Wednesday, December 16, 2009

இதுக்கு காரணம் இருக்கும்?

எனக்கும் என் பையனுக்கும் வான்வெளி அதன் அமைப்புகள் மற்றும் இரவில் வானத்தையும் அதன் ஊடே தெரியும் நட்சத்திரங்களும் அதன் இருப்பிடங்களும் என்ற எண்ணங்கள் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு போனால் வரும்.மனைவிக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை அதன் தொடர்பில் வரும் படங்கள் பார்ப்பதிலும் எனக்கு தெரிந்து ஆர்வம் காட்டியதில்லை.

என்னுடைய தாத்தா எனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டு முற்றத்தில் உட்காந்துகொண்டு தனக்கு தெரிந்தததெல்லாம் என்னிடம் கொட்டிவிட்டு போனார்.விஷயங்களை சொல்லும் போதே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன் என்று என் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.ஒரு தலைமுறை மற்ற தலைமுறைக்கு தனக்கு தெரிந்ததை சொல்லி தகவல்கள் அழியாமல் காக்க வேண்டும் என்று நினைப்பவர்.இக்காலத்தில் இது அனைத்தையும் வட்டில்/இணையத்தில் போட்டு வைத்துவிடுவதால் அவர்கள் பேசுவதை கேட்க கூட யாருக்கும் நேரம் இருப்பதில்லை.என்னுடைய வயதான காலத்திலும் இதைத்தான் அனுபவிக்கப்போகிறேன் என்பது இப்போதே நன்றாக தெரிகிறது ஏனென்றால் நான் என்னுடைய அப்பாவிடம் பேசுவது சில வினாடிகளே,அதற்குள் மெல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் வெற்றிடம் உருவாகிவிடுகிறது.என் மனைவியிடமே அவ்வளவாக பேசுவதில்லை என்ற குறை அவ்வப்போது எழுகிறது அது என்னுடைய சுபாவமாக இருப்பதால் அப்பாவிடம் பேச விஷயம் இல்லை என்பது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.அவசியம் இல்லாத போது பேசுவதால் தான் பிரச்சனை எழுகிறது.

நான் பேசுவதே இல்லை என்ற மனக்குறையை போக்க தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு நானும் என் மனைவியும் போய்விடுவோம். நான் பேசுவதையோ அல்லது அவர்கள் பேசுவதையே கேட்டுவிட்டு கொசு தன் வேலையை ஆரம்பிக்கும் போது கீழே வந்துவிடுவோம். அப்படி ஒரு நாள் பேசிக்கொன்டு இருக்கும் போது என்னுடைய இருகுழல் நோக்கி மூலம் சில நட்சத்திரங்களை பார்த்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தேன்.அப்போது தான் ஞாபகம் வந்தது போல் "ஏங்க நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்" என்று மனைவி ஏதோ சொல்ல வந்தார்.
சொல்லு என்றேன்.

4 வருடத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 9.30 மணி இருக்கும் இங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது எதேச்சையாக மேலே பார்த்தேன் ஒரு பெரிய Space Ship மாதிரி ஒன்றை பார்த்தேன் என்றார்.எனக்கு தூக்கிவாரி போட்டது.

மேலும் தொடர்ந்தார்.

சரி நமக்கு தான் ஏதோ என்று கண்ணை கசக்கிவிட்டு தலையை தடவிக்கொண்டு திரும்ப மேலே பார்த்தேன் ஒன்றுமே இல்லை என்றார்.இந்த விபரங்களை வைத்து சன் டிவிக்கா விபரம் கொடுக்க முடியும்.என் மனைவி Space Ship பார்த்ததாக எனக்குத்தான் சொல்லமுடியுமே தவிர வேறு பிரயோஜனம் இல்லை அதுவும் 4 வருடங்களுக்கு முன்பு.

அது ஒரு புறம் மறந்து போய் கிடக்க,சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நானும் மனைவியும் மாடியில் அதே சமயம்(9.30 மணி) எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி என்றால் அவள் மீனம்பாக்கத்தை நோக்கி.திடிரென்று ஒரு ஒளி Trapezoidal Shape யில் சிறிய அளவில கட்டிட ஓரமாக மேலெழும்பி போனது.இப்போதெல்லாம் சில நேரம் கண்ணில் வெள்ளை ஒளி வந்து போவதால் அந்த மாதிரி இதுவும் போல என்று நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.பார்த்த சிறிது நேரத்தில் அவள் என்னிடம் கேட்டாள் நான் அந்த ஒளியை பார்த்தேனா? என்று.சரி ஏதோ நடக்குது என்று மட்டும் புரிந்தது.இந்த மாதிரி சிறிய ஒளி நகர்ந்து போவதை பார்ப்பது எனக்கு முதன் முறை அல்ல.அந்த முதல் முறை எப்போது என்று தெரிஞ்சுக்கனுமா?பதிவு பெரிசாயிடுமோ!!

