Friday, June 27, 2008

நடப்பது.. நடக்கப்போவது(பாகம் 1)

இதற்கு முந்தைய பதிவு இங்கே

பல இடங்களுக்கு விண்ணப்பம் செய்தாலும் எங்கிருந்தும் பதில் வரவில்லை,அதன் பிறகு இணையத்தில் தேடிய போது பல வேலை விளம்பரங்கள் கண்ணில் பட்டன.

அதே சமயத்தில் வீடும் கைவிட்டுப்போனதால் ஒரு பெரிய மூச்சுடன் நிம்மதியாக இருந்தேன்.

அவ்வப்போது கண்ணில் படும் இணைய வேலை கொடுப்பதாக சொல்லும் நிறுவனத்தில் பதிவு செய்தாலும் எதில் இருந்தும் கூப்பிடுவதாக இல்லை.இப்படியே போய்கொண்டிருக்கும் நாட்களில் கத்தாரில் வேலை செய்யும் ஒருவர் ஜிடாக்கில் வந்தார்.அவரும் கட்டுமானத்துறையில் தான் இருந்தார் ஆனால் பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை.பொதுவாக அவரிடம் உரையாடிக்கொண்டு இருக்கும் போது சிங்கையில் வேலை விபரங்களை கேட்டார் அதோடு அங்கு தான் வரமுடியுமா? என்றும் கேட்டார். காலத்தின் கொடுமையை பாருங்கள் நான் அங்கு போகப்பார்க்கிறேன்,அவர் இங்கு வரப்பார்க்கிறார்!! இங்குள்ள நிலமையை சொன்னேன் அத்தோடு நான் முயற்சிக்கும் இடங்களை பற்றியும் சொன்னேன்.அவர் உள்ளூர் தினசரியின் இணைய தொடுப்புகளை கொடுத்து முயற்சிக்கச்சொன்னார்.அத்தோடு நில்லாமல் இங்கு ஏதாவது தினசரியில் விளம்பரம் வந்தால் அனுப்புகிறேன் என்று சொல்லி சிலவற்றையும் அனுப்பினார்.அனுப்பிய அவ்வளவு விண்ணப்பமும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.அங்கு போயே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் அவை எதுவும் என்னை பாதிக்கவில்லை.

இப்படி போய்கொண்டிருந்த நாட்களில் மற்றொரு விளம்பரத்தை நம் நண்பர் அனுப்பியிருந்தார் அது உள்ளூர் நாளிதழ் "கலீஜ்டைம்ஸில்" வந்திருந்தது. அதை பார்த்தவுடன் ஆச்சரியமான ஆச்சரியம் ஏனென்றால் என் தகுதிக்கு ஏற்ற வேலைக்காக இருந்த்து, அத்தோடு அது சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனம்.விண்ணப்பம் செய்வதற்கு முன்பு சின்னதாக குழப்பம்... சிங்கப்பூர் நிறுவனம், ஆள் தேடி விண்ணப்பித்ததோ துபாயில்...இங்கிருந்து நான் விண்ணப்பித்தால் கூப்பிடுவார்களா? மாட்டார்களா? என்று.இணையம் தான் இருக்கே!! கல்லை விட்டெரிந்து பார்ப்போம் என்று போட்டுவிட்டு மறந்துவிட்டேன்.இது நடந்தது போன வருடம் அக்டோபர்/நவம்பர் மாதம் இருக்கும்.



