Thursday, May 13, 2010

சென்னையில் வீடு வாங்கியிருக்கிறீர்களா?

சொன்னா நம்பமாட்டீங்க,சமீபத்தில் நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று சுமார் 1 வருடமாக அலைகிறேன்..ஹூகும் முடியவில்லை.எப்படியும் பேங்க் லோன் போட்டே ஆகனும் என்ற நிலை இருந்தாலும் நான் பார்க்கிற அல்லது எனக்கு காண்பிக்கிப்படுகிற வீடுகள் அவ்வளவும் சில முக்கியமான விஷயங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டியுள்ளது.சென்னைக்கு உள்ளே கட்டப்படும் பல வீடுகள் நடுத்தர குத்தகைக்காரர்களாகவே அல்லது பில்டர்ஸ்களாலேயே கட்டப்படுகிறது.இவர்கள் வேலையை எடுத்து முன் அனுபவம் உள்ள குத்தகைக்காரர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் அதன் பிறகு அவ்வப்போது உள் நுழைந்து பார்பதோடு சரி.எனக்கு தெரிந்த அளவில் தரக்கட்டுப்பாடு என்பது அதுவாக நிகழ்தாலொழிய இவர்களால் கொடுக்க இயலாது ஏனென்றால் இவர்கள் சொல்லும் காரணம்
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.

நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).

உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.

உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.

இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.

ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??

ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.

சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.

வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.

இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.

ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???

மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)

இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.

6 comments:

geethappriyan said...

குமார்,

புற நகர் சென்னையில் தனி வீடு வாங்க குறைந்தது 50 லட்சமாவது வேண்டும்,
புற நகர் சென்னையில் 20லட்சத்தில் ஃப்லாட் பார்த்தால் இப்படித்தான் பல கோளாறுகளுடன் இருக்கும்.

பழைய ஃப்லாட் வாங்கி குடியேற பாருங்கள்.நான் அப்படி தான் செய்தேன்.

எல்லா பில்டர்களும் ப்ளிந்த் ஏரியாவில் சிங்கிள் பெட்ரூம் ஃப்லாட் என்றால் 80-100 சதுர அடியும், டபுள் பெட் ரூம் என்றால் 150 சதுர அடி வரையும் திருடுகின்றனர். யாருக்காவது cad drawing கேட்டு வாங்கி ஏரியா செக் செய்ய் வேண்டும் என்ற உணர்வு இருக்கிறதா?காமன் ஏரியா அதில் சேரும் என பில்டர்கள் காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.அதற்கென்று இப்படியா?


ஸீப்ராஸ்,சைத்தன்யா,போன்ற சில பெரிய பில்டர்கள் ரூல்ஸ் படி ஃப்லாட் கட்டுகிறார்கள்,ஆனால் அவர்கள் ஃப்லாட் 1கோடிக்கு மேல் விற்கிறது.இப்போது வாட் வேறு உண்டு.

ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் தான் நீங்கள் நினைப்பது போல கோளாறு இல்லாமல் நியாயமான விலையில் கிடைக்கும்.

சென்னையில் என் பி.ஆர்க் படித்த நண்பன் விஜய்யும் அவரின் பி இ படித்த அண்ணனும் நியாயமாக ஃப்லாட் கட்டி விற்கின்றனர்.எல்லாம் வெளிப்படையாக இருக்கும்.இப்போது மேடவாக்கத்தில் ஒரு ப்ராஜக்ட் செய்ய போகிறார்கள்.arcvijay@gmail.com,9445112051

வடுவூர் குமார் said...

வாங்க கார்த்திகேயன்
சூடான பதிலிலேயே நீங்களும் என்னை மாதிரி அனுபவ பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.கொஞ்சம் தெரிந்த நம்மிடமே இவ்வளவு பிட்டு என்னும் போது சராசரி பொதுஜனத்திடம் எவ்வளவு இருக்கும்? சோக மயம் தான்.
உங்கள் நண்பர் மின்னஞ்சல் முகவரி பலருக்கும் உபயோகப்படட்டும்- நானும் தொடர்பு கொள்கிறேன்.
கோடியை எல்லாம் நினைத்தால் தூக்கமே வராது ஆனால் சென்னை புற நகரில் இது சர்வசாதரணமாக பேசப்படுகிறது.

துளசி கோபால் said...

ஆஹா..... நான் நொந்துக்கிட்டு இருந்த விஷயம்! நாங்க இருந்த வீட்டுலே மாடி விலைக்கு வருது. விலையைக் கேட்டதும் துண்டைக்காணோம் துணியைக் காணொமுன்னு ஓடணும். அதுவும் இங்கே இந்தக் கட்டிடம் வயசு வெறும் மூணரை வருசம்கூட ஆகலை. என்னமோ ஹைதரலி காலத்துலே கட்டுனதுபோல வெளிப்புறமும் மொட்டை மாடியும்.

வீட்டுக்கு முன்னாலேயும் பின்னாலேயும் வேற வீடுகளுக்குக் கட்டிட வேலை நடக்குது. அந்த 'அழகைப் பார்த்து' நொந்து நூடுல்ஸ் ஆனதுதான் மிச்சம்.

சென்னையில் வீடு வாங்கும் ஆசையை அப்படியே வெட்டிக் கடாசலாமுன்னா....... முடியலை.

மார்க் ஸ்வர்ணபூமியில் 16 லட்சம் முதல் வீடுன்னு அறிவிப்பு பார்த்தேன். ஹாலிடே ஹவுஸா ஒரு பெட் ரூம் ப்ளாட் வாங்கிப்போடலாமான்னு ஒரு நப்பாசை.

சிட்டிக்குள்ளே வாங்கிட்டு வீட்டைப் பூட்டி வச்சுட்டுப்போனால்..... அதையும் எடுத்துக்கும், வித்துரும் கூட்டம் ஒன்னு அண்டர்க்ரவுண்ட்லே இருக்காமே.

நல்லதாக் கிடைச்சா நம்ம காதுலேயும் போடுங்க.

இடுகைக்கு நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
நம்ம கார்த்திகேயன் எண் கொடுத்திருக்கார் பாருங்க,வேண்டுமென்றால் முயலுங்கள்.எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன்.
நான் பார்த்த ஃபிளாட்களின் விபரம் கொடுக்கவில்லை அதையும் சொல்லியிருந்தால் மயக்கம் தான் போட்டு விழனும்.நமக்கே இப்படி என்றால் சாதாரண வருவாய் உள்ள சென்னை வாசிகள் என்ன செய்கிறார்கள்,அவர்கள் எல்லாம் அங்கு வீடே வாங்கமுடியாதா?கொடுமையாக இருக்கு.விலைகளை சாதாரண மக்கள் எட்டும் வரையில் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? அல்லது வங்கி தான் கடன் கொடுக்கிறதே என்று சும்மா இருக்கா என்று தெரியவில்லை.
அடுத்து வங்கி லோன் - சமீபத்தில் ஒரு நண்பர் 3 லட்சம் பிஸ்னஸ் லோன் கேட்டு போனாராம்...40 விழுக்காடு கொடுக்கனும் சரியா என்றார்களாம்!!! இது எப்படி இருக்கு?

ஜெய்லானி said...

போகிற போக்கை பார்த்தால் அடுத்த ஜெனரேசன் என்ன ஆகுமோ ?

வடுவூர் குமார் said...

என்ன ஆகுமோ?

வாங்க‌ ஜெய்லானி,அடுத்த‌ ஜென‌ரேச‌னா? இப்ப‌வே ப‌ட‌ப்பை/காஞ்சி என்று வெளியில் வாங்கிப்போட்டால் அவ‌ர்க‌ள் பிழைத்துக்கொள்வார்க‌ள்.