பம்பாய் ஆமாம் அப்போது பம்பாய் தான். எனக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும்.அப்போது அங்கிருந்த மாமா வீட்டுக்கு ஒரு 3 நாள் விடுமுறைக்காக போயிருந்தேன்.மாமா வேலைக்கு கிளம்பும் முன் மணியடித்து பூஜை புணஸ்காரங்கள் முடித்து தான் அலுவலகம் போவார் அதனால் முன்னமே எழுந்து அதற்கான வேலையில் ஈடுபடுவார்.நான் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன வேலைக்கா போகப்போகிறேன் என்ற நினைப்பில் ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தேன்.மணி ஓசை கொஞ்சம் அதிகமானதும் இதற்கு மேல் வழியில் தூங்குவது நன்றாக இருக்காது என்று நினைத்து படுக்கையிலேயே உட்கார்ந்து கண்ணை விழிக்கலாமா வேண்டாமா என்ற யோஜனையுடன் இருந்தேன்.அப்போது ஒரு வெள்ளை நிற ஒளி வீட்டின் உள் இருந்து அப்படியே ஹாலை கடந்து வெளியில் போனது தெரிந்தது.ஆச்சரியமாக இருந்தாலும் யாரிடமும் அதைப்பற்றி கேட்கவில்லை.ஏதோ ஒன்று நம் அறிவிக்கு புலப்படாதது இருக்கிறது என்று தெரிந்தது.

இப்படிப்பட்ட எண்ணங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்குமோ என்னவோ,இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலக கணினியில் Google Earth யில் மேய்ந்துகொண்டிருக்கும் போது 22" மானிடரில் பளிச் என்று ஒன்று வித்தியாசமாக தெரிந்தது.நீங்களே பாருங்கள்.

வெளிக்கிரக மக்களை அழைக்க அல்லது அவர்கள் கவனத்தை கவர பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள் என்ற பேச்சு இருக்கும் நிலையில் வித்தியாசமான அமைப்பில் இருக்கும் கட்டிடங்கள் அவர்களை கவர்கிறதா?இதன் பின்னனி என்ன?வெளிகிரகத்தில் இருப்பவர்கள் இங்கு வருகிறார்களா? ஏன் காலையில் வருவதில்லை(பெரும்பாலும்)?

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

இது கொஞ்சம் தூரத்தில் இருந்து...



கொஞ்சம் அருகில் கட்டம் கட்டி காண்பித்திருக்கேன்.ஏதாவது வித்தியாசமாக இருக்கா?



கையை அசைப்பது போல் ஒரு உருவம்...



படத்தின் மீது சொடுக்கி பாருங்கள்.

என்ன விஜய் தொலைக்காட்சியில் வரும் "நடந்தது என்ன?" மாதிரி இருக்கா?

4 comments:

துளசி கோபால் said...

ஆஹா................ இதுதான் இதுவரை நீங்கள் போட்டதில் நீண்டது!!!!


பதிவுகள் படிக்க ஏலியன்ஸ் பூமிக்கு வர்றாங்க போல:-))))

சரி. ஜோக்கைவிட்டுட்டு விஷயத்துக்கு வரலாம்.

இந்த ஒளி விஷயம் உண்மைதான். சிலசமயம் 'பளிச்'னு ஒன்னு கடந்து போறதைப் பார்த்துருக்கேன்.

எங்க பாட்டி சொல்வாங்க..... உயிர்(ஆத்மா) பூமியை விட்டு மேலேகும்போது இப்படித் தெரியுமாம்.

geethappriyan said...

கலக்கல் , இன்னும் தெரிந்ததை சொல்லுங்கள்

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
விஷயம் இன்னது என்று முடிவானதும் எழுதியது அதனால் நீண்டுவிட்டது மீதியெல்லாம் மொக்கை தான் போலிருக்கு.
“ஒளி” விஷயம் இன்னும் மட்டும் ஏன்? எப்படி? என்ற கேள்விகள் பின் தொடர்கின்றன.

வடுவூர் குமார் said...

சொல்லுகிறேன் சொல்லுகிறேன். - கார்த்திகேயன்