Tuesday, December 31, 2013

பஹாய் கோவிலின் கதை

டெல்லி சுற்றிப்பார்க்க போன பெரும்பாலனவர்கள் இக்கோவிலை சுற்றுலா தளம் போல் பார்த்துவருகிறார்கள்.இதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அதை எப்படி முறியடித்து கட்டிமுடித்தார்கள் என்பதை லார்சன் & டூப்ரோ நிருவனம் அவர்கள் நிருவன புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.அவை கீழே.
படங்களின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பாருங்கள்.

 நன்றி: லார்சன் & டூப்ரோ லிமிடடு.

Monday, December 16, 2013

அப்பெல்லாம்...இவ்வளவு தான் ஏறியது.
வேலையில்லாத நேரத்தில் ஏதாவது செய்தாகவேண்டுமே அப்படி ஒரு வேலை செய்துகொண்டிருக்கும் போது இது மாட்டியது.

முதல் அரை மாத சம்பளம் L&T ECC யில் - ரூ 325 (1982 - பிப்ரவரி)

அடுத்த மாத முழு சம்பளம் : ரூ 700- (1982 - மார்ச்)

12 வருடங்களுக்கு பிறகு வெளியே வரும் போது : ரூ 6705.(1984 -டிசம்பர்)

12 வருடங்களில் சுமார் 10 மடங்குக்கு குறைவானவான ஏற்றமே ஏற்பட்டுள்ளது.


Wednesday, November 27, 2013

இது என் முயற்சி.

ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் இணைந்த பிறகு இங்கு கிடைத்த விபரங்கள்,அவரவர் முயற்சிகள் எல்லாம் படித்த போது எனக்கு இருந்த ஒரே பிரச்சனைக்கு இயற்கையான முறையில் முடிவு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சாடின் மருத்தின் மூலம் வரும் பக்க விளைவுகளை செல்வன் பதிவுகள் மூலமும் அவர் கொடுத்திருந்த இணைப்புகள் மூலம் தெரிந்துகொண்டேன்.மேலே தொடர்வதற்கு முன்பு என்னுடைய பிரச்சனை என்று சொல்லிவிடுகிறேன்.

High Cholesterol தான் என்னுடைய ஒரே பிரச்சனை.இதை முதலில் தெரிந்துகொண்டது சிங்கையில் தான்.என்னுடைய கொலஸ்ரால் அளவை அவர்கள் லேப் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை (அவ்வளவு அதிகமாக இருந்தது போலும்).அதன் பிறகு சென்னை வந்த போது இங்குள்ள பரிசோதனை நிலையத்தில் சோதித்த போது மொத்த அளவு 348 வந்தது.தேவையான மருந்துகளை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு அதன் விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன்.இருக்கும் போது மருந்து சாப்பிடுவேன் முடிந்தவுடன் விட்டுவிடுவேன் அதற்கு பிறகு எப்போது ஊருக்கு வருவனோ அப்போது தான் மருந்து.

சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் ஸ்ரிக்ட்.அளவான சாப்பாடு மட்டுமே அதுவும் வெளியிட சாப்பாடு வெகு குறைவே.பிட்சா மாதிரி சமாச்சாரங்கள் வருடத்துக்கு ஓரிரு முறையே.வீட்டடை விட்டு வெளியில் இருக்கும் போது கை சமையலே.

கொலஸ்டிராலை கட்டுப்படுத்தும் மருந்து ஒரு மாதத்துக்கு சுமார் ரூ 1200 யில் இருந்து 1400 வரை போய்கொண்டிருந்தது.இந்நிலையில் தான் செல்வனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.சரி இப்படி ஒரு வழி இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அதை முயற்சிக்க கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன் அதோடு முட்டை சாப்பிட்டு திரும்பவும் கொலஸ்டிராலை(நல்ல) கூட்டவேண்டும் என்பது தான் நெருடிக்கொண்டு இருந்தது.நான் முட்டை சாப்பிடுவதை 1994 யில் விட்டுவிட்டேன் அதனால் திரும்பவும் ஆரம்பிப்பதில் கொஞ்சம் சுணக்கம்.

