Wednesday, August 10, 2011

மகிழுந்து


என்ன தான் போகும் வழிகளை பளிச் என்று காட்டியிருந்தாலும் “எதிர்” திசையில் தான் போவேன் என்று அடம்பிடித்த மஞ்சள் Top வாடகை மகிழுந்துகள் ஒதுக்கப்பட்டு காலத்தின் கட்டாயத்துக்கு ஏற்று ஓட்டத்தை நிறுத்த தயராக நிற்கின்றன.



சென்னை விமான நிலையத்தின் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள மகிழுந்துகள்.
அலை பேசியில் எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.




Saturday, July 30, 2011

என்ன செய்கிறார்கள் இவர்கள்?

படத்தை பாருங்கள்...ஏதோ கான்கிரீட்டை உடைக்கிறார்கள் அவ்வளவு தான் என்று இத்துறையில் இல்லாதவர்களுக்கு தெரியும், ஆனால் இதனுள் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கு.



கட்டிடம் தாங்கும் திறனை அதிகரிக்க Pile எனப்படும் கான்கிரீட் தூண்களில் வரும் பலவகைகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு Driven Pile என்னும் முறையைப்பற்றி சொல்லியிருந்தேன் அது போல் போடப்பட்டது தான் இது.இம்முறையில் போடும் போது சாதாரன நிலையில் இருக்கும் இடத்தின் மீது இவ்வியந்திரத்தை நிறுத்தி செய்வார்கள். வேலை முடிந்ததும் தேவையான அளவுக்கு இந்த Pile ஐ உடைத்துவிட்டு அஸ்திவாரத்துக்கு தேவையான கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள்.

தேவையான் அளவுக்கு உடைத்து...இந்த வேலை தான் மேல் உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.இந்த வேலையில் இவர்கள் செய்வது துளிகூட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்த போது...

ஏம்பா! இப்படி கண்ணுக்கு பாதுகாப்பு கண்ணாடி போட வேலை செய்கிறீர்கள்?

சார்,கண்ணாடி போடலாம் ஆனால் வேலை செய்யும் போது வியர்வை வழிந்து என் பார்வையை மறைக்கும் நான் உளி மீது அடிக்கவேண்டிய அடி தவறுதலாக கீழே உள்ளவர் மீது விழலாம். இது சம்மட்டி வைத்திருப்பவர் சொன்னது.

அப்படி என்றால் கீழே நிற்பவர் கண்ணாடி போடலாமே?

பதில் இல்லை.

கண் எவ்வளவு முக்கியமானது இவ்வளவு தூரத்தில் நிற்கும் நானே பல முறை யோசித்து தான் நிற்கிறேன் நீங்கள் இப்படி கவனம் இல்லாமல் வேலை செய்கிறீர்களே என்றேன்.

சார்,(இந்த சாரை எப்பத்தான் விட போகிறார்களோ!!) இதெல்லாம் எங்களுக்கும் புரிகிறது ஆனால் அதெல்லாம் வேலக்காகாது என்று முடித்துவிட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். தலைக்கவசம் போட வேண்டும் என்று தெரியும் ஆனால் இப்படி குனிந்து சம்மட்டி அடிக்கும் போது அது தலையில் இருந்து நழுவும் வாய்ப்பு உள்ளதால் எங்கள் நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது என்றார்கள்.

இந்த வேலையை பாதுகாப்பாக செய்ய பல முறைகள் இருந்தாலும் முழுமையாக மனித வளம் கொண்டு இவ்வேலையை செய்யும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.குத்தகைகாரர்கள் இயந்திரங்களை வைத்து வேலைபார்பதற்கு ஆகும் செலவை கணக்கிட்டு மனித வளத்தை நாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பார்த்தால் இவர்களின் தொழிற் திறமை தெரியும். முதலில் Pile ஐ சுற்றி இருக்கும் சுழற்கம்பியை எடுத்துவிட்டு பிறகு நேர் கம்பிகளை வெளியே எடுத்துவிட்டு எந்த இடத்தில் Pile ஐ உடைக்கவேண்டுமோ அங்கு சிறிது உடைத்துவிட்டு மேலே தட்டினால் கேக் மாதிரி விழுந்துவிடும்.

