Wednesday, December 31, 2008

எவ்வளவு பெரிய கொண்டாட்டம்!!

நாமெல்லாம் எங்கே டிஸ்னி போவது என்ற கனவை நினைவாக்கி அங்கு நம்ம பேரையும் பதிச்சிட்டு வந்திருக்கேன் பாருங்க.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



உதவி:திருமதி துளசி கோபால் - நன்றி.

Tuesday, December 30, 2008

மண்ணுதானே!

மண்ணுதானே என்று நம் வேலையை அல்லது அவமதிப்பை காண்பிக்கும் போது அது அதன் வேலையை காண்பிக்காமல் இருக்குமா?

மணலின் வலிமையில் கான்கிரீட் பீம் எப்படி வளைந்துவிட்டது பாருங்கள்.

MP - கூப்பிடுகிறார்

சற்று முன் வந்த மின் அஞ்சல் இதற்கு முன் வந்திராத இடத்தில் இருந்து வந்திருந்ததால் திறப்பதா வேண்டாமா என்ற அரை மனதுடன் தான் திறந்தேன்...ஆச்சரியம்.

சிங்கையில் நான் வீடு வாங்கிருந்த தொகுதி மக்களுக்கு அங்கிருக்கும் MP அனுப்பியிருக்கும் மின் அஞ்சலைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.நான் சிங்கப்பூரியன் இல்லாவிட்டாலும் இந்த மாதிரி கால கட்டத்தில் அங்கிருக்கும் ஒரு சிங்கை நிரந்தரவாசி என்ற ஒரே தகுதிக்காக அனுப்பியிருக்கிறார்.குடும்ப வாழ்கையை மதிக்கும் சிங்கப்பூரின் அரசாங்கத்தை வாழ்த்துவோம்.

சிங்கை பிரதம மந்திரியும் வருகிறாராம்.

Saturday, December 27, 2008

மற்றொரு வெள்ளி

இப்போதெல்லாம் ஏன்டா வெள்ளிக்கிழமை(இங்கு பொது விடுமுறை) வருகிறது என்று இருக்கிறது.பொழுதை போக்குவது என்பது பிரம்பபிரயத்தனம் செய்யவேண்டியிருக்கு.

காலை 4.38 க்கெல்லாம் விழிப்பை ஏற்படுத்திவிட்டது 80 db மேலான குறட்டை அதுவும் மிக அருகில்.அந்த வெறுப்பிலும் அந்த குறட்டையை கைப்பேசியில் பிடிக்கமுடியுமா என்று தேடித் தேடி களைத்து படுக்கை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு போனேன்,நல்ல வேளை ஓரளவு இடம் இருந்தது.படுக்கையை விரித்து கதம்ப வாசனைக்கு ஊடே படுத்தேன்,மறக்காமல் கதவை மூடிவிட்டு.சிறிது நேரம் தூங்கி எழும்போது மணி 7 ஆக இருந்தது.இதற்கும் மேல் உடம்பு இடம் கொடுக்காததால் எழுந்து குளிக்கப்போனேன்.

8 மணிக்கு பேப்பர் முழுவதும் படித்துவிட்டேன்.பூஸ்டுடன் இரண்டு சிலைஸ் பிரட்டும் சாப்பிட்டுவிட்டேன்.இன்னும் குறட்டை குறைந்தபாடில்லை.ஜிக்கி வாசுதேவ் சொன்ன மாதிரி அதை கொஞ்சம் ரசிக்க ஆரம்பித்தால் வெறுப்பு வராதோ என்று நினைத்து ஆழ்ந்து கேட்டேன்....ஹூகும் அந்த நிலைக்கு போக இன்னும் நிறைய வருடங்கள் ஆகும் போலிருக்கு.

என்ன பண்ணலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் வேலையில் நேற்று அந்த ஸ்டீல் பாலம் ரோட்டின் மீது கடந்து அடுத்த தூணில் நிப்பாட்டி முதல் சிலாபை வைத்திருந்தது ஞாபகம் வந்தது.கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவுமே என்று கேமிராவை எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.

சாலையின் மறுமுனை வரை நீண்டிருக்கும் பீம்.



சிலாபின் முதல் பீஸ் கீழே



இது சில பகுதிகள் முடிந்ததின் படம்



வெள்ளிக்கிழமையில் மட்டுமே இப்படிப்பட்ட சாலைகளை காணமுடியும்





போகும் வழியில் ஒரு சைட்டில் புதுமாதிரியான லின்டல் பார்த்தேன், அதை பிடித்துவிட்டு பக்கத்தில் உள்ள மெட்ரோ க்கு போய் அங்கும் சில படங்களை பிடித்தேன்.இதற்கு மேலும் வீட்டிற்கு போகும் எண்ணம் இல்லாத்தால் அப்படியே நடையை தொடந்தேன்.என்ன தான் வெய்யில் அடித்தாலும் குளிர்ந்த காற்று அதை ஒன்றுமில்லாமல் செய்தது.வெய்யில் நடப்பது இதமாக இருந்தது.


ஏதோ ஒரு மெயின் ரோடின் முடிவில் ஒரு சின்ன மைதானத்தில் பலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர்.நமக்கு பிடித்த ஆட்டம் என்பதால் நின்று பார்க்க ஆரம்பித்தேன்.ஒரு குழுவில் ஹிந்தியும் தமிழும் பேசுபவர்கள் இருந்தார்கள்.மற்றொரு குழுவில் முழுக்க ஹிந்தி பேசுவர்கள் .அப்படியே சில படங்கள் எடுத்துவிட்டு நகர்ந்தேன்.

கீழே உள்ள படத்தில் பந்துவீச்சு நம்மாள் (தமிழர்).



வெய்யில் பளிச் வெளிச்சம் கண்ணை என்னவோ செய்ய கையை மறைப்பாக வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்த போது மணி 10.

இன்னும் குறட்டை சத்தம் ஓயவில்லை.எனக்கு முன் தலை மற்றும் கழுத்து பகுதியில் நம நம என்று வலி தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.இன்று மாலை வரை நீளப்போகும் தலைவலியுடன் பொழுதை போக்கனும்.

Monday, December 22, 2008

துபாயா?சிங்கையா?(பாகம் 3)

பாகம் 1

பாகம் 2

இப்பகுதியில் மேலும் சில வித்தியாசங்களை பார்க்கலாம்.

சீதோஷ்ண நிலை:

சிங்கப்பூரில் மண்டையை பிளக்கும் வெய்யிலாக இருந்தால் மிக அதிகமாக (நான் பார்த்த வரை) 40 C இருக்கும்.மழைகாலங்களில் குறைந்த அளவாக 25~23 C இருக்கும்.இங்கு குளிராடைகள் எனக்கு தேவைப்படவேயில்லை.மழைகாலங்களில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் மழை பெய்துகொண்டிருக்கும் ஆனால் சில மணி நேரம் தான்.ஒரு சில தடவைகள் தொடர்ந்து பல மணி நேரம் மழை பெய்யவும் செய்கிறது.மற்ற மாதங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறையாவது மழை வந்துவிடும்.கடலில் நீர் ஏற்றம் அதிகமாகி அந்த நேரத்தில் மழையும் கூடுதலாக பெய்யும் நேரத்தில் சில தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்து வெள்ளமாகிவிடும்.என்ன தான் மழை பெய்தாலும் அடுத்த சில வினாடிகளில் சாலை துடைத்துவிட்டது போலாகி "மழை பெய்ததா?" என்று கேட்கும் அளவுக்கு இருக்கும்.பல மழைத்தண்ணீர் சேகரிக்கப்பட்டு பிறகு சுத்திகரிக்கப்பட்டு அதுவும் போதாமல் ஏரியில் கலக்கப்பட்டு அதன்பிறகு குடிநீராக மாற்றப்படுகிறது.இந்த நீரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் உள்ளூர்வாசிகளும் உண்டு.

