Wednesday, December 17, 2008

துபாயா?சிங்கையா?(பாகம் 1)


ரொம்ப நாளாக எழுதனும் என்று நினைத்துக்கொண்டிருந்த பதிவு இது.இதை எழுதத்தூண்டிய "அல்வா" புகழ் சிங்கை நாதனுக்கு உங்கள் நன்றியை சொல்லிடுங்க.

நான் சிங்கையில் சுமார் 13 வருடங்கள் மட்டுமே இருந்தேன், கன் டெயினர் தான் என் முதல் வீடு,சுமார் 4 பேர் அங்கு இருந்தோம்.அதன் பிறகு வாடகை வீடு அப்படியே சொந்த வீடு அதை விற்ற பிறகு மீண்டும் வாடகை வீடு என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு துபாய்க்கு வந்தேன்.இந்த இரு தேசங்களை பற்றிய முழுமையான அறிவு எனக்கு இல்லை அதனால் எனக்கு தெரிந்தவரை அறிந்த வரை சொல்கிறேன்.இங்கு சொல்லியுள்ளது முழுமையானதும் அல்ல.நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறிக்கொண்டிருக்கும் உலக சூழ்நிலையில் இது இப்படித் தான் என்று அடித்துச்சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனம்.நான் பார்த்த போது இப்படி இருந்தது என்பது தான் ஓரளவுக்குப் பொருந்தி வரக்கூடிய சூழ்நிலை.
மேலே போவோம்.
பொருத்தங்கள்:
1.சிறிய நாடுகள்
2.அயல் நாட்டு முதலீடுகளை பெரிதும் நம்பி இருப்பவை.
3.தனக்கென்று விமானச் சேவை மற்றும் விமான நிலையங்களை ஏற்படுத்தி பக்கத்து நாடுகள் முழிக்கும் முன்பு 100 மீட்டர் உசேன் போல்ட் மாதிரி முன்னே போய்கொண்டிருப்பவை.
4.வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருப்பவை.
5.இயற்கை வளம் இல்லாதவை
6.சேவைத்துறையில் கால் அழுந்தப்பதித்துள்ளன.
7.யுரோப் வியாபாரத்துக்கு துபாய் என்றால் தென்கிழக்கு ஆசியாவுக்கு சிங்கப்பூர்.
8.குடிதண்ணீர் தேவையை வெளிவேலை மூலம் பெருகின்றன.
9.சென்னை, இரு நாடுகளுக்கும் நடுவில் இருப்பதால் விமான நேரம் அதே 3.5 மணி தான்.

வித்தியாசங்கள்:

1.அரசியல் முறை
2.சொந்த நாட்டு மக்களின் ஜனத்தொகை.
3.சீதோஷ்ண நிலை.
4.வீட்டு வசதி மற்றும் பொது ஜன போக்குவரத்து முறைகள்.
5.தமிழ் ஆட்சி மொழி கிடையாது - துபாயில்.
6.ஆட்சி முறை.
7.சம்பளம் மற்றும் அது சார்ந்த ஊக்கத்தொகைகள்.
8.குடியேற்றம் மற்றும் குடும்பம் அமைக்க ஏற்ற சூழ்நிலைகள்.
9.சட்ட திட்டங்கள்.
10.செலவீனங்கள்.
11.கல்வி
12.பேருந்தில் பெண்களுக்கு தனியிடம்.
13.மத்திய சேம நிதி.
14.இட/வல வாகனம் ஓட்டும் முறை.
15.தொலைதொடர்பு சேவை

முதலில் விமான நிலையத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

சிங்கப்பூரில் 3வது முனையம் முடிந்து 4 வது முனையத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது.பட்ஜெட் க்கு என்று ஒரு தனிமுனையம் வேறு.

துபாயில் இப்போது தான் 3 வது முனையம் திறந்திருக்கிறார்கள்.சொர்க்கபுரி போல் இருக்கு.பட்ஜெட் முனையம் என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை என்றே தோன்றுகிறது.

போன வாரம் அவசரமாக சென்னைக்கு போக வேண்டியிருந்ததால் எமிரேட் விமானச்சேவையை பயண்படுத்தினேன்.இணையம் மூலம் பண்ணமுடியும் என்றாலும் அது சொதப்பி பிறகு நேரே போய் முன்பதிவு செய்தேன்.துளி கூட சிரிப்பில்லாத முகம் என்னுடைய சந்தேகங்களை முடிக்கும் முன்னே அடுத்தவரை கூப்பிடும் அவசரம் போன்ற மனித இயந்திரங்களை தான் பார்க்கமுடிந்த்து.இதற்கு 700 திராம் அதிகமாக செலவு செய்யவேண்டிவந்த்து என்பது தனிக்கதை.அதோடு என் பெயரை தப்பாக அடித்து அது துபாயில் கண்டுகொள்ளலாமல், சென்னையில் இருந்து திரும்பும் போது என்னை ஒரு 30 நிமிடம் காக்கவைத்தார்கள்.

இதுவே சிங்கையில் நேர்ந்திருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?இணையத்தை விட்டுவிடுவோம் அது எப்படி சமயத்தில் காலை வாரும் என்பது உலக பொது உடமை என்பதால்.ஒன்றும் வேண்டும் நம் கடைத்தொகுதி முஸ்தாபாவுக்கு போய் ஒரு டிக்கெட் முன் பதிவு செய்யுங்கள் நீங்களே முடிவுக்கு வந்தபிறகு தான் அடுத்த ஆளை கூப்பிடுவார்கள்.புன்னகைக்காவிட்டாலும் மினிமம் இப்படித்தான் செய்வார்கள்.சேவை மனப்பாண்மை எமிரெட் விமான நிறுவனத்தில் கொஞ்சம் குறைவாக இருப்பதாக உணர்கிறேன்.

சிங்கை விமான நிலையத்தில் வாடகை மகிழுந்து எடுக்கும் போது கூடுதலாக 4 டாலர் வசூலிப்பார்கள்(4x2.50=10 திர்ஹாம்),இங்கு 20 திர்ஹாம்.அதன் பிறகு உள்ளதெல்லாம் அந்தந்த நாட்டுக்கு ஏற்றவை.மகிழுந்து ஓட்டுனர்கள் துபாயில் பெரும்பாலும் ஏன் அனைவருமே வெளிநாட்டவர்கள் தான் என்று நினைக்கிறேன் ஆனால் அதுவே சிங்கையில் நேரெதிராக இருக்கும்.துபாயில் பல ஓட்டுனர்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள்.இபோதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்

மற்றவை விரைவில்.

2 comments:

  1. தங்களது பதிவு நன்றாக இருந்தது.தற்போது சிங்கையில் கட்டுமானத்துறை எப்படி உள்ளது

    ReplyDelete
  2. வாங்க சங்கரராம்
    சிங்கையிலா? தெரியலையே அனேகமாக அங்கும் சிறிது கஷ்டமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?