இந்நிலையில் வீட்டுக்கு பக்கத்தில் என்னுடன் ஒன்றாக வேலைசெய்த ஒரு நண்பரிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.அவரும் முழுவதுமாக கேட்டுவிட்டு தான் ஒரு முறையை கடைபிடிப்பதாகவும் அதன் மூலம் நம் இன்றைய உணவு முறையை அவ்வளவாக மாற்றிக்கொள்ளாமல் அதே சமயத்தில் கொலாஸ்டிராலையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றார்.அவருடைய முறைபடி காலை(10 ~ 11) நேரடியாக அரிசி உணவு,அதன் பிறகு பசிக்கும் போது பச்சையாக காய்கறிகள்,இரவு பழம் மட்டும். அவ்வளவு தான்.நானும் மனைவியும் கொஞ்ச நாட்களுக்கு இதை பின்பற்றுவோம் விளைவுகளுக்கு தகுந்த மாதிரி மேல்முடிவு எடுக்கலாம் என்று அக்டோபர் முதல் தேதியில் இருந்து ஆரம்பிதோம்.
காலை : கஞ்சி 1 டம்ளர் (கேழ்வரகு,கோதுமை கொண்டது)

மதியம்: அரிசி சாப்பாடு

இடையில் பசிக்கும் போது பச்சையாக கேரட்,வெள்ளரிக்காய்,தக்காளி,சிறிதளவு ஸ்வீட்ஸ்.

இரவு: பழங்கள்.

ஆரம்பிக்கும் போது என்னுடைய எடை 69.6 Kg

ஒரு மாதம் கழித்து : 66 கிலோ

நேற்று : 65.3 கிலோ.

தானிய அரிசியை இரவில் குறைத்ததாலும் இலகுவாக செரிமானம் ஆகும் பழங்களை சாப்பிட்டதாலும் எடை இழந்தேன்.இதனால் எந்த ஒரு பிரச்சனையும் முதல் மாதத்தில் எழவில்லை.இந்த டயட் ஆரம்பித்த நாளில் இருந்து கொலஸ்டிரால் மாத்திரைகளை நிருத்திவிட்டேன்.

டயட்டில் இருந்து 40 ஆவது நாளில் இருந்து பிரச்சனை ஆரம்பம் ஆனது ஆதாவது மூச்சுவிடுவதில்,ஒரு மாதிரியான Heavy Breathing இருப்பதாக தோன்றியது.இதே மாதிரியான நிலை நான் மாத்திரை எடுக்கும் போதும் அவ்வப்போது தோன்றியதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் நாள் ஆக ஆக வெவ்வேறு விதமான வலிகள் இருதயம்,முதுகு பக்கம்,தோள்பட்டை போன்ற இடங்களில் வர ஆரம்பித்தது.இதயத்துக்கு நேர் பின் பக்கம் முதுகில் வந்த வலி தினசரி நீடிப்பதை பார்த்ததும் இது அசாதரணமானது என்று புரிந்தது.

61ம் நாள் ஒரு மாதிரியான இறுக்க நிலை கண்கள் தானாக மூடிக்கொள்ளும் நிலையை உணர்ந்த போது என்னுடைய டயட் சரியில்லை என்று புரிபட்டது.அன்றே உடனடியாக பரிசோதனை நிலையத்துக்கு போய் கொலஸ்டிராலுக்கும் ECG க்கும் பரிசோதனை செய்துகொண்டேன். ECG இல் பெரிய மாற்றம் ஒன்றும் தென்படவில்லை ஆனால் கொலஸ்டிரால் எல்லாம் மிக அதிகமாக போயிருந்ததை கண்டுகொண்டேன். பரிசோதனை முடிந்த உடனேயே வழக்கமாக சாப்பிடும் கொலஸ்டிரால் மாத்திரைகளை சாப்பிட்டேன் அதை சாப்பிட்ட மறுநாள் நிலமை சற்று மேம்பட ஆரம்பித்தது.

இன்று நிலமை தேவலை என்றாலும் அந்த அழுத்தமான உணர்வு அவ்வப்போது வந்து போகிறது.இன்னும் கொஞ்ச நாட்கள் மாத்திரைகள் சாப்பிட்டவுடன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

முதல் பரிசோதனை தோல்வி இனி அடுத்தது செல்வன் பரிந்துரைத்தது தான்.என்ன வீட்டுக்காரமாவுக்கு சமைப்பதில் தான் கொஞ்சம் கஷ்டம்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


Cholestral Lvl before diet (06 Jun 13)
Cholesterol Lvl on diet(24 Nov 13)
Cholesterol
198 mg/dl
286 mg/dl
HDL Cholestral
46
45
Triglycerides
226
337
LDL Cholesterol
132
194
VLDL Cholesterol
45.2
67.4
Total CHO/HDL ratio
4.3
6.4


