Saturday, October 11, 2008

கோர்பகான் கடற்கரை

மற்ற பெரும்பாலான தேசங்களுக்கு ஞாயிறு விடுமுறை என்றால் இங்கு வெள்ளி விடுமுறை.முதல் வெள்ளிக்கிழமையை எப்படி கொண்டாடுவது என்று பேச்சு நடக்கும் போது வீட்டு குழந்தைகள் ஏதோ பெயர் சொன்னார்கள்,ஒன்றும் விளங்கவில்லை.புதிய தேசத்தில் தலை நுழைத்து அங்கு உள்ளவர்கள் பேசும் போது கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்குமே அப்படி இருந்தது அப்போது.எங்கு போனாலும் சரி என்றேன்.அவர்கள் பேசும் போது ஃபுஜூரா என்ற பெயர் மட்டுமே கேட்ட மாதிரி இருந்தது. மதியம் சுமார் 2 மணிக்கு கிளம்பினோம்.பாலைவன பகுதியில் அருமையான சாலையின் மேல் வண்டி போக ஆரம்பித்தது.இந்த சாலையை எமிரேட் சாலை என்றார்கள்.எல்லா எமிரேட் சாலைகளையும் இணைப்பதால் அந்த பெயர் வந்திருக்கும் போல் இருக்கு.

கீழே உள்ள வரைப் படத்தை பாருங்கள்.



சுமார் 190 கி.மீட்டர் பயணம்,வண்டி எப்போதும் 100~120 கி.மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.இது தான் அந்த சாலையின் வேகக் கட்டுப்பாடு.சீரான நேர் சாலை.



கொஞ்ச தூரம் வந்த பிறகு மலைகள் தென்பட ஆரம்பித்தன இதன் கற்கள் பாளம் பாளமாக இருந்தது.எளிதாக உடைத்துவிடலாம் போல் தோனியது.பாலைவன மத்தியில் இந்த மலைகளால் அந்த இடம் கொஞ்சம் குளுமையாக இருப்பதாக தோனியது.







இன்று வரை மணல் கலந்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் அந்த மலைகளின் மேல் மணல் துகள்கள் படிவுகளை காணமுடிகிறது.

ஒரு வழியாக மாலை 4.15க்கு கடற்கரையை வந்து சேர்ந்தோம்,அவ்வளவாக கூட்டம் இல்லை.சில சேட்டன்மார்கள் மட்டும் கழுத்தளவு ஆழத்தில் நின்றுகொண்டு பந்து விளயாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.






ஒரு பக்கம் மலை மறு பக்கம் போர்ட் இதற்கிடையில் தண்ணீர், அலைகூட இல்லாமல் குளம் மாதிரி அமைதியாக இருந்தது.குளிப்பதற்கு பயமில்லாமல் குளிக்ககூடிய கடல் இது.அங்கு ஒரு படகை வைத்து ஒருவருக்கு 6 திராம் என்ற கட்டணத்தில் கடலில் கொஞ்ச தூரம் சென்று திருப்பி கொண்டுவிடுகிறார்கள்.ஒரு பங்களாதெஷி தான் ஓட்டுனர்.சுகமாக இருந்தது.

மாலை ஆறு மணிவரை தண்ணீரில் இருந்துவிட்டு பிறகு அங்கிருக்கும் ஒரு கடையில் பர்கரும் ஒரு குளிர்பானமும் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.பர்கர் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு சோகமாகி போகவேண்டிய நிகழ்ச்சி- தப்பித்தது 4 வயது பெண் குழந்தை.பெரியவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த குட்டிப்பெண் தன் அண்ணனை தேடி சாலை குறுக்கே போய் முதல் லேனில் நிற்க எதிரே வேகமான கார்-ஹாரனுடன்,நல்ல வேளை குழந்தை காரை நோக்கி ஓடாமல் நான் கத்தியதை பார்த்து என்னை திரும்பிப்பார்க்க...உடனே ஓடி அப்படியே அலேக்காக தூக்கி மறுபக்கம் வந்துவிட்டேன்.அவளின் பக்கத்தில் நான் இருந்ததால் செய்யமுடிந்தது.அவளின் அப்பா அப்படியே சிலையாகி என்னசெய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்.நம்மில் பலர் இந்த மாதிரி சம்யங்களில் எல்லாம் உறைந்து போவதை பல முறை நானே அனுபவித்திருக்கேன்.மூளை சொல்லும் வேகத்தில் நம்மால் செயல்படமுடிவதில்லயா? யோசிக்க வேண்டிய விஷயம்.

மறுபடியும் நீண்ட சாலைகள் வழி நெடுக மின்விளக்குகள், வாகனம் ஓட்ட பிரச்சனையே இருக்காது என்று நினைத்தால் தவறாக முடிய பல சான்ஸ் கொட்டிக்கிடக்கிறது.

பாதிவழியில் சித்தப்பா பையனுக்கு கொஞ்சம் மூடு அதிகமாகிவிட்டது போலும்,வண்டின் வேகத்தை 120,130,140,150,160.........165 என்று ஓட்டிக்காண்பித்தான். வண்டி 165 யில் ஓடிக்கொண்டிருக்கும் போது "பளிச்" என்று ஒரு மின்னல்.

இங்கு ரேடார் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டை மீறும் வண்டிகளை பிடிக்க நிறுவியிருக்கும் கேமிரா தன் பணியை செய்திருக்கும் போல் இருக்கு.இதுவரை அங்கிருந்து கடிதம் வரவில்லை என நினைக்கிறேன்.என்ன மூனு பாயின்ட் மற்றும் கட்டணம் கட்டவேண்டியிருக்கும்.

அவரின் தங்கமணிக்கு பயங்கர கோபம், மீதி பயணம் முழுவதும் அசாத்திய மௌனமாக கழிந்து வீடு திரும்பிய போது நள்ளிரவையும் கடந்திருந்தது.

3 comments:

jeevagv said...

சமயத்தில் செய்த உதவி, ஞாலத்தில் மாணப் பெரிது, குமார், வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

குழந்தையைப் பற்றிய வரிகள் வந்ததும் ஒருநிமிசம் நெஞ்சே நின்னுபோச்சு.

கடவுளாப் போய்க் காப்பாத்துனதுக்கு நன்றி.

நல்லா இருங்க குமார்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா & துளசி
அந்த சமயத்தில் எனக்கும் ஒரு நிமிடம் என்ன செய்வது என்ற குழப்பம் தான்.ஏதோ அந்த குழந்தை பண்ணிய அதிர்ஷ்டம் நான் பக்கத்தில் நின்றது, அது ஓடாமல் அங்கே நின்றது.