Sunday, June 19, 2011

கம்பிகளை இணைப்பது எப்படி?

கட்டுமானத்துறையில் கம்பிகளின் பயண்பாடு அதிகரித்த பிறகு ரொம்ப நாட்களுக்கு மிகச்சில முன்னேற்றங்களுடனே வந்துகொண்டிருந்தது அதில் மிக முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால் கப்லர் (இணைப்பான்) என்று சொல்லக்கூடிய முறையில் இணைப்பது.

இதற்கான தரக்கட்டுப்பாடு முறையை இங்கே சொல்லியிருந்தேன்.

கம்பிகளை இணைப்பது என்பது பழங்காலந்தொட்டு சிறிது வளைவுடன் கீழிருந்து வரும் கம்பியுடன் படத்தில் காட்டிய மாதிரி இணைப்பார்கள். இது எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் என்ற நியதிகள் இருக்கு அதனுள் சென்று விளக்கம் அளிப்பது என்பது உங்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தும் என்பதால் அதிலிருந்து எஸ் ஆகிவிடலாம்.



இதற்கடுத்து சில இடங்களில் இணைக்கும் கம்பிகளை வெல்டிங் முறையை உபயோகித்து சேர்ப்பார்கள். இம்முறை தேவை ஏற்பட்டால் மட்டுமே செய்வார்கள்.

இம்முறையில் மேலும் முன்னேறிய முறை என்றால் இந்த கப்லர் முறை. முதலில் உபயோகப்படுத்த வேண்டிய கம்பியின் இரு முனையிலும் Threading இருக்கவேண்டும் அதற்கு பிறகு தரம்வாய்ந்த கப்லர் மூலம் கம்பிகளை இணைக்க வேண்டும் அவ்வளவு தான்.இதனால் என்ன பயன்கள்? சில கீழே

1.கம்பிகளை வளைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும் என்ற நியதி இல்லை.
2.ஆட்களுக்கு கொஞ்சம் சுலபமான வேலை.
3.Lap Length என்று சொல்லப்படுகிற கம்பி நீளம் மிச்சம்.
4. வேலை ஆரம்பிக்கும் முன்பே இக்கம்பிகளை தயார் செய்து வைக்க முடியும் என்பதால் நேர மிச்சம்.
5.கம்பி கட்டும் நேரம் கொஞ்சம் குறையும்.
6.கம்பிகளை நீளத்துக்கு தகுந்த மாதிரி உபயோகிப்பதால் Wastage குறைய வாய்ப்புள்ளது.

பயன்கள் என்றால் அதற்கு எதிர்மறை விளைவுகளும் இருக்கத்தானே செய்யும் அவற்றில் சில

1.Coupler இன் விலை
2.கம்பிகளின் முனையை Thread செய்ய ஆகும் செலவு.
3.சில ரக கம்பிகளில் Thread செய்ய முடியாததால் அக்கம்பிகளை நிராகரிக்க வேண்டிவரும்.Wastage செலவு.

இதெல்லாம் ஆய்வு செய்து பலன் கூட இருக்கும் முறையை கடைபிடிப்பார்கள்.

ரோஸ் கலரில் குப்பி இருக்கும் இடத்தில் தான் கப்லர் இணைக்கப்பட்டு மேற்கம்பி பொருத்தப்படும்.



மேற்சொன்ன முறையை மேம்படுத்தும் விதமாக Threading இல்லாமல் கம்பியில் இருக்கும் Rib ஐ கொண்டே கப்லரை இணைக்கும் முறை வந்துள்ளது அது இன்னும் இங்கு பரவலாக காணப்படுவதில்லை.இம்முறை பரவலாக்கப்பட்டால் நேரமும் பணமும் மிச்சமாகலாம்.

Sunday, May 29, 2011

இதுவும் ஒரு வகை

எச்சரிக்கை:இது தொழிற்சார் பதிவு.

கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.



மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.



எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.

