இதுவரை பார்த்ததில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடம் இது தான்.மஸ்கட் வந்த முதல் நாள் சாப்பாட்டுக்கு அலைந்த போது எங்கள் பொது நல அதிகாரியிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.நான் ஏற்கனவே அலசி வைத்திருந்த விபரங்கள் மூலம் “காமத்” மற்றும் “சரவண பவன்” உணவகங்கள் இங்கு தான் இருக்கின்றன என்று தெரிந்தது.
மூன்றாம் நாள்: புதிதாக குடியேற உள்ள வீட்டுக்கு படுக்கை/இருக்கை சாமான்கள் வாங்க கடை கடையாக அலைந்தோம்.ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை.மாடலை பார்த்து விலை முடிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.புதிதாக பொருட்கள் வாங்க அல் ஹாமாரியா என்ற இடத்துக்கு எங்கள் பொது தொடர்பு அதிகாரி அழைத்துப்போனார்.கடையின் உள்ளே நாங்கள் நுழைந்ததையோ நாங்கள் என்ன செய்கிறோம் என்றோ யாரும் கவலைப்படவில்லை.பொருட்களும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால் வெளியேறினோம்.கொஞ்சம் வெளியில் நடந்தால் அதே பெயருடைய கடை பளபளப்புடன் இருந்தது அப்போ இதற்கு முன் நுழைந்த கடை? அது ஸ்டாக் குடோனாக இருக்ககூடும்.விலை விபரங்களை வாங்கிக்கொண்டோம்.இதெல்லாம் முடியவே இரவு 8.30 மணியாகிவிட்டது வயிறு வேறு சத்தம் போட ஆரம்பித்துவிட்டது.ஒட்டுனரிடம் சொல்லி Ruwi க்கு போகச்சொன்னோம்.இங்கு தான் பலதரப்பட்ட தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.கடைகளும் அதிகமாக காணப்பட்டது அதில் ஒரு கடைக்கு 123 என்று பெயர் ஏனென்றால் அங்கு விற்கப்படும் பொருட்களின் மதிப்பு 1,2 & 3 ரியாலில் இருக்குமாம்.சிங்கையிலும் இந்த மாதிரி ABC என்ற மலிவு விலை கடை கூட உள்ளது.டாக்ஸி நிறுத்தும் இடத்துக்கு பக்கத்தில் இறங்கி அங்குள்ள ஒருவரிடம் ஆங்கிலத்தில் விஜாரிக்க கை காட்டிய இடத்தில் பச்சைவிளக்கு விளம்பர பலகையில் சரவண பவன் தெரிந்தது.முதலில் இட்லி சாப்பிட்டுவிட்டு எனக்கு ஊத்தப்பம் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்யும் போது Chilli வேணுமா வேண்டாமா? என்று கேட்டார்கள்.நம்ம தான் ஆந்திராவிலேயே குப்பை கொட்டியிருக்கோம் இங்க என்ன ஆகிவிடபோகிறது என்ற தைரியத்தில் சில்லி இருக்கட்டும் என்று சொன்னேன்.சொன்னதற்கு தண்டனையாக அழவைத்துவிட்டார்கள். ஒரு நிலைக்கு மேல் தோசையில் பாதிக்கு மேல் மிளாகாயுடன் பிச்சு போட்டுவிட்டு சாப்பிட்டு முடித்தோம். சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது மணி 10.45 ஆகியிருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் ஆண்/பெண் கழிப்பறையை ஒன்றாக வைக்கலாமா என்ற பிரச்சனை எழுந்த போது காரசாரமாக உலகம் முழுவதும் விவாதம் நடைபெற்றது ஆனால் ரூவியில் உள்ள சரவணபவன் மற்றும் காமத் உணவங்களில் சத்தமே செய்யாமல் இந்த புரட்சியை செய்துள்ளார்கள்.
இந்த இடம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடம்.நடந்து போனாலேயே சீக்கிரம் போக முடியும்.இங்கு இருக்கும் கடைகள் துபாய் கிரீக்கை ஞாபகபடுத்துகிறது.சேட்டன்களின் சாய் கடை,நகைகடை, “எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கு ரிப்பேர் செய்யப்படும்”,”இது தான் சிங்கப்பூர் கடை” போன்ற கடைகளும் நிரம்பியிருக்கின்றன.
முதல் நாள் இரவு வெகுநேரமாகிவிட்டதால் முழுமையாக சுற்ற முடியாத கவலையை போக்க மறு நாள் சாயங்காலம் வாடகை மகிழுந்து எடுத்து சென்றோம்.இம்முறை மகிழுந்து பிடிக்கும் முன்பு நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 9 கி.மீ. இருப்பதை கூகிள் எர்த் மூலம் தெரிந்துகொண்டோம்.மகிழுந்து வந்தது
ரூபி - OK Centre போகனும்,எவ்வளவு?
4 ரியால்
மிகவும் அதிகம்- 1.50 ரியால் தான் (இது என் நண்பர்)
முடியாது,2 ரியால் என்றால் வருகிறேன் என்றார் ஓட்டுனர்.
முதல் பேரம் படிந்து 2 ரியாலுக்கு போனோம்.
2 comments:
டாக்ஸிக்காரர், சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தவரா?
வாங்க துளசி,நம்மூரில் இருந்து வந்த யாராவது சொல்லிக்கொடுத்திருக்க கூடும்.
Post a Comment