஸ்குருவாக பிரித்து LCD ஐ தனியாக பிரித்து பார்த்தேன் அதற்கு கீழ் உள்ள PCB Board யில் ஏதாவது எரிந்துள்ள வடு இருக்கிறதா என்று,அப்படி ஒன்றும் தென்படவில்லை.இனி இந்த LCD ஐ ரிட்சி தெருவில் உள்ள கடையில் கொடுத்து புதிதாக ஒன்று வாங்கி பொருத்த வேண்டும் என்று நினைத்து அதை அப்படி இப்படி என்று திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.இதை எப்படி கழற்றினோமோ அப்படியே மீண்டும் பொருத்திப்பார்த்தால் என்ற குயுகுத்தி தோன்ற அந்த சிறிய/மெலிதான கேபிளை அந்த PCB போர்டில் உள்ள லாக்கரில் திணித்து கேமிராவை இயக்கினேன் ”வாவ்” இப்போது LCD ஒளிந்தது ஆனால் எல்லாமே வெள்ளையாக.புஸ் என்றானது என் ஆர்வம்.கேமிரா இயக்கத்தில் இருக்கும் போது கேமிரா எதை பார்க்கிறதோ அது தானே LCDயில் வரவேண்டும்?

என்னடா இப்படியாகிவிட்டதே என்று சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் அந்த ரிப்பன் கேபிளை எடுத்துவிட்டு மறுபடியும் நன்றாக பொறுத்திவிட்டு மின்கலங்களை போட்டு கேமிராவை உயிர்ப்பித்தேன்.

கேமிராவுக்கு உயிர் வந்தது. LCD யில் அழகாக கேமிரா கோணங்கள் வந்தது.ஏற்கனவே எடுத்திருந்த படங்களை அதில் பார்க்க முடிந்தது.இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மனைவி “ஏங்க அந்த வீடியோ கேமிராவையும் “ கொஞ்சம் பாருங்களேன் என்றார்.

அதை கதியை நீங்களே பாருங்க கீழே.உயிர்பித்தாலும் நடக்கமுடியாத அளவுக்கு ரோபாவாக கிடக்கிறது,ஆனா இன்னொரு முறை இந்த அனுபவம் தேவைப்படும் இம்மாதிரியான தவறு நடக்காது என்று நினைக்கிறேன்.ஏற்கனவே கிழவனாகிப்போன இந்த வீடியோ கேமிரா போனாலும் போகிறது என்ற மனநிலையில் செய்ததால் அவ்வளவு இழப்பை உணரவில்லை.
சோனியின் கைத்திறன் நிஜமாகவே வியக்கவைக்கிறது.
Saturday, October 24, 2009

ரத்தினகிரி

1978 ~ 1979 கால கட்டத்தில் முதல் முறையாக வீட்டை விட்டு தனியாக போன இடங்களில் இதுவும் ஒன்று.பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருக்கும் போது விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம், ஆனா அதுக்கு தகுந்த உடற்பலம் இல்லாவிட்டாலும் ஏதாவது விளாயாடாவிட்டால் அன்று முழுவதும் சோர்வாக இருக்கும்.ஒன்றுமே இல்லாவிட்டாலும் கார்க் Ball ஐ கையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்.பாலிடெக்னிக் 3 வருடங்களும் கிரிக்கெட்டில் பங்கு கொண்டேன் அதன் மூலம் சிதம்பரம் மற்றும் திருச்சி சென்று வந்தேன் அதற்கு அடுத்த படியாக ஆர்வமே இல்லாமல் கற்றுக்கொண்ட மேசை பந்து விளையாட்டுக்காக (Inter Poly Matches) வேலூர் சென்ற போது தான் ரத்தினகிரி போக நேர்ந்தது.

வெளியூறே அவ்வளவாக போனதில்லை என்பதால் மற்ற ஊர்களில் என்ன பார்க்கலாம் என்ற பொது அறிவு கூட இல்லாமல் இருந்தது.

மேஜை பந்து போட்டிக்காக நானும் என் நண்பர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம் அந்த இருவரில் கணேஷ் என்பவனுக்கு வெளி உலக விஷயங்கள் அத்துப்படி.தியேட்டர் எங்கிருக்கு சுற்றுலா தளங்கள் என்னென்ன இருக்கு என்பதை பெரிதாக தெரிந்துவைத்திருந்ததால் நான் ஓர் ஒட்டுண்ணி மாதிரி அவன் பின்னாடியே போய்கொண்டிருப்பேன்.பரோட்டா,பிரட் பட்டர் ஜாம் போன்ற விஷயங்கள் அவன் மூலம் தான் தெரிந்துகொண்டேன்.

வேலூரில் நடந்த போட்டியில் Runners' up ஐ வென்ற களிப்புடன் வேறு எங்காவது போய்விட்டு ஊருக்கு போகலாம் என்ற நினைப்புடன் இருந்த போது அவன் கொடுத்த ஐடியா தான் ரத்தினகிரி.சிறியகுன்றின் மேல் உள்ள முருகன் ஆலயம் அங்கு முருகனடிமை என்ற சாமியார் கூட இருந்தார்,அன்று அவர் மௌனவிரதம் என்பதால் சீட்டில் 3 கேள்வி எழுதிக்கொடுத்தால் குலுக்கல் முறையில் அதற்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் என்றார்கள்.ஒரு சீட்டுக்கு 25 ரூபாய் என்று ஞாபகம்.முதல் முறையாக ஒரு சாமியார் அவரிடம் என்ன கேள்வி கேட்பது என்ற கேள்வி எழுந்த போது வெற்றிடமாக இருப்பது போல் உணர்ந்தேன்.தேவைகள் ஒன்றும் இல்லாத போது கேள்விகளும் இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே.நல்ல வேளை என் சீட்டு எடுக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இங்கு போன போது பல மாற்றங்களை காண முடிந்தது.மகிழுந்துகள் மலை முகப்பு வரை போகிறது.மலையேரும் நடைபாதைக்கு கூரை போட்டிருப்பது போல் உள்ளது.கோவிலும் நிறைய மேம்பாடு கண்டுள்ளது.முருகனடிமை சாமியார் இன்னும் இருக்காரா என்று தெரியவில்லை.நான் போன போது மதிய வேளை என்பதால் அவர் இல்லையோ என்னவோ.

இன்றைய கோவிலின் படங்கள் சில கிழே.

ஓடும் வண்டியில் இருந்து எடுத்தது.கோபுர அழகு.உள் கோபுர அழகுமலை மீதிருந்து சுற்று வட்டாரம்.

கோவிலுக்குள் சில சிறுவர்கள் ஆர்வமாய் பார்க்க..Friday, October 23, 2009

எனக்கு தான் முதல் Lane.

போன வாரம் மகிழுந்துவில் வேலூர் வரை போய் திரும்பிய போது விரைவுச்சாலையில் வித்தியாசமான ஒன்றை காண நேர்ந்தது.பல நாடுகளில் விரைவாக போக கூடிய வாகனங்கள் முதல் லேனில் பயணிக்கும் மற்றவை அதற்கடுத்த லேனில் பயணிக்கும்.நம்மூரில் அதுவும் தமிழ் நாட்டில் மணல் மற்றும் அதிக எடையுள்ள மற்றும் வேகம் குறைவாக பயணிக்க வேண்டிய வண்டிகள் முதல் லேனிலும் மற்றவை அதற்கடுத்தடுத்த லேன்களிலும் பயணிக்கின்றன.படம் பார்க்க.

ஒரு விதத்தில் இம்முறை பாதுகாப்பானது (சாலை ஓரத்தில் பயணிக்கும் மிதி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள் அடிவாங்காமல் தப்பிக்கும்) என்றாலும் ஏதேனும் வாகனம் தறிகெட்டு போனால் முழு சாலையும் அடைபடும் சாத்தியம் அதிகமாகவே இருக்கும்.

