Sunday, April 20, 2008

நடத்துனர் எச்சில் நமக்கில்லை

1980 களில் சென்னை வந்த புதிதில் பல பஸ்களில் பயணம் செய்யும் போது நடத்துனர்களின் இந்த எச்சில் பழக்கம் வெகுவாகவே என்னை கஷ்டப்படுத்தும்.அந்த மாதிரி சமயங்களிலும் ஓரிரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் கைவிரலில் ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு அதன் மேல் பகுதியில் சின்ன ஈர பஞ்ஜை வைத்துக்கொண்டு அதனை தொட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுப்பார். அப்போது அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை பலர் உபயோகப்படுத்தவில்லை என்பது தான் நிஜம்.

ஒரு பழைய நண்பனை ஆர்குட் மூலம் கண்டுபிடித்து நேற்று அவனை திருவள்ளூரில் சந்திப்பதாக தொலைபேசி முடிவுசெய்துகொண்டேன்.அவனும் நான் இருக்கும் இடத்தில் இருந்து போரூருக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து திருவள்ளூர் வரச்சொல்லியிருந்தான்.
நான் ரயிலில் போகலாம் என்றிருந்தேன்,இது குறுக்கு வழியாக இருக்கும் போல் தோனியதால் சுமார் 2.30 மணிக்கு கிளம்பினோம். மதிய வெய்யில் வத்திக்குச்சி இல்லாமலே பற்றிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.புதிதாக வாங்கிய ரேபான் கிளாஸ் கண்ணை காப்பாற்றி தலைவலியில் இருந்து தப்பிக்கவைத்தது.

ஆவிச்சி பள்ளியில் இருந்து போரூருக்கு Share Auto மூலம் 8+8 ரூபாய்க்கு போய் சேர்ந்தோம்.

போன சிறிது நேரத்திலேயே தி.நகர் to திருவள்ளூர் செல்லும் அரசு விரைவுப்பேருந்து தாழ்வு தள அமைப்புடன் வந்திருந்தது.உள்ளே நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சுத்தமாக இருந்தது.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.பயணச்சீட்டு கொடுக்கும் முறையும் எச்சில் பண்ணவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு ஒரு சின்ன இயந்திரம் நடத்துனர்களின் கையில்.செல்லும் இடம் சொல்லப்பட்டவுடன் பித்தானை அமுக்கி கீழே உள்ள மாதிரி பயணச்சீட்டு கொடுக்கிறார்.அந்த இயந்திரம் அவ்வளவு பெரிதாக இருக்கவேண்டுமா? என்று தோனியது.
சுமார் ஒரு மணி நேரத்தில் திருவள்ளூர் அடைந்தது.போனவுடன் நண்பனுக்கு தொலைப்பேசி இருக்கும் இடத்தை சொன்னவுடன் ஒரு வண்டி அனுப்பி எங்களை அவன் இடத்துக்கு அழைத்துப்போனான். சந்தித்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திப்பது சந்தோஷமாக இருந்தது.அவன் மூலம் மேலும் பல நண்பர்களின் மினஞ்சல் முகவரிகள் கிடைத்தது.

சிறிது நேரம் பேசிக்கொண்ட பிறகு அங்கிருக்கும் சில கோவில்களுக்கும் போகலாம் என்று கிளம்பினோம்.முதலில் வீரராகவ பெருமாள் கோவில்.

நாங்கள் போனபோது உஸ்தவரின் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதன் படங்கள் கீழே..
அதன் பிறகு புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு போனோம்.இங்கு ஒரு பெரிய புற்று தான் தெய்வ உருவில் இருக்கு.பலர், பூ மேல் இருக்கும் எலுமிச்சையை முந்தானையில் வாங்கிக்கொள்கிறார்கள். என்ன ஐதீகம் என்று தெரியவில்லை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் வீடு திரும்ப நேரிட்டது.

3 comments:

 1. இங்குனக்குள்ள வலைப்பூ எழுதுறவங்கள்ள உண்மையா வலைப்பூ எழுதுறவங்கள்ள நீங்கதாங்க பின்னுரீங்க..

  என்னை மாதிரி எத்தனையோ பேரு - சும்மா - காப்பி - பேஸ்ட் செஞ்சுக்கினு கீரோம். ஆனா நீங்க உங்க வாழ்க்கையில நடந்ததை என்ன அழகா டைரி எழுதர கணக்குல பின்னுரீங்க.. சூப்பருங்க..

  வாழ்த்துக்கள் அண்ணே..

  ReplyDelete
 2. உங்களுக்கு மறுமொழி அளிக்க நினைத்து இன்டெர்னெட் எக்ஸ்புளோரர் 6 வழியா முயற்சித்தால் எதோ பிழைச்செய்தி வருகுது.

  ரொம்ப காலத்துக்கு பெறவு - நெருப்பு நரியில ட்ரை பண்ணினேன். சக்ஸஸ். என்னவென்று பார்க்கவும்.

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி,தமிழ்நெஞ்சம்.
  பலர் IE தான் உபயோகிக்கிறார்களா??அங்கு தான் பிரச்சனையா!
  பழைய டெம்பிளேட் எங்கு வைத்திருக்கேன் என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கேன். :-))

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?