துபாயில் நான் இறங்கிய மாதம் செப்டம்பர்,அதனால் வெய்யிலின் முழுமையான வீச்சை அனுபவிக்கவில்லை இருந்தாலும் பேருந்து நிறுத்ததில் நிற்கும் போது அங்கு நட்டுவைக்கப்பட்டிருக்கும் கம்பின் நிழல் கிடைத்தால் கூட போதும் என்று சொல்கிற அளவுக்கு வெப்பம் கடுமையாக இருந்தது.இன்னும் சில பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை.இங்கு மிக அதிகமாக 50 பாகை செல்சியஸ் வரை வெப்பம் வரக்கூடுமாம்,அந்த மாதிரி சமயங்களில் கட்டுமானத்துறையில் வெளிவேலை செய்பவர்கள் 12 மணியில் இருந்து 4 மணி வரை வேலை செய்யக்கூடாதாம்.இது அரசாங்க ஆணை.
அடுத்து குளிர்காலம்,இது அக்டோபர் மாதங்களில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து இப்போது அதிகாகிக்கொண்டுவருகிறது.மாலை 5 மணிக்கெல்லாம் குளிராடையில்லாமல் வெளியில் அதிக நேரம் நிற்கமுடிவதில்லை.கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
சமீப வருடங்களில் துபாயில் மழை அதிகரித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

தொலைதொடர்பு சேவை:

சிங்கையில் :Singtel,Starhub & M1 போன்ற 3 பெரிய நிறுவனங்கள் தான் தொலைப்பேசி சந்தாதாரர்களை பெற்றுள்ளது.இவர்களிடையே போட்டா போட்டி அதிகம் என்பதால் பல இலவச சேவைகளை வழங்கி சந்தாதாரர்களை கட்டிப்போடுகிறார்கள்.இவர்கள் போடும் போட்டிக்கு நடுவே ஊருக்கு அழைப்பதற்கு காலிங் கார்டு வசதியும் இருக்கிறது. 8 வெள்ளி(20 திர்ஹாம்) க்கு 80 நிமிடம் ஓரளவு தெளிவுடன் இந்தியாவுக்கு பேசும் வசதியும் இருக்கு.இணைய வசதி இருப்பவர்கள் VOIP யும் உபயோகிக்கமுடியும்.சின்ன ஊர் என்றாலும் இன்னும் சில இடங்களில் சிக்னல் தொல்லை என்று புலம்புவதும் தொடர்கிறது.
Dish TV க்கு இங்கு தடை

துபாயில் Etisalat & Du மட்டுமே கண்ணில்படுகிறது.ஒரு நிமிடம் இந்தியாவுக்கு பேச கிட்டத்தட்ட 3 திர்ஹாம் போய்விடுகிறது.VOIP தடைசெய்யப்பட்டுள்ளது.பாவம் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள்.இருவரிடமும் இணையமும் (அகலப்பட்டை)இருந்தால் MSN,GTALK & Yahoo உதவும்.
இங்கு பெரும்பாலும் Dish TV தான் .இது நாள் வரை உள்ளூர் நிகழ்சிகளை பார்ததே இல்லை.

சம்பள முறை:

இது சிங்கையில் பொதுவாக சில முறைகளே காணப்படும்.ஒன்று பேக்கேஜ் அடுத்து சம்பளம்,13ம் மாத சம்பளம் பிறகு போனஸ்.ஒரு சில வேலை அனுமதிசீட்டு உள்ளவர்களுக்கு மத்திய சேம நிதி இருக்கும்.(இப்போதும் இருக்கா என்று தெரியவில்லை).இந்த மத்திய சேம நிதி ஒரு அருமையான யோஜனை அதை செயல்படுத்தி இன்றும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிக்கொண்டிருக்கும் சிங்கை அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஒரு காலத்தில் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் இத்திட்டம் இருந்ததாம் அப்போதெல்லாம் நம்முடைய சம்பளத்தில் 50 விழுக்காடு எடுத்து நம்முடைய முதலாளி 50 விழுக்காடு போட்டு அது சேமநிதியாக வைத்திருந்தார்களாம்.காலப்போக்கில் பல மாற்றங்களால் இப்போது அது 20,16 ஆக மாறியுள்ளது.இது வயதுக்கு ஏற்றவாறு செலுத்தப்படும் தொகை மாறுதல் அடையும்.இதிலிருந்து வீடு வாங்க,மருத்துவச்செலவுக்கு(தேர்ந்தெடுக்கப்பட்ட),சில பங்கு முதலீட்டுக்கு என்று பணம் எடுத்துக்கொள்ளலாம்.இதில் சேமிக்கும் பணத்துக்கு வட்டியும் கிடைக்கும்.இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.இந்த மூலதனம் தான் பலரை சிங்கையிலேயே குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் அங்கேயே தங்கவும் முடிவெடுக்க முக்கிய பங்குவகிக்கிறது.

துபாயில்: பல சம்பளமுறை இருந்தாலும் பொதுவாக சம்பளத்துடன் வீட்டுவாடகை,மருத்துவ காப்பீடு,வருடத்துக்கு 30 நாள் விடுமுறை (சிங்கையில் இது 14~21),குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று வர டிக்கெட் செலவுகளை பொதுவாக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக கேள்விப்பட்டேன்.இங்கு மத்திய சேம நிதி கிடையாது.

சாப்பாட்டுச் செலவு:

சிங்கைக்கும் துபாய்க்கும் விலையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
சைவ சாப்பாடு சிங்கையில் (கோமளாஸ்) - 6 வெள்ளி(15 திர்ஹாம்)

துபாயில்(சரவண பவன்) -16 திர்ஹாம்.

(அன்னபூர்ணா) - 12 திர்ஹாம்.

மேலே சொன்னவற்றிலிருந்து அவரவர் தேவைக்கு தகுந்த மாதிரி யோசித்துப்பார்த்தால் எந்த ஊர் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுக்கலாம்.


நம் சொந்த ஊரை விட்டு வெளியில் வந்துவிட்டால் உலகம் முழுவதுக்கும் பொதுமாக நமக்கு இருக்கவேண்டியது "வேலை/சம்பளம்" ,இது இல்லாவிட்டால் துபாயாவது சிங்கப்பூராவது எல்லாம் ஒன்று தான்.

சிங்கை மாதிரி ஒரு ஊரில் இருந்துவிட்டு இங்கு வர விரும்பும் மக்கள் முதல் சில மாதங்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு மாற்றிக்கொள்ள சிரமப்படவேண்டும்,அதற்குப்பிறகு????

அதுவே பழக்கமாகிவிடும். :-))

Saturday, December 20, 2008

தரக்கட்டுப்பாடு

கட்டுமானத்துறையும் கம்பியும் இணைப்பிரியா சகோதரர்கள்,பிரிந்தால் அவர்கள் உள்ள இடத்தில் நாம் இருக்கமுடியாது.இப்படிப்பட்ட கம்பியை பல விதங்களில் தரக்கட்டுப்பாடு செய்தாலும் அதில் ஒருவகையை இங்கு பார்க்கலாம்.

பெரிய வேலைகளில் சில இடங்களில் கம்பியை ஒன்றோடு ஒன்று இணைக்கவேண்டிவரும் அந்த மாதிரி சமயங்களில் "Coupler" என்ற இணைப்பானை பொருத்துவார்கள்.கம்பியின் இரு முனைகளிலும் மறை போட்டு அதன் மூலம் கம்பியை அந்த கப்லருடன் இணைப்பார்கள்.

அந்த மாதிரி இணைத்தால் மட்டும் போதாது அது சரியாக பாரத்தை தாங்கிப்பிடிக்குமா? என்று சோதனை செய்யவேண்டும்.கம்பியின் இரு முனைகளின் மூலம் இழுப்பு விசை கொடுத்து அது உடையும் நேரம் / இடம் மூலம் நமது தேவைக்கு உகந்ததா? இல்லையா என்று முடிவு செய்வார்கள்.

இது தான் அந்த சோதனை செய்யும் இயந்திரம்.இப்போது கம்பி அதன் நிலையில் இருக்கிறது.



சோதனை முடிந்த பிறகு உள்ள கம்பிகள்.



அருகில்..




மற்றொரு கம்பி







இதில் உடைந்த இடம் அந்த கப்லருக்கு அருகில் இருப்பதாலும் தேவைக்கு வேண்டிய அளவு விசையை தாங்கியிருப்பதாலும் நாம் உபயோகப்படுத்த உள்ள கப்லர் நல்லது என்ற நிலமைக்கு வரமுடியும்.

Thursday, December 18, 2008

சிங்கை Vs துபாய் (பாகம் 2)

பாகம் 1

அடுத்து பொதுப்பேருந்து...

சிங்கையை அடித்துக்கொள்ள இப்போதைக்கு துபாயால் முடியாது.நேரக்கட்டுப்பாடு மற்றும் சிங்கையில் அனைத்துப்பகுதிகளுக்கும் போக முடிகின்ற வசதி என்று தரமாகவே இருக்கும்.அந்தந்த பேருந்தில் அதன் போகும் வழித்தடங்கள் என்று துண்டுச்சீட்டும் மற்றும் ஒளிர்வானிலும் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் அதையும் மீறி நடத்துனரிடம் கேட்டால் உதவி கிடைக்கும்.மீறிப்போனால் சில சமயங்களில் ஒரு பேருந்துக்கும் அடுத்த பேருந்துக்கும் இடைவெளி 30 நிமிடமாக இருக்க பார்த்திருக்கேன்.

துபாயில் இப்போது தான் புதுப்பேருந்துகள் கண்ணில் பட ஆரம்பித்துள்ளது.குளிர்சாதன வசதியுடன் இருக்கையிடமும் அங்கெங்கே நிறுத்தங்களில் கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.எந்த பேருந்து எப்படி போகும் என்ற விபர வசதி குறைவாகவே உள்ளது.சில இடங்களில் புது பேருந்து போகும் ஆனால் அந்த விபரம் நிறுத்தத்தில் காணப்படாது.புதியவர்களுக்கு மிகக்குழப்பமாக இருக்கும்.தடங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.பேருந்துகளுக்கிடையே உள்ள நேர இடைவெளி அதிகபட்சமாக நான் பார்த்த வரை 75 நிமிடங்கள் அதற்கு மேல் பொறுக்காமல் நடந்து அல்லது மகிழுந்து எடுத்துப்போயிருக்கேன்.பல தொழிலாலர்கள் மகிழுந்து எடுக்கமுடியாதவர்கள்,இவர்கள் பாடு பெரும்பாடு.இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெருந்துவின் உள்ளே வெளிச்சமாக இருப்பதாலும் பக்க கண்ணாடிகளில் ஒருவித பூச்சு (வெய்யிலை தடுக்க) போடப்பட்டிருப்பதாலும் பேருந்துவில் இருப்பவர்கள் பிம்பங்கள் அங்கு பிரதிபலித்து வெளியிடமே தெரியாமல் போகிறது.வழித்தடம் தெரியாதவர்கள் மிகவும் கஷ்டப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று.பெண்களுக்கு என்று பேருந்துவில் தனியிடம் ஒதுக்கி (சுமார் 8 பேர்) அது நிரம்பியவுடன் அவர்களை ஏற்றாமல் போய்விடுவார்கள்.கொடுமையாக இருக்கும்.அவ்வப்போது சில பிலிப்பினோ மகளிர்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் ஆண்கள் உட்காரும் இடத்திலேயே வந்து உட்கார்ந்துவிடுவார்கள்.



பேருந்துவின் உட்புறம்





துபாயில் ஓட்டுனர்கள் அவர்கள் இஷ்டத்துக்கே பிரயாணிகளை ஏற்றுவதாக தோனுகிறது,சில சமயம் ஆட்கள் பேருந்துவிலிருந்து இறங்குவார்கள் ஆனால் ஓட்டுனர் யாரை ஏற்றாமல் போய்விடுவார்.என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது.ஓவர் லோடு பிரச்சனையா? அல்லது அந்த நிறுத்ததுக்கு பிறகு சாலை தாக்குபிடிக்காதா என்று தெரியாது.இப்போது பரவாயில்லை என்றும் 8 மாதங்களுக்கு முன்பெல்லாம் ஒருசிலர் மட்டும் மட்டும் இருந்தால் பேருந்தை நிறுத்தாமல் போகக்கூடிய கூடிய தகுதி ஓட்டுனர்களுக்கு இருந்ததாம் பலர் வேண்டுகோளுக்கிணங்க கடுமையான சோதனை முறை வந்ததும் இப்போது நிலமை மாறியிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார்.இது ஒருவகையான பிரச்சனை என்றால் வாகன நெரிசலும் சேர்ந்துகொண்டால் மரியாதையாக வரும் நிறுத்தத்தில் இறங்கி நடப்பது உத்தமம்.சில சமயம் ஓட்டுனரே கதவை திறந்துவிட்டு நம்மீது கருணைகாட்டுவார்.நடந்து போனால் பேருந்தைவிட நம் இடங்களுக்கு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம்.

