ஒருவழியாக 220மீட்டர் உயரத்தை முடித்துவிட்டோம்.இது இந்த பிராஜட்டில் வெறும் 40% தான்.
வெளிப்புற கான்கிரீட் முடிந்த கையோடு அந்த Slipform ஐ 220மீட்டர் உயரத்தில் வைத்து கழற்றி கீழே கொண்டு வரவேண்டும்.வேலைசெய்வதற்கு தேவையான இடத்துக்காக இரும்பு பிராக்கட் மாட்டி அதன் மேல் பலகைகள் போட்டு,நடக்க சாமான்கள் வைக்க இடம் தயார் செய்தோம்.மேலே காத்து சும்மா பிச்சுக்கிட்டு அடிக்கும் அதுவும் இல்லாமல் ஏற்கனவே சொன்னமாதிரி பனை / தென்னை மரத்தின் இருந்துகொண்டு வேலை செய்வது மாதிரி ஒரு சிறிய ஆட்டம் இருந்து கொண்டே இருக்கும்.நாளடைவில் இது பழக்கமாகிவிடும்.இருந்தாலும் Height Fear இருப்பவர்கள் போகாமல் இருப்பது நல்லது.
Slipform இருந்த வரையில் மேலே போவதற்கும் கீழே வருவதற்க்கும் மின்தூக்கி இருந்தது.இப்போது அதை கழற்ற ஆரம்பித்துவிட்டதால் சிமினிக்கு வெளியே "Condola" என்று அழைக்கப்படிகிற ஒரு விதமான மின்தூக்கி அமைத்தோம்.இதில் கூடுதலாக 3 பேர் மட்டும் தான் போகலாம் அதுவும் காற்றுக்கேற்ற படி ஆடி ஆடி போய் சேரும்.வெளி தடுப்புகள் ஏதும் இருக்காததால் வெளி அழகை பார்த்துக்கொண்டே செல்லலாம்.
இப்படி போய்கொண்டிருந்த போது ஒரு நான் அந்த மின்தூக்கியும் காலை வாரிவிட்டது.அதை சரி செய்ய சில நாட்கள் ஆகும் என்பதால் மேலே போவதற்கு ஒரு ஏணியை தவிர வேறெதுவும் இல்லை.பாதுகாப்புக்காக எதுவும் இல்லாத திறந்த ஏணி.வேலையோ மேலே, வேலை ஆட்கள் இந்த ஏணியை உபயோகப்படுத்தி 220 மீட்டர் உயரத்தை செங்குத்தாக ஏறுவார்கள்.பாதுகாப்புக்காக ஒரு கயற்றை 45 மீட்டர்க்கு ஒரு முடி போட்டு அதில் தங்கள் பாதுகாப்பு பட்டையை மாட்டிக்கொள்வார்கள்.விழுந்தாலும் 45 மீட்டரில் வந்து தொங்கிக்கொண்டிருக்கலாம் அல்லவா?
இப்படிப்பட்ட நேரத்தில் மிக முக்கியமான வேலை மேலே நடந்துகொண்டிருந்தது.எங்களில் யாராவது மேலே போய் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வையிடவேண்டும்.எங்கள் குழுமத்தில் ஒருவர் சிறிது வயதானவர் மற்றொருவர் இளைஞர்.இருவரும் போகமுடியாத நிலையில் நான் தயாரானேன்.பாதுகாப்பு பட்டையை மாட்டிக்கொண்டு திறந்த ஏணியில் ஏற ஆரம்பித்தேன்.தளத்தில் இருந்து ஆரம்பித்து ஒரே மூச்சில் 85 மீட்டர்,பிறகு அங்குள்ள ஒரு பிளாட்பாரத்தில் சிறிது நேரம் ஓய்வு திரும்ப 30 மீட்டர் இப்படியே முழு உயரத்தையும் தொட்டேன்.சுமார் அரை மணி நேரம் ஆனது.சுகமான அனுபவம்!!
நான் இப்படியென்றால் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி-மலையாளி,கீழே ஆரம்பித்து எங்கும் நிற்காமல் 220 மீட்டரில் போய் நிற்பார்.பயமே இல்லாமல் வேலை செய்பவர்கள் மலையாளிகள்.ஆனால் சம்பளம் வேலை நேரம் எல்லாம் அவர்களுக்கு தனிதான்.கட்டுப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்.
இந்த கண்டோலா பற்றிய சுவையான அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment