Monday, August 31, 2009

திரு பா.ராகவன்

ச‌ரித்திர‌ம் என்று சொல்லும் போதோ அல்லது அந்த‌ வார்த்த‌யை பார்க்கும் போதோ என‌க்கு என் ப‌ள்ளி ஞாப‌க‌ம் தான் அதிக‌மாக‌ வ‌ரும்.இதிலென்ன‌ ப‌ல‌ருக்கும் அது தானே வ‌ரும் என்கிறீர்க‌ளா? ஓர‌ள‌வு உண்மை தான் ஆனாலும் அவ‌ர‌வ‌ர் அதை எதிர்கொண்ட‌ வித‌த்தில் மாறுபாடு இருக்கும் அல்ல‌வா?


நான் ப‌டித்த‌ நாகப்பட்டினம் தென்னிந்திய‌ திருச்ச‌பை உய‌ர்நிலைப் ப‌ள்ளியில் ச‌ரித்திர‌ வ‌குப்புக‌ள் எப்போதும் ம‌திய‌ம் அதுவும் சாப்பாட்டுக்கு பிற‌கு இருக்கும்.என்ன‌ தான் ப‌ழ‌ங்கால‌ க‌தை என்றாலும் சாப்பாட்டுக்குப் பிற‌கு எந்த‌ வ‌குப்பாக‌ இருந்தால் என்ன‌? க‌ண்க‌ள் த‌ன்னால் இழுக்க‌ ஆர‌ம்பித்துவிடும்.ப‌ல‌ரை மிர‌ட்டியே எழுப்பும் வேலை ஆசிரிய‌ருக்கு வ‌ந்துவிடும்,பாவம்.நான் 7 வ‌து ப‌டிக்கும் போகும் வ‌ந்த‌ ச‌ரித்திர‌ ஆசிரிய‌ர் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌வ‌ர் (பெய‌ர் ட‌பாலென்று ஞாப‌க‌ம் வ‌ர‌மாட்டேன் என்கிற‌து),நெடிய‌ உய‌ர‌ம், ப‌ழைய‌ கால‌த்து ம‌னித‌ர்க‌ள் உழைத்த‌ கை போல் ந‌ர‌ம்புக‌ள் வெளி தெரிய‌ கொஞ்ச‌ம் முர‌ட்டுத்த‌ன‌மாக‌ தோற்ற‌ம‌ளிப்ப‌வ‌ர்.வ‌ந்து இருக்கையில் உட்கார்ந்தால் பிரிய‌ட் முடியும் வ‌ரை எழுந்திருக்க‌மாட்டார்,கையில் க‌டிகார‌ம் இருக்காது ஆனால் அவ்வ‌ப்போது ச‌ரியான‌ நேர‌ம் சொல்லி அச‌த்துவார்.பாப‌ர்,அசோக‌ர் என்று சொல்லி அதை நாங்க‌ளும் ம‌னப்பாட‌ம் செய்து தேறிவிட்டோம்.இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஞாப‌க‌ங்க‌ள் ச‌மீப‌த்தில் த‌ண்ணீர் குமிழி போல் வெளிவ‌ந்த‌து அத‌ற்கு கார‌ண‌ம் நான் ப‌டித்த‌ ஒரு ச‌ரித்திர‌ தொட‌ர்.

செய்திக‌ள் கேட்ப‌து என்ப‌து என் வேலை நாட்க‌ளில் ஒரு தொட‌ர் நிக‌ழ்வு.தொலைக்காட்சி வ‌ந்திராத‌ நாட்க‌ள்,நக‌‌ர‌ங்க‌ளை விட்டு வெகு தொலைவில் வேலைக‌ள் என்ப‌தால் நாட்டு ந‌ட‌ப்புக்கு வானொலி செய்திக‌ளே ஒரே ஆதார‌ம்,அப்ப‌டி கேட்டுகொண்டிருந்த‌ நாட்க‌ளில் யூத‌ர்,பால‌ஸ்தினிய‌ர்,அர‌பிய‌ர்க‌ள்,அர‌பாத்,ஃபாதா & இஸ்ரேல்‍‍ ச‌ண்டை என்ப‌து காதில் விழும்.இது அத்த‌னையும் என்னை பாதிக்காத‌ நிக‌ழ்வுக‌ள் அத‌னால் இத‌ன் ஆதார‌த்தை தேடிப்போக‌வில்லை.யாரையும் கேட்டும் தெரிந்துகொள்ள‌வில்லை.