தினசரி பேருந்து எடுத்து வேலைக்கு போவது என்பது இப்போது இருக்கும் நிலமையில் கொடுமையாக இருக்கும், வேறு வழியில்லாதவர்கள் நண்பர்கள் மற்றும் குழுடேக்ஸியை தான் நம்பியிருக்கவேண்டியிருக்கு.சரி இந்த கொடுமை வேண்டாம் வாகன உரிமை எடுத்துவிடுவோம் அதன் பிறகு மாதம் 1000~1800 திர்ஹாம் வரை கொடுத்து ஒரு வாடகை வண்டி எடுத்து தேவையை சரி செய்யலாம் என்றால் அங்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி அல்லது ஆச்சரியம்.இதை நம்ம "குசும்பன்" சொன்னால் நன்றாக இருக்கும்.இவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.ஏற்கனவே கால்கரி சிவா மற்றும் ஹரிஹரன் போன்ற பதிவர்கள் சொல்லியதை படித்து மேல்விபரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கை பேருந்துகளில் வெளிநாட்டவர் மற்றும் பணம் போட்டு பிரயாணம் செய்பவர்களுக்கே சீட்டு கொடுக்கப்படும் மற்றவர்களுக்கு அட்டை மூலம் பணம் வசூலிகப்படுவதால் குப்பையை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

துபாயில் இன்னும் துண்டுச்சீட்டு தான் சில சமயம் எச்சிலுடன்(எரிச்சலுடன்) கைக்கு வருகிறது.

சிங்கையில் சுமார் 2 வெள்ளியில்(5 திர்ஹாம்) ஒரு மூலையில் இன்னொரு மூலைக்கு ரயிலில் போய்வரலாம் அதே போல் துபாயில் பேருந்துவில் ஒரு வழி பயணத்துக்கு 2 திராம்(ஒரே கட்டணம்) மட்டுமே.



சிங்கையில் மகிழுந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே வரவில்லை அதற்கு தேவையும் இல்லை என்னை போன்ற மக்களுக்கு.பிறக்கும் போதே கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் மாதிரி வெள்ளி ஸ்பூனுடன் பிறப்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்படுமோ என்னவோ!!சிங்கையில் முதலில் இந்திய வாகன உரிமையை மாற்றும்படி வைத்திருந்தார்கள் பிறகு அனைவருக்கும் சோதனைமுறை அவசியம் என்று கொண்டுவந்துவிட்டார்கள்.இதில் துபாயிலும் சிங்கையிலும் சில தேசங்களில் வாகன உரிமையை மாற்றிக்கொள்ளும் தகுதியை வழங்கியுள்ளார்கள்.சிங்கையில் வாகன உரிமை வாங்க சுமாராக 4000 வெள்ளியாகும் என்று கேள்விப்பட்டிருக்கேன் இங்கு முதல் தேர்வில் வெற்றிபெற்றால் சுமாராக 3000 திர்ஹாம் ஆகும் இல்லாவிட்டால் அது ஏறிக்கொண்டே இருக்கும்.இதில் சிங்கை சற்று சரிகிறது.துபாயில் பரவலாக தேர்வுக்கு வருபவர்களை தேவையில்லாமல் பெயில் பண்ணுவதாக செய்திதாளில் குறைகூறப்படுகிறது.சிங்கையில் மகிழுந்து வாங்க COE (Cerificate Of Entitlement) என்ற சான்றிதழ் வாங்கினால் தான் மகிழுந்தை வாங்கமுடியும் அதுவே சில சமயம் 30000~ 60000 வெள்ளி என்றும் அதற்கு மேலும் போகக்கூடும்.துபாயில் அது மாதிரியில்லாததால் மகிழுந்து வாங்குவதில் மக்கள் அவ்வளவு சிரமத்தை எதிர்நோக்கவில்லை என்று தான் தெரிகிறது.இதிலிருந்து பலரையும் மகிழுந்து வாங்க அரசாங்கமே ஊக்கப்படுத்துவது போல் இருக்கு.அதோடு பல இடங்களும் இன்னும் பொது போக்குவரத்து வந்து போகும் இடமாக இல்லாத்தால் மகிழுந்து அவசியப்பட்டியலில் இடம்

அடுத்து வாழும் இடம்...வீடு

சிங்கையில் வேலை செய்யும் பெரும்பாலோருக்கு தங்க வீடு நிறுவனம் ஏற்பாடு செய்து தருவதில்லை ஆனால் முதன் முதலில் சிங்கப்பூர் வருபவர்களுக்கு JTC என்ற நிறுவனம் மூலம் வாடகைக்கு வீட்டை கொடுக்கிறார்கள்.இதற்கு சில விதிமுறைகள் உள்ளன அதை நிறைவேற்றும் பட்சத்தில் குறைந்த பட்சத்தில் 2 அல்லது 3 மாதங்களில் வீடு கைக்கு வந்துவிடும்.நான் வந்த போது (1995யில்) இந்த வசதியில்லை.3 அறை அல்லது 4 அறை வீடுகள்கள் தான் அதிகமாக கொடுப்பார்கள் அதன் வாடகை சுமார் 1200 வெள்ளி (3000 திர்ஹாம்) அதன் மேல் தண்ணீர் (125 திர்ஹாம்) மற்றும் மின்சார பயன்பாடுகள் மற்றும் குப்பை காசு (100 திர்ஹாம்) என்று வரும்.3 அறை என்பது 2 அறை 1 ஹால் 1 குசினி.விழுந்து புரலளாம்.

அதே வீடு விஷயத்தில் துபாயில் பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் கொடுத்து சம்பளம் கொடுக்கிறார்கள்.என்னை மாதிரி ஆட்களுக்கு நீங்களே தேடிக்கிங்க என்று ஒரளவு கொடுக்கிறார்கள்.இதில் இங்கு நீக்குப் போக்கு தெரிகிறது.

துபாயில் பல வகை இருப்பிடங்கள் இருக்கு "Bed Space" முதல் "Villa" வரை கிடைக்கிறது.பெட் ஸ்பேஸ் 600 திராமில் இருந்து 1000 திர்ஹாம் வரை இருக்கு.கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் ஒரே அறையில் 4 முதல் 6 பேர் வரை வைத்து பணம் பண்ணுகிறார்கள்.இந்த வில்லா வகை வீடுகளில் பல அறைகள் இருக்கும்.ஒவ்வொரு அறையில் ஒரு குடும்பம் என்ற நிலையில் வசித்து வந்த பல குடும்பங்கள் இப்போது தங்குவதற்கு ஏற்ற இடம் தேடி அலைந்து கிடைக்காமல் சிலர் ஊருக்கே திரும்பி போய்விட்டனர் அல்லது கெடுபிடி இல்லாத பக்கத்து எமிரேட்டுக்கு போய்விட்டனர்.இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு தனிவீடு என்பது முடியாத காரியம்.
ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாமா?இது ஒரு பதிவர் சொன்னது...
என்னுடைய சம்பளம் 4800 திர்ஹாம்
வீடு வாடகை 2500 - ஷார்ஜாவில்
டேக்ஸி(துபாய் வந்து போக)-400
சாப்பாடுச்செலவு - 750 ~ 1000
மீதி கையில் நிற்பது வெறும் 900 திர்ஹாம் மட்டுமே.
இப்படிப்பட்ட நிலையில் துபாயில் குடும்பத்துடன் இருப்பதற்கு ஒரு வீடு வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மாதவாடகை 5000 திர்ஹாம் வேண்டும் அதன்பிறகு சாப்பாடு மற்ற செலவுக்கு என்ன பண்ணுவது?இதில் ஒன்றை கவனித்தீர்களா! குழந்தை மற்றும் படிப்புச்செலவு வரவில்லை.அதனால் மாதம் 20000 திர்ஹாம் இருந்தால் ஓரளவு சேமிப்புடன் குடும்பம் நடத்தலாம் இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

சமீபத்தில் "ஒரு வில்லா ஒரு குடும்பத்துக்கு" மட்டுமே என்ற சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பலரது நிலமை இன்னும் கஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இவர்களுக்கான குறைந்த வாடகை வீடு என்ற ஒரு திட்டம் இருப்பதாக என் கண்ணிற்கு படவில்லை.