Sunday, October 27, 2013

பெரிய இடைவெளி

இப்ப உலகம் சுருங்கின மாதிரி 1980களில் இல்லை, படித்த நண்பர்களையோ/இள வயதில் ஒன்றாக விளையாடிய நண்பர்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் கண்டுபிடிக்கவே முடியாத அளவில் இருக்கும் ஏனென்றால் வீட்டு முகவரியை தவிர வேறு எதுவும் எங்களிடம் கிடையாது.பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் போது நெருக்கமான சிலர் இருந்தனர் அதில் புகைபடம் எடுத்துக்கொண்ட இந்த மூவர் நினைவும் மட்டும் பசுமையாக இருந்தது இதில் ஒருவர் பெற்றோர் வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்ததால் எப்போதும் தொடர்பில் இருந்தார் மற்ற இருவரைப்பற்றிய செய்தி எதுவே கிடைக்கவில்லை.பழைய நிருவனம் மற்றும் வேறு சில நண்பர்களிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் நாகப்பட்டினம் போன போது இந்த நண்பர்களை பற்றிய ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று என்னுடன் படித்த நண்பர்கள் சிலரிடம் கேட்டேன்,உதடு பிதிக்கினார்கள்.சரி அவர்கள் வீடாவது இருக்கா என்று போய் பார்த்தால் முகப்பு எல்லாம் மாறி கடையும் பிளாட்டாக மாறியிருந்தது.கீழே உள்ள கடைக்காரடிடம் கேட்ட போது அவர்கள் வீட்டை விற்று விட்டு சென்னைக்கு போய்விட்டார்களே என்றார்.சரி, சென்னை முகவரியாவது இருக்கா என்றால் "இல்லை" என்றார்.பிறகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகை மார்கெட்டில் அவர்கள் அண்ணா கடை வைத்திருக்கார் என்று விபரம் கொடுத்தார்.அதை தேடி கண்டுபிடித்தவுடன் அவர்களிடம் இருந்து நண்பன் எண் கிடைத்தது அதன் மூலம் மற்றவர் எண்ணும் கிடைத்தது.எல்லோரிடமும் மீண்டும் தொடர்பு கிடைத்த சந்தோஷத்தை நான்கவரிடமும் பகிர்ந்துகொண்டோம்.

இவ்வளவு நாள் தான் பார்க்கமுடியவில்லையே இப்போதாவது பார்க்கலாம் என்று மதியம் மடிப்பாக்கத்தில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கு சந்தித்து அளவளாவினோம்.

33 ஆண்டுகள் இடைவெளியில் இயற்கை விளையாடிய விளையாட்டை படங்களில் பார்க்கலாம்.மனைவிமார்களை பேசவிட்டுவிட்டு எங்கள் பழைய கதைகளை ஓரளவு பேசிவிட்டு வீடு திரும்பினோம்.

இம்மூவரை தவிர நானே எதிர் பார்க்காத இன்னொரு நண்பரையும் சந்திக்க முடிந்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

Wednesday, August 14, 2013

நாங்களெல்லாம் யாரு??

வீட்டில் ஏர் டெல் அகலக்கட்டை இணையம் சுமார் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கியது, அப்போது கம்பில்லா சேவை அவ்வளவாக பிரபலம் இல்லாததால் வெறும் DSL modem கொடுத்திருந்தார்கள்.

Smart Phone வந்த பிறகு கைக்குள்ளேயே கணிணி பயண்பாட்டுக்கு வந்த பிறகு ஆளுக்கு  ஏற்ற மாதிரி பல வித  டேட்டா பிளான்கள் போட்டு பாக்கெட்டைஓட்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். என்னுடைய தேவை கொஞ்சம் என்பதாலும் வீட்டில் இருக்கும் தொலைப்பேசிகள் அவ்வளவுக்கும் டேட்டா பிளான் போட்டால் நிறைய இழக்க வேண்டி வரும் என்பதால் இப்போதிருக்கும் இணைப்பையே கைப்பேசிக்கும் உபயோகிக்க உண்டான வழிகளை தேடினேன்.

எல்லா வழிகளிலும் தேடியபிறகு, இருக்கும் மோடத்துடன் Wireless
Router இணைத்தால் காரியம் முடிந்துவிடும் போல் இருந்தது. வின்டோஸ் கணிணி என்றால் இறங்கிவிடலாம் ஆனால் என்னிடம் இருப்பது லினக்ஸ் அதுவும் மேம்பாடு செய்ய முடியாத நிலையில். இணையம் முழுவதும் தேடினேன் அதன் பிறகு குறைந்த விலையில் என்காவது கிடைக்குமா என்று தேடியதில் FB-Moore Market இல் போட்டிருப்பது தெரிந்தது.என்னுடைய தேவைக்கு ஏற்ற மோடத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டுக்கு வந்த மச்சினர் இங்கு கம்பியில்லா இணைய தொடர்பு இருக்கா என்றார்? அதற்கான மோடத்தை தேடும் கதையை அவரிடம் சொன்ன போது தன்னிடம் ஒரு பழைய Router இருப்பதாகவும் தேவை என்றால் கொடுக்கிறேன் என்றார்.ஆராய்சி செய்ய என்ன கஷ்டமா என்ன? கொடுங்கள் என்றார்.

வந்தது, தேவையான இணைப்புகளை கொடுத்த போது சமிக்கை விளக்குகள் சரியாக காண்பித்தன.சரி உயிர் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். ஏற்கனவே இருந்த செட்டிங்கில் மடிக்கணினியை இணைத்த போது வேலை செய்தது ஆனால் தொலைப்பேசியில் இணைய இணைப்பை Open என்று காண்பித்தது. இப்படி இருந்தால் யார் வேண்டுமென்றால் என்னுடைய இணைப்பு மூலம் இணையத்தில் உலா வரமுடியும். இதை நிவர்தி செய்ய கூகிளிடம் தேடி Router செட்டிங்கை மாற்ற போய் எல்லாம் குழப்படியாகி எதுவுமே சரியாக வேலை செய்யவில்லை. இரவு மணி 10.30 ஆகிவிட்டதால் அப்படியே மூடிவிட்டு தூங்க போய்விட்டேன்.

இன்று காலை மறுபடியும் அதோனோடு போராட ஆரம்பித்தேன்.இணையத்தில் சொல்லியிருந்த வழிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி தோல்வி கண்டுகொண்டிருந்தேன்.இவ்வேளையில் நாம் ஏன் ஏர்டெல் சேவைமைய அதிகாரியை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்ககூடாது என்று தோனியதில் 121 ஐ கூப்பிட்டேன். மவராசி எடுத்தாங்க,எனக்கு  தேவையான விபரங்களை கேட்டேன்  அவர்களுக்கு வேண்டிய விபரங்களையும் கொடுத்தேன்,கடைசியாக அவர்களிடம் நான் Linux யில் உள்ளேன் உங்களால் முடியுமா என்றேன். மோடம் கேபிளை கணிணியில் இணையுங்கள் அதன் பிறகு உங்களுக்கு தேவையான விபரங்களை சொல்லிவிட்டு பாட்டு போட்டு போய்விட்டார்கள். சில நிமிடங்கள் கழித்து பார்க்கும் போதும் பாட்டு தான் ஓடிக்கொண்டிருந்தது, இது வேலைக்கு ஆகாது என்று கூகிளில் வேறு மாதிரி தேடிய போது கீழே சொன்ன மாதிரி செய்தவுடன் எல்லாம் சரியாக வேலை செய்தது. இதில் முக்கியமானது மோடம் மற்றும் router கேபிளை LAN யில் இணைக்க வேண்டும்.இது தெரியாமல் ஒரு மணி நேரம் அவஸ்தைப்பட்டேன்.

 1. Connect PC directly to modem and open the config url.

2. Go to Advanced Setup>LAN, enter the DHCP start ip as 192.168.1.4 and end .100, save & reboot.

3. Connect PC directly to Wireless Router. Open the web-based setup page.

4. Under Setup>Internet, select Obtain IP automatically and leave the fields blank.

 5. Under Network Setup, enter the Router IP as 192.168.1.3, disable DHCP server and save settings.

6. Configure the Wireless settings (SSID and authentication) to your liking, save settings and reboot the router.

7. Connect the modem and router with the router end of the cable connected to one of the 4 LAN ports (NOT the INTERNET port).

8. Connect your PC's to the routers remaining 3 LAN ports and laptops via wifi and you should be good to go.

மோடம்/ router க்கு தேவையான Configuration ஐ http:// 192.168.1.1 or 3 யில்  பார்க்கலாம். 

   

Saturday, June 15, 2013

சும்மா இருக்க விடுதா?

நான் சில விஷயங்களை வராவிட்டால் அப்படியே விட்டு விடுவதில்லை,நடுவில் கொஞ்சம் இடைவெளிவிட்டு,தேடி பிறகு முயற்சி செய்யும் ஆள். சமீபத்தில் என் மண்டையை குடைந்த விஷயம் இந்த Reverse Tethering.
கைப்பேசியில் உள்ள இணைய இணைப்பை மடிக்கணினி அல்லது கணினியில் உபயோகித்தால் அதற்கு பெயர் Tethering. இந்த முறை ஒரு 8 வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டது இன்றும் சில இடங்களில் இப்படி உபயோகப்படுத்துகிறார்கள்.சென்னை மாதிரி பெரு நகரங்களில் பல இடங்களில் கம்பி வடமும்,கம்பியில்லா இணையமும் வந்துவிட்டதால் Tethering செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது.

