Thursday, December 18, 2008

சிங்கை Vs துபாய் (பாகம் 2)

பாகம் 1

அடுத்து பொதுப்பேருந்து...

சிங்கையை அடித்துக்கொள்ள இப்போதைக்கு துபாயால் முடியாது.நேரக்கட்டுப்பாடு மற்றும் சிங்கையில் அனைத்துப்பகுதிகளுக்கும் போக முடிகின்ற வசதி என்று தரமாகவே இருக்கும்.அந்தந்த பேருந்தில் அதன் போகும் வழித்தடங்கள் என்று துண்டுச்சீட்டும் மற்றும் ஒளிர்வானிலும் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் அதையும் மீறி நடத்துனரிடம் கேட்டால் உதவி கிடைக்கும்.மீறிப்போனால் சில சமயங்களில் ஒரு பேருந்துக்கும் அடுத்த பேருந்துக்கும் இடைவெளி 30 நிமிடமாக இருக்க பார்த்திருக்கேன்.

துபாயில் இப்போது தான் புதுப்பேருந்துகள் கண்ணில் பட ஆரம்பித்துள்ளது.குளிர்சாதன வசதியுடன் இருக்கையிடமும் அங்கெங்கே நிறுத்தங்களில் கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.எந்த பேருந்து எப்படி போகும் என்ற விபர வசதி குறைவாகவே உள்ளது.சில இடங்களில் புது பேருந்து போகும் ஆனால் அந்த விபரம் நிறுத்தத்தில் காணப்படாது.புதியவர்களுக்கு மிகக்குழப்பமாக இருக்கும்.தடங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.பேருந்துகளுக்கிடையே உள்ள நேர இடைவெளி அதிகபட்சமாக நான் பார்த்த வரை 75 நிமிடங்கள் அதற்கு மேல் பொறுக்காமல் நடந்து அல்லது மகிழுந்து எடுத்துப்போயிருக்கேன்.பல தொழிலாலர்கள் மகிழுந்து எடுக்கமுடியாதவர்கள்,இவர்கள் பாடு பெரும்பாடு.இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெருந்துவின் உள்ளே வெளிச்சமாக இருப்பதாலும் பக்க கண்ணாடிகளில் ஒருவித பூச்சு (வெய்யிலை தடுக்க) போடப்பட்டிருப்பதாலும் பேருந்துவில் இருப்பவர்கள் பிம்பங்கள் அங்கு பிரதிபலித்து வெளியிடமே தெரியாமல் போகிறது.வழித்தடம் தெரியாதவர்கள் மிகவும் கஷ்டப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று.பெண்களுக்கு என்று பேருந்துவில் தனியிடம் ஒதுக்கி (சுமார் 8 பேர்) அது நிரம்பியவுடன் அவர்களை ஏற்றாமல் போய்விடுவார்கள்.கொடுமையாக இருக்கும்.அவ்வப்போது சில பிலிப்பினோ மகளிர்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் ஆண்கள் உட்காரும் இடத்திலேயே வந்து உட்கார்ந்துவிடுவார்கள்.பேருந்துவின் உட்புறம்

துபாயில் ஓட்டுனர்கள் அவர்கள் இஷ்டத்துக்கே பிரயாணிகளை ஏற்றுவதாக தோனுகிறது,சில சமயம் ஆட்கள் பேருந்துவிலிருந்து இறங்குவார்கள் ஆனால் ஓட்டுனர் யாரை ஏற்றாமல் போய்விடுவார்.என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது.ஓவர் லோடு பிரச்சனையா? அல்லது அந்த நிறுத்ததுக்கு பிறகு சாலை தாக்குபிடிக்காதா என்று தெரியாது.இப்போது பரவாயில்லை என்றும் 8 மாதங்களுக்கு முன்பெல்லாம் ஒருசிலர் மட்டும் மட்டும் இருந்தால் பேருந்தை நிறுத்தாமல் போகக்கூடிய கூடிய தகுதி ஓட்டுனர்களுக்கு இருந்ததாம் பலர் வேண்டுகோளுக்கிணங்க கடுமையான சோதனை முறை வந்ததும் இப்போது நிலமை மாறியிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார்.இது ஒருவகையான பிரச்சனை என்றால் வாகன நெரிசலும் சேர்ந்துகொண்டால் மரியாதையாக வரும் நிறுத்தத்தில் இறங்கி நடப்பது உத்தமம்.சில சமயம் ஓட்டுனரே கதவை திறந்துவிட்டு நம்மீது கருணைகாட்டுவார்.நடந்து போனால் பேருந்தைவிட நம் இடங்களுக்கு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம்.