வீடு விஷயத்தில் சிங்கை முன்னனியில் இருக்கிறது.

அடுத்து படிப்பு

சிங்கையில் நீங்கள் நிரதரவாசித்தகுதி பெற்றுவிட்டால் உங்கள் குழந்தை மற்றும் உங்கள் படிப்புச்செலவு என்பது மிகமிக குறைவு ஆதாவது 1 மாதத்திற்கு 15 திர்ஹாம் ( 6 வெள்ளி) என்று ஞாபகம்.இது ஆரம்பபள்ளிக்கு.தமிழ் சில பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.தாங்கள் படிக்கும் பள்ளியில் தமிழ் இல்லாவிட்டால் பக்கத்து பள்ளிக்கு போய் படிக்கலாம்.
மேல் நிலை மற்றும் பல்கலைகழகங்கள் (உலகின் பல நாடுகளும் அங்கீகரித்துள்ளன)உள்ளன, அதனால் இங்கு படித்துவிட்டு வேறு நாடுகளுக்கு சென்று வேலை பார்பது மிகச் சுலபம்.படிப்பின் தரமும் நன்றாகவே உள்ளது.

துபாயில் படிப்புக்கு ஆகும் செலவு சிங்கையை விட அதிகமாகவே உள்ளது அதோடு அராபியும் கட்டாய பாடமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது.பலரும் CBSE முறையில் 8வது வரை படித்துவிட்டு பிறகு ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.இதனால் குடும்பம் என்ற அமைப்பு பிளவுபடுகிறது. சற்று முன் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு சுமாரான பள்ளியில் மாதத்திற்கு 500 திர்ஹாம் வரை ஆகும் என்றார். பல பள்ளிகள் ஊருக்கு வெளியே இருப்பதால் அவர்கள் அழைத்துப்போக /வர வண்டிச்சத்தம் வேறு கொடுக்கவேண்டி வரும்.

மேலே சொன்னவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து செய்கிற செலவு இதுவல்லாமல் திடிரென்று போடப்படும் சட்டம் ஒரு குடும்பத்தின் சேமிப்பை கொஞ்சம் பதம் பார்க்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துவருகிறது அதற்கு ஒரு உதாரணம் National ID Card - இதை வருடா வருடம் புதுப்பிக்க ஒருவருக்கு 100 திர்ஹாம் கொடுக்கனுமாம்.

அய்யையோ!! 3 வது பாகம் வேறு போடனும் போலிருக்கே...

தெரிந்துகொள்ளனும் என்று ஆசையாக இருந்தா வாங்க அடுத்த பதிவுக்கு. :-)

Wednesday, December 17, 2008

துபாயா?சிங்கையா?(பாகம் 1)


ரொம்ப நாளாக எழுதனும் என்று நினைத்துக்கொண்டிருந்த பதிவு இது.இதை எழுதத்தூண்டிய "அல்வா" புகழ் சிங்கை நாதனுக்கு உங்கள் நன்றியை சொல்லிடுங்க.

நான் சிங்கையில் சுமார் 13 வருடங்கள் மட்டுமே இருந்தேன், கன் டெயினர் தான் என் முதல் வீடு,சுமார் 4 பேர் அங்கு இருந்தோம்.அதன் பிறகு வாடகை வீடு அப்படியே சொந்த வீடு அதை விற்ற பிறகு மீண்டும் வாடகை வீடு என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு துபாய்க்கு வந்தேன்.



இந்த இரு தேசங்களை பற்றிய முழுமையான அறிவு எனக்கு இல்லை அதனால் எனக்கு தெரிந்தவரை அறிந்த வரை சொல்கிறேன்.இங்கு சொல்லியுள்ளது முழுமையானதும் அல்ல.நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறிக்கொண்டிருக்கும் உலக சூழ்நிலையில் இது இப்படித் தான் என்று அடித்துச்சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனம்.நான் பார்த்த போது இப்படி இருந்தது என்பது தான் ஓரளவுக்குப் பொருந்தி வரக்கூடிய சூழ்நிலை.
மேலே போவோம்.
பொருத்தங்கள்:
1.சிறிய நாடுகள்
2.அயல் நாட்டு முதலீடுகளை பெரிதும் நம்பி இருப்பவை.
3.தனக்கென்று விமானச் சேவை மற்றும் விமான நிலையங்களை ஏற்படுத்தி பக்கத்து நாடுகள் முழிக்கும் முன்பு 100 மீட்டர் உசேன் போல்ட் மாதிரி முன்னே போய்கொண்டிருப்பவை.
4.வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருப்பவை.
5.இயற்கை வளம் இல்லாதவை
6.சேவைத்துறையில் கால் அழுந்தப்பதித்துள்ளன.
7.யுரோப் வியாபாரத்துக்கு துபாய் என்றால் தென்கிழக்கு ஆசியாவுக்கு சிங்கப்பூர்.
8.குடிதண்ணீர் தேவையை வெளிவேலை மூலம் பெருகின்றன.
9.சென்னை, இரு நாடுகளுக்கும் நடுவில் இருப்பதால் விமான நேரம் அதே 3.5 மணி தான்.

வித்தியாசங்கள்:

1.அரசியல் முறை
2.சொந்த நாட்டு மக்களின் ஜனத்தொகை.
3.சீதோஷ்ண நிலை.
4.வீட்டு வசதி மற்றும் பொது ஜன போக்குவரத்து முறைகள்.
5.தமிழ் ஆட்சி மொழி கிடையாது - துபாயில்.
6.ஆட்சி முறை.
7.சம்பளம் மற்றும் அது சார்ந்த ஊக்கத்தொகைகள்.
8.குடியேற்றம் மற்றும் குடும்பம் அமைக்க ஏற்ற சூழ்நிலைகள்.
9.சட்ட திட்டங்கள்.
10.செலவீனங்கள்.
11.கல்வி
12.பேருந்தில் பெண்களுக்கு தனியிடம்.
13.மத்திய சேம நிதி.
14.இட/வல வாகனம் ஓட்டும் முறை.
15.தொலைதொடர்பு சேவை

முதலில் விமான நிலையத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

சிங்கப்பூரில் 3வது முனையம் முடிந்து 4 வது முனையத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது.பட்ஜெட் க்கு என்று ஒரு தனிமுனையம் வேறு.

