Monday, December 22, 2008

துபாயா?சிங்கையா?(பாகம் 3)

பாகம் 1

பாகம் 2

இப்பகுதியில் மேலும் சில வித்தியாசங்களை பார்க்கலாம்.

சீதோஷ்ண நிலை:

சிங்கப்பூரில் மண்டையை பிளக்கும் வெய்யிலாக இருந்தால் மிக அதிகமாக (நான் பார்த்த வரை) 40 C இருக்கும்.மழைகாலங்களில் குறைந்த அளவாக 25~23 C இருக்கும்.இங்கு குளிராடைகள் எனக்கு தேவைப்படவேயில்லை.மழைகாலங்களில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் மழை பெய்துகொண்டிருக்கும் ஆனால் சில மணி நேரம் தான்.ஒரு சில தடவைகள் தொடர்ந்து பல மணி நேரம் மழை பெய்யவும் செய்கிறது.மற்ற மாதங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறையாவது மழை வந்துவிடும்.கடலில் நீர் ஏற்றம் அதிகமாகி அந்த நேரத்தில் மழையும் கூடுதலாக பெய்யும் நேரத்தில் சில தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்து வெள்ளமாகிவிடும்.என்ன தான் மழை பெய்தாலும் அடுத்த சில வினாடிகளில் சாலை துடைத்துவிட்டது போலாகி "மழை பெய்ததா?" என்று கேட்கும் அளவுக்கு இருக்கும்.பல மழைத்தண்ணீர் சேகரிக்கப்பட்டு பிறகு சுத்திகரிக்கப்பட்டு அதுவும் போதாமல் ஏரியில் கலக்கப்பட்டு அதன்பிறகு குடிநீராக மாற்றப்படுகிறது.இந்த நீரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் உள்ளூர்வாசிகளும் உண்டு.

துபாயில் நான் இறங்கிய மாதம் செப்டம்பர்,அதனால் வெய்யிலின் முழுமையான வீச்சை அனுபவிக்கவில்லை இருந்தாலும் பேருந்து நிறுத்ததில் நிற்கும் போது அங்கு நட்டுவைக்கப்பட்டிருக்கும் கம்பின் நிழல் கிடைத்தால் கூட போதும் என்று சொல்கிற அளவுக்கு வெப்பம் கடுமையாக இருந்தது.இன்னும் சில பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை.இங்கு மிக அதிகமாக 50 பாகை செல்சியஸ் வரை வெப்பம் வரக்கூடுமாம்,அந்த மாதிரி சமயங்களில் கட்டுமானத்துறையில் வெளிவேலை செய்பவர்கள் 12 மணியில் இருந்து 4 மணி வரை வேலை செய்யக்கூடாதாம்.இது அரசாங்க ஆணை.
அடுத்து குளிர்காலம்,இது அக்டோபர் மாதங்களில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து இப்போது அதிகாகிக்கொண்டுவருகிறது.மாலை 5 மணிக்கெல்லாம் குளிராடையில்லாமல் வெளியில் அதிக நேரம் நிற்கமுடிவதில்லை.கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
சமீப வருடங்களில் துபாயில் மழை அதிகரித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

தொலைதொடர்பு சேவை:

சிங்கையில் :Singtel,Starhub & M1 போன்ற 3 பெரிய நிறுவனங்கள் தான் தொலைப்பேசி சந்தாதாரர்களை பெற்றுள்ளது.இவர்களிடையே போட்டா போட்டி அதிகம் என்பதால் பல இலவச சேவைகளை வழங்கி சந்தாதாரர்களை கட்டிப்போடுகிறார்கள்.இவர்கள் போடும் போட்டிக்கு நடுவே ஊருக்கு அழைப்பதற்கு காலிங் கார்டு வசதியும் இருக்கிறது. 8 வெள்ளி(20 திர்ஹாம்) க்கு 80 நிமிடம் ஓரளவு தெளிவுடன் இந்தியாவுக்கு பேசும் வசதியும் இருக்கு.இணைய வசதி இருப்பவர்கள் VOIP யும் உபயோகிக்கமுடியும்.சின்ன ஊர் என்றாலும் இன்னும் சில இடங்களில் சிக்னல் தொல்லை என்று புலம்புவதும் தொடர்கிறது.
Dish TV க்கு இங்கு தடை

துபாயில் Etisalat & Du மட்டுமே கண்ணில்படுகிறது.ஒரு நிமிடம் இந்தியாவுக்கு பேச கிட்டத்தட்ட 3 திர்ஹாம் போய்விடுகிறது.VOIP தடைசெய்யப்பட்டுள்ளது.பாவம் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள்.இருவரிடமும் இணையமும் (அகலப்பட்டை)இருந்தால் MSN,GTALK & Yahoo உதவும்.
இங்கு பெரும்பாலும் Dish TV தான் .இது நாள் வரை உள்ளூர் நிகழ்சிகளை பார்ததே இல்லை.

