Friday, May 07, 2021

அமானுஷ்ய நிகழ்வுகள்.

உலகில் பலருக்கு இதுபோல் விதம்விதமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் அதில்  எது உண்மை எது பொய் என்று புரிந்துகொள்ளமுடியாத  நிலையில் வாழ்க்கையின்  அடுத்த நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருப்போம் . கொஞ்ச நாள் கழித்து அப்படியே அதுவும் மறந்திருக்கும் .காரணங்களை அலசினால் கிடைப்பது என்னவோ குழப்பம் தான் .

எனக்கு நடந்ததை சொல்கிறேன்.

என் நினைவுக்கு முதலில் வருவது என்னுடைய 20வது  வயது காலத்தில் நடந்தது. மும்பை மாமா வீட்டுக்கு போயிருந்தேன் . புது இடம் . இரவு படுக்கும் போது "கழிவறை  இங்கு  இருக்கு,குடி தண்ணீர்  இருக்கு" என்று சொல்லிவிட்டு யாரும் அழைப்புமணி அடித்தால் திறக்காதே என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். நல்ல தூக்கம்,எப்போது என்று நினைவில்லை ஆனால் அழைப்பு மணி அடித்தது போல் இருந்தது. எழுந்து பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன் . காலை சுமார் 5 மணி இருக்கும்,மாமா அலுவலகம் செல்வதற்காக எழுந்து குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்துகொண்டிருந்தார். மணி அடிக்கும் சத்தம் தூக்கத்தை கெடுக்க படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உள் அறையில் இருந்து ஒரு வெளிச்சம் படு வேகத்தில் என்னை கடந்து பூட்டி இருக்கும் வாசற்கதவையும் கடந்து வெளியே போனது. நான் நிதானிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

இந்த வெளிச்சம் என்ன?அது எப்படி வந்தது?  .. புரியாத புதிர்.

ஒரு நிகழ்வு நடக்கப்போகும் தினத்துக்கு 2 மாதம் முன்பு , ஒரு மதிய வேளை சுமார் 2.30 இருக்கும் . பெற்றோர் இருக்கும் வீட்டுக்கு போகிறேன்.எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கும் நேரம்.கதவை தட்டியவுடன் அம்மா வந்து திறக்கிறார்.கதவுக்கு நேர் எதிரே ஒரு கழிவறை , கதவு திறந்திருக்கு ,ஏதோ ஒரு வெள்ளை உருவம் கையில் தாங்கு குச்சி வைத்துள்ளது அதே சமயத்தில் வேஷ்டியை சரி செய்துகொள்வது போல் தோன்றி மறைந்தது.அப்பா மற்றொரு அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.இருவர் மட்டுமே உள்ள வீட்டில் இது யார் புதியவர்? இது வரை யாரிடமும் சொன்னதில்லை, அப்படியே மறந்து போய்விட்டேன்.

நவம்பர்  2018 ,மருத்துவமனையில் அப்பா சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். ICU வில்  இருப்பதால் அவ்வப்போது தேவைப்படும் சமயத்தில் மட்டும் வீட்டுக்கு வந்து அம்மா செய்து  வைத்திருக்கும் உணவை எடுத்துப்போய் கொடுப்பேன். அன்று Discharge செய்யலாம் என்று சொன்ன மருத்துவர் தன் மனைவி (இவரும் ஒரு மருத்துவர் )ஒரு முறை பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்றார். அவர் வருகைக்காக காத்திருந்தோம் .இதற்கிடையில் அப்பாவை பார்க்க வந்த மச்சினரிடம் ஓரளவு அடையாளம் கண்டுகொண்டு சைகையில் பதில் சொன்னார். மருத்துவர் வர  நேரமானதால் வீட்டுக்கு போய் இரவு சாப்பாட்டை எடுத்து வரலாம் என்று போனேன். வீடு முதல் மாடியில் . மேலே ஏறுவதற்கு முன்பு படிக்கு கீழே மறுபடியும் ஒரு உருவம் கையில் குச்சியுடன் ஏதோ குழப்பத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. சரியான நிகழ்வாக இல்லையே என்று யோசித்துக்கொண்டே மேலே போய் அம்மாவிடம் கஞ்சி  வாங்ககிக்கொண்டு மருத்துவ மனைக்கு  போனேன் . போகும் போதே பல முறை தொலைப் பேசி அழைப்பு வந்தது , எடுக்காமல் மருத்துவமனை  வாசலில் வண்டியை நிறுத்தினேன். என் அருகில் வந்த ஒருவர் என் அப்பா பெயரை சொல்லி அவருக்கு  நீங்கள்  உதவியாளரா? என்றார்.