துபாயில் இப்போது தான் 3 வது முனையம் திறந்திருக்கிறார்கள்.சொர்க்கபுரி போல் இருக்கு.பட்ஜெட் முனையம் என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை என்றே தோன்றுகிறது.

போன வாரம் அவசரமாக சென்னைக்கு போக வேண்டியிருந்ததால் எமிரேட் விமானச்சேவையை பயண்படுத்தினேன்.இணையம் மூலம் பண்ணமுடியும் என்றாலும் அது சொதப்பி பிறகு நேரே போய் முன்பதிவு செய்தேன்.துளி கூட சிரிப்பில்லாத முகம் என்னுடைய சந்தேகங்களை முடிக்கும் முன்னே அடுத்தவரை கூப்பிடும் அவசரம் போன்ற மனித இயந்திரங்களை தான் பார்க்கமுடிந்த்து.இதற்கு 700 திராம் அதிகமாக செலவு செய்யவேண்டிவந்த்து என்பது தனிக்கதை.அதோடு என் பெயரை தப்பாக அடித்து அது துபாயில் கண்டுகொள்ளலாமல், சென்னையில் இருந்து திரும்பும் போது என்னை ஒரு 30 நிமிடம் காக்கவைத்தார்கள்.

இதுவே சிங்கையில் நேர்ந்திருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?இணையத்தை விட்டுவிடுவோம் அது எப்படி சமயத்தில் காலை வாரும் என்பது உலக பொது உடமை என்பதால்.ஒன்றும் வேண்டும் நம் கடைத்தொகுதி முஸ்தாபாவுக்கு போய் ஒரு டிக்கெட் முன் பதிவு செய்யுங்கள் நீங்களே முடிவுக்கு வந்தபிறகு தான் அடுத்த ஆளை கூப்பிடுவார்கள்.புன்னகைக்காவிட்டாலும் மினிமம் இப்படித்தான் செய்வார்கள்.சேவை மனப்பாண்மை எமிரெட் விமான நிறுவனத்தில் கொஞ்சம் குறைவாக இருப்பதாக உணர்கிறேன்.

சிங்கை விமான நிலையத்தில் வாடகை மகிழுந்து எடுக்கும் போது கூடுதலாக 4 டாலர் வசூலிப்பார்கள்(4x2.50=10 திர்ஹாம்),இங்கு 20 திர்ஹாம்.அதன் பிறகு உள்ளதெல்லாம் அந்தந்த நாட்டுக்கு ஏற்றவை.மகிழுந்து ஓட்டுனர்கள் துபாயில் பெரும்பாலும் ஏன் அனைவருமே வெளிநாட்டவர்கள் தான் என்று நினைக்கிறேன் ஆனால் அதுவே சிங்கையில் நேரெதிராக இருக்கும்.துபாயில் பல ஓட்டுனர்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள்.



இபோதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்

மற்றவை விரைவில்.

Monday, December 08, 2008

இந்தியாவின் வெனிஸ்

சமீபத்தில் பெய்த சென்னை மழையில் ”நங்கநல்லூர்” இந்தியாவின் வெனிஸாக மாறியதை பாருங்கள்.

மழையிலும் படம் எடுக்கும் ஆர்வம் போகவில்லை போலும்.

படகு விட அருமையான இடம்!!
மற்றொரு கோணத்தில்
காப்பாற்று.. காப்பாற்று... (நாய் திணறுவதை பெரிதாக்கி பாருங்கள்)

Saturday, December 06, 2008

பள பளப்பு

துபாய் கட்டிடங்கள் பலவற்றிலும் பளபளப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த பளபளப்பு வண்டியிலும் அதன் சக்கர மூடியிலும் பார்க்கலாம்.நிலமை இப்படி இருக்கும் போது சமீபத்தில் திறந்து அதை அவர்கள் விமானத்துக்கு மட்டும் திறந்துவிட்டிருக்கும் மூன்றாவது விமான முனையத்தில் இருந்த போது எடுத்த படங்கள் கீழே.



கட்டிடத்தின் உள்ளேயே பூங்கா அமைத்துள்ளார்கள்.



குளிர்சாதனம் மிகச்சரியான குளிரூட்டும் பணியை செய்கிறது என்று நினைக்கிறேன்,நள்ளிரவை தாண்டியிருந்தும் ஒரு நகரத்தின் உள்ளே இருக்கும் கடைகளை இதனுள் அமைத்து அதனுடன் பெரிய தூரத்தை நடந்து கடப்பதை ஒரு சிரமமாக இல்லாத மாதிரி அமைத்துள்ளார்கள்.

Monday, December 01, 2008

கட்டுமானத்துறையில் சரிவு??

போன மாதம் முதல் வாரத்தில் இருந்தே இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களை அவரவர் ஊருக்கு நீண்ட விடுமுறையில் அனுப்பப்போவதாக செய்தி கசிந்துக்கொண்டிருந்தது அது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.இங்கு நான் வேலை செய்யும் சைட்டின் குத்தகைகாரர் அமீரகத்தில் ஒரு பெரிய ஆள் தான், இருந்தாலும் இப்போது வந்துள்ள நிதி நெருக்கடி அவரையும் விட்டுவைக்கவில்லை போலும்,வந்து சில மாதங்களே ஆன பொறியாளரை நீண்ட விடுமுறையில் போகச்சொல்லிவிட்டர்கள்.

இதே போல் பல நிறுவனங்களும் தங்கள் ஆட்குறைப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.இதில் சூடுபடப்போகிறவர்கள் எல்லோருமே என்றாலும் குடும்பம்,குழந்தை அவர்களின் படிப்பு என்று இங்கு காலை ஊன நினைத்துள்ள பலரின் நிலமை கவலை அளிக்கிறது.இவர்களின் வேலை போனால் அதோடு விசாவும் ஒரு மாத அவகாசத்தில் காலாவதியாகிவிடும் என்பதால் பலவகை கடன்கள்,வீடு மற்றும் பொருட்களை என்ன செய்வது போன்ற கவலைகளும் தலைக்கு மேல் ஓட காத்துக்கொண்டிருக்கும்.

தீர்வுகள் கண்ணுக்கு புலப்படாத நிலையில் முதலாளிகள் பலரும் தங்கள் இடுப்புவாரை இறுக்கிக்கொள்ளவே முயல்வார்கள்.

என்ன தான் நிலமை மோசமாக இருந்தாலும் வீட்டு விலை மற்றும் வாடகை மட்டும் குறைந்தபாடில்லை,இன்னும் எவ்வளவு மாதங்களுக்கு தாங்கிப்பிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

குளிர்காலம் ஆரம்பித்திருந்தாலும் நிதி நிலமை சூடு இன்னும் அதிகமாகி பலரை சுடப்போகிறது என்றே தோனுகிறது.

Wednesday, November 19, 2008

புர்ஜ் துபாய் கட்டிடம்

இதைப் பற்றி பலரும் படம் போட்டு அருமை பெருமையெல்லாம் எழுதிட்டாங்க அதனால் வேறு ஒன்றும் சொல்ல இல்லை.

இங்கு வந்த நாள் முதலாக பக்கத்தில் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது அது இன்று (19/11/08) மதியம் நிறைவேறியது அதுவும் எதிர்பாராமல்.

