Tuesday, July 22, 2008

டெல்லி- அதிசயம்.

இதன் தொடர்புடைய முந்தைய பதிவு இங்கு.

நம்ம முடிவெல்லாம் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?டெல்லியில் இருக்கப்போகும் 2 நாட்களை எப்படி சமாளிப்பது? எங்கு போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.இதுவரை ஜெய்பூர் பக்கம் போனதில்லை என்பதால் அங்கு போய்வரலாம் என்று முடிவுசெய்தேன்.

நேரம்11 மணியை நெருங்கிக்கொண்டு இருக்கையில் என் அருகே ஒருவர் வந்து உட்கார்ந்தார்,அப்படியே பேச்சு கொடுக்கும் போது அவர் சோகக்கதையை சொன்னார் அது என்னுடையதைவிட மோசமாக இருந்தது.சிலர் மும்பையில் இந்த வேலையை பண்ணமுடியாமல் டெல்லிக்கு வந்திருந்தார்கள்.ஏனோ தகவல்கள் கிடைப்பதில் பலசிரமங்கள் உள்ளன,அதுவும் அரசாங்க அலுவலகங்களில் இருந்து ஒரு தகவல் வேண்டும் என்றால் தெரிந்தவர்கள் இருக்கவேண்டும் அல்லது கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கு.இவ்விரண்டும் செய்ய துணிவில்லை என்றால் மிகப்பெரிய கால தமாததுக்கு தயராக இருக்கவேண்டும்.பல அரசாங்க அலுவலகங்களில் சரியான விபரப்பலகைகள் கூட இருப்பதில்லை,என்று சொன்னார்.

என் பக்கத்தில் இருந்தவர்க்கு தெரிந்தவர்கள் யாரோ இருந்திருப்பார்கள் போலும் அலுவலக கதவை திறந்துகொண்டு யோரோ ஒருவரை பார்த்திவிட்டு வந்தார். இரண்டாம் முறை அவர் கையில் சான்றிதழ் இருந்தது.சரி நாமும் இப்படித்தான் முயலவேண்டும் என்று நினைத்து கதை லேசாக திறந்து பார்த்தால் அஞ்சலக அலுவலகத்தில் முத்திரை குத்துவது போல் சில அதிகாரிகளிடம் சான்றிதழ்கள்"குத்து" வாங்கிக்கொண்டிருந்தது.வெளியில் நின்றுகொண்டிருந்த என்னை யாரும் பார்க்கவும் இல்லை,என்ன விஷயம் என்றும் கேட்கவில்லை.சிறிது நேரம் கழித்து நானே திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.காலம் விரயமாகிக்கொண்டிருந்தது.சாய் பாய் உள்ளே போய் அதிகாரிகளுக்கு தேநீர் கொடுத்துவிட்டு போகும் வழியில் சாய் வேணுமா? என்று கேட்டார்.தேநீர் குடிக்கும் மனநிலையில் இல்லாத்ததால் வேண்டாம் என்று சொன்னேன்.

சிறிது நேரத்தில் அலுவலகம் உள்ளே இருந்து தென்னிந்தியர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் வெளியே வந்தார்,உடனே ஓடிப்போய் அவரிடன் என் அவசரத்தை சொன்னேன்,அவரோ நீங்கள் போய் கவுன்டரில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.என்னுடன் இருந்த மற்றொருவரையும் கூப்பிட்டுக்கொண்டு அங்குசென்றேன். வழக்கம் போல் அங்கு கதவு திறக்கவில்லை அதற்குள் அங்கு சுமார் 5 பேர் திரண்டிருந்தனர்.வரிசையில் நிற்பது என்பது நம்மக்களுக்கு வரவே வராத கலையோ என்று தோன்றுமளவுக்கு மக்கள் மொத்தமாக குழுமியிருந்தனர்.புதிதாக வருபவர்கள் தான்றோத்தனமாக முட்டி மோதிக்கொண்டு முன்னே சென்றார்கள்.மொத்தத்தில் கொடுமையாக இருந்தது.11.15 கவுன்டர் கதவு திறந்ததும் முட்டி மோதிய கூட்டம் சிறிது சிறிதாக குறைந்து என் நிலை வரும் போது 11.25.இதற்கிடையில் என் உறவினர் வந்ததால் ஒரு புதுத்தெம்பு வந்தது,ஏனெனில் அவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சாலை/போகும் விபரங்கள் அத்துப்படி அதோடு ஹிந்தியும் சரளமாக பேசக்கூடியவர்.

கைக்கு சான்றிதழ் கிடைத்தவுடன் வேகம் வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து விபரங்களை சொன்னோம்.அதே 70 ரூபாய் தான் UAE Embassy க்கு.11.45 க்கு போய்விட்டார்.மறுபடி வரிசை,இம்முறை அதிகமாக இல்லை ஆனால் சோதனை போல் எனக்கு முன் இருப்பவர் பல சான்றிதழ்களை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்.
இங்கு முத்திரை குத்தி திரும்ப வாங்க சாதாரண நிலைக்கு (2 வேலை நாட்கள்ஆகும்) ஒரு சான்றிதழுக்கு 1500 ரூபாயும் அவசரநிலை (அன்றே மதியம் 2~3 வாங்கிக்கொள்ளலாம்) க்கு ரூபாய் 2250 யும் வாங்குகிறார்கள்.முதலில் இதற்கு 750/1500 ஆக இருந்தது. எண்ணெய்விலை ஏற்றம் இதிலும் தெரிகிறது.தேவையான பணத்தை கட்டி ரசிதுவாங்கினேன்.

என்னுடைய சான்றிதழை திரும்ப வாங்க 2 மணிநேரம் இருப்பதால் என்னுடைய உறவினர் என்னை கனாட்பிளேஸில் இருக்கும் அவர் அலுவலகத்து அழைத்துச்சென்றார்.அவர் சிங்கப்பூர் ஒரு முறை வந்திருந்ததால் இங்குள்ள ரயில் சேவையைப் பற்றி நன்கு அறிவார்.இப்போது டெல்லியில் சக்கைபோடு போடும் மெட்ரோ சேவையை காண்பிக்க கூட்டிக்கொண்டு போனார்.அப்படியே கார்பன் காப்பி. தூய்மையாக வைத்துள்ளார்கள் ரயிலின் உள்ளும் புறத்தையும்.இதே மாதிரியான நிலை எல்லா ஊர்களுக்கும் வரவேண்டும்.சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த "ஊனமுற்றோர்" என்ற வாசகத்தை எடுத்துவிட்டு "மகளிர்" என்ற வாசகத்தை வைத்து 50% ஒதுக்கிவிட்டார்கள். :-)



மதிய உணவுக்குப்பிறகு திரும்ப UAE Embassy போய் சான்றிதழை பெற்றுக்கொண்டு இணையம் மூலம் சென்னைக்கு விமானச்சீட்டு வாங்கி அன்றிரவே 11.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன்.

No comments: