Thursday, November 16, 2006

ஹே"ரேம்" & புது வருட பரிசு.

போன திங்கள் என்னுடைய ஜி மெயிலை பார்த்த போது திரு SK அவர்களிடம் இருந்து ஒரு பின்னூட்டம் "இது பின்னூட்டம் அல்ல" என்று வந்திருந்தது.திறந்தபோது அவர் சிங்கைக்கு வந்திருப்பதாகவும் முடிந்தால் நேரில் சந்திக்கலாம் என்று திரு.கோவி.கண்ணனுடைய தொலை பேசி எண்ணையையும் கொடுத்திருந்தார்.

அதற்கு முன்பு 2 நாட்களுக்கு முன்பு ஒரு வலைபதிவில் (திரு.சிவபாலன் என்று நினைக்கிறேன்) திரு SK சிங்கை வருவதாகவும் "அங் மோ கியோ"வில் உள்ள நூலகத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பார்க்கலாம் என்றும், சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று போடப்பட்டிருந்தது.இதை மனதில் வைத்துக்கொண்டு அந்த ஞாயிறு மாலை என்னை தயார்படுத்திக்கொண்டிருந்தேன்.நடுவில் என்ன நுழைந்ததோ!! சுத்தமாக மறந்துபோனேன்,மேல் சொன்ன மெயில் வரும் வரை.

உடனே தொலைபேசியில் கூப்பிட்டபோது அவருடன் பேசமுடியவில்லை.அவர்கள் திரும்ப கூப்பிட்டபோது நான் வெங்கட் ஆக இருந்ததால் பணியிடத்தில் என்னை பிடிக்கமுடியவில்லை.கொஞ்ச நேரம் கழித்து நான் கூப்பிட்டபோது கிடைத்தார்கள்,பேசினோம்.அவர்கள் "செந்தோஷா"போகப்போவதாகவும் மாலையில் சிரங்கூன் சாலையில் பார்க்கலாம் என்றார்.

இதற்கிடையில் என்னுடன் வேலை செய்யும் பணியிட நண்பர் திரு ராஜ் தனது மடி கணினியை மேம்படுத்த எண்ணி இன்று சாயங்காலம் "சிம் லிம் ஸ்கொயர்"(கணினி பொருட்கள் கிடைக்கும் இடம்) போகலாமா என்றார்.

திரு SK வை பார்க்க போகவேண்டும் என்பதாலும் சரி என்றேன்.

மாலை சுமார் 5.45க்கு கிளம்பி 6.50 சுமாருக்கு அங்கு போனோம்.வாங்க வேண்டியது 80GB (harddisk) வன்பொருள் மற்றும் தற்காலிக நினைவகம் (Ram)256MB.
முதலில் ஒரு சுற்று வந்து வன்பொருள் எந்தெந்த கிடைகளில் என்ன விலையில் கிடைக்கிறது என்று பார்த்தோம்.மொத்தமாக பார்க்கையில் 4 வெள்ளி மாத்திரம் வித்தியாசம் இருந்தது.நிரந்தரமாக அங்கு உள்ள கடையில் வாங்கினால் பிறகு பிரச்சனை என்று வரும் போது இலகுவாக இருக்கும் என்று நினைத்து மற்ற கடைகளின் விலையைவிட 4 வெள்ளி கூட கொடுத்து சீகேட் 114 வெள்ளிக்கு வாங்கினார்.

அடுத்து ரேம்,வன்பொருள் வாங்கிய கடையிலே வாங்கலாம் என்று 256- என்ன விலை என்றோம்.

"54 வெள்ளி"

நாங்கள் ஒரு P3 மடி கணினியையை மேம்படுத்துவதால் அதே மாதிரி தற்காலிக நினைவகம் வேண்டும் என்பதால் பழைய நினைவகத்தையும் எடுத்துக்கொண்டு போயிருந்தோம்.

