Tuesday, September 01, 2015

கேரம்

பள்ளி நாட்களில் குடும்பத்துடன் விளையாடிய ஒரே விளையாட்டு இந்த கேரம் தான்.முகத்துக்கு போடும் பவுடர் தான் இந்த போர்டுக்கும் அதன் பிறகு தான் போரிக் பவுடர் எல்லாம் இருக்கு என்று தெரிந்தது.

இதிலும் பல வகையான விளையாட்டுக்கள் இருந்தாலும் கை கண்ட்ரோல் கிடைப்பதற்காக எங்களுக்கு அந்த காலத்தில் சொல்லிக்கொடுக்கப் பட்ட விளையாட்டு (படம் பார்க்க) இது.இதில் ஸ்டிரைக்கர் ஒரு காயின் மேல் மட்டுமே படலாம் அதற்கு தகுந்த மாதிரி எல்லா காயினையும் போடனும். நடுவில் இரண்டு காயின் மேல் பட்டுவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து ஆட வேண்டும்.



இப்படிப்பட்ட விளையாட்டை இன்றைய இளைய சமுதாயத்துக்கு சமீபத்தில் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன், இரண்டு காயினுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் எழுந்து போய்விட்டான். அவ்வளவு பொருமை பொறுமை.

Saturday, August 29, 2015

மென்பொருள் எப்படி இருக்க வேண்டும்?

இத்தனை நாட்கள் கணினியில் பெரிய குப்பை கொட்டாவிட்டாலும், மென்பொருளைப் பற்றிய ஆரம்ப அறிவை கொண்டு பார்க்கும் போது இந்த இந்திய வரி செலுத்தும் மென்பொருள் கூட பரவாயில்லை எனலாம். XML/Java என்ற இரு முகப்பு பக்கங்களை கொடுத்து அதன் மூலம் எளிதாகி இருக்கிறார்கள்.நம்மில் பெரும்பாலும் சம்பளம் மற்றும் அதற்கான Form 16 மூலம் செய்வோம்.இம்முறை வங்கி கணக்கெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.சரி, மறைக்க ஒன்றும் இல்லாதபட்சத்தில் கொடுப்பதில் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை.

இந்த வருடத்துக்கான சமர்பித்தலை செய்து முடித்த இரண்டு வாரங்களில் ஈமெயில் ஒரு காரணத்தை காட்டி அந்த தவறை சரி செய்யுவும் என்று சொல்லியிருந்தார்கள்.சரி என்று அவர்கள் சொன்ன தவறை சரி செய்து மறுபடியும் ஜாவா மூலம் அனைத்து விவரங்களையும் மறுபடியும் உள்ளிட்டு புதிய xml கோபை தயார் செய்துவைத்துக்கொண்டேன்.

தேவையான விபரங்களை கொடுத்துவிட்டு வருமான வரி இணையபக்கத்தில் நுழைந்த உடனே எச்சரிக்கை வரி பிளிங்  ஆகிக்கொண்டிருந்தது. வரிசைக்கிரமாக தேவையான உள்ளீடுகளை கொடுத்தவுடன் அடுத்த பக்கம் போனது அதில் நோட்டீஸ் வந்த விவரங்களை கொடுக்க வேண்டும்.இதில் தான் எனக்கு சந்தேகம். என்னுடைய Pan card , Capcha மற்றும் பிறந்த நாள் மூலம் நுழைய அனுமதித்தவுடன் எதற்காக அந்த நோட்டீஸ் தேதி மற்றும் பெற்றுக்கொண்ட தேதியை கட்டாயமாக்குகிறார்கள்? சரி கட்டாயமாக்கிவிட்டார்கள் அதாவது வேலை செய்கிறதா என்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் பிழை செய்தியோடு நின்றுவிடுகிறது.இதை அவர்களுடன் தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கும்சா முறையும் ஒத்துழைக்கவில்லை.

படம் பார்க்க.


இந்த Communication Date & Receipt Date, இதை கட்டாயமாக்கி என்ன சாதிக்கப்போகிறார்கள்? இவை இரண்டும் இல்லாவிட்டால் குடியா முழுகிப்போகிவிடும்.என்னுடைய கோப்பு தான் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்த பின்னும் தேதிகளின் மூலம் செக் செய்வது என்ன முறையோ?

மென்பொருள் தயாரிப்பில் இருக்கும் நண்பர்கள் விளக்கினால் இன்னும் புரிந்துகொள்வேன்.

Sunday, August 09, 2015

ஒழுங்கீனங்கள்.

எல்லா துறையில் இருக்கிற  மாதிரி கட்டுமானத்துறையிலும் ஒழுங்கீனங்கள் ஒரு பகுதியாகவே இருந்துகொண்டு வருகிறது. இதற்கான காரணங்கள் கல்லூரியில் சரியாக சொல்லிக்கொடுக்கவில்லையா அல்லது படிக்க ஆர்வம் இல்லாமல் ஏதோ ஒரு டிகிரி வாங்கிட துடிக்கும் மாணவர்களா அல்லது வேலையிடத்தில் சரியான தலைமையில்லையோ என்னவோ!ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு கொடி மரம் நிறுத்த ஒரு சின்ன அஸ்திவாரம் போட நேற்று தோன்றினார்கள், இன்று காலை தேவையான முட்டு எல்லாம் கொடுத்து மாலை 2 மணி போல் கான்கிரீட் போட்டார்கள்.இதுவரை அவ்வளவாக பிரச்சனையில்லை


முட்டுக்கு தேவையான சமாச்சாரங்களை பாருங்கள்.இரண்டு பக்கம் பிளைவுட்,ஒரு பக்கம் செங்கல்.அவ்வளவு தான். கான்கிரீட் போட ஒரு அரை மணி நேரம் ஆனது. மாலை 5 மணிக்கு ஏதேச்சையாக பார்த்த போது முட்டு எல்லாம் எடுத்துவிட்டு கான்கிரீட் அம்மணமாக  நின்றது. கான்கிரீட் போட்ட பிறகு இந்த முட்டெல்லாம் 24 மணி நேரத்துக்கு கை வைக்கக்கூடாது என்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் விதி. ஆமாம் அப்படி என்ன அவசரம், கான்கிரீட் போட்ட 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் முட்டு எடுப்பதில்?
காசு தான்.


ஆதாவது ஒரு செங்கல் விலை 5 ~ 6 ரூபாய்.கான்கிரீட் இறுகிவிட்டால் அதன் பிறகு அந்த செங்கல்லை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கான்கிரீட் இறுகுவதற்குள் எடுத்துவிட்டால் அதை வேறு எங்காவது உபயோகப்படுத்துவிடலாம். இது ஒரு சின்ன வேலை தானே அதனால் இது ஒன்றும் பெரிய விபத்தையோ தரத்தை பாதிக்காது என்று சொல்லலாம்.சின்ன சின்னத் துளி தான் பெருவெள்ளம்.இந்நிருவனத்தின் பொறியாளர் இதை தடுத்திருந்தால் வேலை செய்யும் தொழிலாளிக்கும் அதன் காரண காரியம் புரிந்திருக்கும் ஒரு சரியான அனுகு முறை அடுத்த நிலைக்கு கடத்தப்பட்டிருக்கும் but Gone.

சரி இது சின்ன வேலை தானே என்று மனதை சமாதப்படுத்திக்கொண்டிருக்கும் போதே சில வாரங்களுக்கு முன்பு குரோம்பேட்டை போக வேண்டியிருந்தது அப்போது ஒரு வீட்டு வேலை நடந்துகொண்டிருந்தது. சாலையின் ஒரு பக்கத்தில் ஜல்லி,மணல் மற்றும் சிமிண்டை போட்டு கலக்கி பரப்பி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கி போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படி போடுவது ஒரு கும்சா அளவுடன் போடப்படுவது (படம் கீழே.)



இப்படி போடுவது தான் பலங்காலமாக நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இது ஒரு சரியான முறையே அல்ல இப்படி போடும் கான்கிரீட் ஸ்ரெண்த் நிர்ணயிக்க முடியாதது. ஆண்டாண்டு காலம் வாழ உள்ள வீட்டை இப்படித்தான் சிறு நிலை ஒப்பந்தக்காரர்கள் கட்டுகிறார்கள் அதற்கு நாமும் கொட்டிக்கொடுக்கிறோம். மேலே உள்ள படத்தில் உள்ள தூண் கான்கிரீட் எப்படியுள்ளது என்று பாருங்கள்.இந்த வீட்டின் உரிமையாளர் “பாவம்”.

சிறிய நிலை ஒப்பந்தக்காரர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றார் ஓரளவு நல்ல நிலையில் உள்ள நிறுவனங்களில் உள்ள பொறியாளர்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தத்தையே வரவழைக்கும் முறையில் இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு கண்டேன்.தவறு தெரிய வந்தவுடன் உடனடியாக தேவையான ஏற்பாடுகளை செய்து சரி செய்ய உத்தரவிட்டேன்.

Column & Beam இரண்டும் சேரும் இடம் மிகவும் முக்கியமானது. வரை படத்தில் கொடுத்திருக்கிற மாதிரி செய்யாவிட்டால் பின்னாளில் பிரச்சனை உண்டாகக்கூடும்.



ஓரிடத்தில் தொடர் வீடுகளுக்காக அஸ்திவாரம், தூண் மற்றும் அதன் மீது உட்காரும் Beam என்ற முறையில் ஏற்பாடு. தூணின் கம்பி (4) அதன் மேல் உட்காரும் Beam யின் உள்ளே தேவையான அளவு இருக்கவேண்டும். ஆனால் அங்குள்ள பொறியாளர் வெறும் இரண்டு கம்பி மட்டுமே இருக்கிற மாதிரி வைத்து கான்கிரீட் போட்டுவிட்டார்கள்.இது ஒரு மோசமான முடிவு, பிறகு தேவையான அளவு தூணை உடைத்து,கம்பி கட்டி சரி செய்யச்சொல்லிவிட்டு வந்தேன். செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது ஏதோ ஓரிடம் ஏரிடம் என்று இல்லை பரவலாக காணப்படுவதே மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கு.




Friday, May 29, 2015

ஊஞ்சல்

வீட்டுக்கார அம்மணிக்கு இரண்டு ஆசை, அதில் ஒன்று தான் வீட்டுக்கு ஒரு ஊஞ்சல் மாட்டனும் என்று.முதல் வீடு 19 வருடத்துக்கு முன்பு கட்டியது என்பதால் கொக்கியெல்லாம் வைக்காமல் கட்டிவிட்டார்கள். அப்படியே கொக்கி  இருந்தாலும் ஊஞ்சல் போட்டா அவ்வளவு தான் வீட்டை அடைத்துவிடும்.

சரி இப்போது இருக்கும் வீட்டுக்காவது போடலாம் என்று பார்த்தால் எல்லாம் முடிவு எடுக்கும் முன்பே கூரை கான்கிரீட் முடிந்துவிட்டிருந்தது.கான்கிரீட் முடிந்தால் என்ன கட்டுமானத்துறையில் இருப்பவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன. இந்த மாதிரி சமயங்களில் ஓரிரு தொழிற்நுட்பங்கள் உள்ளன.எல்லாம் காசுக்கேற்ற பணியாரம் தான்.Parrys இல் போனல் ரூ 3500  - 4000 க்குள் கொக்கி போட்டு கொடுப்பார்கள்.சிறிய ஊஞ்சலுக்கு அந்த அளவுக்கு தேவையில்லை ஏனென்றால் மிஞ்சிப்போனால் 3 பேர் உட்காரக்கூடியது. 3x100 கிலோ அவ்வளவு தான்.

இதைப்பற்றி மச்சினரிடம் பேசிக்கொண்டிருந்த போது,அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை நானே ஆள் அனுப்பி போடச்சொல்கிறேன் என்றார்.நாள் குறித்து அன்று வந்தார்கள்.தேவையான உபகரணத்தோடு இரண்டு ஓட்டை போட்டு Anchor Bolt என்று சொல்லக்கூடிய போல்டை அடித்து ஏற்றி மறையை முடிக்கினார்கள்.