எந்த வகை வாகனம் எவ்விடத்தில் பயணிக்கனும் என்ற விதிமுறை நம்மூரில் கிடையாதா? அல்லது அவையெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருப்பதற்காக உருவாக்கப்பட்டவையா?

திருநீர் மலை

சென்னைக்கு மிக அருகில் அதுவும் குரோம்பேட்டையில் இருந்து 3.5 கிமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்தலம். தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் குரோம்பேட்டை க்கு முன்பு இடது பக்கத்தில் பிரியும் சாலையில் சென்றால் வரும்.

சிறிய குன்றில் மேல் ஸ்ரீரங்கம் பெருமாள் சயனிந்த நிலையில் உள்ள அதே மாதிரி இங்கு உள்ளார் ஆனால் அளவில் சிறிய அளவில்.போன வாரம் அங்கு போயிருந்த போது எடுத்த சில படங்கள்.Wednesday, October 21, 2009

ஸ்ரீபுரம்

இப்படி ஒரு ஊர் அதுவும் வேலூருக்கு மிக அருகில் இருப்பது இது நாள் வரை தெரியாமல் இருந்தேன்.மச்சினரும் மற்றொருவரின் மகிழுந்துவும் கிடைத்த போது வண்டி ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் மச்சினர், ஓட்டுனராக இருந்து என்னை அழைத்துப்போன இடம் இது தான்.

