Friday, September 18, 2009

Engaged??

முதல் நாள் பார்த்த வீடுகளை மனதில் அசை போட்டுக்கொண்டிருகும் நேரத்தில் அன்றிரவு எங்களுடன் பணிபுரிய மற்றொரு இந்தியர் கொச்சினில் இருந்து வந்து சேர்ந்தார்.அவர் வருவது தெரிந்திருந்தாலும் வீட்டின் உள்ளே வர அவரை அழைத்து வரும் முகவரிடம் சாவி இருக்கா இல்லையா என்பது தெரியாததாலும் எண் அறை கதவை சாத்தாமல் குளிரூட்டும் சாதனத்தை 24 இல் வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.முதல் நாள் விமானத்தில் தூங்காததால் நல்ல அசதி யாரோ வருவதும் கதை திறப்பதும் தெரிந்திருந்தாலும் எழுந்து பார்க்க அசதி அப்படியே தூங்கிவிட்டேன்.

கொச்சினில் இருந்து வந்த நண்பர் நன்றாகவே தமிழ் பேசினார் (மனைவி திண்டுக்கல்லாம்),பேச வைத்துவிட்டார்கள் போலும்.லிபியாவில் 5 வருட அனுபவத்துடன் அரபி பேசும் திறனும் இருந்தது.நன்றாக அளவாக பேசுவதால் பழுகுவதில் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்.

மறுநாள் காலை எங்கள் நிறுவனத்தை சேர்ந்த 3 வரும் ஓமானியர் ஒருவரும் மகிழுந்தில் கிளம்பி மேலும் சில வீடுகளை பார்க்க போனோம்.அதில் ஒரு வீடு கடலுக்கு பக்கத்தில் 4 மாடிகளுடன் இருக்கும் இடத்தை போய் பார்த்தோம்.கீழ் நிலையில் இருந்த அறைகள் போன பதிவில் சொல்லியிருந்த மாதிரியே இருந்தன அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது முகவர்,மேலே ஒரு வீடு இருக்கு பார்க்கலாமா என்றார்,சரி என்று லிப்ட் மூலம் சென்றோம்.சாதாரண அளவில் இருக்கும் மூவர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் இருந்த லிப்ட் அது.ஆறு அறை ஒரு ஹால் என்று அட்டகாசமாக இருந்தது மாத வாடகை 1000 ரியால் என்றார். எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவே அவ்வளவு ஆட்கள் தான் இருப்பார்கள் என்பதால் ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தோம்.நாங்கள் பார்த்த அவ்வளவு வீடுகளும் நகர வாழ்கையில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புரமாகவே இருந்தது,மகிழுந்து இல்லாமல் அங்கு வாழ்வது கடினம்.பொண்டாட்டி குழந்தைகள் வந்தால் நிச்சயம் "House Arrest" தான். தனியாக எங்கும் வெளியில் போக முடியாது.

மஸ்கட் நெடுஞ்சாலைகளில் மிகவும் பரிட்சயமானது என்றால் அது கடற்கறையை ஒட்டி அமைந்துள்ள சாலை தான்.இச்சாலை பல நகரங்களையும் இணைக்கிறது.சாலை வழியாகவே துபாயில் இருந்து இங்கு வரமுடியும் என்பது சிறப்பு.துபாயில் இருந்து சாலை வழியாக இங்கு வர 5 மணி நேரமாகும்.

மஸ்கட்டில் அப்படிப்பட்ட சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் கம்பெனி PRO – பொதுநல தொடர்பு அதிகாரி பல விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.அப்போது இங்குள்ள வாடகை மகிழுந்துவை பற்றி சொல்லும் போது இதன் நிறமும் இராக்கில் இருக்கும் மகிழுந்துவின் நிறமும் ஒன்று என்றார்.வாடகை மகிழுந்துவைப் பற்றி சொல்லும் போது இங்குள்ளவற்றில் கட்டணம் காண்பிக்க ஏதும் மிஷின் இல்லை என்றும் உங்களுக்கும் ஓட்டுனருக்கும் இடையில் பேசி முடிவெடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது,அதோடு ஓட்டுனர் உங்களிடம் Engaged என்று கேட்டால் அதர்கு தகுந்த மாதிரி பதில் சொலுங்கள் என்றார். அதென்ன Engaged என்றேன்.என்கேஜ் என்றால் அந்த மகிழுந்து உங்களுக்கு மட்டும் பிரத்யோகமானது இல்லாவிட்டால் shareAuto மாதிரி டாக்ஸியை அவர்கள் உபயோகிக்க முடியும் என்பதாகும். இவ்வளவு சொல்லியும் முதல் பயணமே 50% அதிகமாக கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம்.

