Monday, July 21, 2008

டெல்லி

நேற்று முன் தினம் (17.7.08) முடிய வேண்டிய ஒரு வேலை சரியாக மாலை 3 மணிக்கு முடிந்தது ,அதன் தொடர்ச்சி டெல்லியில் இருப்பதால் அங்கு போகவேண்டிய ஆயத்தப்பணிகளை ஆரம்பித்தேன்.

முதன் முதலில் விமான டிக்கெட் விற்பனை தொடர்பாளரை தொடர்ப்புகொண்டேன்,அவர் மூலமே இன்றே கிளம்பவேண்டிய விமானத்தில் (இந்தியன்) மூலம் பதிவுசெய்துகொண்டேன்.இரவு 8 மணிக்கு விமானம் என்பதால் வீட்டைவிட்டு 6 மணிக்கு கிளம்பி சுமார் 6.45 க்கு காமராஜர் உள்நாட்டு முனையத்தை அடைந்தேன்.உள்நாட்டு முனையம் என்றாலும் பளபளப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. பயணிகள் போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது.வழக்கம் போல் பல விமானச்சேவைகளும் காலதமதமாகவே சென்றுகொண்டிருந்ததன அது இந்தியனுக்கும் இருந்தது.ஒரு வழியாக பல நேர மாறுதலுக்கு பிறகு 9 மணிக்கு கிளப்பினார்கள்.

டெல்லியை அடைந்த போது இரவு மணி 11.30,முன்பதிவு முறைப்படி மகிழ்தூர்த்தியை (உபயம்:மக்கள் தொலைக்காட்சி) அமர்த்திக்கொண்டேன். முதல் ஆச்சரியம் இங்கிருந்து தொடங்கியது.நான் போக இருந்த RK Puram க்கு கட்டணம் 150 ரூபாய் தான் வசூலித்தார்கள்.சுமார் 13 வருடங்களுக்கு பிறகு டெல்லி போகிறேன்,ஹிந்தியுடன் இருந்த தொடர்ப்பு வெகுவாக இழந்திருந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.இந்த மாதிரி முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு வெளியில் தனிப்பாதை அமைத்து அங்கு அனுப்பிவைத்தார்கள்.அதன் முடிவில் ஒரு இளைஞன் அங்கிருக்கும் பைப்பின் மேல் உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு 7ம் எண் வண்டி என்றார். மினிவேன் ஒன்று அங்கு நின்றிருந்தது,ஆனால் அதன் ஓட்டுனரை அங்கு காணவில்லை.எனக்கு முன் வந்திருந்தவர்கள் கிளம்பி போய்விட்ட நிலையில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் வந்து என் எண்ணை கேட்டுவிட்டு போய்விட்டான். என்னசெய்வது என்றும் புரியவில்லை.இதற்கிடையில், எனக்கு முதல் வந்த பயணி போன இடத்தில் வந்து நின்ற ஒரு வண்டியின் ஓட்டுனர் என்னை வண்டியின் உள்ளே உட்காரச்சொன்னார்.கொஞ்சநேரம் கழித்து அங்குவந்த நபர் என்னுடன் மற்றவரை அழைத்து செல்லமுற்பட்டதையும் கண்டு அவரின் எண்ணத்தை அறிந்துகொன்டு மறுத்தேன்.வேறு வழியில்லாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

வழிநெடுகிலும் கட்டுமானத்துறையின் தடுப்புகளும் புதிதாக எழுப்பட்டுள்ள உயர்பாலங்களும் டெல்லியின் முகத்தை வெகுவாகவே மாற்றிவருகிறது. தடுப்புகள் அழகாக வர்ணம் பூசப்பட்டு என்ன வேலை (METRO) நடக்கிறது அதன் குத்தகைக்காரர் பெயரும் (AFCONS) பொறிக்கப்பட்டு இருந்தது.

என் வண்டி ஓட்டுனருக்கு வழி தெரியாத்தால் நான் தங்கப்போகும் என் உறவினரை கூப்பிட்டு அவர் மூலம் விளக்கி ஒரு வழியாக 12 மணிக்கு போய் சேர்ந்தேன்.சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை விருந்தினர் வண்டி மூலம் UAE Embassy அடைந்தேன்,அப்போது வண்டி ஓட்டிய ஒரு சீக்கியருடன் பேசிக்கொண்டு வந்த போது கேட்ட/பார்த்த பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

1.தூய்மையான சாலைகள்

2.கேஸ் உபயோகிக்கும் ஆட்டோக்கள் (புகை இல்லவே இல்லை)

3.அழுக்கான பேருந்துகள் போன இடம் தெரியவில்லை.

4.பல சாலை ஓர குடிசைகள் எல்லாம் போயே போய்விட்டது.

5.விதிமுறையை மீறுபவர்கள் பலர் தண்டிக்கப்படுவதாகவும் அந்த ஓட்டுனர் சொன்னார்.

