Saturday, March 28, 2009

வெப் கேமிரா உள்ளே என்ன இருக்கும்??

நேற்று என்ன செய்யவேண்டும் என்பதை வியாழன் அன்றே முடிவு செய்திருந்தேன்.கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடியோ கான்பரன்ஸில் என்னிடம் இருந்து போகும் வார்த்தைகள் மிக கால தாமதமாகவோ அல்லது விட்டு விட்டோ போய்கொண்டிருந்தது.ஒரு நாள் மட்டும் இத்தொல்லை என்றால் இணைய வேகத்தை காரணம் காட்டலாம் பல நாட்கள் என்பதால் கெமிராவை பிரித்து அதில் உள் உள்ள மைக்கில் ஏதாவது இணைப்பு விட்டிருக்குமா? என்று சோதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

காலை வேளை குழந்தைகள் தொந்தரவு இருக்காது என்பதால் பல் தேய்துவிட்டு கேமிராவை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போனேன்.கி.பி.2002யில் 220 சிங்கை வெள்ளி கொடுத்து வாங்கிய வெப்/டிசிட்டல் கேமிரா அது அதற்குள் அதன் பிளாஸ்டிக் பாகங்கள் தன்னாலேயே உடைந்து விழ ஆரம்பித்திருந்தது.இதில் இருக்கும் கேமிராவும் மைக்கும் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதால் அதை தூக்கிப்போட மனது வராமல் அதிலிருக்கும் சின்னச்சின்ன குறைகளை களைந்து அதை வெறும் வெப் கேமிராகவாக மட்டும் உபயோகித்து வருகிறேன்.

பல ஸ்குரூக்களை இணைக்கும் பிளாஸ்டிக்குகள் உடைந்து விட்டிருந்தன அதனால் முழு கேமிராவும் 50% ஸ்குரூவில் மட்டுமே நின்றது.

முதலில் முகப்பை பிரித்த போது இப்படி....



பின் பக்கம் கொஞ்சம் கிட்டத்தில் பார்த்தால்....





அந்த சில்லுவின் மேல் உள்ள விபரங்கள் மிக முக்கியமானவை.உங்கள் கேமிரா லினக்ஸில் வேலை செய்யவில்லை என்றால் இந்த விபரங்களை அதற்கு தேவையான விபரங்களை கொண்டு அறியலாம்.இன்னும் இந்த கேமிராவை லினக்ஸில் என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை என்பது சோகமான விஷயம்.

கேமிராவிம் முன் பின் கழற்றிய பிறகு



எல்லாம் கழற்றிய பிறகு அதன் பணி விபரங்கள் ஓரளவு புரிந்தது.தேவையான அனைத்து வயர்களும் அதன் நிலையில் சரியாக இருந்தது இதிலிருந்து என்னுடைய குரல் உடைந்து அந்த பக்கத்துக்கு போன காரணம் இணைய இணைப்பு/வேகம் என்பது புரிந்தது.

எல்லா வற்றையும் திரும்ப இணைத்து இன்று பேசியபோது அனைத்தும் ஓரளவு சரியாக இருந்தது.

Tuesday, March 24, 2009

காதில் சத்தமா?

இந்த பக்கத்தை படிக்கும் போது கிடைத்த சில விபரங்கள் நம்மூர் மக்களுக்காக.

சிலருக்கு வெளியில் இருந்து சத்தம் வராமல் இருக்கும் போதே காதில் மணியோசை,குழந்தை அழுவது என்று பல வகை சத்தங்கள் கேட்கும் இதற்கு ஆங்கிலத்தில் Tinnitus என்று சொல்கிறார்கள்.இப்படிப்பட்ட பிரச்சனையை அமெரிக்கர்களில் மட்டும் 40 லட்சம் மக்கள் எதிர்கொள்கிறார்களாம்.இதற்கு பல வித காரணங்கள் இருந்தாலும் மிக அதிகமான சத்தங்களுக்கிடையே வேலை செய்பவர்களும்,Ear Phone மூலம் அதிக சத்தத்துடன் பாடல்களை வெகு நேரம் கேட்பது போன்றவைகள் மூலமே அதிகமாக பாதிக்கப்படுகிறதாம்,இதைத்தான் Noice Induced Hearing Loss என்று சொல்கிறார்கள்.

ஒரு அளவுக்கு மேல் சத்தம் அதிகமாகும் போது காதில் உள்ள நரம்புமண்டல் செல்கள் தங்கள் உயிரை இழந்துவிடுகிறதாம்.மிக முக்கியமாக இவை ஒரு முறை பாதிக்கப்பட்டால் அவ்வளவு தான் திரும்ப பிழைப்பதில்லை இதனால் கேட்கும் திறன் அவரவர் அளவுக்கு பாதிக்கப்படும்.

கீழே உள்ள நகர்படத்தை பார்க்கவும்.



நம்மூரில் ஹாரன் (தேவையில்லாமல்) அடிப்பவர்கள்,சினிமா தியேட்டரில் அதிக அளவு சத்தத்துடன் படம் பார்பவர்கள் மற்றும் வீட்டு தொலைக்காட்சியில் 4 வீடு தள்ளியிருப்பவர்கள் கூட கேட்கும் படி வால்யூம் வைத்து அழுவாச்சி சீரியலை பார்பவர்களே வெகுவாக பாதிக்கப்பட போகிறார்கள்.இது முழுமையான பட்டியல் கிடையாது இன்னும் இருக்கும்.