சம்பள முறை:

இது சிங்கையில் பொதுவாக சில முறைகளே காணப்படும்.ஒன்று பேக்கேஜ் அடுத்து சம்பளம்,13ம் மாத சம்பளம் பிறகு போனஸ்.ஒரு சில வேலை அனுமதிசீட்டு உள்ளவர்களுக்கு மத்திய சேம நிதி இருக்கும்.(இப்போதும் இருக்கா என்று தெரியவில்லை).இந்த மத்திய சேம நிதி ஒரு அருமையான யோஜனை அதை செயல்படுத்தி இன்றும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிக்கொண்டிருக்கும் சிங்கை அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஒரு காலத்தில் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் இத்திட்டம் இருந்ததாம் அப்போதெல்லாம் நம்முடைய சம்பளத்தில் 50 விழுக்காடு எடுத்து நம்முடைய முதலாளி 50 விழுக்காடு போட்டு அது சேமநிதியாக வைத்திருந்தார்களாம்.காலப்போக்கில் பல மாற்றங்களால் இப்போது அது 20,16 ஆக மாறியுள்ளது.இது வயதுக்கு ஏற்றவாறு செலுத்தப்படும் தொகை மாறுதல் அடையும்.இதிலிருந்து வீடு வாங்க,மருத்துவச்செலவுக்கு(தேர்ந்தெடுக்கப்பட்ட),சில பங்கு முதலீட்டுக்கு என்று பணம் எடுத்துக்கொள்ளலாம்.இதில் சேமிக்கும் பணத்துக்கு வட்டியும் கிடைக்கும்.இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.இந்த மூலதனம் தான் பலரை சிங்கையிலேயே குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் அங்கேயே தங்கவும் முடிவெடுக்க முக்கிய பங்குவகிக்கிறது.

துபாயில்: பல சம்பளமுறை இருந்தாலும் பொதுவாக சம்பளத்துடன் வீட்டுவாடகை,மருத்துவ காப்பீடு,வருடத்துக்கு 30 நாள் விடுமுறை (சிங்கையில் இது 14~21),குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று வர டிக்கெட் செலவுகளை பொதுவாக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக கேள்விப்பட்டேன்.இங்கு மத்திய சேம நிதி கிடையாது.

சாப்பாட்டுச் செலவு:

சிங்கைக்கும் துபாய்க்கும் விலையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
சைவ சாப்பாடு சிங்கையில் (கோமளாஸ்) - 6 வெள்ளி(15 திர்ஹாம்)

துபாயில்(சரவண பவன்) -16 திர்ஹாம்.

(அன்னபூர்ணா) - 12 திர்ஹாம்.

மேலே சொன்னவற்றிலிருந்து அவரவர் தேவைக்கு தகுந்த மாதிரி யோசித்துப்பார்த்தால் எந்த ஊர் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுக்கலாம்.


நம் சொந்த ஊரை விட்டு வெளியில் வந்துவிட்டால் உலகம் முழுவதுக்கும் பொதுமாக நமக்கு இருக்கவேண்டியது "வேலை/சம்பளம்" ,இது இல்லாவிட்டால் துபாயாவது சிங்கப்பூராவது எல்லாம் ஒன்று தான்.

சிங்கை மாதிரி ஒரு ஊரில் இருந்துவிட்டு இங்கு வர விரும்பும் மக்கள் முதல் சில மாதங்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு மாற்றிக்கொள்ள சிரமப்படவேண்டும்,அதற்குப்பிறகு????

அதுவே பழக்கமாகிவிடும். :-))

4 comments:

சங்கரராம் said...

நான் புஜைராவில் இருக்கிறேன்.துபாய் பற்றி உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.நன்றி.

வடுவூர் குமார் said...

நன்றி சங்கரராம்.

திவாண்ணா said...

சிங்கைல டிஷ் டிவி தடையா? ஏன்? காரணம் சொல்லறாங்களா? ஆச்சரியமா இருக்கு!

வடுவூர் குமார் said...

வாங்க திவா
சிங்கையில் தடை தான். ஸ்டார் ஹப் நிறுவனத்துக்கு உரிமை கொடுத்திருக்காங்க அவர்களும் தீவு முழுவதும் கேபிள் போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.