மொத்ததில் ஒரு ஒழுங்கு முறை கண்ணளவில் தெளிவாக தெரிந்தது.என்னுடைய சான்றிதழை ஐக்கிய அரபு Embassy யில் முத்திரை குத்த அங்குசென்று சுமார் 15 பேரூக்கு பிறகு வரிசையில் நின்றேன். 9 மணிக்கு திறக்கும் என்று போட்டிருந்தது ஆனால் சுமார் 9.15க்கு தான் திறந்தார்கள். என் முறை வந்த போது என்னுடைய சான்றிதழை பார்த்துவிட்டு "நீ போய் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முத்திரை குத்திக்கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

இவர்கள் இணைய பக்கத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு இந்த முறை தேவையில்லை என்று போட்டிருந்ததால் நான் நேரிடையாக அங்கு சென்றேன்.இப்போது இது மற்றொரு வேலை.அமைச்சகம் என்றவுடனேயே பயம் தொற்றி க்கொண்டுவிட்டது.இது இன்னும் எவ்வளவு நாள் இழுக்கடிக்கப்போகிறதோ என்ற கவலையும் வந்தது.இந்த அமைச்சகம் எங்கிருக்கிறது என்று தெரியாதபட்சத்தில் வெளியில் நிற்கும் ஒரு முகவரிடம் கேட்டேன் அவரே ஆட்டோகாரர் ஒருவரை கூப்பிட்டு "படலா ஹவுசில்" கொண்டுவிடச்சொன்னார்.ஆட்டோகாரரிடம் பேரம் பேசும் நேரம் இதுவல்ல என்பதால் அவர் கேட்ட 70 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு சென்றேன். பாதி டெல்லியை சுற்றிக்காண்பித்து சரியான இடத்தில் கொண்டுவிட்டார்.

இடையில் என் உறவினரை கூப்பிட்டு விபரங்கள் சொன்னேன்அவரும் தனக்கு தெரிந்தவர் மூலம் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்பதாக சொன்னார்.கையில் சான்றிதழ் இருப்பதை பார்த்த ஒருவர் தான் அதை செய்துதருவதாகவும் அதற்கு 200 ரூபாய் கொடுங்கள் போதும் என்றும் 11 மணிக்குள் முடிந்துவிடும் என்றும் சொன்னார்.நான் அங்குவந்த போது மணி சுமார் 9.45 அமைச்சக வேலையை முடித்து திரும்ப UAE Embassy க்கு திரும்பினால் தான் அவர்களிடம் என் சான்றிதழை கொடுக்கமுடியும் என்ற நிலை.இந்த பையன் சொல்லைக்கேட்டு அவனிடம் பேசிக்கொண்டே பக்கத்தில் உள்ள கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று ஒரு சிறு தெருவுக்குள் அழைத்தான்,அப்போது தான் உறைத்தது ஏதோ தவறு நடக்கிறது என்று.சற்று நின்று எதற்கு இங்கு கூட்டிப்போகிறாய்? என்றேன்.இல்லை பேசலாம் என்று திரும்ப அழைத்த போது நிர்தாட்சன்யம் காட்டாமால் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று திரும்பி நடக்கும் போது கண்ணில் பட்டது ஒரு போர்டு "BeWare of TOUTS".

கொஞ்சம் நடந்தவுடன் கண்ணில் பட்ட ஒரு போலிஸ்காரரிடம் இந்த வேலை செய்ய எங்கு போகவேண்டும் என்று கேட்டவுடன் அவர் சொன்ன இடத்துக்கு போனால் அங்கு 2 வரிசையில் ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.கடைசியில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் இந்த வரிசை எதற்கு? என்று கேட்டவுடன்,ஒன்று யுரோப்க்கும் மற்றது வேறு நாடுகளுக்கும் என்றார்.

மற்ற வரிசையில் சுமார் 25 பேர் நின்றிருந்தனர் அதோடு அதன் கதவுகள் 10 மணிக்கு தான் திறக்கும் என்றார்கள்.10 மணி ஆனதும் வரிசை நகர்வதாக தெரியவில்லை.நகர ஆரம்பித்த ரயிலில் ஏற வேண்டிய அவசரம் எப்படியிருக்குமோ அப்படி நின்றுகொண்டிருந்தேன்.சுமார் 10.15க்கு நகர ஆரம்பித்து என் முறை வந்தபோது 10.45 ஆகியிருந்தது.என்னுடைய சான்றிதழ் திரும்ப எப்போது கிடைக்கும் என்று கேட்டபோது

சாடே பாரா (12.30 மணி) என்று குண்டை தூக்கிப்போட்டார்.காற்று இறங்கிக்கொண்டு இருக்கும் பலூன் போல் ஆனேன்.ஆக மொத்தத்தில் இன்னும் 2 நாட்களுக்கு (சனி& ஞாயிறு) டெல்லியை விட்டு கிளம்பமுடியாது என்ற முடிவுக்கு வர ஆரம்பித்தேன்.

தொடரும்...

2 comments:

  1. திகில் நாவல் போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. வாங்க வெங்கட்

    நல்ல வேளை திகிலாகவில்லை, அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
    துபாய் போக நினைக்கும் நம் மக்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?