போனால் திரும்பாத ஒன்றை அனாவசியமாக இழக்காதீர்கள்.இது யாரையும் அதைரியப்படுத்த அல்ல நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட அலைவரிசை காதில் விழாமல் தான் இருக்குமாம்

காது பற்றிய இதை நமது பதிவர் டாக்டர் புரூனோ எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன்.

ஒரு முறை ஹாய் நலமா பதிவில் மருத்துவர் சொல்லியுள்ள கருத்துக்களை பாருங்கள்.

Sunday, March 22, 2009

ஜுமைரா கடற்கரை பூங்கா.

போன வெள்ளிக்கு முதல் வெள்ளி இங்கு போகனும் என்று தவறுதலான பேருந்தில் ஏறியது போய் வந்த பிறகு தான் புரிந்தது ஆதாவது C10 பதிலாக 10 ம் எண் பேருந்தை எடுத்திருந்தேன்.

இம்முறை அதன் வழித்தடத்தை நன்றாக ஞாபகம் வைத்து யோசித்த போது நான் இருக்கும் இடத்தில் இருந்து அந்த பேருந்து பிடிக்க இரண்டு பேருந்து மாறவேண்டி வந்தது.எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் 2 திராம் தானே என்பதால் வீட்டில் இருந்து பேருந்து பிடித்து சிட்டி சென்டர் வந்தேன்.மதிய வேலை என்பதால் வெய்யில் கொஞ்சம் கடுமையாக இருந்தது.வீட்டை விட்டு வெளியேறும் போதே தலைக்கு தொப்பியும் கண்ணுக்கு கண்ணாடியும் எடுத்து வந்ததால் பிரச்சனையில்லாமல் இருந்தது.இந்த பேருந்து நிறுத்ததில் நிழற்குடை இன்னும் பொருத்தவில்லை அல்லது இடம் இல்லையோ என்னவோ?

இரு வழி பேருந்தும் ஒரே இடத்தில் வருவதால் பேருந்து ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி பார்த்து நிறுத்த கையை ஆட்டவேண்டும் இல்லாவிட்டால் மற்றொரு பேருந்துக்காக நிற்கவேண்டி வரும்.இம்முறை அதிக நேரம் காக்க வைக்காமல் பேருந்து வந்தது.என்னையும் சேர்த்து மொத்தமாக 4 பேர் தான் இருந்தோம்.புதிய சேவை போலும் இன்னும் பலருக்கு தெரியவில்லையோ என்னவோ!

சுமார் 40 நிமிடங்கள் பயணம்,இடையில் மேலும் 3 பேர் இறங்கிட கடைசி நிறுத்தம் வரை நான் ஒரே ஆள் தனியாக பயணம் செய்தேன்.ஜுமைராவில் பல வீடுகள் தனிவீடு என்ற மாதிரியில் இருக்கிறது, ஒரு பக்கம் கடற்கரை அதை சென்றடைய ஒரு சில சாலைகளே திறந்துவைக்கப்பட்டுள்ளது.இங்கு தான் துபாய் மிருகக்காட்சியும் இருக்கிறது.மிகவும் சிறியது என்று கேள்விப்பட்டிருக்கேன்,போய் பார்க்கவில்லை.

கடைசி நிறுத்தத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் இந்த பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் 5 திராம் செலுத்த வேண்டும்.


சிங்கையில் இந்த மாதிரி அறிவுப்பு பலகைகள் இருக்கும் என்று பார்த்தால் இங்கும் செய்யக்கூடாதையெல்லாம் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.மிக முக்கியமாக கேமிராவில் படம் பிடிக்கக்கூடாதாம்! என்ன கொடுமை பாருங்க.குடும்பத்துடன்/நண்பர்களுடன் ஜாலியாக போகும் கடற்கரையில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது எனக்கு அபத்தமாகப்பட்டது.



நுழைவுப்பகுதியில் Amphitheature மாதிரி அமைப்புடன் பல்வெளி பரப்பி அசத்தியிருக்கிறார்கள்.அதை கடந்தவுடன் தான் புதிய உலகம் திறக்கிறது.Bay Watch பார்த்திருக்கிறீர்களா? அதே அமைப்புடன் அலையில்லாத கடலுடன் கடற்கரை.கூச்சமில்லாத பிகினி உடையுடன் பெண்கள்.இங்குள்ள கடலில் இயற்கையான அலை என்பதே இல்லை அவ்வப்போது போகும் மோட்டர் போட் மற்றும் சிறிய கலங்கள் மூலம் அலை எழும்புகிறது.