என் வீட்டில் கம்பி வடம் மூலம் இணைய இணைப்பு மடிக்கணினிக்கு இருக்கு.கை தொலைப்பேசி மூலம் 3G/2G மூலம் உலாவினால் நம்முடைய உபயோகத்துக்கு ஏற்ப பணம் கழிக்கப்படும் இதோடில்லாமல் பல வித Packages உள்ளது.இப்படி செய்வது மூலம் நிறைய பணம் செலவாகும்.வீட்டில் இருக்கும் இணைய இணைப்புக்கு ஏற்கனவே பணம் கட்டுகிறோம் இருந்தும் அவர்கள் கொடுக்கும் அளவு எப்போதும் மீறுவதில்லை அப்படி இருக்கும் போது கைப்பேசிக்கும் தனியாக பணம் கட்டுவது அநியாயமாக தெரிந்தது அதுவும் இந்த நேரத்தில்.வீட்டு இணைய இணைப்பை எப்படி கைப்பேசியில் உபயோகப்படுத்துவது என்று பல நாட்கள் படித்தேன் சிலது புரிந்தது இருந்தாலும் ஏதோ Root செய்யனும் என்று சொல்லி அப்படி செய்தால் கைப்பேசியின் Warranty போய்விடும் என்றும் சொல்லியிருந்தார்கள்.சமீபத்தில் வாங்கிய கைப்பேசி என்பதால் கொஞ்ச நாள் இந்த யோஜனையை தள்ளிப்போட்டேன்.

Root என்று எதோசொன்னார்களே, அது என்ன என்று பார்த்துவிடலாம் என்று மேல்விபரங்களை தேடிய போது கைப்பேசியில் தேவையான கோப்பை வைத்து அதன் மூலம் கைப்பேசியை நம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய வழியை சொல்லியிருந்தார்கள். என்னுடைய சாம்சங் கேலக்ஸி க்கு தேவையான கோப்பை இறக்கி கைப்பேசிகுள் வைத்து அவர்கள் சொல்லியமாதிரியே செய்த போது, எல்லாம் சரியாக வந்தது.

USB Cable மூலம் கைப்பேசியை மடிக்கணினி மூலம் இணைத்தேன்.Mass Storage க்கு வேண்டிய ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவில்லை.கைப்பேசியில் USB Tunnel என்னும் அப்ளிகேஷனை இயக்க வேண்டும்.மடிக்கணினியில் Android Tool என்ற மென்பொருளை இயக்க வேண்டும். முதலில் Refresh செய்தால் சேர்ந்துள்ள கைப்பேசிகளின் எண் வரும் அதில் தேவையானதை தேர்ந்தெடுத்து Connect பட்டனை அழுத்தினால் எல்லாம் தயார்.

முதலில் உலாவி மூலம் இணையத்தை பார்க்க முடிந்தாலும் கூகிள் பிளே மூலம் எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்க முடியவில்லை இதற்கான காரணத்தை இரண்டு வாரமாக தேடினாலும் கிடைக்காமல் இன்று ஒரு பக்கத்தில் இதற்கான விடை கிடைத்தது ஆதாவது இந்த Reverse Tethering ஆரம்பிக்கும் முன்பு

Settings-----Wireless & Networks------Mobile Networks----Use Packet Data வை கிளிக் செய்துவிடவும் அதற்கு பிறகு reverse tethering ஐ ஆரம்பிக்கவும்.இப்படி செய்வதனால் கைப்பேசியில் உள்ள 3G/2G  இணைய இணைப்பு பயன் படுத்தப்படமாட்டாது.கிட்டத்தட்ட 30 MB க்கு 3 பைசா தான்.


 கூகிள் பிளேயில் யுடூபில் மேம்பாடு தரவிறக்கம்.

 யூடிபில் இளையராஜா பாடல்கள்- கைப்பேசியில் ஓட அதன் இறக்கம் கணினி இணையத்தில்
அடுத்து எதை யோசிப்பது என்று இப்போதே மூளை பிராண்ட ஆரம்பித்துவிட்டது. :-)

Saturday, February 23, 2013

தன் கையே தனக்கு உதவி (DIY)

சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெய்யில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.இந்த வருடம் சென்னையில் எனக்கு 3வது வருடம். போன இரண்டு வருடங்கள் எப்படி சமாளித்தனோ அதே போல் இந்த வருடமும் சமாளிக்க வேண்டும்.மின்சார வினியோகம் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

இப்போது நான் இருக்கும் வீடு மொட்டை மாடிக்கு அருகில் என்றாலும் சுற்றிலும் திறந்த இடைவெளியுடன் கூடிய மரங்கள் இருப்பதால் வெப்பம் அவ்வளவாக தெரியாது ஆனால் பெற்றோர்கள் இருக்கும் இடம் அப்படியே நேர் எதிர்.இடவாகோ அல்லது சிமிண்ட் சாலையோ தெரியாது,இரவில் வீட்டின் உள்ளே தகிக்கும்.மின் விசிறி ஓடினாலும் உள்ளே படுக்கமுடியாது.பல முறை சொல்லிச்சொல்லி இப்போது தான் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் ஏதாவது பயன் இருக்குமா என்று தெரியவில்லை.அழுத்தமில்லாத மின்சாரத்தை மும்முனையில் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? வினியோக பணம் குறைவாக வசூலிக்கப்போவதில்லை.சரி அந்த இடத்தை விட்டு வேறு இடம் போகலாம் என்றால் வங்கி,அஞ்சல் நிலைய கணக்கு,பொது வினியோக முறை மாற்று விலாசம்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஒரு பெரிய பிரச்சனை போன்ற எண்ணம் மூலம் தள்ளிப்போட்டுக் கொண்டு போனது.ஒரு நிலையில் இதெல்லாம் சரிபடாது அவர்கள் இருக்கும் இடத்தையே ஓரளவுக்கு குளுமைபடுத்தலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

முதலில் இந்த False Ceiling - இது வெப்பத்தை மாடியில் இருந்து கடத்தாமல் இருக்க போட்டது ஆனால் அதைவிட அது மின்விசிறி மூலம் எழுப்பும் சத்தம் வாசலில் யாராவது நின்று கதவை தட்டினால் காதில் விழாத அளவுக்கு இருந்தது.இதன் சத்தம் எங்கிருந்து வருகிறது அதன் காரணமும் பிடிபட்ட பின் அதை நிவர்த்தி செய்ய பல செய்முறைகளை யோசித்து வைத்திருந்தேன்.கடைசியாக மின்விறிக்கும் அந்த False Ceiling க்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகப்படுத்தினால் காற்று சுழற்சி நன்றாக இருக்கும் அதனால் காற்றால் வரும் அதிர்வு False Ceiling Frame ஐ பாதிக்காது என்று முடிவு செய்து அதோடு அதை நானே செய்துவிடலாம் என்று எண்ணினேன்.

மேலே சொன்ன வேலையை குத்தகைக்காரரிடம் கொடுத்திருக்கலாம்,நான் செலவு செய்ததை விட 10 மடங்காவது கூலி கேட்டிருப்பார் ஏனென்றால் சிறிய வேலை முதல் பல காரணங்கள் சொல்லப்படும்.போன நவம்பர் மாதம் வரை அலுவலக வேலை அதிகமாக இருந்ததால் எப்போது செய்யலாம் என்று யோசித்தே பார்க்கவில்லை. வெறும் 3 மணி நேரம் கொடுத்து நாளையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிய நிருவனத்துக்கு “மிக்க நன்றி” சொல்லிவிட்டு இந்த வேலையை ஆரம்பித்துவிட்டேன்.மகனை உதவிக்கு வைத்துக்கொண்டு மொத்த Frame ஐ இரண்டு நாட்களுக்குள் ஒரு 3 அங்குலம் உயர்த்திவிட்டேன் அதோடு மின்விசிறி சுற்றும் இடத்துக்கு பக்கத்தில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை நான்கு பக்கமும் வைத்து அதிராமல் பார்த்துக்கொண்டேன்.இப்போது முதலில் இருந்த சத்தம் இல்லை.

அடுத்து,வீட்டுக்குள் வெப்பம் வரும் வழி மேற்கு நோக்கி இருக்கும் ஒரு பக்க சுவர்.இரண்டு படுக்கை அறை,சமையல் அறை மற்றும் குளியலறை எல்லா அறைகளுக்கும் இச்சுவர் மூலம் வெப்பம் பரவுகிறது என்று நினைத்து அதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று பட்டியலிட்டேன் அதில் ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதற்கான வேலையில் இறங்கினேன்.

இது தான் மேற்கு பக்கம் பார்த்த சுவர்.மதியம் முதல் மாலை வரை வெய்யில் சூட்டை வாங்கி இரவு முழுவதும் வீட்டுக்குள் விடுகிறது.