Saturday, May 28, 2011

உத்திரமேரூர்

அவ்வப்போது செங்கல்பட்டை தாண்டி செல்லும் போது இவ்வூர் தகவல் பலகை கண்ணில் பட்டாலும் அங்கு இருக்கும் கோவில்கள் மற்றும் பொக்கீழியிங்களை பற்றி அவ்வளவாக தெரிந்திருந்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஒருவர் அங்கு நடக்கும் புனரமைப்பை சொன்ன போது என்றாவது ஒரு நாள் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது.ஆயிரம் வருடங்களுக்கு மேலான தொண்மையான வழக்கங்களை (குடையோலை) கற்களில் செதுக்கி வைத்துள்ளார்கள். பழந்தமிழை படிக்கமுடிந்தவர்களுக்கு அருமையான விருந்து.

மாமண்டூரை தாண்டியதும் வலது பக்கத்தில் போக ஒரு அறிவிப்பு பலகை இருக்கும்,அவ்வழியே போனால் உத்திரமேரூரை அடையலாம்.





சரியான அறிவிப்பு பலகை இல்லாததால் பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே இவ்விடம் இருந்தாலும் மகிழுந்து ஓட்டும் போது சாலையிலேயே கவனம் இருப்பதாலும் கவனிக்க முடியாமல் நேரே இருக்கும் சுந்தர வரதராஜ கோவிலுக்கு போய் அருகில் இருக்கும் இடத்தில் மகிழுந்துவை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்பட்வர்களை கேட்டு இந்த கோவிலுக்கு வந்தோம்.சிறிய கோவில் சுற்றி உள்ள கற்களில் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்கள் அங்கங்கே தெலுங்கு எழுத்துக்களையும் காணமுடிந்தது.பழைய தமிழுக்கு இக்கால தமிழ் மொழியாக்கத்தை வாசலில் போட்டிருக்கும் பலகையில் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரம் இளம் மாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.





பழைய தமிழை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சுந்தரவதனராஜ கோவிலுக்கு போனோம்.இக்கோவிலை பார்த்து தான் பெஸன்ட் நகரில் இருக்கும் அஸ்டலக்ஷ்மி கோவிலை கட்டினார்களாம்.எப்போதோ ஒரு முறை அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிருந்ததால் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை.



கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.



ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.



கோபுர அழகு.

Monday, May 16, 2011

மாமல்லபுரம்.

ஒரு சில வாரங்களாகவே மகிழுந்துவில் நெடுந்தூரம் செல்லாமல் இருந்ததை நிவர்த்தி செய்யும் விதமாக காலையில் முடிவு செய்து மதியம் 2.50க்கு வீட்டை விட்டு கிளம்பி மத்திய கைலாஸ் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை மூலம் மாமல்லபுரம் போனோம்.சுமார் 1.45 மணி நேரம் ஆனது.மிக மோசமான சாலை என்று சொல்ல முடியாவிட்டாலும் அபாயகரமான சாலை என்றே சொல்லலாம்.இம்முறையில் இரண்டு முறை மாடுகளை இடிக்கப்பார்த்தேன் நல்ல வேளை தப்பித்தேன். சாலை தடுப்பு என்ற முறையில் அங்கங்கே கம்பி போர்ட்டுகளை வைத்திருப்பது வேகத்தை கட்டுப்படுத்தினாலும் ஒருபக்க வாகனங்களை மற்றொரு பக்க வாகனம் கவனித்து வழிவிட்டாலொழிய அவ்விடமும் விபத்து ஏற்படுதக்கூடிய நிலையிலேயே தான் உள்ளது.

பின்காலை பொழுதிலேயே சிறிதாக தலைவலி ஆரம்பித்திருந்தாலும் வெளியில் போனால் சரியாகிவிடும் என்று நினைத்ததற்கு நேர் எதிராக சதிராட்டம் போட்டது.சிற்பங்களை அனுபவித்து பார்க்கவிடாமல் கவனத்தை சிதரடித்தது.நாங்கள் பார்த்த சில படங்கள் உங்களுக்காக...

















கடற்கரை கோவிலை பார்ப்பதற்கு முன்பு குளிர் ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாலும் ஒரு வழிச்சாலை என்று திருப்பித்திருப்பி ஒரே சாலையில் பயணித்த வெறுப்பும் கூடியதால் அதை பார்க்கமாலேயே வெளியேறினோம்.