சரி,படம் பிடிக்கக்கூடாது என்று போட்டிருக்கிறார்களே வீணான வம்பில் எதுக்கு மாட்டிக்கனும் என்று கேமிராவை தூக்கி கால்சராய்குள் போட்டு கடல் பக்கம் நடந்தேன்.கண்காணிப்பு கோபுரத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கடற்கரையை கண்கானித்துக்கொண்டிருந்தார்கள்.நான் அவ்வழியாக போவதை பார்த்து என்னிடம் சிறிய கால்சராய் தான் போட்டு போகனும் என்று அப்பெண் தன் கால்சராயை காண்பித்தார்.இதென்னடா புது கதையாக இருக்கு! என்ற எண்ணத்துடன் அவருக்கு தலையாட்டிவிட்டு கடலுக்கு எதிர்புறத்தில் உட்கார இருக்கும் இடத்தில் உட்கார்ந்தேன்.அப்படி உட்கார்ந்திருக்கும் நேரத்திலும் யாராவது பேண்ட் போட்டு போகிறார்களா? கேமிராவில் படம் எடுக்கிறார்களா? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.பலர் செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு அப்படியே காலாற கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாலிபால்,பெரிய மேஜை பந்து Roquet ம் டென்னிஸ் பாலுமாக ஒரு புதிய விளையாட்டை காணமுடிந்தது.மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் குழந்தைகள்,மணல் வீடு கட்டும் சிறுவர்கள்,கோட்டையே கட்டும் (இந்தோனேஷியர்/தாய்லாந்து காரரா?)இளைஞர்,கடல் அலை கனுக்காலை மட்டுமே நனைக்கட்டும் என்று உட்கார்ந்து குளிக்கும் தமிழ் நங்கையர்கள் என்று பல வித மக்கள் தங்கள் விடுமுறையை குதூகலமாக கொண்டாடுவதை காணமுடிந்தது.இதற்கிடையில் ஒருவர் தன் வீடியோ கேமிராவை வைத்து தன் குழந்தைகள் கடலின் உள் விளையாடுவதை படம்பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் எனக்கிருந்த பயம் கொஞ்சம் அகன்றது அதன் பிறகு எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக.பிறரை பிரத்யோகமாகவோ அல்லது Exposed ஆக காட்டாதது வரை OK போலும்.









மொத்த (கடற்கரை)நீளத்தையும் தடுப்பு கட்டி பிரித்துவைத்திருக்கிறார்கள்.மேற்பார்வையிட வசதியாக இருப்பதற்காக என்று எண்ணுகிறேன்.மேற்கு பகுதியில் உலகின் ஏழாம் நட்சத்திர தகுதியுடன் உள்ள விடுதி தூசி மூட்டத்தினால் மங்கலாக தெரிந்தது.படம் எடுத்தாலும் சரியாக விழாது என்பதால் எடுக்கவில்லை.அங்கு தான் படகின் மூலம் மேலே பறக்கக்கூடிய விளையாட்டு நடப்பது போல் பல பலூன்கள் தென்பட்டன.



அமெரிக்கர்கள் விளையாடிய இருவர் கொண்ட அணி வாலிபாலை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அப்படியே கரையோரமாகவே அடுத்த தடுப்பு வரை சென்றேன். மாலை மணி 5 மணி நெருங்கியதும் வீட்டுக்கு போக ஆகும் நேரத்தை கணக்கிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்து வெளியே வரும் வழியாக வந்த ஒரு இடத்தில் அப்பாவும் மகனும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.தாகமாக இருந்ததால் வாங்கிய அன்னாசி பழச்சாறு குளுமை அதிகமாக இருந்ததால் அது போகும் வரை மெதுவாக குடித்துக்கொண்டும் ஆட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.சாறு குடித்து முடிந்ததும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்ததால் அவர்களிடம் போய் நானும் பந்து போடுகிறேன் என்று போட்டு துடுப்பாட்டமும் ஆடிவிட்டு வந்தேன்.

இந்த வெள்ளி ஓரளவு நல்ல மாதிரி போனதில் சற்று சந்தோஷம்.

துபாயில் இனி எங்கு வெளிப்புற படம் எடுத்தாலும் இந்த அதி உயரக்கட்டிடம் விழாமல் இருக்காது போல் இருக்கு.

Wednesday, March 18, 2009

பேரீட்சை மர குருத்து.

தென்னங்குருத்து தெரியும்,

பனம்பாளை தெரியும்,

பேரீட்சை மர குருத்து பார்த்திருக்கீங்களா?இந்த மாதத்தில் இருந்து குருத்து விட ஆரம்பித்துள்ளது.

வாங்க பார்ப்போம்.நான் சுற்றித்திரியும் முத்தினா பூங்காவில் எடுத்தது.

பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.





முத்தினா பூங்காவின் ஒரு பகுதி



வேறு ஒரு சாலையின் ஓரத்தில் நடப்பட்டிருக்கும் பேரீட்சை மரங்கள்.

Tuesday, March 17, 2009

தண்ணீர் கசிவை தடுக்க.

உலகமெங்கும் நிதி நிலவரம் மோசமாக போய்கொண்டிருக்கும் வேளையில் இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழப்பு அதன் பிறகு பிறந்த தேசத்துக்கே போகவேண்டிய சூழ்நிலை என்ற இறுக்கமான சூழ்நிலை இருந்தாலும் அங்கங்கு சில வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

போன வாரம் வழக்கமாக வீட்டுக்கு நடந்து போகும் வழியை தேர்ந்தெடுக்காமல் வேறு வழியில் போன போது இந்த கட்டுமான வேலை கண்ணில் பட்டது.என்னடா! ஏதோ கருப்பாக இருக்கே என்று எட்டிப்பார்த்த போது அஸ்திவாரத்துக்கு கீழே இருந்து தண்ணீர் ஊற்றெடுக்காமல் இருக்க இந்த மாதிரி தார் அட்டைகளை போட்டு அதன் மீது தாரை உற்றி ஒரு கார்ப்பெட்டே போடுகிறார்கள்.அனேகமாக இதன் மீது மெல்லிய கான்கிரீட் போட்டு அதன் பிறகு அதன் மேல் கம்பி கட்டி அஸ்திவார ஸிலாப் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

என்ன தான் பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் கீழே போகும் போது பக்கத்தில் உள்ள கடல் நீர் தன் வழியை தேடி மேலே வர முயற்சிக்கும்,அதை தடுக்கவே இம்முறை.