சரி புதிய நினைவகத்தையும் இங்கே வாங்கிவிடலாம் என்று கொடுக்கச்சொல்லி கேட்டபோது தான் கடையில் அது தற்போது இல்லை என்று தெரிந்தது.512 வாங்கும் அளவுக்கு நிதிநிலமை இல்லாததால் அதை என் நண்பர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இந்த கணினியின் தற்காலிக நினைவகம் PC100 வகையை சார்ந்ததால் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.பல கடைகளில் இதற்கு மாற்றாக PC133 வகையை உபயோகிக்கலாம் என்றார்கள்.வாங்கிய பிறகு உபயோகப்படுத்த முடியாவிட்டால்??.கொஞ்சம் Risk எடுப்போம் என்று நினைத்து PC133 வகையை தேட ஆரம்பித்தோம்

இப்படி கிடைக்காமல் செய்வதால் பயணாளர்கள் புதிய கணினிக்கு மாற்றவைப்பது திட்டமோ என்னவோ?திரு. சிவஞானம்ஜி சொன்ன கோயில் பூ கட்டுபவரின் பொருளாதார கொள்கையின் மறுபக்கம் மாதிரி தெரிந்தது.

சரி,அடுத்த கடையில் கேட்டால் அதே கொள்ளளவு நினைவகம் 72 வெள்ளி என்றார்கள்.

எங்கோ உதைத்தது!!

மூன்றாவது கடை- இது பிரத்யோகமாக மடிகணினிக்காக உள்ளது.அவர்களே பழைய கணினியையும் புதிப்பித்து தருகிறார்கள்.சரி இந்த மாதிரி கடையில் கேட்டால் தான் சரியான விபரம் கிடைக்கும் என்று நினைத்து கேட்டோம்.இவரும் பழைய நினைவகங்கள் இப்போது வருவதில்லை அதனால் நீங்கள் வாங்கும் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றார்.

256- எவ்வளவு?

154- வெள்ளி- மயக்கம் போட்டுட்டோம். என்னது 154 வெள்ளியா?என்றோம்.ஆமாம் என்று சொல்லி வேண்டும் என்றால் உங்களுக்காக கொஞ்சம் குறைத்து 127 வெள்ளிக்கு தருவதாக calculator உதவியுடன் கூறினார்.இவ்வளவு வருடம் இங்கு வாழ்ந்ததில் முதல் முறையாக ஒரு நினைவகம் விலைக்கு வாங்க Calculator உபயோகித்தை பார்த்தவுடன் சந்தேகம் வந்து "நாங்கள் கணினியை கொண்டு வந்து போட்டுப்பார்த்து வாங்கிக்கொள்கிறோம்" என்றோம்.

அப்படியும் விடாமல் திரும்ப நீங்கள் வருவதற்கு பேருந்து கட்டி பணத்தை எதற்கு அனாவசியாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நாங்கள் இங்கு தான் வேலை பார்க்கிறோம்,எப்போது வேண்டுமானாலும் வரமுடியும் என்று பொய் சொல்லிவிட்டு தப்பித்தோம்.

மேலும் ஒரு கடையில் பார்த்ததில் அவர்களிடமும் 256 இல்லை.

என்னடா சோதனை என்று பார்த்துக்கொண்டு வந்ததில்,சின்னதாக ஒரு கடை,இளம் பையன்கள் தமிழில் பேசி கூப்பிட்டு "உதவி வேண்டுமா?" என்றார்கள்.

விபரம் சொன்னவுடன்,சரியாக எடுத்துக்கொடுத்தார்கள்.

விலை எவ்வளவு தெரியுமா?

51.30 வெள்ளி.

ஒரே கடை தொகுதிக்குள் (154~51.30) இவ்வளவு வித்தியாசம்.

ஆமாம் இதெல்லாம் வாங்கி அந்த மடிகணினியை ஓட்ட முடிந்ததா என்கிறீர்களா?

அது வேறு பதிவில்.

சாமான்கள் வாங்கிய பிறகு வெளியில் வந்து பார்த்தபோது மணி 7.35.சாப்பிட்டுவிடலாமா என்றார்.