காலை வளசரவாக்கத்தில் இருந்து 7 மணிக்கு கிளம்பினோம்.காஞ்சி கிளை சாலை பிரியும் இடம் வந்த போது மணி 8,கூட வந்தவர்கள் வயிறு பசிக்க ஆரம்பித்தது போல் அதற்கு ஏற்றாற் போல் ஒரு குளிர் வசதி என்று பலகை போட்ட உணவு விடுதி தெரிந்தது,வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனோம்.குளிரூட்டப்படவில்லை.இருக்கையை அசைக்க ஸ்பெஷல் தெம்பு வேணும்.சிறு நீர் கழிக்கும் இடம் நன்றாக இருப்பதாக சொன்னர் மச்சினர் ஆனால் சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஏதோ ஒரு விளம்பர பலகையை வைத்து மறைத்து கழிவரையையே எல்லாவற்றுக்கும் உபயோகபடுத்தும்படி வைத்திருந்தார்கள்.இதைவிட மோசமான நிலமையை என் மச்சினர் பார்த்திருக்கக்கூடும் போலும் இதை நன்றாக இருக்கிறது என்று சொல்லியுள்ளார்.காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு 8.40 க்கு புறப்பட்டு 9.15 க்கு வேலூரை அடைந்தோம்.வெளியேறும் வழியில் சிறிது கவனபிசகாகி அடுத்த வழியில் வெளியேறி சிலரை கேட்டு ஸ்ரீபுரம் நோக்கி பயணப்பட்டோம்.ஒவ்வொரு சாலை வழி விளக்கு கம்பங்களில் “Golden Temple" போகும் வழி என்று போட்டு இருந்ததால் வேறு எந்த தவறும் செய்யாமல் 9.45 க்கு கோவிலுக்குள் வண்டியை நிறுத்தினோம்.திரும்பிய இடங்களில் எல்லாம் கேமிரா மற்றும் செல் போன்கள் அனுமதி மறுக்கப்பட்ட செய்தி கொண்ட பலகைகள் தொங்கவிட்டிருக்கார்கள்.முதல் அதிசியமே இக்கோவிலுக்குள் போவதற்கு நுழைவுக்கட்டணம் என்று எதுவும் இல்லை இதுவே பெரும்பாலான பொது ஜனங்களை இங்கு ஈர்க்கிறது.இல்லை,நான் பணம் கொடுத்து பார்ப்பேன் என்பவர்களுக்காக சேவாதி தரிசனம் என்று போட்டு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள்.பணம் அதிகம் இருப்பவர்கள்,அதிக நேரம் காத்திருக்கமுடியாதவர்கள் இவ்வழியே போகலாம்.அம்மன் சன்னிதியில் சிறிது நேரம் உட்கார்ந்து நிம்மதியாக தரிசித்து கிளம்பலாம்.தங்க கோபுர ஆலயம் பற்றி அவ்வளவாக கேள்விப்படாத நான் பொது நுழைவு மூலம் போய் திருப்பதியில் உள்ள மாதிரியே ஒரு கொட்டடியில் உட்காரவைக்கப்பட்டேன்.எனக்கு நேரே LCD திரையில் யாரோ ஒருவர் எதையோ தொட்டு தொட்டு கொடுக்க அதை அக்னியில் போட்டுக்கொண்டிருந்தார்கள் அதில் ஒரு பட்டுப்புடவையும் அடங்கும்.அந்த புடவையை நெய்தவர் பார்த்தால் நொந்திருப்பார்.என் மனைவிக்கு இந்த இடம் பற்றி ஏதும் தெரிந்திருக்குமோ என்ற எண்ணத்தில் அவ்விடம் பற்றியும் அந்த பெரியவரையும் பற்றி கேட்டேன்.இவர் தான் இக்கோவிலை நிர்வகிப்பவர் என்ற விபரம் மட்டுமே தெரியவந்தது.சில வினாடிகள் கடந்ததும் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.நட்சத்திர வடிவில் இருந்த பாதை கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு அங்கங்கே நல்வாக்கியங்களை பொறித்துவைத்துள்ளார்கள்.நடப்பவர்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க மூலைக்கு மூலை பானங்களும் & சிற்றுண்டிகளும் வைத்து விலைக்கு கொடுக்கிறார்கள்.வெளியில் வெய்யில் கொளுத்தினாலும் நடக்கும் இடம் குளுமையாக இருந்தது.ஆலயத்தின் உள்பக்கமும் & வெளி கோபுரமும் தங்கத்தினால் ஜொலிக்கிறது.கோவிலை சுற்றி சிறிய அகழிமாதிரி தோண்டி தண்ணீர் நிரப்பியுள்ளார்கள்.கோவிலின் உள் நுழையும் போதும் அங்கிருந்து திரும்பும் வரை அம்மனை(நாரயணி) தீர்க்கமாக பார்க்கும் படி அமைத்துள்ளார்கள்.தரிசனம் முடிந்து வெளியேரும் முன்பு பிரசாதம் கொடுத்து அனுப்புகிறார்கள்.

கோவிலை விட்டு வெளியேரும் முன்பு காலியாக கிடந்த கார் பார்க்கிங் முழுவதும் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் நிரம்பிக்கிடந்தன.

Sunday, October 11, 2009

எழுத்தறிவித்த நிலையம்

என்னை முதன் முதலாக கல்விக்காக அரவணைத்த கல்விச்சாலை இது தான்.சேலத்தில் முதல் அகரஹாரத்துக்கும் இரண்டாம் அகரஹாரத்துக்கும் இடையில் உள்ளது.முகப்பில் பல அலங்காரங்கள் மேம்பாடு கண்டிருந்தாலும் உள் அமைப்பு அப்படியே உள்ளது(1966 இல் இருந்து 2009 வரை).இங்கு நான் ஒரே ஒரு வருடம் மட்டுமே படித்தேன்.

நேற்று சேலத்துக்கு ஒரு விழாவுக்காக சென்ற போது எடுத்த படங்கள் இவை.


Tuesday, October 06, 2009

சில படங்கள்.