பிட்டுமன் அட்டைகள்



தார் உருளைகள்




11 நாட்களில் கண்ட முன்னேற்றம்.




பக்கத்திலேயே இன்னொரு வேலையும் ஆரம்பிக்கிறது.. நம்பிக்கையும் வருகிறது.


Monday, March 16, 2009

கட்டிடத்துக்கு சட்டை.

இந்த Cladding என்று சொல்லப்படுகிற முறை எனக்கு தெரிந்து 1990 வரை அவ்வளவாக பிரபல்யமடையவில்லை அதுவும் இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு அவ்வளவாக இல்லை.அதற்கு காரணமும் இருந்தது.

1995யில் சிங்கை வந்ததும் இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களும் சட்டை போட்டிருந்ததும் பிரம்மிப்பாக இருந்தது.முதலில் இதை பார்த்ததும் சும்மா அழகுக்காகத் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.பல கட்டிடங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த போது இதன் தொழிற்நுட்பமும் இதனால் ஏற்படும் விளைவுகளும் புரிந்தது.

அதிக உயரமான கட்டிடங்கள் அதுவும் குளீரட்டப்பட்ட நிலையில் இருக்கும் கட்டிடங்கள் வெளி வெப்பத்தினால் Centralised Air Conditioning System அதிகமாக உழைக்கவேண்டி வந்தது அதனால் மின்சார பயனீடு அதிகமானது.கட்டிடத்தின் சூடு வெளி வெப்பம் மூலம் அதிகமாகமல் இருக்க அதே சமயத்தில் உள்ளுக்குள் இருக்கும் குளிர்/சூடு வெளியில் போகாமல் தடுக்கவும் இம்முறை மிகப்பெரிய பலனை கொடுத்ததால் உலகமெங்கும் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.அந்த பயன்பாடு மட்டுமில்லாமல் கட்டிடத்துக்கு ஒரு அழகையும் கொடுக்க அதையே மெறுகேற்றி நமக்கு படம் காட்ட ஆரம்பித்தார்கள்.இதை தூசி துடைப்பது எளிது அத்துடன் இது இருக்கும் இடத்தில் ஒரு செங்கல் சுவர் கட்டவேண்டும் என்றால் கால அவகாசம் வேண்டும் அத்தோடு செலவும் அதிகமாகும்.செங்கல் சுவரின் எடையை கணக்கில் எடுத்தால் இதன் எடை மிகவும் குறைவு இதனால் கட்டிடத்தின் மொத்த எடையும் குறையும்.

இந்த முறையை சுலபமாக எப்படி செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள இரு படங்களை பார்த்துதெரிந்துகொள்ளலாம்.நுட்பமான விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கேன்.இதில் இவர்கள் செய்யும் முறை அவ்வளவு பாதுகாப்பாக தெரியவில்லை.



சற்று முன் எடுத்தது.



இப்படி செய்கின்ற Cladding க்கு சோதனை முறைகள் இருக்கு.

Pressure Test

Water Test என்று பல.

Sunday, March 15, 2009

103" தொலைக்காட்சி

சில நாட்களுக்கு முன்பு நம்பதிவர் ஒருவர் எல் சி டி தொலைக்காட்சி பற்றி எழுதியிருந்தார் அதில் எனக்கு நினைவிருந்த வரை 62" வரை சொல்லியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள Fish Round about க்கு பக்கத்தில் உள்ள ஒரு கடையில் 103" க்கு ஒரு தொலைக்காட்சி வைத்திருந்தார்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது அருமையாக இருந்தது.



இத்தொலைக்காட்சி வீட்டு உபயோகத்து சரிப்பட்டு வரும் என்று தோனவில்லை.உபயோகப்படுத்திதான் ஆகவேண்டும் என்றால் இதற்காகவே தனியாக ஒரு பெரிய வரவேற்பறை கட்டவேண்டி வரும்.

Saturday, March 14, 2009

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்

முதல் நாள் இரவு தூங்க 12 மணி ஆனது,காது அடைப்பானுக்கும் பெப்பே காண்பித்தது சூழ்நிலை.வேறு வழியில்லாமல் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலை முழிப்பு வந்தபோது மணி 6.30.பெற்றோருக்கு தொலைப்பேசிக்கு முயற்சித்தேன் மணி அடித்துக்கொண்டிருந்தது ஆனால் யாரும் எடுக்கவில்லை.கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது அவர்கள் ஒரு விழாவுக்கு சென்றிருக்ககூடும் என்று.

காலை 7 மணிக்கு எழுந்து குளித்து கணினியில் “தெய்வத்தின் குரல்” படித்துவிட்டு UFO பற்றிய தொடர் ஒன்று பாக்கியிருந்ததையும் அதன் பிறகு அனிமேஷன் படம் பார்த்து முடிக்கும் போது கிட்டத்தட்ட 10 மணியாகிவிட்டிருந்தது.வெளியில் போய் 2 கேக் மற்றும் ஒரு தேநீர் குடித்துவிட்டு அப்படியே நடையை கட்டினேன்.



