Sunday, August 09, 2015

ஒழுங்கீனங்கள்.

எல்லா துறையில் இருக்கிற  மாதிரி கட்டுமானத்துறையிலும் ஒழுங்கீனங்கள் ஒரு பகுதியாகவே இருந்துகொண்டு வருகிறது. இதற்கான காரணங்கள் கல்லூரியில் சரியாக சொல்லிக்கொடுக்கவில்லையா அல்லது படிக்க ஆர்வம் இல்லாமல் ஏதோ ஒரு டிகிரி வாங்கிட துடிக்கும் மாணவர்களா அல்லது வேலையிடத்தில் சரியான தலைமையில்லையோ என்னவோ!ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு கொடி மரம் நிறுத்த ஒரு சின்ன அஸ்திவாரம் போட நேற்று தோன்றினார்கள், இன்று காலை தேவையான முட்டு எல்லாம் கொடுத்து மாலை 2 மணி போல் கான்கிரீட் போட்டார்கள்.இதுவரை அவ்வளவாக பிரச்சனையில்லை


முட்டுக்கு தேவையான சமாச்சாரங்களை பாருங்கள்.இரண்டு பக்கம் பிளைவுட்,ஒரு பக்கம் செங்கல்.அவ்வளவு தான். கான்கிரீட் போட ஒரு அரை மணி நேரம் ஆனது. மாலை 5 மணிக்கு ஏதேச்சையாக பார்த்த போது முட்டு எல்லாம் எடுத்துவிட்டு கான்கிரீட் அம்மணமாக  நின்றது. கான்கிரீட் போட்ட பிறகு இந்த முட்டெல்லாம் 24 மணி நேரத்துக்கு கை வைக்கக்கூடாது என்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் விதி. ஆமாம் அப்படி என்ன அவசரம், கான்கிரீட் போட்ட 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் முட்டு எடுப்பதில்?
காசு தான்.


ஆதாவது ஒரு செங்கல் விலை 5 ~ 6 ரூபாய்.கான்கிரீட் இறுகிவிட்டால் அதன் பிறகு அந்த செங்கல்லை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கான்கிரீட் இறுகுவதற்குள் எடுத்துவிட்டால் அதை வேறு எங்காவது உபயோகப்படுத்துவிடலாம். இது ஒரு சின்ன வேலை தானே அதனால் இது ஒன்றும் பெரிய விபத்தையோ தரத்தை பாதிக்காது என்று சொல்லலாம்.சின்ன சின்னத் துளி தான் பெருவெள்ளம்.இந்நிருவனத்தின் பொறியாளர் இதை தடுத்திருந்தால் வேலை செய்யும் தொழிலாளிக்கும் அதன் காரண காரியம் புரிந்திருக்கும் ஒரு சரியான அனுகு முறை அடுத்த நிலைக்கு கடத்தப்பட்டிருக்கும் but Gone.

சரி இது சின்ன வேலை தானே என்று மனதை சமாதப்படுத்திக்கொண்டிருக்கும் போதே சில வாரங்களுக்கு முன்பு குரோம்பேட்டை போக வேண்டியிருந்தது அப்போது ஒரு வீட்டு வேலை நடந்துகொண்டிருந்தது. சாலையின் ஒரு பக்கத்தில் ஜல்லி,மணல் மற்றும் சிமிண்டை போட்டு கலக்கி பரப்பி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கி போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படி போடுவது ஒரு கும்சா அளவுடன் போடப்படுவது (படம் கீழே.)



இப்படி போடுவது தான் பலங்காலமாக நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இது ஒரு சரியான முறையே அல்ல இப்படி போடும் கான்கிரீட் ஸ்ரெண்த் நிர்ணயிக்க முடியாதது. ஆண்டாண்டு காலம் வாழ உள்ள வீட்டை இப்படித்தான் சிறு நிலை ஒப்பந்தக்காரர்கள் கட்டுகிறார்கள் அதற்கு நாமும் கொட்டிக்கொடுக்கிறோம். மேலே உள்ள படத்தில் உள்ள தூண் கான்கிரீட் எப்படியுள்ளது என்று பாருங்கள்.இந்த வீட்டின் உரிமையாளர் “பாவம்”.

சிறிய நிலை ஒப்பந்தக்காரர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றார் ஓரளவு நல்ல நிலையில் உள்ள நிறுவனங்களில் உள்ள பொறியாளர்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தத்தையே வரவழைக்கும் முறையில் இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு கண்டேன்.தவறு தெரிய வந்தவுடன் உடனடியாக தேவையான ஏற்பாடுகளை செய்து சரி செய்ய உத்தரவிட்டேன்.

Column & Beam இரண்டும் சேரும் இடம் மிகவும் முக்கியமானது. வரை படத்தில் கொடுத்திருக்கிற மாதிரி செய்யாவிட்டால் பின்னாளில் பிரச்சனை உண்டாகக்கூடும்.



ஓரிடத்தில் தொடர் வீடுகளுக்காக அஸ்திவாரம், தூண் மற்றும் அதன் மீது உட்காரும் Beam என்ற முறையில் ஏற்பாடு. தூணின் கம்பி (4) அதன் மேல் உட்காரும் Beam யின் உள்ளே தேவையான அளவு இருக்கவேண்டும். ஆனால் அங்குள்ள பொறியாளர் வெறும் இரண்டு கம்பி மட்டுமே இருக்கிற மாதிரி வைத்து கான்கிரீட் போட்டுவிட்டார்கள்.இது ஒரு மோசமான முடிவு, பிறகு தேவையான அளவு தூணை உடைத்து,கம்பி கட்டி சரி செய்யச்சொல்லிவிட்டு வந்தேன். செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது ஏதோ ஓரிடம் ஏரிடம் என்று இல்லை பரவலாக காணப்படுவதே மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கு.




3 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பயனுள்ள பதிவு

வெங்கட் நாகராஜ் said...

அனைத்திலும் அவசரம். தரத்தினை விட சம்பாதிப்பதே நோக்கமாகிவிட்டது வருத்தமான விஷயம்.

Anonymous said...

சார், நீங்கள் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். இணையத்தில் நிறைய குப்பைகள் நிரம்பி இருக்கும் இந்த காலத்தில் நீங்கள் தொழில் சார்ந்தும் சாரமலும் எழுதும் பல பதிவுகளுக்கு மிகுந்த மதிப்பிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக ஆக விரும்பும் எனக்கு இதிலிருந்து பல அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கிறது. நன்றி!