Sunday, April 22, 2012

காரைக்கால்

தமிழ் புது வருட பிறப்புக்கு மறுநாள் விடுமுறை எடுத்தால் தொடந்து 3 நாள் விடுப்பு கிடைக்கும் என்பதால், மகிழுந்துவில் எங்காவது போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம்.முதலில்  வாலாஜாபாத் அருகில் இருக்கும் தன்வந்திரி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பக்கத்தில் எங்காவது சுற்றிவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தோம், இடையில் மச்சினர் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு, காரைக்கால் அருகே தர்மபுரம் என்ற ஊரில் உள்ள தட்சினாமூர்த்தி கோவிலில் ஒரு வேண்டுதல் இருக்கு போகலாமா? என்றார்கள்.கொஞ்சம் அதிக தூரம் என்பதால் மகிழுந்துவை மாற்றி மாற்றி நானும் மச்சினரும் ஓட்டினால் அலுப்பு இருவருக்குமே தெரியாது என்பதாலும் போவது என்று ஒத்துக்கொண்டோம்.

10.30-12.00 ராகுகாலம் என்பதால் 9.45க்கு வீட்டைவிட்டு கிளம்பி GST சாலை வழியே திண்டிவனம்---பாண்டி---சிதம்பரம்---சீர்காழி வழியாக திருநள்ளாறு போனோம்.மனைவி ஊர் சீர்காழி என்பதால் அங்கு கொஞ்ச நேரம் உலாவிவிட்டு கிளம்பினோம்.பாண்டியில் இருந்து திருநள்ளாறு வரை சாலை இருவழி என்பதால் வேகச்சாலையில் பயணப்பட்ட பிறகு இதில் பயணிப்பதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது.பல இடங்களில் வளைவுகள் மற்றும் துரப்பண பணிகள் இருந்ததால் வேகமாக போகமுடியவில்லை.திருநள்ளாறில் குளித்துவிட்டு கோவிலுக்கு போய்விட்டு இரவு எங்கு தங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தோம்.பலரும் திருநள்ளாறைவிட காரைக்காலில் தங்குவது நல்லது என்றார்கள். காரைக்கால் -- திருநள்ளாறு சுமார் 6 கி.மீட்டர் என்பதால் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது  என்று தோனியது.மனைவி பக்கம் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது காரைக்கால் பயணம் என்று முடிவானபோதே இரு தனி திட்டங்களை நான் மனதில் கொண்டிருந்தேன் அதை யாரிடமும் சொல்லவில்லை. முதலில் என்னுடன் தொழிற்நுட்ப கல்லூரியில் படித்த நண்பனை சந்திப்பது அடுத்தது நாகைக்கு போவது.
இந்த நண்பனை எப்படி பிடித்தேன் என்பது ஒரு சுவையான கதை.வேலை அவ்வளவாக இல்லாத நேரத்தில் எங்காவது என்னுடைய பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்க முடியுமா என்று net இல் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது காரைக்கால்.Net. அதில் இருக்கும் சில பெயர்களை அவர்கள் போட்டிருக்கும் கமெண்டுகளை பார்த்த போது , சும்மா முயற்சி செய்து பார்ப்போம் என்று என்னுடைய நண்பனின் பெயரை போட்டு அவன் தங்கியிருக்கும் தெருவின் பெயரையும் போட்டு யாராவது முடிந்தால் சொல்லவும் என்று போட்டேன். அதிசியமாக சில வாரங்களுக்கு பிறகு அவனிடன் இருந்து மெயில் வந்தது அதன் மூலம் தொடர்பும் கிடைத்தது.
திருநள்ளாறில் இருந்து அழைத்து வந்த விபரத்தை சொல்லிவிட்டு இப்போது அதிகமாக பசிக்கிறது அதனால் சாப்பிட்டுவிட்டு பிறகு நான் தங்கும் இடத்தை சொல்கிறேன் முடிந்தால் சந்திக்கலாம் என்றேன்.அவன் வீட்டு வசதியை சொல்லி இங்கேயே தங்கலாம் என்றான்.புது இடம் குடும்பத்துடன் எப்படி தங்குவது என்ற யோஜனையும் வந்தது.தங்க அழைத்தவன் அப்படியே சாப்பிட வந்துவிடு என்றான், நான் தான் இரவு சாப்பாட்டை வெளியில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.திருநள்ளாறில்  இருக்கும் இரண்டு மரக்கறி உணவகத்தை பார்த்ததும் இங்கு சாப்பிடமுடியாது என்ற நிலை தோன்றியது. இன்று இரவு சாப்பாடு காரைக்காலில் தான் என்று முடிவு செய்து மிகக்குறுகிய சாலையில் பயணித்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.

கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு போன அடையாளத்தை வைத்துக்கொண்டு அவன் சொன்ன தகவலையும் கேட்டு அவர்கள் வீட்டை அடைந்தோம்.பெரிதாக இருந்த வீடுகள் சின்னதாக மாறியிருந்தன.கோவில் அதே இடத்தில் இருந்தது அதற்கு பக்கத்தில் ஏதோ பொருட்காட்சி போல் நல்ல வெளிச்சத்தில் பல மக்கள் குழுமியிருந்தார்கள்.மகிழுந்து உள்ளே இருந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.32 வருடகாலத்தில் ஒரே ஒரு வித்தியாசம்..போக்குவரத்து direction மாறி இருக்கு.இரவே பக்கத்தில் உள்ள நித்ய கல்யாணபெருமாள் கோவிலுக்கு கூட்டிப்போய் தன் நண்பர்களிடன் என்னைப்பற்றி அறிமுகம் செய்துவைத்தான்.கோவிலின் பல விபரங்களை சொல்லிக்கொண்டு வந்துவிட்டு ஒரு கதவை காட்டி இது தான் சொர்க்க வாசல் என்றான் அதனை தொடர்ந்து கோவிலுக்கு பக்கத்தில் உள்ள தெப்பகுளத்துக்கு அழைத்து போனான்.உள்ளே நுழைவதற்கு முன்பே இங்கு அழைத்து வருவதற்கு ஒரு சுய விளம்பரம் தான் காரணம் என்று சொல்லி இவ்விடத்தை புனரமைத்த விபரத்தையும் அதற்கான Design செய்ததையும் அதற்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் மக்களின் ஆதரவையும் ஒரு அருமையான இடத்தை காரைக்கால் நகரவாசிகளுக்கு செய்துகொடுத்துள்ளார்கள். இவ்விடத்தை Design செய்தது என் நண்பன் தான்.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.






இக்குளத்துக்கு நீர்வரத்து மற்றும் வெளியேறும் வழியை முன்னேற்பாடுடன் செய்து நீர் சுழற்சியை கட்டுபடுத்தியுள்ளார்கள். நிறைய மீன்களும் கண்ணில்பட்டது.

சென்னையில் இருந்து சுமார் 280 கி.மீட்டர் பயணம் செய்த அலுப்பு எல்லோர் கண்ணும் பாதி மூடிய நிலையில் இருந்தது.அவர்கள் 10 மணிக்கு தான் சாப்பிடுவார்கள் என்பதால் மற்ற நிலவரங்களை பற்றி  பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தோம்.வீடு முழுவதும் இசை கருவிகள், அவனுடைய அப்பா & அம்மாவின் படம் போட்டோஷாப் உதவியுடன் பின்புலம் மாற்றப்பட்டிருந்தது.கணினி பற்றிய பேச்சு வந்ததும் என்னுடைய அறிவையும் சவுண்ட் ரெக்கார்டிங் பற்றிய சந்தேகங்களை கேட்டவுடன் அது இசை பற்றிய விளக்கமாக மாற ஒரு சிறு கச்சேரி மாதிரி நடுநிசி 12 மணி வரை போனது. எதிர்பாராமல் கிடைந்த்த ஆனந்த அனுபவும் எங்கள் எல்லோருக்கும்.என்ன தான் புல்லாங்குழலுக்கு மயங்கும் என்றாலும் அருகில் உட்கார்ந்து எங்களுக்கு மட்டும் ஒருவர் வாசிக்கும் போது அதன் ஆனந்தமே அளப்பரியாதது.

கலை தேவதையின் ஆசீர்வாதம் உள்ளதோ என்னவோ படிக்கும் காலங்களிலேயே  அருமையாக படம் போடுவான் மற்றும் நன்றாகவும் பாடுவான்.அதன் தொடர்சியாக இப்போது அவன் கடம் மற்றும் புல்லாங்குழல் கச்சேரி வரை தொடர்கிறது.

ஒவ்வொரு இடமும் நமக்கு ஒவ்வொரு பாடம் கற்றுக்கொடுக்கிறது. கூட படித்தவன் என்ற ஒரே தகுதி அதன் மீது என் நண்பன் காட்டிய விருந்தோம்பல் வெகு சிலருக்கே கை வரக்கூடியது.அதை மிகையில்லாமல் செயற்கையாக இல்லாமல் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன்.

ஜாக்கிரதை: அடுத்த பகுதி இருக்கு.