நான் எப்போது 8 மணிக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளதால் கொஞ்சம் யோசித்தேன்.வீட்டில் உள்ள உணவு வேறு பாழாகிவிடுமே என்று.அது மட்டுமில்லாமல் திரு SK க்கு கொடுத்த குறுஞ்செய்திக்கு பதிலும் வரவில்லை.அவர்கள் எத்தனை மணிக்கு சிரங்கூன் சாலைக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை என்பதாலும் சாப்பிட ஒத்துக்கொண்டேன்.

எங்கு போகலாம் என்று பார்த்து,ஆனந்தபவன் போகலாம் என்று முடியுசெய்தோம்.நான் கேட்ட விஜிடபிள் பிரியாணி கிடைக்காததால் சாப்பாடு சாப்பிடலாம் என்று நண்பர் செலவில் வாங்கிவந்தார்.

அந்த நேரத்தில் திரு.கோவி.கண்ணன் அழைத்து,அவருடைய தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டதால் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பதையும்,புது தொலைபேசி வாங்கி அழைக்கிறேன் என்றார்.

நான் காத்திருப்பதாக சொன்ன இடத்துக்கு சுமார் 8.10 வந்தார்கள்.நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.ஏன் நான் சந்தித்த இவர்கள் வலைபதிவில் இவர்கள் படங்கள் இல்லாததால் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

திரு.SKம் கோவி.கண்ணனும் கையை அசைத்தவுடன் தான் புரிந்தது.ஆமாம் இதில் யார், யார்?குழப்பத்துடன் ஒரு ஹலோ என்று சொல்லிவிட்டு கை குலுக்கினேன்.

நான் சங்கர் என்றார் திரு SK,புரிந்தது மற்றவை கோவி.கண்ணன் என்று.

கோவி.கண்ணை பற்றி யோசித்துவைத்திருந்த எண்ணம் தவிடு பொடியானது.கை தோள் வலி அதனால் வலைப்பூக்களில் எழுதுவதை தள்ளிபோடுகிறோம் போன்ற பதிவுகள் இவரை நான் ஒரு 60~65 வயதுடையவர் போலும் என்று கணித்திருந்தேன்.ஆனால் மிகவும் சாதரணமாக இருந்தார் இந்த இளைஞர்.இவரிடம் இருந்து இப்படிப்பட்ட கவிதைகளா?வியந்தேன்.அதைவிட இவரும் நாகப்பட்டினத்தார் என்பதைதான்.

அடுத்து திரு.சங்கர்

இவர் கை குலுக்கும் போதே ஒருவித சகோதரமனபான்மை தெரிந்தது.பழகிய சில நிமிடங்களில் இவருக்கு யாரும் நண்பர் ஆகிவிடுவார்கள்.அந்த மாதிரி பழகிவிடுவார்.

இவரை நான் கற்பனை பண்ணி வைத்திருந்தது எப்படி தெரியுமா?சுமார் 175 Cm உயரம்.கண்ணாடி போட்டிருப்பார்.சுமாரான தேகம்.முன்தலை வழுக்கையாக இருக்கும்.

ஏன் இப்படி என்று கேட்காதீர்கள்.கற்பனை தானே.

ஒரு நிகழ்வின் காரனமாக முடியிழந்திருந்தார்,கண்ணாடி போட்டிருந்தார்.

பலவற்றை பேசினோம்.பாலியல் கல்வி பிறந்த கதையை சொன்னார்.என்னுடைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதையும் ஞாபகம் வைத்திருந்தார்.இவருடைய பல பதிவுகள் இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது.

இவரை பார்த்தவுடன் இவர் முதலில் எழுதிய பதிவுகளையும் படித்துவிடவேண்டும் என்றுள்ளேன்.

ஏனென்றால், அவர் பழகிய விதத்தில் இருந்து இவரின் பதிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டேன்.

இவரின் "பாலியல் கல்வி-பெற்றோர்களுக்கு"- வலை பதிவாளர்களுக்கு முன்னமே கிடைத்த புது வருட பரிசு.

8 comments:

துளசி கோபால் said...