தினசரி பேருந்து எடுத்து வேலைக்கு போவது என்பது இப்போது இருக்கும் நிலமையில் கொடுமையாக இருக்கும், வேறு வழியில்லாதவர்கள் நண்பர்கள் மற்றும் குழுடேக்ஸியை தான் நம்பியிருக்கவேண்டியிருக்கு.சரி இந்த கொடுமை வேண்டாம் வாகன உரிமை எடுத்துவிடுவோம் அதன் பிறகு மாதம் 1000~1800 திர்ஹாம் வரை கொடுத்து ஒரு வாடகை வண்டி எடுத்து தேவையை சரி செய்யலாம் என்றால் அங்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி அல்லது ஆச்சரியம்.இதை நம்ம "குசும்பன்" சொன்னால் நன்றாக இருக்கும்.இவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.ஏற்கனவே கால்கரி சிவா மற்றும் ஹரிஹரன் போன்ற பதிவர்கள் சொல்லியதை படித்து மேல்விபரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கை பேருந்துகளில் வெளிநாட்டவர் மற்றும் பணம் போட்டு பிரயாணம் செய்பவர்களுக்கே சீட்டு கொடுக்கப்படும் மற்றவர்களுக்கு அட்டை மூலம் பணம் வசூலிகப்படுவதால் குப்பையை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

துபாயில் இன்னும் துண்டுச்சீட்டு தான் சில சமயம் எச்சிலுடன்(எரிச்சலுடன்) கைக்கு வருகிறது.

சிங்கையில் சுமார் 2 வெள்ளியில்(5 திர்ஹாம்) ஒரு மூலையில் இன்னொரு மூலைக்கு ரயிலில் போய்வரலாம் அதே போல் துபாயில் பேருந்துவில் ஒரு வழி பயணத்துக்கு 2 திராம்(ஒரே கட்டணம்) மட்டுமே.சிங்கையில் மகிழுந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே வரவில்லை அதற்கு தேவையும் இல்லை என்னை போன்ற மக்களுக்கு.பிறக்கும் போதே கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் மாதிரி வெள்ளி ஸ்பூனுடன் பிறப்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்படுமோ என்னவோ!!சிங்கையில் முதலில் இந்திய வாகன உரிமையை மாற்றும்படி வைத்திருந்தார்கள் பிறகு அனைவருக்கும் சோதனைமுறை அவசியம் என்று கொண்டுவந்துவிட்டார்கள்.இதில் துபாயிலும் சிங்கையிலும் சில தேசங்களில் வாகன உரிமையை மாற்றிக்கொள்ளும் தகுதியை வழங்கியுள்ளார்கள்.சிங்கையில் வாகன உரிமை வாங்க சுமாராக 4000 வெள்ளியாகும் என்று கேள்விப்பட்டிருக்கேன் இங்கு முதல் தேர்வில் வெற்றிபெற்றால் சுமாராக 3000 திர்ஹாம் ஆகும் இல்லாவிட்டால் அது ஏறிக்கொண்டே இருக்கும்.இதில் சிங்கை சற்று சரிகிறது.துபாயில் பரவலாக தேர்வுக்கு வருபவர்களை தேவையில்லாமல் பெயில் பண்ணுவதாக செய்திதாளில் குறைகூறப்படுகிறது.சிங்கையில் மகிழுந்து வாங்க COE (Cerificate Of Entitlement) என்ற சான்றிதழ் வாங்கினால் தான் மகிழுந்தை வாங்கமுடியும் அதுவே சில சமயம் 30000~ 60000 வெள்ளி என்றும் அதற்கு மேலும் போகக்கூடும்.துபாயில் அது மாதிரியில்லாததால் மகிழுந்து வாங்குவதில் மக்கள் அவ்வளவு சிரமத்தை எதிர்நோக்கவில்லை என்று தான் தெரிகிறது.இதிலிருந்து பலரையும் மகிழுந்து வாங்க அரசாங்கமே ஊக்கப்படுத்துவது போல் இருக்கு.அதோடு பல இடங்களும் இன்னும் பொது போக்குவரத்து வந்து போகும் இடமாக இல்லாத்தால் மகிழுந்து அவசியப்பட்டியலில் இடம்

அடுத்து வாழும் இடம்...வீடு

சிங்கையில் வேலை செய்யும் பெரும்பாலோருக்கு தங்க வீடு நிறுவனம் ஏற்பாடு செய்து தருவதில்லை ஆனால் முதன் முதலில் சிங்கப்பூர் வருபவர்களுக்கு JTC என்ற நிறுவனம் மூலம் வாடகைக்கு வீட்டை கொடுக்கிறார்கள்.இதற்கு சில விதிமுறைகள் உள்ளன அதை நிறைவேற்றும் பட்சத்தில் குறைந்த பட்சத்தில் 2 அல்லது 3 மாதங்களில் வீடு கைக்கு வந்துவிடும்.நான் வந்த போது (1995யில்) இந்த வசதியில்லை.3 அறை அல்லது 4 அறை வீடுகள்கள் தான் அதிகமாக கொடுப்பார்கள் அதன் வாடகை சுமார் 1200 வெள்ளி (3000 திர்ஹாம்) அதன் மேல் தண்ணீர் (125 திர்ஹாம்) மற்றும் மின்சார பயன்பாடுகள் மற்றும் குப்பை காசு (100 திர்ஹாம்) என்று வரும்.3 அறை என்பது 2 அறை 1 ஹால் 1 குசினி.விழுந்து புரலளாம்.

அதே வீடு விஷயத்தில் துபாயில் பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் கொடுத்து சம்பளம் கொடுக்கிறார்கள்.என்னை மாதிரி ஆட்களுக்கு நீங்களே தேடிக்கிங்க என்று ஒரளவு கொடுக்கிறார்கள்.இதில் இங்கு நீக்குப் போக்கு தெரிகிறது.

துபாயில் பல வகை இருப்பிடங்கள் இருக்கு "Bed Space" முதல் "Villa" வரை கிடைக்கிறது.பெட் ஸ்பேஸ் 600 திராமில் இருந்து 1000 திர்ஹாம் வரை இருக்கு.கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் ஒரே அறையில் 4 முதல் 6 பேர் வரை வைத்து பணம் பண்ணுகிறார்கள்.இந்த வில்லா வகை வீடுகளில் பல அறைகள் இருக்கும்.ஒவ்வொரு அறையில் ஒரு குடும்பம் என்ற நிலையில் வசித்து வந்த பல குடும்பங்கள் இப்போது தங்குவதற்கு ஏற்ற இடம் தேடி அலைந்து கிடைக்காமல் சிலர் ஊருக்கே திரும்பி போய்விட்டனர் அல்லது கெடுபிடி இல்லாத பக்கத்து எமிரேட்டுக்கு போய்விட்டனர்.இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு தனிவீடு என்பது முடியாத காரியம்.
ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாமா?இது ஒரு பதிவர் சொன்னது...
என்னுடைய சம்பளம் 4800 திர்ஹாம்
வீடு வாடகை 2500 - ஷார்ஜாவில்
டேக்ஸி(துபாய் வந்து போக)-400
சாப்பாடுச்செலவு - 750 ~ 1000
மீதி கையில் நிற்பது வெறும் 900 திர்ஹாம் மட்டுமே.
இப்படிப்பட்ட நிலையில் துபாயில் குடும்பத்துடன் இருப்பதற்கு ஒரு வீடு வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மாதவாடகை 5000 திர்ஹாம் வேண்டும் அதன்பிறகு சாப்பாடு மற்ற செலவுக்கு என்ன பண்ணுவது?இதில் ஒன்றை கவனித்தீர்களா! குழந்தை மற்றும் படிப்புச்செலவு வரவில்லை.அதனால் மாதம் 20000 திர்ஹாம் இருந்தால் ஓரளவு சேமிப்புடன் குடும்பம் நடத்தலாம் இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