என்ன தான் விடியற்காலை மெதுவாக எழுந்திருக்கலாம் என்றாலும் சரியாக 5 மணிக்கெல்லாம் சுவிச்சு போட்டா எரிகிற விளக்கு மாதிரி பொசுக்கு முழிப்பு வந்துவிடுகிறது.தூங்கிற அளவு குறைந்துகொண்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது.வயது ஏற ஏற தூக்கம் இன்னும் குறையும் என்று தெரிகிறது.எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியது தான்.குறைவான தூக்கம் என்றாலும் அலுப்பு தெரிவதில்லை.

சிங்கை & துபாயில் இருந்த போது பெரும்பாலும் மாலையில் மெதுநடை ஒரு வழக்கமாக இருந்தது.மஸ்கட் வந்த போதும் இன்னும் தங்கும் இடங்கள் நிரந்தரமாக இல்லாத காரணத்தால் இம்மெது நடை தள்ளிப்போய்கொண்டிருந்தது.நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு புதுவீடு பார்த்துக்கொடுத்தது நிறுவனம்.சின்னச்சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருக்கிறது.மெது நடையை எப்படியும் ஆரம்பித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் சக நண்பர்களில் ஒரு பிலிப்பினோவை கேட்டேன்,உடனே சரி என்று ஒத்துக்கொண்டு மறு நாள் காலை 6.30 மணி என்று முடிவானது.

எல்லாம் சரியாக நடந்ததால் கடற்கரை வரை மெது நடைபோய் விட்டு கீழ்கண்ட படங்களை எடுத்தேன்.
இப்படி காலை வேளை நடை தொடர்ந்து நடப்பது கஷ்டம் என்று தெரிகிறது,பார்ப்போம்.

Thursday, October 01, 2009

ரோஜா பூங்கா

மஸ்கட்டில் இப்படி ஒரு இடமா? என்று ஆச்சரியப்பட வைக்க கூடிய விஷயங்கள் காதில் விழுந்தன...
1.ஓமனிலேயே பெரிய பூங்கா.
2.இதன் பெயர் Rose Garden (ஒரு ரோஜா கூட கண்ணில் படவில்லை).
3.இயற்கை பூங்கா
இவற்றில் முதல் அய்டம் மாத்திரம் உண்மையாக இருக்கக்கூடும்.
சாயங்கால வேளையில் போனால் கொஞ்சம் வெப்பம் குறைந்த நிலையும் சூரிய அஸ்தமன காட்சியிம் காணலாம் என்று யோசித்து 5.30 மணிக்கு போனோம்.

முகப்பில் பொதுவாக இரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஆனால் இதில் அரபி மாத்திரமே இருந்தது.வெளிநாட்டினர் எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற குழப்பத்துடன் முகப்பு சுவரை பார்த்தால் அதில் நிறைய ஓட்டைகள்.புரிந்தது,ஏதோ காரணத்தால் ஆங்கிலத்தில் இருந்திருக்ககூடிய எழுத்துக்களை நீக்கியிருக்கிறார்கள்.நுழைந்த உடனேயே ஒரு பெரிய திறந்தவெளி ஹால்.இடது பக்கம் குழந்தைகளுக்கான பார்க் அதற்குள் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

ஹாலை கடந்தால் மத்தியில் ஒரு பெரிய குளம் அதன் மத்தியில் ஒரு கட்டிடம். நம்மூர் தெப்பக்குளம் மாதிரி இருக்கு.அதை சுற்றி வரும் போது ஒரு கலை நிகழச்சி மேடையும் அதன் முன்னால் ஒரு செயற்கை நீரூட்டும் இருந்தன.பெரிய குளம் என்பதால் அதை சுற்றி நடப்பதே ஒரு நல்ல உடற்பயிற்சி போலாகிவிடும்.அங்கங்கே இப்படி ஒரு டூம் கட்டி உட்கார வசதி செய்துகொடுத்துள்ளார்கள்.