காலை 11 மணிக்கு தலை கூப்பிட்டு இன்னிக்கு ஒரு மெட்டிரீயல் டெஸ்ட் இருக்கு குத்தகைக்காரர் அழைத்துப்போவார் போய் வா என்றார், அத்தோடு இங்கிருந்து அங்கு போக வாகன நெரிசலில் 1 மணி நேரம் ஆகும் என்றார்.சரி,இங்கு சும்மா இருப்பதற்கு போய் வரலாம் என்று 12.30 க்கு கிளம்பினோம்.போகும் சாலையில் இக்கட்டிடம் தென்பட்டதும் அதை செல்பேசியில் பதிந்தேன் இதை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதன் கட்டிட விபரங்களை சொல்லி நாங்கள் அதன் அருகில் தான் வேலை பார்த்தோம் வேண்டுமென்றால் திரும்ப வரும் போது அங்கு போகலாம் என்றார்.



சுமார் 2.10க்கு அந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது குத்தகைக்காரர் புர்ஜ் துபாய் பக்கம் போய் வரலா என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே சரி என்றேன்.என்ன ஒரு 1 கி.மீட்டர் தள்ளி நிற்க வைத்து காண்பிப்பார் என்று பார்த்தால் அந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கொண்டுவிட்டு அதிசியப்படுத்திவிட்டார்.



கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தின் மீது சொடுக்கி பல விபரங்களை காணலாம்.வேலை செய்பவர்கள் எப்படி மேலே போகிறார்கள்,கட்டிடம் கட்டும் சாமான்கள் எப்படி மேலே போகின்றன் என்ற விபரங்கள் அருமையாக தெரியும்.

இந்த கட்டிடம் பைல் (PILE) எனப்படும் தாங்கும் தூண்களில் நிற்கிறது, அது 1500 விட்டம் என்றும் தரைக்கு கீழே சுமார் 45 மீட்டர் ஆழம் வரை தோண்டி போட்டுள்ளார்களாம்.167 மாடி வரை கான்கிரீட்டாலும் அதற்கு மேல் ஸ்டீலாலும் கட்டிடம் அமைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது ஸ்டீல் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது.



அராப் டெக் மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட்டு சேர்ந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எம்மார் என்னும் நிறுவனம் தான் இந்த கட்டிடத்தின் உரிமையாளர்.

மறக்காமல் படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.

Tuesday, November 18, 2008

பலூன் பறக்குது.

நேற்று சாயங்காலம் வேலை முடிய இருக்கும் நேரம் வெளியே நின்றுகொண்டிருக்கும் போது சூரிய அஸ்தமனம் அழகாக இருந்தது, அப்போது எடுத்த படங்கள் இது.கணினியில் போட்டு பார்க்கும் போது ஹீலியம் அடைக்கப்பட்ட பலூனா அல்லது ஹாட் ஏர் பலுனா என்று தெரியவில்லை,நகரப்பகுதியை சுற்றி வருவதை காண முடிந்தது.இந்த சேவை பொது மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போதைக்கு படத்தை மட்டும் பார்த்துவையுங்கள்.









Monday, November 17, 2008

முதல் துளி

துபாயில் எப்பவாவது தான் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருந்தேன்,நேற்று தான் அந்த முதல் நாள் போலும்.கொஞ்ச நாட்களாகவே காற்றின் குளுமை மாலை சூரியன் விழும் போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

வேலை செய்யும் இடத்தில் வெய்யில் நின்றால் ஒரு வித வெப்பமும் சட்டென்று நிழலில் நின்றால் சடாரென்று குளுமையாவது வினோதமாக இருக்கு.

மழை பெய்யும் போது நான் தூங்கியிருந்தாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் இப்படி கார் மீது நிற்கும் தண்ணீரும் காட்டிக்கொடுத்துவிடும்.அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!



படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Tuesday, November 11, 2008

சோ!!

இந்த புத்தகம் கண்ணில் பட்டதும் இதை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தேன். தெரிந்த கதை ஏற்கனவே பல புத்தகங்களில் படித்தது நிறைய கதாகாலட்ஷேபத்தில் கேட்டதையே திரும்பவும் படிக்கனுமா என்ற நிலையில் பொழுது போக்குவதற்காக படித்தேன்.

தலைக்கு வைத்தால் நிச்சயம் தலைகாணி தேவைப்படாது என்பது போன்ற அளவு நிச்சயம் தூங்கத்தான் போகிறோம்(தூங்காம இருக்கத்தான் இந்த படிக்கும் வேலையே!!) என்று நினைத்தேன்.



படிக்கப்படிக்க ஒவ்வொரு பக்கமும் ஒரு சரித்திரமாக இருக்கு.புரிதல்கள் மற்றும் விளக்கங்களும் கணக்கிடமுடியாத காலகட்டத்தில் என்ன மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கின்றன என்று யோசிக்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆத்திகர்/நாத்திகர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரு முறையாவது படித்து பயன்பெற வேண்டும்/சுயசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம்.

சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல.

Thursday, November 06, 2008

துபாய் - வான்வெளி

முதல் படம்: வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம் வெளியில் வந்தவுடன் இந்த வானக்கோலம் கண்ணில்பட்டது,பிடி செல்பேசி மூலம்.




அடுத்து இந்த ஹெலிக்காப்டர்,எதையோ தூக்கிட்டு போகுது.





இந்த படம் நேற்று எடுத்தது.கரமா பகுதிக்கு போகும் எடுத்தது.உலகின் உயரமான கோபுரம் தெரிகிறதா?

Sunday, November 02, 2008

கத்திப்பாரா அழகு.

கத்திப்பாரா பாலம் - அனைத்து கிளைகளும் திறக்கப்பட்ட பிறகு
(படங்கள் என் மனைவி எடுத்தது)




என்னையா இது பாலத்தை இவ்வளவு செலவு பண்ணி கட்டிவிட்டு பெயர் பலகையை இப்படியா வைப்பது அதுவும் புயல் வரும் சென்னையில்.சரியான அரைவேக்காட்டுத்தனமா தெரியுது.



என்ன தான் சொல்லுங்க,பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு கூடிய மாதிரி தான் இருக்கு.சாலை மார்க்கிங்கை அடிக்கடி போடுங்கப்பா!

மேம்பால பகுதியிலும் POT HOLES வராம இருக்கனும்.

Saturday, November 01, 2008

சத்வா

இது துபாயில் இப்போதைக்கு விலை குறைந்த வீடுகள் கிடைக்கும் இடங்களில் ஒன்று.சில நாட்களுக்கு முன்பு, என்னுடன் வேலை செய்யும் பிலிப்பினோகாரர் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போனார்.அங்குள்ள சில கடைத்தொகுதி வாசல்களில் பிட் நோட்டிஸ் ஒட்டியிருப்பார்கள் அதில் உள்ள எண்ணை அழைத்தால் விபரங்கள் கிடைக்கும் என்று சொன்னார்.