அர‌பாத் இற‌ந்த‌ போது கூட‌ இவ‌ருக்கும் இஸ்ரேலுக்கும் என்ன‌ ச‌ண்டை,இஸ்ரேல் எத‌ற்கு த‌ன்னை த‌னிதேச‌மாக‌ ஆத‌ரிக்க‌வேண்டும் என்று இவ‌ர்க‌ளிட‌ம் கேட்கிற‌து? அமெரிக்காவுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்,பால‌ஸ்தீனிய‌ர்க‌ளை கொசு மாதிரி ஏவுக‌ணை போட்டு கொன்றாலும் ஏன் திரும்ப‌ திரும்ப‌ அவ‌ர்க‌ள் ம‌னித‌ வெடிகுண்டுக‌ளாக‌ இஸ்ரேலுக்குள் போய் சாகிறார்க‌ள் என்று புரியாம‌ல் இருந்த‌து.ஜெருச‌லேம் என்ற‌ இட‌த்தை ஏன் கைப்ப‌ற்ற‌ இரு குழுக்க‌ளும் இப்ப‌டி பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள்? கேள்வி கேள்வி எல்லாமே கேள்வியாக‌ இருந்த‌து இர‌ண்டு வார‌த்துக்கு முன்பு வ‌ரை.

இது எல்லாவ‌ற்றையும் தெளிவுப‌டுத்த‌ ஒரே ஒரு க‌ட்டுரை அதுவும் த‌மிழில் ப‌டித்த‌ போது சொல்ல‌வொன்னா துய‌ர‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியிருந்த‌து.என்னை மாதிரி உங்க‌ளும் ச‌ந்தேக‌ம் இருந்தால் இங்கு போய் ப‌டித்துப் பாருங்க‌ள்.


திரு பா.ராக‌வ‌னின் "நில‌மெல்லாம் ர‌த்த‌ம்" தொட‌ர் 2005 யில் ரிப்போர்ட‌ரில் எழுதியிருந்தது.ப‌டிக்கும் போதே,க‌ண்முன் காட்சி சொல்லாம‌ல் விரிகிற‌து.ப‌ட‌ப‌ட‌க்கும் இதய‌த்துட‌னே ஒவ்வொரு நாளும் முடிக்க‌ வேண்டிவ‌ரும்.எவ்வளவு உயிர்கள்! அதன் மதிபே இல்லாமல் சும்மா வாழை மரத்தை வெட்டுவது போல் வீசி சாகடிக்கிறார்கள்,அதெல்லாம் விட விஷவாயு மூலம் ஓரினத்தை அழிக்கும் ஹிட்லர் என்று சோகத்தை மொத்தமாக படிக்கும் போது கையெல்லாம் நம்மை கேட்காமலே ஆடுது!! சில வருடங்களுக்கு முன்பு ஸ்கேண்டலர்’ லிஸ்ட் படம் பார்க்கும் போது கூட அதன் பின்புல விபரீதங்கள் புரிபடவில்லை.இத் தொடரை படிக்கும் போது தான் அதன் வீரியம் புரிந்தது.எழுத்துக்க‌ளுக்கிடையே ப‌ட‌மே இல்லாவிட்டாலும் எழுத்துக‌ளிலேயே அதை கொடுத்துவிடுவ‌தால் கொஞ்ச‌ம் கூட‌ அய‌ர்சியே தெரியாம‌ல் செய்துவிடுகிற‌து,இவ‌ரின் எழுத்து ந‌டை.

முழுவ‌தும் ப‌டித்து முடித்துவிட்டாலும் இன்று வ‌ரை அப்பிர‌ச்ச‌னைக்கு விடிவு வ‌ர‌வில்லையே என்ற‌ ஆத‌ங்க‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியுள்ள‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்.ச‌ரித்திர‌த்தை மொத்த‌மாக‌ மூடி ம‌றைத்து புதிதாக‌ எழுதி அத‌ற்கு விலையாக‌ இன்றும் ம‌னித‌ உயிர்க‌ள் செத்துக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌து தான் உண்மை.

4 comments:

ChandraWingChun said...

>> பெய‌ர் "ட‌பாலென்று ஞாப‌க‌ம் வ‌ர‌மாட்டேன்" என்கிற‌து

வித்தியாசமான பெயர் உங்க சரித்திர ஆசிரியருக்கு. சுருக்கமா எப்படி கூப்பிடுவீங்க? டபால்ன்னா? மொத்தி எடுத்து இருப்பாரே? :)))

வடுவூர் குமார் said...

வாங்க சந்திரா
அனேகமாக “காபிரியேல்” என்று நினைக்கிறேன்.அவருக்கு பட்டப்பெயர் என்ன? அப்படி எதுவும் வைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

தென்றல் said...

குமார், நலமா?

இந்த வலைப்பூவை பாத்தீங்களா?
"நில‌மெல்லாம் ர‌த்த‌ம்" --> http://nilamellam.blogspot.com/

வடுவூர் குமார் said...

நலம் தென்றல்,நீங்கள் நலமா?
அருமையான சுட்டியை கொடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றி.