டிரில்லிங் செய்யும் முன்பு கூரையின் உள்ளே போட்டிருக்கும் கரண்ட் பைப்பை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.











ஊஞ்சலுக்கு பூண் ஏற்றுகிறார்கள்.


சுமார் 2 மணி நேரத்தில் ரெடி.

Sunday, February 08, 2015

செங்கல் ”கை வண்ணம்”.

ஜாக்கிரதை! இது கொஞ்சம் கட்டுமான தொழிற்நுட்ப பதிவு. :-)

சமீபத்தில் ஒரு கட்டுமான குடியிருப்பு பகுதிக்கு சென்றேன்.கடைசிக் கட்ட பணிகள் நடந்து வந்துகொண்டிருந்தது அதில் இந்த செங்கல் மாதிரியே பெயிண்ட் அடித்து கட்டிடத்துக்கு ஒரு அழகை கொடுத்திருந்தார்கள்.பல இடங்களில் பார்த்திருந்தாலும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதை அறிந்ததில்லை.

எந்த முகப்புக்கு இந்த மாதிரி ஒரு அமைப்பு கொடுக்கவேண்டுமோ அதில்  தேவையான இடைவெளியில் குறுக்கும் நெருக்குமாக பேப்பர் டேப்பை ஒட்டிவிடுகிறார்கள் அதன் பிறகு சுவர் முழுவதுக்குமாக Wall Putty ஐ அடிக்கிறார்கள்.தேவையான வண்ணத்தை கொடுத்தவுடன் அந்த பேப்பர் டேப்பை எடுத்துவிட்டு அதற்குரிய வண்ணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

கீழே உள்ள படங்களை பாருங்கள் தன்னால் புரியும்.










மைசூர் சுற்றுலா

மடிக்கேரி யில் இருந்து சரியாக காலை 7 மணிக்கு கிளம்பி காலை 10 மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தோம்.மைசூர் KSRTC க்கு சொந்தமான யாத்ரா நிவாஸில் ரூம் போட்டதால் அதற்கு ஏற்ப சரியான இடத்தில் இறங்கலாம் என்றால் பேருந்து ஓட்டுனர்/நடத்துனருக்கும் கேட்டதற்கு சரியாக தெரியவில்லை.பதில் சொல்லவே யோசிக்கிறார்கள்.சரி விடு நம்ம நேரம் என்று நினைத்து KSRTC முனையத்திலேயே இறங்கினோம்.ஆட்டோ மூலம் விடுதிக்கு வந்த போது காலை மணி 10.15. அறை காலியாக இருந்ததால் அப்போதே திறந்துவிட்டு விட்டார்கள். ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் உள்ளது ஆனால் மட்டமான பராமரிப்பு.அடுத்த தடவை இங்கு போகக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காலையே வந்துவிட்டோம் இரவு வரை நேரத்தை வீணடிக்க மனமில்லாமல் அங்கே இருந்த Tourist Centre இல் மதியம் மட்டும் பார்க்க ஏதாவது சுர்றுலா இடம் இருக்கா என்று கேட்டேன்.மைசூர் சிட்டி சுற்றுலா காலையில் தான் இருக்கு ஆனால் நீங்களாக வண்டி அமர்த்திக்கொண்டு செல்லலாம் என்றார் ஆனால் கேட்ட கூலி அதிகமாக இருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு மாற்று யோஜனையை கேட்டோம்.அவர் கொடுத்த ஆலோசனைப்படி இன்று மதியம் மேல்கோட் என்னும் இடத்துக்கு சென்று கோவில் தரிசனம் செய்வது மறு நாள் மைசூரை சுற்றிப்பார்பது என்பதை முடிவு செய்தோம்.

மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு சென்று “மேல்கோட்” செல்ல  வேண்டிய பேருந்தில் ஏறினோம். நேரடியாக செல்ல சில பேருந்து மட்டுமே இருப்பதால் ஓரிடத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் சென்றோம்.