எப்போதும் கிரிக்கெட் ஆட்டக்காரர் பலர் இத்திடலை ஆக்கிரம்மித்திருப்பார்கள் ஆனால் இன்று யாருமே தென்படவில்லை.தடைசெய்திருப்பார்களா அல்லது பலர் ஊருக்கு திரும்ப அனுப்பப்பட்டிருப்பார்களோ! என்ற சந்தேகமும் வந்தது.அப்படியே சிறிது தூரம் வந்து முத்தினா பார்க்கில் சற்று உடகார்ந்து தூங்கிவிட்டு 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பினேன்.

12 மணியில் இருந்து 1.15 வரை கணினியில் குடைந்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு பக்கத்தில் உள்ள ஆனந்த பவன் போய் “தாலி” என்று சொல்லப்படுகிற சாப்பாட்டை கொண்டுவரச்சொல்லினேன். பக்கத்தில் உள்ள நண்பர்கள் சாம்பாரை தேங்காய் எண்ணெய்யில் தாளிப்பதால் நன்றாக இல்லை என்றும் பருப்பில் நெய் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லி பல விபரங்களை தெரியவைத்தார்.சாப்பாட்டுக்கு 12 திராம் கொடுத்துவிட்டு பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

போன வாரம் இரவு நடை போய்கொண்டிருக்கும் போது தற்செயலாக தடம் எண் 10 ஐ பார்த்தேன், அது Jumeira Beach Park போவதாக போட்டிருந்தது.ஆச்சரியத்துடம் வருகிற வெள்ளிக்கு அதை முயற்சிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.எதற்கும் உறுதி செய்துகொள்ளலாம் என்று இணையத்தில் உள்ள அவர்கள் பக்கத்துக்கு போய் பார்த்து உறுதிசெய்துகொண்டேன்.

Muragabat Police Station க்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கலாம் என்று போகும் போது 10ம் எண் பேருந்து என்னை கடந்து போனது.அடுத்த பேருந்துக்காக இன்னும் எவ்வளவு நேரம் நிற்கப்போகிறமோ என்ற நினைப்புடனே அங்கு சென்றேன்.நல்ல வேளையாக அடுத்த 10 நிமிடங்களில் வந்தது.வந்த பேருந்து Double Decker புதியது, அருமையாக இருந்தது உள் அமைப்புகள்.



மணிக்கூண்டு சுற்று வழிச்சாலை உட்பட் பல இடங்களை கடந்து முக்கியமாக துபாயின் பிரசித்தி பெற்ற சாலைகளில் ஒன்றான Sheik Zayed சாலை வழியாக சென்று Al Quoz என்ற இடத்துக்கு வந்தது.Sheik Zayed சாலையை கடக்கும் போது சாலையின் மறுபக்கத்தில் பல கட்டிடங்கள் பேருந்து உள்ளிருந்து பார்க்க முடியாத உயரத்துக்கு இருந்தது.உடனடியாக படம் பிடிக்கவோ, நகர் படம் எடுக்க தோனவில்லை.சில கட்டிடங்கள் மட்டும் பார்வைக்கு கீழே.



Al Quoz யில் தான் பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கவைக்கப்படிருக்கிறார்கள்.இதன் உள் அமைப்பு எவ்வாறு என்பதால் மேல் விபரங்கள் சொல்லமுடியவில்லை.ஊழியர்கள் தங்கும் விடுதியின் ஒரு பகுதி கீழே.




பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் இது Bur Dubai போகுமா? என்றார்.”தெரியவில்லை” ஆனால் நான் Jemeria Beach Park போகிறேன் என்றார்.இப்பேருந்துக்கு இது தான் கடைசி நிறுத்தம் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.என்னடா! இது புதுக்குழப்பம் என்று நினைத்து வேறு ஒருவரிடம் கேட்ட போது அவரும் ஆமாம் என்றார்.இது Cut Service போலும்.கீழே இறங்கி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.சிறிது தூரத்திலேயே Grand Shopping Mall ஒன்று கண்ணில் பட்டது,அதனுள் நுழைந்து சுற்றி பார்க்க ஆரம்பித்தேன்.துணி மற்றும் பல மின்னியல் சாதனங்கள் விலை மலிவாகபட்டது.தொழிலாளர்கள் பெரும்பாலாக இருப்பதால் என்னவோ விலை மலிவாக வைக்கப்பட்டுள்ளதா அல்லது தரத்தில் குறைவாக இருக்குமோ என்று தெரியவில்லை.நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இவ்வளவு தயாள குணமா! என்று ஆச்சரியப்படும் நேரத்தில் பணம் அனுப்பும் சேவைகள் உள்ள இடத்துக்குள் நுழைந்தேன்.Money Exchange சேவை செய்யும் இடங்களுக்குள் நுழையும் போது அன்று சிஙகப்பூர் வெள்ளியின் மதிப்பு என்ன என்று மதிப்பீடு செய்வது வழக்கம் இன்றும் அந்த மாதிரி பார்க்கும் போது இந்த நிறுவனத்தின் பட்டுவாட விகிதம் வாங்க 2 என்றும் விற்க 3 என்றும் போட்டிருந்தார்கள்.சந்தையில் சிங்கை வெள்ளியின் மதிப்பு வாங்க 2.35,பகல் கொள்ளையாக இல்ல?இந்திய ரூபாயை மதிப்பீடு செய்யவில்லை,ஒருவேளை பல தொழிலாளர்களுக்கு தேவைப்படும் பணம் மாற்றுவிகிதம் சரியாக இருக்குமோ என்னவோ!