வண்டியில் எனக்கு குளிர மனைவிக்கு வேர்க்க மாற்றி மாற்றி குளிர்விப்பானை போட்டு கிண்டி வந்த நேரத்தில் தொண்டை வரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வாந்தி பக்கென்று வெளியே வந்தது.அவசரமாக வண்டியை ஓரம்கட்டி பார்க்கிங் விளக்கை போட்டுவிட்டு வெளியே ஓடி தலையை பிடித்து கொஞ்சம் கொட்டிவிட்டு மறுபடி வண்டியை எடுத்து வீட்டுக்கு வந்தோம்.

Friday, March 04, 2011

காளஹஸ்தி

இரண்டு மாதங்களாக அம்மிணிக்கு காளஹஸ்தி ஜுரம் ஆனாலும் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. போன வாரம் ஞாயிறு எல்லாம் சரியான திசையில் போய்கொண்டிந்ததால் காலை 10.30 க்கு கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டோம் அதற்கு முன்னால் எப்படி போகனும் என்று கூகிள் மூலம் தெரிந்துகொண்டேன்.

விருகம்பாக்கம்---->கோயம்பேடு----->புழல்------>கல்கட்டா நெடுஞ்சாலை---->தடா------> காளஹஸ்தி

என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் பல உள்ளூர்கள் குறுக்கிடுவதால் பல இடங்களில் வேகம் எடுக்கமுடியவில்லை.தடா வரை அவ்வளவு பிரச்சனையில்லை. தடாவில் இருந்து காளஹஸ்தி வரை உள்ள சாலையில் நிறைய வேகத்தடைகள் உள்ளன. நெடுஞ்சாலையில் ஓட்டிய பிறகு இங்குள்ள அறிவுப்புகளை பார்க்கனும் என்றே தோன்றுவதில்லை.111 கி.மீட்டர் தூரத்தை 2.15 மணி நேரத்தில் போனேன்.ஊருக்கு உள்ளே தெலுங்கில் பெரும்பாலான அறிவுப்புகள் இருப்பதால் என்னவோ கோவில் இருக்கும் இடத்தை கேட்டுக்கேட்டு போகவேண்டியுள்ளது.ஓரளவு விஸ்தாராமான கோவில், சிறப்புக்கட்டணம்/சாதாரண கட்டணங்கள் மக்களை இறை அருள் கிடைக்கும் நேரத்தில் கொண்டுவிடுகிறது.கோவில் உள்ளேயே ஏற்படுத்தி இருக்கும் நடைபாதைகள் மிகவும் குறுகலாகவும் நடக்கமுடியாத முதியவர்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.வரும் காலத்தில் யாரோ நெருக்கடியில் உயிர்விட சாத்தியம் அதிகமாக உள்ளது.வெளியேரும் வழியும் குறிப்பில்லாமல் இருக்கிறது.ஜனத்தொகை மிக அதிகமாகிவிட்ட இக்காலத்தில் கோவிலுக்கு போவது என்பது இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே.

கல்கி ஆஸ்ரமாம்!!










கோபுர தரிசனம்.



சரவண பவன் என்ற ஹோட்டல் இருந்தாலும் சுவை ஏதோ மாதிரி இருந்தது பசிக்கு ஓகே.

Friday, February 18, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 11, 2011

பேருந்து நாள்!!

வயசுப்பையனாக நான் இருந்த போதே இந்த கூத்தை கேட்டிருந்தாலும் நேரிடையாக பார்த்ததில்லை அதை சில நாட்களுக்கு முன்பு நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்லூரி முன் செய்த அட்டகாசத்தை பார்க்கவும்.

ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.






அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.

என்ன பொது அறிவு!!! படம் கீழே.

Wednesday, February 09, 2011

எப்போது ஓடும்?

கோயம்பேடுவில் இருந்து பில்லர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி போகும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தொல்லையில் இருந்து தப்பிக்க இப்போது வழியில்லை,அதாங்க இந்த மெட்ரோ வேலையினால் இருந்த 3 வழிப்பாதை இரண்டாகி எந்த வண்டி எதன் மேல் உரசும்,மோதும் என்ற பயத்துடன் தினமும் பயணிக்கவேண்டியுள்ளது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு விடியற்காலை இவ்விடங்களுக்கு போய் அவர் மூலம் போக்குவரத்து பாதிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார் நம் துணை முதல்வர், மேலும் 2013 யில் மெட்ரோ பயணிக்க ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருக்கார் அதற்கேற்ப்ப வேலைகளும் மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கு.கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதிகளில் வேலை வேகமாக நடந்துவருகிறது.




அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.




ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.

மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.

Thursday, February 03, 2011

Pre-Cast Girder

இத்தொழிற்நுட்பம் பற்றி பல இடங்களில் எழுதியிருந்தாலும் சமீபத்தில் சென்ற ஒரு வேலை இடத்தில் எடுத்த படம் கிடைத்தது.அதன் விபரம் மற்றும் அனுகூலங்கள் கீழே.



இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.



மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.



மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.

Sunday, January 30, 2011

சோலிங்கர்

ஜனவரி 26 - குடியரசு தினம் மிக முக்கியமாக அது விடுமுறை நாள்.இந்தியா வந்த பிறகு இந்த சனிக்கிழமை வேலை பல காரியங்களை அலுவலக நேரத்திலேயே பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கும் அதோடு ஞாயிறு நாளை மிகவும் திட்டமிடவேண்டிய நிலமைக்கு தள்ளுகிறது.இச்சூழ்நிலையில் தேர்ந்தடுத்தது தான் சோலிங்கர் பயணம்.
முதல் நாள் இரவே கூகிளில் தேடிய போது அரகோணம் போய் அங்கிருந்து போவது தான் சுலபம் என்று போட்டிருந்தார்கள்.என்னுடைய புரிதல் படி திருப்பதி திருப்பத்தில் போய் அதன் வழியே அரக்கோணம் போவது தான் சரி என்ற நிலையில் இருந்தேன்.மகிழுந்து வாங்கி என்னுடைய நெடுஞ்சாலை பயணத்தை முதலில் காஞ்சிபுரம் போய் தயார்படுத்திக்கொண்ட பிறகு இது இரண்டாவது பயணம்.
கோயம்பேடு வழியாக “அண்ணா நகர்” என்று போட்டிருக்கும் திருப்பத்தில் திரும்பினால் பெங்களூர் நெடுஞ்சாலை வரும்.நம்மூர் சாலை வழிகாட்டிகள் ஆட்டோ ஓட்டுனரும் சாலை ஓரத்தில் நிற்கும் மனிதர்கள் தான்.இந்த அண்ணா நகர் திருப்பத்தில் பெங்களூர் நெடுஞ்சாலை என்று போட்டிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருந்திருக்கும்!! முதல் கொடுமையை விட்டுத்தள்ளிவிட்டு திருப்பதி சாலையை நோக்கி பயணித்தோம்,ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் திருப்பதி சாலை திருப்பத்தை காண்பிக்கும் அறிவிப்பு பலகையில் பாதியை காணோம், “திருப்” மட்டுமே இருந்தது.ஏற்கனவே திருத்தணி போயிருந்த மணைவி இவ்வழியை காட்டிலும் காஞ்சிபூரம் தாண்டி வலது கை பக்கம் திரும்பினால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றார்,உடனே வழியை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வண்டியைவிட்டேன்.பாதிவழி போகும் போது அவருக்கும் சந்தேகம் வர அங்கு சாலை ஓரம் நிற்பவர்களிடம் வழி கேட்டோம். வருகிற வலது திருப்பத்தில் திரும்பி மறுபடி வரும் சாலையில் இடது பக்கம் திரும்பி போனால் அரக்கோணம் சாலை வரும் என்றார்கள். மோசமான சாலை 40 கி.மீட்டருக்கு மேல் போகவிடாமல் செய்தது.வந்த ஒரே பெரிய ஊர் சாலை ஓர டிக்கடையில் டீ சாப்பிட்ட படியே கடை முதலாளியிடம் பேச்சு கொடுத்தோம்.எங்களுக்கு சரியான வழியை சொல்லிவிட்டு திரும்ப வரும் போது பானாவரம் மற்றும் காவேரிபட்டினம் வழியாக வந்தால் நெடுஞ்சாலை வந்துவிட்டும் என்றார். மனதில் குறித்துக்கொண்டேன்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 9.50 க்கு சோலிங்கர் வந்து சேர்ந்தோம்.பெரிய மலை யில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சின்ன மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிகளை தரிசித்தோம்.1305 + 400 படிகளை ஏறி இறங்கினோம்.மொத்தம் 2.30 மணி நேரம் ஆனது.