இங்கு இரண்டு கோவில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. முதல் கோவில் மாலை 4 மணிக்கு திறக்கிறார்கள் அது முடிந்ததும் குன்றில் மேல் இருக்கும் நரசிம்மர் கோவில் 5.30 மணிக்கு திறந்ததும் அங்கும் சேவையை முடித்தோம்.திரும்ப மைசூர் வர பேருந்து கிடைப்பதில் சிரமம் இருக்கிறது வயதானவர்கள்/குழந்தைகள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.படங்கள் கீழே.




 நரசிம்மர் கோவில் குன்றின் மேல்


குன்றின் மேல் இருந்து மேல்கோட்


மறுநாள் முழுவதும் மைசூர் சிட்டி சுற்றுலா.

பார்த்த இடங்கள் விவரம் கீழே.
Chamundi Hills - Mysore Zoo - Mysore Palace Museum - Jaganmohana Palace - St.Philomena's Church - Sri Ranganatha Swamy Temple - Tippu's Summer Palace - Brindavan Gardens.

சொல்வது என்னவோ ஒருவருக்கு ரூ 210 ஆனால் நுழைவுக்கட்டணம் அது இது என்று மேலும் ஒரு 170 ரூபாய் கறந்துவிடுகிறார்கள்.

சாமுண்டேஸ்வரி கோவில் படங்கள் கீழே.




பிருந்தாவன் மிக மோசமான பராமரிப்புடன்.வெளிநாட்டில் இருக்கும்  மீயூசிகள் பவுண்டைன் பார்த்த பிறகு இதெல்லாம் ஒன்றும் இல்லை.இசைக்கும் தண்ணீர்க்கும் ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை.

மைசூர் முடித்தவுடன் மறுநாள் காலை கிளம்பி பெங்களூர் வந்து உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

ஆமாம் எல்லாம் சொல்லியாகிவிட்டது ஆனால் செலவு எவ்வளவு என்று சொல்லவில்லையே என்று பார்க்கிறீர்களா? அது கீழே. ஒருவருக்கு எவ்வளவு எனபதை கீழே உள்ள பணத்தை மூன்றால் வகுத்துக்கொள்ளவும்.தேவையில்லாதது என்னது என்றால் விமானப்பயணம் காசு தான்.


Friday, January 09, 2015

நிசகர்தாமா-திபெத் மோனாஸ்டரி

மடிக்கேரின் இரண்டாவது நாளில் முதல் பாதி தலைக்காவிரி பக்கம் சுற்றிய பிறகு மைசூர் பக்கம் இருக்கும் சில சுற்றுலா தளங்களை பார்க்க அப்படியே கிளம்பினோம்.

முதலில் போனது திபெத் மோன்ஸ்டரி,கிட்டத்தட்ட திபெத்க்கே வந்த மாதிரி இருக்கு.பெரிய ஹால் ஒன்றில் புத்தருடன் இன்னும் இருவர் அவர் பக்கம் உட்கார்ந்திருக்கார்கள்.வேறு சில அறைகளில் மந்திரானம் நடந்துகொண்டிருந்தது.நல்ல பராமரிப்புடன் சுத்தமாக வைத்திருக்கார்கள்.







இங்கு சுமார் 1 மணி நேரம் சுற்றிய பிறகு அங்கிருந்து கிளம்பி நிசகர்தாமா என்ற இடத்துக்கு போனோம்.சாலையில் இருந்து ஒரு தொங்கு பாலம் வழியாக காவிரியை தாண்டி ஒரு மணல் மேடு பகுதிக்கு போனோம்.படகு சவாரி,யானை சவாரி,கயிற்றில் தொங்கிக்கொண்டு பரணில் இருந்து கீழே வருவது போன்றவை இருந்தது.சிறுவர்கள் பொழுது போக்க சுமாரான இடம்.