சமீபத்தில் "ஒரு வில்லா ஒரு குடும்பத்துக்கு" மட்டுமே என்ற சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பலரது நிலமை இன்னும் கஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இவர்களுக்கான குறைந்த வாடகை வீடு என்ற ஒரு திட்டம் இருப்பதாக என் கண்ணிற்கு படவில்லை.

வீடு விஷயத்தில் சிங்கை முன்னனியில் இருக்கிறது.

அடுத்து படிப்பு

சிங்கையில் நீங்கள் நிரதரவாசித்தகுதி பெற்றுவிட்டால் உங்கள் குழந்தை மற்றும் உங்கள் படிப்புச்செலவு என்பது மிகமிக குறைவு ஆதாவது 1 மாதத்திற்கு 15 திர்ஹாம் ( 6 வெள்ளி) என்று ஞாபகம்.இது ஆரம்பபள்ளிக்கு.தமிழ் சில பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.தாங்கள் படிக்கும் பள்ளியில் தமிழ் இல்லாவிட்டால் பக்கத்து பள்ளிக்கு போய் படிக்கலாம்.
மேல் நிலை மற்றும் பல்கலைகழகங்கள் (உலகின் பல நாடுகளும் அங்கீகரித்துள்ளன)உள்ளன, அதனால் இங்கு படித்துவிட்டு வேறு நாடுகளுக்கு சென்று வேலை பார்பது மிகச் சுலபம்.படிப்பின் தரமும் நன்றாகவே உள்ளது.

துபாயில் படிப்புக்கு ஆகும் செலவு சிங்கையை விட அதிகமாகவே உள்ளது அதோடு அராபியும் கட்டாய பாடமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது.பலரும் CBSE முறையில் 8வது வரை படித்துவிட்டு பிறகு ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.இதனால் குடும்பம் என்ற அமைப்பு பிளவுபடுகிறது. சற்று முன் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு சுமாரான பள்ளியில் மாதத்திற்கு 500 திர்ஹாம் வரை ஆகும் என்றார். பல பள்ளிகள் ஊருக்கு வெளியே இருப்பதால் அவர்கள் அழைத்துப்போக /வர வண்டிச்சத்தம் வேறு கொடுக்கவேண்டி வரும்.

மேலே சொன்னவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து செய்கிற செலவு இதுவல்லாமல் திடிரென்று போடப்படும் சட்டம் ஒரு குடும்பத்தின் சேமிப்பை கொஞ்சம் பதம் பார்க்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துவருகிறது அதற்கு ஒரு உதாரணம் National ID Card - இதை வருடா வருடம் புதுப்பிக்க ஒருவருக்கு 100 திர்ஹாம் கொடுக்கனுமாம்.

அய்யையோ!! 3 வது பாகம் வேறு போடனும் போலிருக்கே...

தெரிந்துகொள்ளனும் என்று ஆசையாக இருந்தா வாங்க அடுத்த பதிவுக்கு. :-)

4 comments:

 1. Anonymous8:39 AM

  COE is now around SGD 7000 now. A month back it was at an unbelievable SGD 2-.
  D the Dreamer

  ReplyDelete
 2. வாங்க D the Dreamer,நலமா?
  என்னது இவ்வளவு குறைந்துவிட்டதா? ஆச்சரியமாகத்தான் இருக்கு. ஒரு காலத்தில் 100000 கூட இருந்ததாக கேள்வி.
  அப்ப மோட்டர்பைக்கு எவ்வளவு? 25 வெள்ளியா? :-)

  ReplyDelete
 3. Anonymous8:51 AM

  Motorbikes are still around $1000. :)
  I hope all is fine in your end. It is sad that I didnt happen to bounce upon you again in Singapore.
  Cheers
  D the Dreamer

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?