கீழே உள்ள கைப்பிடி சுவரில் இந்த மாதிரி Anchor Bolt ஐ 10 MM dia Bolt ஐ நிறுவினேன்.இந்த போல்ட் ரூ 10/No.ஆனால் தரமானதாக தெரியவில்லை.இதற்கு பதிலாக ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஹூக் எவ்வளவோ தேவலை என்று நினைக்கிறேன்.இவ்வித போல்டுகளை 1 மீட்டர் இடைவெளியில் நிறுவிக்கொண்டேன்.அடுத்து Shade Net என்ற வலை பல கடைகளில் கிடைக்கிறது. 50x3 Meter, 50x5,50x6 என்ற பல அளவுகளில் கிடைக்கிறது.சென்னை சென்ரல் பக்கத்தில் இருக்கும் சாலையில் சுமார் 1 கி.மீ உள்ளே சென்றால் வால்டேக்ஸ் சாலையில் டார்பாலின் விற்கும் கடைகளில் கிடைக்கிறது.சில கடைகளில் மொத்தமாகத்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.முதல் தடவை வாங்கியதால் நான் கொடுத்தது தான் சரியான விலையா என்று தெரியவில்லை ஏனென்றால் சுமார் 30% சொன்ன விலையில் தள்ளுபடி செய்து கொடுத்தார்கள்.

இந்த வலை மெல்லியதாக இருப்பதால் தொங்கவிடும் போது கிழிந்துவிடும் அபாயம் இருக்கும் அதற்கு ஏற்றாற் போல் தொங்கவிடும் பகுதியை மடித்து அதனுள் கொடிகட்டும் கம்பியை நுழைத்தேன்.

எல்லாம் முடிந்த பிறகு வலையை வெளிப்பக்கம் தொங்கவிட்டேன்.இப்போது சுவர் முழுவதும் மதிய மாலை வெய்யிலில் இருந்து தப்பிக்க கூடும்.மே/ஜூன் மாதங்களில் இதன் பலன் தெரியக்கூடும்.செலவு விபரங்கள் கீழே கொடுத்துள்ளேன்.
வலை - 25x3 Meter - Rs 1500 (நான் உபயோகப்படுத்தியது இதில் பாதி தான்) போல்ட் -15x10 -       Rs 150
கொடிக் கயறு          Rs 60
மடிச்சு தைக்க-ஒயர் Rs 30
தொழிலாளர் கூலி எல்லாம் நானும் எங்கப்பாவும் பகிந்துகொண்டோம்.வண்டிச்சத்தம் இதில் அடங்கவில்லை. :-)
இந்த வலையில் 75%, 50% சூரிய வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் என்ற வகையில் கிடைக்கிறது, உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.

Thursday, January 31, 2013

இப்படியெல்லாம்.....ஹூம்!

யாகூ குழுமத்தில் ஒரு கேள்வி In my project , a 10 m Pier was constructed till Pier Cap properly. For Launching the girder(Pre-cast Girder) using  crane, they made a ramp by backfilling between the piers.After Backfilling the pier was tilted of an about 0.4m.Can anybody tell me the best solution for dis case.

இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் மேஸ்திரி கொண்டு வீடு கட்டும் நம் நாட்டில் இது சாத்தியமே.

Pier Design என்பது மேலிருந்து வரும் Load மற்றும் ஓரளவு பக்கவாட்டு அதிர்வை தாங்கக்கூடிய முறையில் வடிவமைத்திருப்பார்கள் ஆனால் மண் போட்டு அதை முட்டுக்காக உபயோகப்படுத்தியிருந்தால் அது அதை தாங்காது. மண் மேடு என்பது ஏதோ ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்தில் முடியக்கூடிய வேலையில்லை அப்படியென்றால் அந்த வேலை நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. 

Wednesday, January 30, 2013

தோட்டக்கலை வாரியம்

ஒன்னும் பெரிசா வேலை இல்லை என்னும் போது வீட்டு மாடியில் என்னென்ன பயிரிடலாம் அல்லது எப்படி மேம்படுத்தலாம் என்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருப்பேன் அல்லது பொதிகை மற்றும் மக்கள் தொலைக்காட்சி பார்பேன். ஒரு நாள் மக்கள் தொலைக்காட்சியில் ஒருவர் அவர் வீட்டு மாடியில் பயிர் வளர்ததையும் அதற்கு தேவையான விதைகளை அண்ணா நகரில் உள்ள தோட்டக்கலை வாரியத்தில் வாங்கியதாக சொன்னார்.அட! அண்ணா நகர் என்றால் பக்கத்தில் தானே என்று இணையத்தில் முகவரி எடுத்துக்கொண்டு கூகிள் எர்த் மூலம் இருப்பிடத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கிளம்பினேன். இணையத்தில் உள்ள முகவரிபடி சென்றால் அது வேறெங்கோ போனது பிறகு குறிப்பெடுத்து போன தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்விடத்தை அடைந்தேன்.

நான் போன போது அங்கு சுமார் 30 பேர் ஒரு அறையில் இருந்தார்கள்  அவர்களுக்கு ஒருவர் மண்வளம் மற்றும் பயிரிடும் முறை பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.விஜாரித்த போது இதே மாதிரி பல நிகழ்வுகளை  அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தது.விபரங்கள் அவர்கள் இணைய பக்கத்தில் உள்ளது.தொலைப்பேசி மூலமும் விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் சௌகரியத்துகாக கீழே படத்தில் அவர்கள் இருப்பிட முகவரியை கொடுத்துள்ளேன்.விதைகள் பற்றி கேட்டவுடன் பக்கத்தில் உள்ள ஒரு அறைய காட்டினார்கள்.ஓரமாக ஒரு இடத்தில் போட்டு வைத்திருந்த விதைகளை காட்டினார்கள் அதிலிருந்து எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டேன்.

இவ்விதைகளுக்கு Expiry Date உள்ளது அதனால் அதற்குள் உபயோகிக்க வேண்டும்.

அசல் விவசாயிக்கு வேண்டிய வேறு சில விபரங்கள் அட்டையின் பின் பக்கத்தில் போட்டுள்ளார்கள்.எனக்கெல்லாம் புரிபட இன்னும் சில காலம் ஆகலாம்.

Wednesday, January 16, 2013

ஒரு விபத்து நடக்க காத்திருக்கிறது.

ஓரிரவு எங்கள் குடியிருப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை காண் நேரிட்டது.சமீபத்தில் அதன் ஒரு பகுதியை மேலும் ஒரு Floor அதிகப்படுத்தியிருந்தது தெரிந்தது ஆனால் என் பார்வையோ கீழே உள்ள பீம் மீதும் அதன் முகப்பில் ஏற்பட்டிருந்த வெடிப்பும் மீதும் இருந்தது

Beam யில் அதுவும் அதை தாங்கும் தூணுக்கு அருகில் என்றாம் அது அபாயகரமானது.இரவு நேரம் என்பதால் என்னுடைய ஆராய்சியை பகலுக்கு ஒத்திப்போட்டேன்.மறு நாள் காலை பார்த்த போது அதன் வீரியம் தெரிந்தது.நிலமை மோசம் என்று புரிந்தது ஆனால் உடனடியாக அல்ல.

 மேலே உள்ள படத்தில் தூணுக்கும் பீமும் இணையும் இடத்தில் இருக்கும் 45 டிகிரி கோண வெடிப்பை பாருங்கள்.இவ்வெடிப்பு அக்கட்டிடத்தின் மேற்பகுதி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் போது ஏற்பட்டிருக்க கூடும்.நம்மூரில் இப்படி நீட்டிப்புக்கு அனுமதி பெற வேண்டும் அதெல்லாம் செய்தார்களா என்று தெரியவில்லை அப்படியே செய்திருந்தாலும் ஏற்கனவே இருந்த கட்டிடத்தில் உறுதித் தன்மையை சோதித்தார்களா என்று தெரியவில்லை.

வண்ண பூச்சு செய்தாத பகுதி தான் நீட்டிக்கப்பட்டது.

இதுமட்டுமல்ல சென்னையில் இப்படி பல கட்டிடங்கள் இப்படி யார் கண்காணிப்பும் இல்லாமல் நீட்டிக்கப்படுகின்றன.ஏதாவது ஒரு பெரிய விபத்து ஏற்பட்ட பிறகு அதைப் பற்றி சில நாட்கள் பேசிவிட்டு அதற்கடுத்த பிரச்சனையை ஓடிவிடுகிறோம்.

இந்த மோசமான நிலமையை பார்த்ததும் மனது கேட்காமல் பக்கத்து கட்டிடத்தின் நிர்வாகியிடம் போய் நிலமையை விவரித்து அவர்களுக்கு தெரிந்த கட்டுமான பொறியாளரை கேட்டு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்,செய்வார்களா என்று தெரியவில்லை.நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு தெரிந்த வரையில் அந்த ஓரத்தில் தாங்கும் தூண் இல்லை அதை போட்டுவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவன் விட்ட வழி.