வாங்க ஒன்றும் இல்லாததால் அப்படியே வெறும் கையோடு வெளியேரும் சமயத்தில் சிறு நீர் கழிக்கலாம் என்று கழிப்பறை பக்கம் போனேன்.சில கழிப்பறைகளில் பல வித Acrobatics ஐ பார்க்கலாம்,ஒரு காலை அப்படியே கை கழுவும் பேசினில் உள்ளே வைத்து கழுவுவார்கள்.ஒரு தடவை பிரபலமான கடை தொகுதியில் பார்த்து அசந்துவிட்டேன்.இதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.சிறு நீர் கழிக்கும் இடத்தின் முன்,பேசினுக்கு முன்பு சுமார் 3 அங்குல விட்டத்தில் தண்ணீர் வெளியேற்ற ஒரு பொத்தான் இருந்தது அதன் பள பளப்பில் நம்மோடதை சும்மா “பளிச்” என்று பார்த்துக்கொள்ளலாம். . :-)
எந்த Architect செய்தானோ! தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

வேறு எதுவும் வேலையில்லாததால் பேருந்துவில் இருந்து இறங்கிய இடத்துக்கு வந்து மறுபடியும் தடம் எண் 10 ஐ பிடித்து உட்கார்ந்தேன்.உட்காருவதற்கு முன்பு இம்முறையாவது Sheik Zayed சாலையில் உள்ள கட்டிடங்களை நம் பதிவர்களுக்காக படம் பிடித்துகாட்டலாம் என்று தோதான இடத்தில் உட்கார்ந்தேன்.அப்படி எடுத்த நகர் படம் கீழே



பேருந்தில் இருந்து எடுத்ததால் அதன் உள்ளே உள்ள விளக்குகளும் இதில் பிரதிபலிக்கிறது.

இவ்வளவு பெரிய பதிவாக போடுவதற்கு ஒருவர் மிகவும் துணைபுரிந்தார்,எப்படி?
மாலை நேரம் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு படம் பார்க்கவேண்டி காதில் Ear Phone வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் போது “மகிஷாஷவர்த்தினி” ஓட ஆரம்பித்தது அந்த சத்தத்தில் வீட்டின் உள்ளே தேவி இருந்திருந்தால் ஓஓஓஒடியே போயிருப்பா.இவ்வளவு சத்ததில் படமா பார்க்கமுடியும்? வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து இப்பதிவை எழுதினேன்.உபயோகமாக இருந்தால் உங்கள் நன்றியையும் அவர்களுக்கு சொல்லிடுங்க.

Monday, March 09, 2009

மதிய உணவு

இன்றைக்கு மதியம் என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கும் போதே Ready to Eat வைகயறாவில் பிஸிபேலா பாத் எட்டிப்பார்த்தது.MTR கொடுகும் அளவு நம் வயிற்றுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்பதால் அதை எப்படி அதிகப்படுத்துவது என்பதை என்னை மாதிரி சாப்பிடுபவர்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.

ஒன்றும் பெரிதாக இல்லை....கொஞ்சம் கேரட்டை நறுக்கி போட்டு ஓவனில் இரன்டு நிமிடம் வைத்து வயிற்றை நிரப்புங்கள்.அது கூட எனக்கு போதுமா என்ற சந்தேகம் வருவதால் தொட்டுக்க ஒரு (தோல் சீவப்பட்ட) வெள்ளரிக்காய்.அப்படியும் சந்தேகமாக இருந்தால் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் பருகிவிடுங்கள். :-))

மதிய சாப்பாடு முடிந்தது.

பர் ஜூமான்

தலைப்பெல்லாம் உள்ளூருக்கு தகுந்த மாதிரி தான் இருக்கும் பயந்திடாதீங்க.
போன பொது விடுமுறை வெள்ளி என்றால் அதற்கடுத்த சனிக்கிழமையும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே.நம்ம வருத்ததையெல்லாம் பற்றி யார் கவலைபடுகிறார்கள்?

வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணிக்கு பேருந்துபிடித்து 2.30 மணிக்கு கராமா பகுதிக்கு சென்றேன்.இங்குள்ள பூங்காவில் உட்கார்ந்தால் ஞானம் கிடைக்குமோ கிடைக்காதோ கொஞ்சம் நிழலுடன் கூடிய இருக்கை கிடைத்தால் தூக்கம் நிச்சயம் கிடைக்கும்.நான் உட்கார்ந்த இடமும் அப்படித்தான் இருந்தது.உண்ட களைப்பு அப்படியே கண்ணை இழுக்க உட்கார்ந்த நிலையிலேயே கொஞ்சம் தூங்கிவிட்டேன்.நானாவது உட்காந்த நிலையில் மேலும் இருவர் அப்படியே கட்டையை கடத்திவிட்டார்கள்.அப்படி இப்படி என்று மணி 4.15 என்ற நிலையில் மேலும் உட்கார பிடிக்காமல் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.இப்படியே திரும்ப பேருந்து பிடித்தால் 5 மணிக்கு வீட்டுக்கு போவிடலாம் ஆனால் அவ்வளவு விரைவாக போக எண்ணமும் இல்லை இஷ்டமும் இல்லை.

ஒரு தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருந்ததால் கராமா கடைத்தொகுதியில் உள்ளே நுழைந்து வின்டோ சாப்பிங் செய்துவிட்டு ஓரிடத்தில் வடை/சமோசாவுடன் தேநீர் கடையும் இருந்தது.ஒரு திராம் கொடுத்து தேநீர் வாங்கி குடித்தால் கண்ராவியாக இருந்தது.திட்டிக்கொண்டே மிச்சம் இருந்த தேநீரை குப்பைதொட்டியில் போட்டுவிட்டு நடக்க தொடங்கினேன்.

