Sunday, October 31, 2010

தேவர் திருவிழா

ஏற்கனவே இடைவிடாத மவுண்ட் ரோடின் ஹாரன் ஒலி அலுவலக கண்ணாடி தடுப்பையும் மீறி நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும்,நேற்று அந்த சத்ததையும் மீறி வெடி சத்தமும் தப்பு சத்தமும் ஒலிக்க ஆரம்பித்தது.சரி யாரோ மண்டையை போட்டுவிட்டார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வெளியே சென்று பார்க்க அலுப்பு.கலவையான இச்சத்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது தான் இது ஏதோ விழா போல் நடக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது அதே சமயத்தில் மவுண்ட் சாலையில் இருக்கும் நெருக்கடிக்கு இடையே எப்படி என்ற எண்ணமும் எழுந்தது.

வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்க்கும் போது,முதல் குழு ஆண்களுக்கு; தப்பும் ஆட்டமும் போட்டுக்கொண்டு தேவர் சிலை வரை போனார்கள் அடுத்து பெண்கள் தலையில் குடம் வைத்து (நேர்த்திக்கடனா?)அவர்களும் அச்சிலை வரை போய்விட்டு ஒரு வண்டியில் குடங்களை அடுக்கிவைத்தார்கள்,அதற்கு மேல் எனக்கு நேரம் இல்லாத்தால் இரண்டு படங்கள் மட்டும் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ஒரு வண்டியில் கோயம்பேடு யில் இருந்து தேவர் சிலை வரை நடைப்பயணம் என்று போட்டு ஏதோ விழா என்று எழுதியிருந்தார்கள்.இன்று காலை செய்தித்தாளை பார்த்தவுடன் தான் நேற்றைய விழாவுக்கு அர்த்தம் தெரிந்தது.




Tuesday, October 19, 2010

மத்தியான சிரிப்பு

அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடித்துவிட்டு மிச்சம் இருக்கும் 10 நிமிடத்தை வீணாக்க விரும்பாமல் தினமும் சிறிது நேரம் மவுன்ட் ரோடு பக்கம் உலாத்தல் போவேன் அப்படி போகும் போது இன்று பார்த்த ஒரு காட்சி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கீழே பாருங்கள்..



ஒரு காலத்தில் நெட்டில் இதே மாதிரியான கோட்டை வெள்ளை கலரில் ஒருவர் சாலையில் போட்டிருப்பார் அப்போது வழியில் இருக்கும் ஒரு இலைக்காக கோட்டை வளைத்துப்போட்டிருப்பார்.இக்கோடு சாலை விவர பலகைக்காக வளைக்கப்பட்டிருக்கு.

Saturday, October 16, 2010

யோகா

சில நாட்களுக்கு முன்பு யாகூ முதல் பக்கத்தில் மோசமான சுற்றுச்சூழல் உள்ள 20 நகரங்களில் பட்டியல் போட்டிருந்தார்கள் அதில் சென்னைக்கு 8வது இடம்,முதல் இடத்தில் குஜராத்தில் உள்ள அன்கலேஷ்வர்.இந்த அனகலேஷ்வர் பகுதியில் 1992களில் சில மாதங்கள் வேலை செய்துள்ளேன் அப்போதே காற்றில் ஒரு வித நெடி இருக்கும்.வெளியிடங்களில் இருந்து வரும் ரயிலில் வரும் போது இந்த நெடியே அன்கலேஷ்வர் வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.






யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.

இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.

Sunday, October 10, 2010

Employment Card

நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுகிறோமோ இல்லையே முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடுவோம்,அப்படி செய்வதால் அப்பா/அம்மா ஏச்சுக்களில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பது வேறு கதை.முதன் முதலில் நாகையில் படித்துமுடிந்தவுடன் அங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருந்தேன் பிறகு தான் முன் அனுபவம் உள்ளவர்கள் பலரும் சொல்லிய படி சென்னைக்கு மாற்றிக்கொண்டேன்.அவ்வப்போது அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையில்லாததோர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அது உணர்த்திக்கொண்டிருக்கும்.

இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.

Saturday, October 09, 2010

சென்னை மெட்ரோ

கோயம்பேடு மற்றும் வடபழனி பக்க சாலைகளை வழிப்பறி செய்து சென்னை மெட்ரோ வேலைக்காக ஆட்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தூண்கள் மண்ணைவிட்டு வெளியே வந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ஸ்டீல் Girder ஐ தூக்கி வைத்ததும் பத்திரிக்கைகள் புகைப்படம் போட்டு ஒரு சில பக்கங்களை நிரப்பிவிட்டன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.



கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.