மேலே உள்ள மாதிரியெல்லாம் ஆவேசமாக போடலைங்க. :-)

போன வருடம் தீபாவளி சமயம், விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு போய் தீபாவளி கொண்டாடலாம் என்று நினைத்து தலைவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பித்தேன்.வர வேண்டிய புதிய வேலை கண்ணுக்கு மட்டுமே தெரிகிற மாதிரி இருக்கும் கானல் நீர் போல் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது. வேலை செய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனதாலும் சும்மா இப்படியே இருந்தால் தானாக மூளையில் சாகும் செல்லுக்கு நாமே தண்டனை கொடுத்து சாக அடிப்பது போல் இருந்தது. சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு தினமும் வந்து போவது வேறு உறுத்திக்கொண்டு இருந்தது.விடுமுறை கேட்டதும் தலைவர் நிம்மதி பெருமூச்சு விட்டு "போய் வாங்க தம்பி" ஆனால் நீ வந்ததும் என்னிடம் வேலையில்லை,அதனால் உன்னை அடுத்த வேலையிடத்துக்கு மாற்றல் செய்துவிடுகிறேன் என்றார்.ரொம்ப சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன்.

ஊருக்குப்போய் திரும்ப வந்தவுடன் பக்கத்தில் உள்ள ஒரு வேலையிடத்துக்கு மாற்றல் ஆனேன்.இங்கும் வேலை சரியாக தரப்படவில்லை.மிச்சம் மீதி வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன்.கமலஹாசன் கூட 8 மணி நேரம் நடித்துக்கொண்டு இருக்கமாட்டார்,ஆனால் எனக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டது. இந்த வேலை எனக்கு முன் அனுபவம் இல்லாத்தால் திறம்பட நடிக்க முடியாமல் புது தலைவரிடம் முழித்தேன்.சரியான கிறுக்கராக இருக்கும் என் புதிய தலைவருக்கும் எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி பெரிதாக ஆரம்பித்தது.

இவ்வேளையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. என் பெயரை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு என்னை நேர்கானலுக்கு அவர்கள் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள். நான் தான் கணக்கு வழக்கில்லாமல் உள்நாடு/வெளிநாடு என்று போட்டிருந்தால் இந்த அம்பு எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் நேர்காணலுக்கு போனேன்.

எப்போதும் போல் விசாரிப்புகள் முடிந்ததும் அவர் என்னை கேட்டார், "எப்படி உனக்கு நாங்கள் துபாயில் கொடுத்த விளம்பரம் மூலம் இங்கிருந்து விண்ணப்பித்தாய்?" என்று. அப்போது இவர்கள் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று பிடிபட ஆரம்பித்தது. இணையம் மூலம் கிடைத்தது என்றேன்.

6 comments:

இலவசக்கொத்தனார் said...

எந்த நிறுவனத்தில் இருந்து நேர்க்காணல் எனத் தெரியாமலே நேர்க்காணலா? சரிதான்.

jeevagv said...

//மேலே உள்ள மாதிரியெல்லாம் ஆவேசமாக போடலைங்க. :-)//
:-)
படம் பொருத்தமாத்தான் இருக்கு!
:-)

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்.
கட்டுமானத்துறையில் இதெல்லாம் சகஜம் அதுவும் இவர்கள் ஆங்கில உரையாடலை தொலைப்பேசியில் கேட்கனும்!!

வடுவூர் குமார் said...

வாங்க ஜிவா
ஏதோ தேடும் போது கிடைத்தது.

Anonymous said...

//எந்த நிறுவனத்தில் இருந்து நேர்க்காணல் எனத் தெரியாமலே நேர்க்காணலா? //

இப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு, ஒரு வேலையில் இருந்து இன்னொன்றுக்கு முயற்சிக்கும் போது நான் Excel sheet இல் யாருக்கு என்ன விண்ணப்பம் எப்ப போட்டோம் உட்பட அனைத்து தகவல்களையும், மின்னஞ்சல்களையும் கணினியில் வகைப்படுத்தி வைப்பதுண்டு. பல நேரங்களில் பயன்பட்டிருக்கிறது.

வடுவூர் குமார் நலந்தானே!

வடுவூர் குமார் said...

நலம் தான் ஜான் போஸ்கோ, அங்கு எப்படி?

உங்கள் யோஜனையும் நல்லா இருக்கே!!