இங்கிருந்து வெளியே வரவே மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் விடுதிக்கு செல்ல 6 மணியாகிவிடும் என்பதாலும் ஊர் சுற்றலை இத்தோடு முடித்துக்கொண்டோம்.வரும் வழியில் டிரைவருக்கு தெரிந்த கடை,விலை மலிவு என்று சொல்லி இறக்கிவிட்டார்,பல ஐட்டங்கள் சென்னையிலேயே சல்லிசாக கிடைப்பதால் வந்த வேளைக்காக ஒரு காப்பிப்பொடி பாக்கேட் மட்டும் வாங்கிக்கொண்டார் மனைவி.
மறுநாள் விடியற்காலை இங்கிருந்து மைசூருக்கு பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்ததால் வேறு எந்த வேலையையும் வைத்துக்கொள்ளமால் ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம்.

அடுத்த இடம் மைசூர்.

Tuesday, January 06, 2015

மடிக்கேரி -தலைக்காவேரி

மடிக்கேரியில் இரண்டாவது நாள். முதலிலேயே சொல்லியபடி ஓட்டுனர் காலை 8.30 மணிக்கு விடுதிக்கு வந்தார்.சிற்றுண்டிக்கு பக்கத்தில் உள்ள உணவகத்தில் முதல் நபராக முடித்தோம்.

மடிக்கேரியில் இருந்து சுமார் 1.30 மணி நேர பயணத்தில் மூன்று நதிகள் கலக்கும் சங்கமம் என்று கருதப்படும் திரிவேணி சங்கமம் சென்றடைந்தோம்.இரண்டு வாய்கால்கள் சேர்வதை மட்டுமே பார்க்கமுடியும்.மூன்றாவதாக உள்ளது நிலத்துக்கு அடியில் ஓடுவதாக ஐதீகம்.வடக்கில் உள்ள அதே ஐதீகத்தை இங்கு போட்டு அதை ஒரு சுற்றுலா இடமாக மாற்றிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.இங்கும் ஒரு கோவில் உள்ளது அதுவும் கேரள பாணியில் இருந்தது.

திரிவேணி சங்கமம்.




கேரள பாணியில் அமைந்துள்ள கோவில்.


இங்கு ஒரு 40 நிமிடம் செலவு செய்த பிறகு அங்கிருந்து ஒரு 30 நிமிடத்தில் தலைக்காவிரி சென்றடைந்தோம்.இரண்டு குளங்கள் உள்ளது.இதுவும் ஒரு ஐதீகம் தான்.நதி மூலம் பார்க்ககூடாது என்ற சொல்லாடல் பழைய கால பாடல்களில் வரும் அதனால் பலரும் நம்புவதை நாமும் ஏற்றுக்கொண்டு மேலே போவோம். இதற்கு அருகிலேயே சுமார் 300 படிகள் ஒரு மலை மீது போய்கொண்டிருக்கும்.முதலில் சுமார் 25 படி ஏறும் முன்பே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பிக்கும் அதையெல்லாம் கடந்தால்,மலை உச்சியில் அழகான காட்சிகள் காண கிடைக்கும்.நாங்கள் போன சமயம் சும்மா அட்டகாசமாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.அங்கு எடுத்த சில படங்கள் கீழே.

தலைக்காவேரி.






 ஏறி இறங்க மற்றும் சுற்றிப்பார்க்க 1.30 மணி நேரம் ஆனது.இங்கிருந்து திரும்பும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி டீ /காபி குடித்தோம்.அந்த கடைக்கு பின்புறம் சின்ன தோட்டம் வைத்துள்ளார்கள் அதில் காபி/அன்னாசி/சப்போட்டா/மிளகு என்று பல செடிகள் பயிரிட்டிருந்தார்கள். காபியில் இருவகை ரோபஸ்டா மற்றும் அரபி என்றும் மிளகு பயிரியில் இருந்து வரும் பணம் எஸ்டேடில் வேலை மற்றும் நிர்வாக செலவுக்கு சரியாகிவிடும் என்றும் காபி விற்பனை முழுவதும் லாபம் என்று ஓட்டுனர் சொன்னார்.

காபி பழம்



கொடி மிளகு.

காபிச்செடி


இது அனைத்தும் தலைக்காவிரி பக்கம் என்பதால் மதியம் வரை சுற்றிவிட்டு மதிய சாப்பாட்டுக்கு மடிக்கரி வந்து சேர்ந்தோம்.இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.