இதுவரை போகாத பகுதியாக தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.பல சாலைகள் இந்த மெட்ரோ கட்டுமானத்தால் துண்டாடப்பட்டிருப்பதால் வியாபாரத்துடன் நடைபாதையும் மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்குது.என்ன தான் கால் போன போக்கில் நடந்தாலும் ஆரம்பித்த இடத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டே நடந்தேன் - திரும்பி வரவேண்டும் அல்லவா?

முதலில் கண்ணில் பட்டது இக்கட்டிடம் தான் - இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில் இருக்கிறது - போட்ட காசு எடுத்திருவாரா??

கட்டிடத்துக்கு சட்டை போடும் பணி நடக்கிறது.



கட்டிடத்தின் முகப்பு - பாட்டியாவாம்



வழி நெடுக பல கடைகள் கண்ணாடி கூண்டுக்குள் ஆட்கள் இருப்பதற்கான அடையாளம் குறைவாகவே தெரிந்தது.நடந்து நடந்து ஒரு பெரிய சாலை குறுக்கில் வந்தவுடன் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் வந்த வழியே ஆனால் சாலையில் மறுபக்கத்துக்கு போய் நடக்க ஆரம்பித்தேன்.முதலில் கண்ணில் பட்டது பர்ஜுமான் என்ற கடைத்தொகுதி தான்.நேரம் நிறைய இருந்ததால் உள்ளே நுழைந்தேன்.



போகப்போக வந்துகொண்டிருக்கும் கடைத்தொகுதி நீளம் சொல்லிமாளாது.பல வகையான கடைகள் ஆனால் ஆட்கள் கூட்டம் என்னவோ எண்ணும்படியாகத்தான் இருந்தது.மூன்று அடுக்குகளில் கடைகள் இருந்தாலும் பெரும்பாலனவை ஏதோ ஒரு கடைத்தொகுதி போலவே இருந்தது.எல்லாவற்றிலும் பளபளப்பும் தூய்மையையும் பார்க்கமுடிந்தது.மிக மிக வித்தியாசமாக இருந்த இந்த மாடிப்படிகள் என்னை மிகவும் கவர்ந்தது.இம்மாடிப்படிகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தது.



கட்டிடங்களை தான் வளைத்து வளைத்து செய்கிறார்கள் என்றால் இதிலும் வளைவு காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்து பக்கத்தில் உள்ள Centre Point என்ற கடைத்தொகுதியையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு ஆரம்பித்த இடத்துக்கு வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கிட்டு இங்கு வேறு ஏதேனும் கடைத்தொகுதி இருக்கா என்றார்.நான் வந்த வழியைஅ காண்பித்து சிலவற்றின் பெயரை சொன்னவுடன் அங்கெல்லாம் "விலை அதிகமாக இருக்கு" என்றார்.

நீங்கள் என்ன வாங்கப்போகிறீர்கள் என்று தெரியாதே என்றேன்.

சட்டை என்றார்.

கராமா பகுதியை காண்பித்து அங்கு சில கடைகள் இருக்கு பாருங்கள் என்றேன்.நன்றி சொல்லிவிட்டு போனார்.

Sunday, March 08, 2009

கட்டிட கண்ணாடி

துபாயில் யாரும் அழகு பார்த்துக்கொள்ள கண்ணாடி வைத்துக்கொள்ள வேண்டாம் அவசரத்துக்கு என்றால் 4 வீல் வண்டியின் பின்பக்கத்தில் இருக்கும் சக்கரத்தின் மூடியில் பார்த்துக்கொள்ளலாம் அல்லது இன்னும் விலை உயர்ந்ததாக வேண்டும் என்றால்......கீழே பாருங்கள்.

ஒரு கட்டிட அளவுக்கு கண்ணாடி,எதிர் திசையில் உள்ள கட்டிடம் முகப்பில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கிறது.



இக்கட்டிடம் கராமா என்ற பகுதியில் உள்ளது.பேருந்தில் இருந்து இறங்கியவுடன் மாலை வெய்யிலில் அழகாக தெரிந்ததை அப்படியே சுட்டுத்தள்ளிட்டேன்.

Tuesday, March 03, 2009

துபாய் மலர்கள்

நான் துபாய் வந்த செப்டம்பர் மாதம் வானிலையில் அவ்வளவாக மாறுதல் இல்லாவிட்டாலும் வெப்பம் சற்று தனிந்திருப்பதாக வேலையிடத்தில் சொல்லிருந்தார்கள்.ரமலான் மாதம் என்பதால் மதியம் 3 மணிக்கு மேல் வேலை இருக்காது.வெளியில் அடிக்கும் அனல் காற்றுக்கு பயந்தே அலுவலகத்தை விட்டு மெதுவாக மாலை 5 மணிக்கு கிளம்புவேன்.