"ஆமாம்"  என்றேன்.

"வரவேற்பறையில்  பல முறை கூப்பிட்டார்கள் " என்றார். சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு மேலே சென்றேன். காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்த மருத்துவர் அங்கு  நின்றிருந்தார். என்னவென்று கேட்டேன். பக்கத்தில் இருந்த மருத்துவரும் , செவிலியரும் அப்பாவுக்கு CPR செய்துகொண்டிருந்தார்கள். Monitor ஐ பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.நெற்றி,வயறு பக்கம் மட்டும் கொஞ்சம் சூடு இருந்தது. ECG எடுத்து உறுதிப்படுத்தினார்கள்.

இப்போது அந்த நிழல் உருவங்கள் என்ன? யார் அது?உயிர் முடிவதற்கு முன்பே உடம்பை விட்டு வெளியே வருகிறதா ? என்னிடம் பதில் இல்லை.



                                                                என் தந்தை 


இதே சமயத்தில் என்னுடைய மனைவி கோயம்பேடுவில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தார் . மாலை 6 மணியாகிவிட்டது கார்த்திகை மாதம் வீட்டு முகப்பில் விளக்கு ஏற்றவேண்டும் ஆனால் ஏதோ அசதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். TV வுக்கு அருகில் என்னுடைய பெற்றோர் மற்றும் மாமனார் & மாமியார் Photos தனித்தனியாக மாட்டி  இருக்கும் . என்னுடைய பெற்றோர் படத்தில் இருந்து ஏதோ ஒன்று அப்படியே நகர்ந்து போவது போல் தோன்றி  இருக்கு . அதை  அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் நான் 7 மணிவாக்கில் தொலைபேசியில் விஷயத்தை சொன்னவுடன் தான் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கெல்லாம் காரண காரியம் நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை . சாவதற்கு முன்பே பல இடங்களில் பயணப்படுவது  எப்படி ?   


மீண்டும் ஒரு நிழல் உருவம் இம்முறை sofa வில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது . நான் காயவைத்த துணியை மடித்துக்கொண்டிருக்கேன். நன்றாக நிதானித்து பார்க்கிறேன். குனிந்த தலை, கொஞ்சம் நிறம் உள்ள மனிதர் . சுமார் 2 மாதம் கழித்து மற்றொரு மரணம்,நெருங்கிய சொந்தத்தில் இருந்து. வந்தது யார்?

ஒரு சில முறை யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் என் மீது மெலிதாக மோதிய மாதிரி இருக்கும். மிக சமீபத்தில் ஒரு சிறிய தலையணையை மெத்தை மீது வீசுகிறேன் , அது நேரடியாக விழாமல் எதன் மீதோ பட்டு வேகம் குறைந்து விழுகிறது. இப்படி பல பல நிகழ்வுகள்.

அப்பா இறந்த மறு நாள்,சுடுகாட்டுக்கு கொண்டு போய் மந்திரம் சொல்லி நெஞ்சில் நெருப்பு வைத்து உள்ளே தள்ளிவிட்டார்கள். அவ்வப்போது கண்ணீர் முட்டினாலும் பெரிதாக தூக்கம் வெடிக்கவில்லை. உள்ளே எரிந்துகொண்டிருக்கிறார்  வெளியே சுவாமிகள் மந்திரம் சொல்லி என்னையும் சொல்லச்சொல்கிறார் . ஒரு சில மந்திரங்களுக்கு பிறகு என்னால் சொல்ல முடியவில்லை. கண்ணீர் கொட்டுகிறது ,என் முகம் என்னுடைய அப்பா போல் மாறுகிறது அதை என்னாலேயே பார்க்க முடிகிறது. நான் எங்கப்பாவாக மாறுகிறேன். வாத்தியார் என் நெஞ்சை தடவிக்கொடுத்து விட்டு கொஞ்ச நேர ஆசுவாசத்திற்கு பிறகு தொடர்ந்தார். திரும்ப திரும்ப யோசிக்கிறேன்,இப்படிப்பட்ட உணர்வு இதுவரை  எங்கும்   படித்ததில்லை, யாரும் சொல்லி கேட்டதில்லை இருந்தாலும் எப்படி வந்தது?

புரியாத புதிர். 








2 comments:

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அதிசயம். ஆச்சர்யம்.
குமார்.நலமா மா.

வடுவூர் குமார் said...

நலமாக இருக்கிறேன். மிக்க நன்றி.