குமார்,

புது வருஷம் பிறந்ததும் இன்னொரு பரிசு கொடுக்கலாமுன்னு எண்ணம் இருக்கு.
ஜனவரி 18 வசதிப்படுமா?

'ஜிகே'வை என்னாலெ எளிதாக் கண்டு பிடிக்க முடியலாம்:-))))

எஸ்கே. என்ன சொன்னார்?

கதிர் said...

அருமையான பதிவுங்க குமார்.

நல்லா அனுபவிச்சி படிச்சேன்.

//இவ்வளவு வருடம் இங்கு வாழ்ந்ததில் முதல் முறையாக ஒரு நினைவகம் விலைக்கு வாங்க Calculator உபயோகித்தை பார்த்தவுடன் //

முன்னாடி இரும்பு கடையில வேல பார்த்திருப்பாருன்னு நினைக்கிறேன். :0)

கோவி.கண்ணன் [GK] said...

//கோவி.கண்ணை பற்றி யோசித்துவைத்திருந்த எண்ணம் தவிடு பொடியானது.கை தோள் வலி அதனால் வலைப்பூக்களில் எழுதுவதை தள்ளிபோடுகிறோம் போன்ற பதிவுகள் இவரை நான் ஒரு 60~65 வயதுடையவர் போலும் என்று கணித்திருந்தேன்.//

குமார்,

முன்பு உங்கள் பதிவு ஒன்றில் நான் பாலிடெக்னிக் முடித்த வருடம் (1988)குறிப்பிட்டு இருந்தேன். வயது கணக்கை கோட்டை விட்டுவிட்டீர்கள்.
:)

நான் என்ன செய்யட்டும், எனது நட்பு வட்டம் 'பெரிய வட்டம்' அதனால் நானும் பெரியவர் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.

எங்கள் இருவருக்குமே உங்களை சந்தித்ததும், உரையாடியதும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது !

காத்திருந்து சந்தித்தற்கு நன்றி !

அபுல் கலாம் ஆசாத் said...

ஆஹா,

அய்யா! சிம்லிம் சதுரங்காடியை நினைவுபடுத்தினீர்கள். நான்கைந்து மணிநேரம் அங்கே சுற்றியிருக்கிறேன். உள்ளே நுழைந்தால் எதையேனும் வாங்காமல் வரமுடியாது.

சிம்லிம், அதனருகில் இருக்கும் பௌத்தக் கோவில், சற்றுத் தள்ளி ஒரு இந்துக் கோவில் அதன் எதிரே பரதம் கற்றுத்தரும் கலாசாரக் கழகம். கொஞ்சமே நடந்து சிராங்கூனை நோக்கி வரும் வழியில் நமது சென்னை-1இல் கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகளைப் போல வரிசையாகக் கடைகள். சில கடைகளின் முன்னே சிறிய கோவில், சிகப்பு வண்ணம் தூக்கலாக இருக்கும் அலங்காரங்கள்...எங்கோ துவங்கி எங்கோ முடிக்கிறேன்.

சிங்கையும் எனக்குப் பிடிக்கிறது. மூன்றாவது முறையாக எப்போது வரப்போகிறேனோ?

அன்புடன்
ஆசாத்

வடுவூர் குமார் said...

வாங்க, துளசி
ஜனவரி 18 தானே!
இருப்பேன்.
திரு SK என்ன சொன்னார்?
அது ரகசியம்.(என்னைப்பற்றி என்றால்).:-))
அனேகமாக அவரும் பதிவு போடுவார் என்று நம்புகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க தம்பி.
இதெல்லாம் ஏமாற்றுவதற்கு என்று பொருள்கொள்ள வேண்டும்.

வடுவூர் குமார் said...

ஆமாம் கோவி.
சரியாகச்சொன்னீர்கள்.

வடுவூர் குமார் said...

வாங்க ஆசாத் ஜி
அது வரை நான் இங்கு இருப்பேன் என்று நினைக்கிறேன்.
ஏன்? அது வரும் பதிவுகளில்.