நிறைய புல்வெளிகள் போட்டு இடத்தை பசுமையாக்கி வைத்துள்ளார்கள்.பல குடும்பங்கள் சாய்ங்கால வேளையில் வந்து பொழுதை கழிக்க ஒரு நல்ல இடம் என்று சொல்லாம் என்று பார்த்தால் முடியாது என்றே தோன்றுகிறது ஏனென்றால் இந்த குளத்தின் உள்ள நீர் மறுசுழற்சி பண்ணப்படாமல் இருப்பதால் அதன் மூலம் உருவாகிற கொசு நம்மை உட்காரவிடாமல் துரத்துகிறது.அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்க்க பரிதாபமாக இருக்கு.

நானும் நண்பர்களும் ஒரு சாய் குடிக்கான் சமயத்துனுள் வல்லிய கொசு அடிச்சிக்களஞ்சி.ஐயோ! நடுவில் என்னுடைய மலையாளம் கலந்திடுச்சி.எல்லாம் இங்கு வந்த பழக்க தோஷம் தான். பொருத்துக்கொள்ளுங்கள்.தாஜ்மஹால்,ஈபில் டவர் போன்ற உருவங்களை சிறிய அளவில் செய்து பார்வைக்கு வைத்துள்ளார்கள்.அதற்குள் சூரியன் மேற்கில் விழ விளக்குகளுக்கு உயிர் வந்தது.

சிவன் கோவில் படங்கள்.

புது வீட்டுக்கு போக இன்னும் சாவி கிடைக்காமல் ஆர்டர் செய்யத வீட்டு சாமான்களை உள்ளே கொண்டு போக முடியவில்லை.பல கடைகள் ஏறி இறங்கி விலை விஜாரித்து எது நமக்கு சரிப்பட்டு வரும் என்று பொழுது போக்கிக்கொண்டிருக்கிறோம்.

மகிழுந்து நடத்துனரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மஸ்கட்டிலும் ஒரு ஹிந்து கோவில் இருக்கு என்ற விபரம் சொன்னார்,ஆச்சரியமாக இருந்தது.அது என்ன கோவில் என்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை.மஸ்கட்டில் பார்க்க இன்னொரு இடம் கிடைச்சிருக்கு என்ற சந்தோசத்துடன் அதற்கு முன்னேற்பாடு செய்தோம்.

பழைய மஸ்கட் பக்கத்தில் உள்ளது இந்த கோவில். வாகனங்கள் மிக மெதுவாகவே போக முடிந்தது.நாங்கள் போன அன்று சனி பெயர்ச்சியாம் அதனால் பல வாகனங்கள் குருகிய சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை.வட இந்திய ஸ்டைலில் கோவில்கள் இருந்தன.இரண்டு சன்னதிகளிலும் சிவன் & பார்வதி படங்களுடன் பளிங்கு சிலைகள்.அர்சனை செய்பவர் உள்ளிருந்து எல்லோருக்கும் “பூ” பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருந்தார்.காளி சன்னதியில் கூட்டம் வழிந்துகொண்டிருந்தது.திடிரென்று ஒரு இஸ்லாமியர் சன்னதிக்குள் ஹிந்தியில் யாரோ வாகனம் வழியை மறித்துக்கொண்டு இருப்பதாகவும் எடுக்குமாறும் கத்திச்சொன்னர்.இப்படி அவர் வருவதை அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நம்மவரும் வித்தியாசமாக பார்க்கவில்லை.இந்த மாதிரி அன்னியோன்யம் எல்லா ஊரிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.கோவில் அப்படியே துபாயை காப்பி அடித்தது மாதிரியே இருந்தது அல்லது துபாய் காப்பி அடிச்சிருக்கோ என்னவோ!

கடவுளுக்கு வெகு அருகில் இருந்தாலும் அவருடன் அலை பேசியில் தான் பேசனுமோ?சன்னதியை விட்டு வெளியே வந்தால் பலரும் கையில் தட்டை வைத்துக்கொண்டு பிரசாதமாக வழங்கப்பட்ட இனிப்புடன் தயிர்சாதத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.வேறு ஒன்றும் ஸ்பெஷலாக இல்லாததால் அன்று இதை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினோம்.