சாலை மற்றும் பேரீட்சை மரம் அவ்வளவு தான்,இதை தவிர்த்து பசுமைக்கு வழியே இல்லை.நடந்து போய்கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் வெறும் மணல் வெளியில் கருப்பு குழாய்களை படரவிட்டிருந்தார்கள்.அதை முதலில் பார்க்கும் போது யாரோ தேவைப்படாததை தூக்கிப்போட்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்தேன்.இதே மாதிரி பல இடங்களில் பார்தத போது தான் இது சொட்டு நீர் பாசனத்துக்கு என்று புரிந்தது.இப்படி போட்டு வைத்து ஏன் செடிகளை நடவில்லை என்ற அடுத்த கேள்வி எழுந்தது.அடிக்கிற வெய்யிலில் எந்த செடியும் பிழைக்காது என்பதால் வசந்த காலத்துக்காக காத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.

மரம்,செடிகள் & புல் நடும் வேலைகள் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும்.மரங்கள் நர்சரி மூலம் வளர்க்கப்பட்டு வண்டிகள் மூலம் கொண்டுவரப்பட்டு நடப்படுகின்றன.

செப்டம்பர் மாதத்தில்..



தண்ணீர் குழாய்கள்- சொட்டு நீர் பாசனம்.



மணல் காடு.



நவம்பரில் தண்ணீர்காட்டுகிறார்கள்.தினமும் மாலை வேளைகளில் இவ்வாறு தண்ணீர் பாய்ச்சுவதை காணலாம்.



இரண்டு மாத கண்காணிப்புக்கு பிறகு நிலமகள் வண்ண ஆடையை பூனுகிறாள்.













இப்போது ஓரளவு சூரியபகவான் தன்னுடைய கதிர்களை காட்டி சூடு ஏற்றிக்கொண்டு இருக்கிறார் அதனால் வரும் மாதங்களில் சூடு அதிகமாகும் போது இம்மலர்கள் மீண்டும் காணாமல் போய்விடக்கூடும்.

Monday, March 02, 2009

சும்ம்மா எடுத்தா சூப்பராக வருது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவியலை தேடிப்போன போது அமெரிக்கா வாழ் தமிழன் தான் குளிரில் அதுவும் முக்காலி போட்டு எடுத்த ஒரு படத்தையும் போட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார்.கிட்டத்தட்ட அதே நிலையில் ஆனால் குளிரில்லை,முக்காலியும் இல்லை அவ்வளவு தான்.

போன வெள்ளி துபாய் கிரீக் பக்கம் போய் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம் என்று மாலை சென்றிருந்தேன்.இம்முறை கையோடு 3.2 MP புகைப்பட கருவியையும் கொண்டுசென்றிருந்தேன்.மாலை சூரியன் சீக்கிரமே கிழே விழ அவ்விடத்தில் சந்திரனும் வெள்ளியும் அழகாக காட்சி அளித்தார்கள்.பல முறை சந்திரனை புகைப்படம் எடுக்க நினைத்து வெறும் புள்ளியாக வந்ததை பார்த்து நொந்துபோயிருக்கேன்,இருந்தாலும் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக இரவுக்கென்று இருக்கும் செட்டிங்கில் வைத்து எடுக்கலாம் என்று முயற்சித்தேன்.முதல் முறை எவ்வித செட்டிங்கும் இல்லாமல் மூக்கில் அழுத்திக்கொண்டு படம் எடுத்தேன்,அது கீழே.




இன்னும் கொஞ்ச நேரம் ஆனதும் பக்கத்தில் உள்ள ஒரு இருக்கையில் உட்கார்ந்துகொண்டு எடுதத படங்கள் கீழே.இதற்காக இரவு செட்டிங் செய்ததால் சிறு அசைவு இருந்தாலும் அதனால் சரியாக பிடிக்கமுடியவில்லை.






ஓரளவு தெளிவாக வந்துள்ள படம் கீழே.





இவ்விரண்டையும் பார்க்கும் போது முதலில் எடுத்த படம் நிலாவில் வளைவு தெளிவாக தெரிகிறது(படத்தின் மீது சொடுக்கி பார்க்கவும்)

அமெரிக்காவில் திரு வாசன் மாலை 6.30 மணிக்கு பார்க்கும் சந்திரனை நான் துபாயில் அதே நேரத்தில் பார்த்து படம் எடுத்தது ஒரு தற்செயலே.

Sunday, March 01, 2009

சிகரங்கள் (2000)

சமீபத்தில் தமிழக அரசின் "கலைமாமணி" பட்டம் வாங்கிய திரு சுகி சிவத்துக்கு நம் வாழ்த்துகள்.
இரண்டாயிரம் வருடத்தில் நடந்த இந்த நிகழ்வை யாரோ ஒரு புண்ணியவான் கூகிள் விடியோவில் போட்டிருந்தார்.பல முறை தொடர்ந்து பார்க்கமுடியாமல் இணையம் சதி செய்தது,சரி இறக்கி பிறகு பார்க்கலாம் என்றாலும் 57 நிமிட நகர்படம் 35 நிமிடம் தான் ஓடியது.

தன்முனைப்பை வலியுருத்தும் திரு சுகி சிவத்தின் பேச்சை கேட்ட பிறகும் அதற்கு மதிப்பு கொடுத்து, விட்டு விடாமல் முயற்சித்து தரவிறக்கி இப்போது தான் கேட்டு முடித்தேன்.சுமார் 1 மணி நேர உரை என்றாலும் அதில் சில எனக்கு பிடித்திருந்ததை வெட்டி இங்கு போட்டுள்ளேன்,பார்த்து மகிழுங்கள்.




சம்பாத்தியம் பற்றி



ஓட்டப்பந்தயம் (கர்பத்தினுள்)



நன்றி:அலை ஓசை.