Saturday, October 24, 2009

ரத்தினகிரி

1978 ~ 1979 கால கட்டத்தில் முதல் முறையாக வீட்டை விட்டு தனியாக போன இடங்களில் இதுவும் ஒன்று.பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருக்கும் போது விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம், ஆனா அதுக்கு தகுந்த உடற்பலம் இல்லாவிட்டாலும் ஏதாவது விளாயாடாவிட்டால் அன்று முழுவதும் சோர்வாக இருக்கும்.ஒன்றுமே இல்லாவிட்டாலும் கார்க் Ball ஐ கையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்.பாலிடெக்னிக் 3 வருடங்களும் கிரிக்கெட்டில் பங்கு கொண்டேன் அதன் மூலம் சிதம்பரம் மற்றும் திருச்சி சென்று வந்தேன் அதற்கு அடுத்த படியாக ஆர்வமே இல்லாமல் கற்றுக்கொண்ட மேசை பந்து விளையாட்டுக்காக (Inter Poly Matches) வேலூர் சென்ற போது தான் ரத்தினகிரி போக நேர்ந்தது.

வெளியூறே அவ்வளவாக போனதில்லை என்பதால் மற்ற ஊர்களில் என்ன பார்க்கலாம் என்ற பொது அறிவு கூட இல்லாமல் இருந்தது.

மேஜை பந்து போட்டிக்காக நானும் என் நண்பர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம் அந்த இருவரில் கணேஷ் என்பவனுக்கு வெளி உலக விஷயங்கள் அத்துப்படி.தியேட்டர் எங்கிருக்கு சுற்றுலா தளங்கள் என்னென்ன இருக்கு என்பதை பெரிதாக தெரிந்துவைத்திருந்ததால் நான் ஓர் ஒட்டுண்ணி மாதிரி அவன் பின்னாடியே போய்கொண்டிருப்பேன்.பரோட்டா,பிரட் பட்டர் ஜாம் போன்ற விஷயங்கள் அவன் மூலம் தான் தெரிந்துகொண்டேன்.

வேலூரில் நடந்த போட்டியில் Runners' up ஐ வென்ற களிப்புடன் வேறு எங்காவது போய்விட்டு ஊருக்கு போகலாம் என்ற நினைப்புடன் இருந்த போது அவன் கொடுத்த ஐடியா தான் ரத்தினகிரி.சிறியகுன்றின் மேல் உள்ள முருகன் ஆலயம் அங்கு முருகனடிமை என்ற சாமியார் கூட இருந்தார்,அன்று அவர் மௌனவிரதம் என்பதால் சீட்டில் 3 கேள்வி எழுதிக்கொடுத்தால் குலுக்கல் முறையில் அதற்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் என்றார்கள்.ஒரு சீட்டுக்கு 25 ரூபாய் என்று ஞாபகம்.முதல் முறையாக ஒரு சாமியார் அவரிடம் என்ன கேள்வி கேட்பது என்ற கேள்வி எழுந்த போது வெற்றிடமாக இருப்பது போல் உணர்ந்தேன்.தேவைகள் ஒன்றும் இல்லாத போது கேள்விகளும் இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே.நல்ல வேளை என் சீட்டு எடுக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இங்கு போன போது பல மாற்றங்களை காண முடிந்தது.மகிழுந்துகள் மலை முகப்பு வரை போகிறது.மலையேரும் நடைபாதைக்கு கூரை போட்டிருப்பது போல் உள்ளது.கோவிலும் நிறைய மேம்பாடு கண்டுள்ளது.முருகனடிமை சாமியார் இன்னும் இருக்காரா என்று தெரியவில்லை.நான் போன போது மதிய வேளை என்பதால் அவர் இல்லையோ என்னவோ.

இன்றைய கோவிலின் படங்கள் சில கிழே.

ஓடும் வண்டியில் இருந்து எடுத்தது.



கோபுர அழகு.



உள் கோபுர அழகு



மலை மீதிருந்து சுற்று வட்டாரம்.





கோவிலுக்குள் சில சிறுவர்கள் ஆர்வமாய் பார்க்க..



4 comments:

துளசி கோபால் said...

//ஆனா அதுக்கு தகுந்த உடற்பலம் இல்லாவிட்டாலும்...//

'வெஜிடேரியன்...பலமில்லை' ஞாபகம் வருது:-)))))

பசங்க படம் அருமை! என்னவொரு கள்ளமில்லாத சிரிப்பு!!!!!!

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
அது முட்டை சாப்பிடுவதற்கு முன்பான காலம் அதனால் பலமில்லால் போய்விட்டது.
பொண்ணுமட்டும் சிரிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டது.

கிருஷ்ண மூர்த்தி S said...

அந்த சாமியாரின் பெயர் பால முருகனடிமை. மின்சார வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். திமுக அனுதாபி,திருமணமாகிப் பெண்டாட்டி பிள்ளைகளோடு இருந்தவர். கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது. அறுபத்தெட்டு-எழுபதுக்கிடையிலான காலத்தில், மலை மேல் கோவிலுக்குப்போனவர், அங்கே பூஜையோ, வசதிகளோ இல்லாமல் நிராதரவாக முருகன் நின்ற மாதிரித் தோன்றவே தன்னுடைய வேட்டியையே கிழித்து முருகனுக்கு ஆடையாக உடுத்தி, மீதியைக் கோவனமாகக் கட்டிக் கொண்டு அங்கேயே முருகனோடு இருக்க ஆரம்பித்தார். பேசும் சக்தியும் போய் விட்டது. கிரீச்சிடும் ஒலி மட்டும் வரும்.

எழுபத்துநான்காம் ஆண்டு நான் வேலூரில் சிறிது காலம் பணியாற்றிக் கொண்டிருந்த தருணம், அவரைத் தரிசிக்கச் சென்றபோது குறி கேட்க வரை நாடி வந்த கூட்டத்தையும், அவர்களுக்கு இருந்த அபாரமான நம்பிக்கையையும் நேரில் கண்டிருக்கிறேன். வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே அவர் வாங்கிக் கொண்டது. அப்படி வந்த தொகையிலேயே, அந்தக் கோவில் திருப்பணி முழுவதையும் செய்திருக்கிறார்.

நானும் அவரிடம் கேள்விகள் கேட்டேன். பதிலாக எதையோ விருவிருவெனக் கிறுக்க, அதைப் படித்துக் காட்ட ஒரு உதவியாளரும் அந்த நாளில் இருந்த நினைவு. அவர் என்ன குறி சொன்னார், அது பலித்ததா இல்லையா என்பதைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த நாளில், ஆனந்தவிகடன் வார இதழில் 'அருணாச்சல மகிமை' என்ற தலைப்பில் திரு பரணீதரன் ரமண மகரிஷியின் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்த தொடரில், இவரைப் பற்றியும் இருந்ததைப் படித்துவிட்டுப் பார்க்கப் போனேன். ஒரு ஆவல், அவ்வளவே!

நீண்ட நாட்களுக்குப் பின்னால், அந்தநாள் ஞாபகங்களைத் தொட்டுப் பார்க்க இந்தப் பதிவு உதவியிருக்கிறது!

வடுவூர் குமார் said...

நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி.எனக்கு தெரியாத பல விபரங்களை இப்பின்னூட்டம் மூலம் தெரிவித்ததற்கு.