கீழே உள்ள கோவிலை ஏன் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.



கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மதியம் 1 மணிக்கு கிளம்பினோம்.வழியை விஜாரித்துக்கொண்டு பானாவரம் மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக நெடுஞ்சாலைக்கு 1.30 மணிக்கு வந்தோம்,அருமையான சாலை அவ்வளவு போக்கு வரத்தும் இல்லை.நெடுஞ்சாலை பிடித்த பிறகு 80 ~ 90 என்று வந்து வீட்டுக்குள் வரும் போது 3.15 PM.என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் சாலை ஓரத்தில் நிற்கும் இந்த கண்டெய்னர் லாரிகள் ஒருவித சிக்னலும் கொடுக்காமல் சாலைக்குள் வந்து விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் அப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டது நல்ல வேளையாக சரியான நேரத்தில் பிரேக் போட்டு சமாளித்தேன்.
போகும் போது 99 கிமீ ஆனது வரும் போது 115 கிமீட்டர் ஆனது.

எல்லை பிரச்சனை


கைபையை சோதனை போடும் குரங்கு

Sunday, January 23, 2011

இது தான் தலைமை பண்பு.

இயக்குனர்களின் 40 ஆண்டு கால விழாவில் திரு ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று

உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?

யோசிக்க கூட நேரமில்லாமல் சொன்ன பதில் “ லி குவான் யு” சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர்.

அப்படியே கீழே உள்ள லிங்கில் போய் மேற்கொண்டு படிங்க.

http://news.asiaone.com/News/AsiaOne%2BNews/Singapore/Story/A1Story20110122-259636.html

என்ன ஒரு நிதர்சன அறிவு அதோடு தன் நாடு என்ற நிலைப்பாடு. You are simply GREAT Mr Lee Kuwan Yew.

இப்படி ஒரு தலைவர் நம் நாட்டுக்கு வேண்டிய கட்டாயம் ரொம்பவுமே கட்டாயப்படுத்த வேண்டிய நிலமையில் உள்ளோம்.

Sunday, January 16, 2011

சுதந்திரம்.

கோவா போன போது கண்ணில் பட்ட கொடி "சுதந்திரம்"


Sunday, December 26, 2010

விளக்கில்லா விமான நிலையம்.

கடந்த 21ம் தேதி வேலை விஷயமாக பெங்களூரு வழியாக கோவா செல்லவேண்டியிருந்தது. தலையும் நானும் ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் கூடிய வரை அவர் கண்ணில் படாமல் இருக்கவே முயற்சித்தேன், காரணம் பயமில்லை தேவையில்லாமல் பேசவேண்டிவ்ருமே என்பது தான்.
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.



இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.



மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??

Monday, November 29, 2010

இது சாயுமா?

நேற்று போரூர் பக்கம் போய்விட்டு அப்படியே மனப்பாக்கம் வழியே கட்டுமான பொருட்காட்சி பார்க்க போகலாம் என்று விரைவுச்சாலை உபயோகித்துக்கொண்டிருந்தேன்.



தவறுகளை கண்டுபிடித்தே கண்களுக்கு பழக்கமாகிப்போனதால் இக்கட்டிடம் நின்ற நிலை தடாலடியாக நிற்கவைத்து அப்படியே புகைப்படம் எடுக்க வைத்தது.இப்பதிவை போடுவதற்கு முன்பு ஒரு சந்தேகம்,என்னுடைய கணிப்பு சரியா? போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு படத்தை Zoom செய்த போது ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் வழிந்து கறை உள்ளதை பார்த்தது இதுவும் பைசா கோபுரம் போல் சாய்ந்துகொண்டிருப்பது உறுதியானது. யாராவது தூக்கு குண்டு போட்டுப்பார்த்து தகுந்த அதிகாரிகளிடம் சொன்னால் பொது ஜனத்தை காப்பாற்றலாம்.

படத்தை Zoom செய்து பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Sunday, November 28, 2010

சென்னை விமான நிலையம்.

விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.

உள்நாட்டு முனையம்


வெளி நாட்டு முனையம்.



சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.





படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.