சரி,ஈத் வருகிறது அதன் தொடர்பில் இருக்கும் விடுமுறை நாட்களை எப்படி போக்கலாம் என்று யோசித்து அந்த PRO விடம் இங்குள்ள சுற்றுலா தளங்களை பற்றி கேட்ட போது கொஞ்சம் அமைதி நிலவியது.ஏதாவது கேட்ககூடாததை கேட்டுவிட்டமோ என்ற தொனியில் மீண்டும் கேட்ட போது, மஸ்கட் உள்ளே அவ்வளவு இடங்கள் இல்லை கொஞ்சம் தள்ளிப்போகனும் என்றார்.போச்சுடா! என்றேன்.கொஞ்சம் தள்ளி என்றால் இங்கு 50 கி.மீட்டருக்கு மேல்.பெரிய மசூதிகள், வழ வழ சாலைகள், கொஞ்சம் மலை,குறைவான பசுமை என்று பொதுவான சமாச்சாரங்கள் தான் இருக்கின்றனவே தவிர பளிச் என்று கண்ணில் பட இதுவரை எதுவும் தெரியவில்லை.

ஏகப்பட்ட நேரம் கிடைக்கிறது.. வெளியே சுற்றிப்பார்க்க மகிழுந்தில் வேண்டிய நிலை என்றிருக்கிறது.எத்தனை நேரம் தான் கணினியில் கண்ணை வைத்து உருட்டிக்கொண்டிருக்கிறது? மாலை சற்று சூரியன் தாழ்ந்த பிறகு சக ஊழியரை வெளியே போய் வர அழைத்தேன்.என் நிலையில் தான் அவரும் இருந்தார் போலும் கிளம்பிவிட்டார்.அறையில் இருந்து பார்க்கும் தூரத்தில் கடல் இருந்ததால் பொடி நடையாக போனோம்.சின்னச்சின்ன அலைகள் கடலுக்கு மத்தியில் ஒரு பெரிய பாறை மட்டும் நீட்டிக்கொண்டு தனித்துவிடப்பட்டிருந்தது.






வந்திருந்த ஆட்களை இரண்டு பேர் கைவிரலுக்குள் அடக்கிவிடலாம்.சிலர் அப்போது தான் காற்பந்து விளையாடிவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள்.அங்கு எடுத்த சில படங்கள் கீழே.சூரியனை நோக்கி படம் எடுக்கும் போது Flash அடிக்கிறது,என்ன பிரச்சனையோ!!

சாப்பாட்டு பிரச்சனையில் இருந்து மீள திரும்பவும் கை சமையல் ஆரம்பிக்கலாம் என்று நானும் சக நண்பரும் முடிவு செய்து சாமான்கள் வாங்க இடம் தேடி அலைந்தோம் பிறகு ஒரு நண்பருக்கு தொலை பேசியவுடன் அவர் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கடை தொகுதியின் பெயரை சொன்னார்.

கடற்கரையை முடித்துவிட்டு அந்த கடை தொகுதியை நோக்கி கால் நடையாக ஒரு 15 நிமிடம் நடந்தோம்.சாலையில் அது சின்னதாக இருந்தாலும் நடப்பது மிக மிக அபாயம்.வீட்டில் கணினி முன்பு விளையாடிய கார் கேமை சாலையிலும் முயற்சிக்கிறார்களோ என்று தோனும் அளவுக்கு ஓட்டுகிறார்கள்.விபத்தும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டு வருவதாக ரிப்போர்ட் சொல்கிறது.
ஒரு வழியாக கடைதொகுதியில் வேண்டிய சாமான்கள் வாங்கிக்கொண்டு மகிழுந்துவுக்காக காத்திருந்தோம்.நாங்கள் ஒரு திசையை பார்த்துக்கொண்டு இருக்க மறுதிசையில் இருந்து சரக் என்று திரும்பி எங்களை பார்த்தது மகிழுந்து.இவர் எப்படி நம்மை பார்த்தார் என்று ஆச்சரியமாக இருந்தது.

Barreq Al Shitti? - உள்ளே வா என்றார்.

இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இறக்கிவிட்டு 1 ரியால் (132 ரூபாய்) வாங்கிக்கொண்டு பறந்துவிட்டார்.பேரமே பேசலையே என்று இறங்கிய பிறகு தான் தோன்றியது.இன்றைக்கு அவருக்கு யோக நாள் போலும்.

கொசுறு படம்: பக்கத்தில் நடக்கும் ஒரு கட்டுமான வேலை.

No comments: