வீடுகளில் மராமத்து வேலைகள் ஆரம்பம் ஆகிறது என்றால் தலைவலி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் எப்போது வரும் எப்போது போகும் என்பது தெரியாது.ஒரு வேலை ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சி எலி வலை போல் எங்கு முடியும் என்று தெரியாது. செலவுக்கு இவ்வளவு தான் என்று முடிவாக ஒதுக்கமுடியாது.
சில வருடங்களுக்கு முன்பு மேற்கூரையில் ஏதோ டொம் டொம் என்று சத்தம் வந்தவுடனே தெரிந்தது அங்கு பிரச்சனை என்று.
கூரையில் முதன் முதலில் விரிசல் ஏற்பட்டவுடன் தெரிந்தவர் மூலம் வந்த பூச்சு வேலைக்காரர் கடையில் கிடைக்கும் துறு நீக்கியை உபயோகித்து கம்பி மேல் இருக்கும் துறுவை நீக்கிவிட்டு கொஞ்சம் அதிக ஸ்ட்ராங்க் உள்ள சிமிண்டை உபயோகித்து பூசினேன்.அந்த பூச்சு சுமார் 1.5 வருடம் தாங்கியது,அதே இடத்தில் திரும்பவும் டொம் சத்தம் கேட்க நானே அதை உடைக்க சின்ன தாம்பாளம் அளவுக்கு பூசிய கான்கிரீட் வந்தது.உள்ளே இருந்த கம்பி துறுபிடித்து விரிவாக அதன் கீழ் பக்கம் இருக்கும் கான்கிரீட்டை வெளியே தள்ளிவிட்டது. ஒரு ஓரத்தில் கம்பியின் கீழ்பக்கம் வைக்கப்படும் சிறிய கான்கிர்ரீட் துண்டு எவ்வித ஆட்சேபனை இன்றி கையாலேயே எடுக்க முடித்தது. 18 வருடத்துக்கு முன்பு எப்படி கான்கிரீட் போட்டார்கள் என்பதை இது தெளிவாக காட்டியது.
ஒரு சின்ன பகுதி தானே விழுந்திருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மேலும் சில இடங்களில் வீக்கம் தெரிய வரவேற்பறை முழுவதும் கைவைக்க வேண்டிய நிலை வந்தது.
இம்முறை தெரிந்தவர் ஒருவரே குத்தகைக்காரரை அனுப்பி அவர் செய்யும் வேலையில் உபயோகிக்கும் முறையை அமல்படுத்தினார்.கீழே உள்ள துறு நீக்கியை பிரஸ் கொண்டு கம்பி மீது அடிக்கவேண்டும். இது ஒருவித அமிலம் என்பதால் கம்பி மீது படும் போது சிறிது நுரை வரும்.
இம்முறையில் கம்பி மீது அந்த கெமிகலை அடித்துமுடித்து இரண்டு மணி நேரம் கழித்து கீழே காண்பித்துள்ள Compound ஐ சிமிண்டுடன் கலந்து விரிசல் உள்ள இடங்களில் போடவேண்டும் அதன் பிறகு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளித்து அது இருக வழிசெய்ய வேண்டும்.
எல்லாம் செய்து முடிக்க சுமார் 3 நாட்கள் ஆனது. பெயிண்ட் அடிக்க இந்த கான்கிரீட் இருக வேண்டும் என்பதால் காத்திருக்கோம்.
Compound கலக்கும் விதம் மற்றும் விகிதம் அந்த உரிமையாளர்கள் சொல்லியிருக்கும் படி செய்யவேண்டும். எல்லாம் சரி, இனி இப்பிரச்சனை வராதா? என்று கேட்டால் பதில் கிடையாது. ஏனென்றால் மறுபடியும் விரிசல் வர பல காரணிகள் நம் கண்ணுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.இம்முறை வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.