அங்கு இறங்கியவுடனே மாலை வெய்யிலில் ஷேக் சையட் சாலையில் நடக்கும் கட்டுமான வேலைகள் "பளிச்" என்று தெரிந்தது.வீடு தேடுவதை பிறகு பார்க்கலாம், உலகத்தில் இப்போதைக்கு உயரமான கட்டிடம் நன்றாக தெரிவதை படம் எடுக்கலாம் என்று சாலையில் மறுபக்கத்துக்கு போய் கீழுள்ள படத்தை எடுத்தேன்.....உங்களுக்காக.



இப்பகுதியில் நம்மவர்கள் பிலிபைன்ஸ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.ஒரு சிறிய அறை கிடைத்தால் அதிலும் தட்டி அடித்து பிரித்து மறுபகுதியை வாடைக்குவிட ஆசைப்படுகிறார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் இருப்பிடத்தை சுருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கிக்கொள்கிறார்கள்.

மறுநாள் அந்த பிலிப்பினோ நண்பனிடம் ஒரு அறை வாடகை 4000 திராம் சொல்கிறார்கள் என்றேன்,அங்கு போய் அதில் தடுப்பு போட்டு,தடுப்பை வாடகைக்கு விட்டுவிடு என்று கூலாக சொன்னான்.

இவ்வளவு பக்கத்திலா?

ஹாங்காங் பழையவிமான நிலையத்தை அடையும் விமானங்கள் மிகவும் பிரம்மப்பிரயத்னத்துடன் அடைவதாக முன்பு எங்கோ படித்த ஞாபகம் அதோடு ஒரு நகரத்தின் மீது மிகவும் தாழ்வாக பறக்கிறது என்று ஒரு விமானத்தின் படத்தையும் போட்டு காட்டிருந்தார்கள்.

இங்கு வந்த நாட்கள் முழுவதும் விடிகாலையில் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் மிகுந்த சத்தத்துடன் இறங்கிக்கொண்டு இருக்கும்,அதுவும் சுமாராக 3 நிமிட இடைவெளியில்.மாலை வேளையில் காற்றின் திசையை பொருத்து மேலெழும்பும் அல்லது தரையிரங்கும்.சாலையில் நடப்போரும் மாலைவேளை காற்றை அனுபவிக்க வெளியில் இருப்போர்களும் அன்னாந்து பார்பது அவரவர் ஊர் போகும் நாளை ஏக்கத்துடன் விமானம் மூலம் பார்பதாக தோனும்.

இன்று காலை இந்த படம் எடுக்கும் போது வீட்டின் கூரைக்கும் விமானத்துக்கும் 50 மீட்டர் இடைவெளி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எதுவும் நடக்காத வரை சரி ஒரு விபத்து போதும் சில ஆயிரங்களை முழுங்க.

Tuesday, October 28, 2008

துரோணா

புத்தகத்தை பிரித்த உடனே தூக்கம் வரும் ஆசாமிகளா? நீங்கள் தாராளமாய் போய் தூங்கலாம் இந்த படத்தில் ஏனென்றால் படம் ஆரம்பிக்கும் போதே புத்தகத்தை பிரிக்கிறார்கள்.





ரமலான் விடுமுறையில் ஒரு நாள் படம் பார்க்கலாம் என்று ஜபதெலியில் உள்ள அரங்குக்கு போனோம்,உள்ளே நுழையும் முன்பு தமிழ் படமா? ஹிந்தி படமா என்று விவாதிக்கும் போது ஹிந்தி வென்றது.இங்குள்ள குடும்பங்களில் குழந்தைகள் பல ஹிந்தியை பள்ளியில் படிப்பதாலும்,ஹிந்தி சினிமா சேனல்கள் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதாலும் பலர் அதை விரும்புகின்றனர்.பெரும்பாலான மக்கள் அதை விரும்பும் போது சரி "ராமன் தேடிய சீதை" யை விட்டுக்கொடுத்தேன்.

மிகக்குறைவான கூட்டம் படத்தின் பிரபலத்தை படம் முடிந்தவுடன் தான் உணரமுடிந்தது.அபிசேக்பச்சன் & நடிகை பெயர் தெரியவில்லை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமும் இல்லை.பல வருடங்களுக்கு பிறகு ஒரு இந்தி படம் பார்பதால் அர்த்தம் புரிந்துகொள்வதில் கஷ்டமாக இருந்தது.

படம் முடிந்த பிறகு உறவினர், ரித்திக்கு போட்டியாக அபிஷேக் இந்த படத்தில் ரித்திக் செய்திருந்து போல் செய்யமுயன்றிருக்கிறார் என்று சொன்னர்.இது குழந்தைகள் படம் முடிந்தால் குழந்தைகளை மட்டும் அனுப்பி பார்க்கவையுங்கள்.

Wednesday, October 22, 2008

மண் தோண்டும் பல்

மண் தோண்டுவதில் தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்? அதற்கு ஈடுகொடுக்கும்மாறு தொழிற்துறையும் போட்டி போட்டுக்கொண்டு இயந்திரங்களை தயாரித்து தள்ளுகிறது.அந்த வரிசையில் கீழே உள்ள இயந்திரமும் ஒன்று.இதை இவ்வளவு சமீபத்தில் பார்த்ததில்லை என்பதால் கண்ணில் பட்டதும் உடனே சுட்டுவிட்டேன்.

இதன் பயன்பாடுகள் கட்டுமானத்துறையில் அதுவும் தரைக்கு கீழே வேலை என்றால் அதிகம்,அதை இப்போது சொன்னால் ஒரு பெரிய தொடராகிவிடும்,அதனால் பிறகு விரிவாக சொல்கிறேன்.






சும்மா, மண்ணை அப்படியே கரைச்சு சாப்பிடுவேன் என்று சொல்கிற மாதிரி இருக்கா?

Tuesday, October 21, 2008

போக்குவரத்து - துபாய்

போக்குவரத்து நெரிசலுக்கு இப்போதைக்கு பிரபமானாலும் ஷேக் சயித் சாலையில் 100 கி.மீ வேகத்துக்கு போகும் போது அருமையாகத்தான் இருக்கு.இந்த நெரிசல்கள் எல்லாம் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். துபாய் அரசாங்கம் செய்யும் மெட்ரோ மற்றும் மேம்பாலங்கள் வேலை எல்லாம் துரிதமாக நடந்து வருகிறது.

இப்போது ஓரளவுக்கு நிலவியல் அறிவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.அவ்வப்போது சாலையில் தென்படும் (கீழே உள்ள படத்தில்) இட பலகைகளை பார்க்கும் போது,எதற்கு இரண்டு கலரில் பலகைகள் என்று யோசித்தேன்.



பிரவுன் பலகைகள் புதியவர்கள்/ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்காக வைத்துள்ளார்களாம்.வித்தியாசமாக இருந்தது.இதே மாதிரி வழிகாட்டும் பலகைகள் அல் அய்ன் மற்றும் ஃபுஜிரா போகும் போதும் கண்ணில் பட்டது.
இப்படி வித்தியாசமாக வைத்திருந்தாலும் அனிச்சையாக எந்த பலகையை பார்பது என்பது தெரியாமல் வாகன வேகத்தில் தடுமாறுவது இயற்கையாக நடந்தது.