துபாய்க்கு வந்து 20 நாளாகிறது,ஒவ்வொன்றாக சரி செய்யும் பணியில் இறங்கியிருக்கேன்,இதற்கிடையில் நண்பர்கள் குழாமும் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது।வலைப்பதிவர்கள்,உறவினர்கள் என்று பலர் எண்கள் தொலைப்பேசியை நிரப்ப ஆரம்பித்துள்ளது.
நேற்று வரை காலை நேரத்தில்,என் சித்தப்பா பையன் தன்னிடைய மகிழுந்துவில் என்னை என் வேலையிடத்தில் இறக்கிவிட்டு விடுவான், மாலை பேருந்து பிடித்து வீடு திரும்பிவிடுவேன்.என்னுடைய வேலையிடத்தில் இருந்து வீட்டுக்கு வர நேரடியாக பேருந்து இல்லை என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளும் புது புது தடங்களை பிடித்து அதன் மூலம் நிலவியலை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.எப்போதும் போர்ட் சயீட் (Port Saeed)வரை பேருந்தில் போய் அங்கிருந்து நடந்தே வீட்டுக்கு வந்துவிடுவேன்.நடைக்கு நடை அதே சமயத்தில் உடற்பயிற்சியுமாகிவிடும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தடம் எண் 34 ஐ எடுத்தேன்,இந்த பேருந்தும் அவ்வழியே தான் போனது,நான் இறங்கும் இடத்தில் வேண்டுமென்றே இறங்காமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம் என்று காத்திருந்தேன்.பேருந்து போகுது போகுது போய்கொண்டே இருந்தது,ஏனென்றால் அதற்கு அடுத்த நிறுத்தம் பக்கத்தில் ஏதும் இல்லை என்பதே.என்ன பிரச்சனையோ வீதியெங்கும் கார்கள், ஆமை வேகத்தில் சென்று நான் போகும் நேரத்தை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருந்தன.மாலை 6.03 ஏறிய நான், தடம் மாறிய இடத்தில் இறங்கும் போது மாலை 7 மணி.
நான் இருக்கும் வீட்டுக்கு போக எதிர்சாரியில் போய் அங்கிருந்து பேருந்து பிடிக்கவேண்டும்.சாலையை தாண்டி அந்த பக்கம் நடந்தேன்.இங்கு சாலையில், வேலை நடக்காத இடமே கிடையாது போலும். மெட்ரோ என்று சொல்லப்படுகிற ரயில் வண்டிக்கான தடம் சாலையின் மத்தியில் தயாராகிக்கொண்டு வருகிறது,அதற்காக அங்கங்கெங்கே சாலை தடுப்புகளை உருவாக்கிவைத்துள்ளார்கள்.அனேகமாக இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் தயாராகிவிடும் போல் உள்ளது.
இந்த பக்கம் மீண்டும் பேருந்துக்காக காத்திருந்தேன், பேருந்துகள் வந்தவுடன் நம்மூர் மாதிரி முட்டி மோதித்தான் ஏறவேண்டும் ஆனால் பெண்களுக்கு சிலர் சலுகை காட்டி கொஞ்சம் வழிவிடுகிறார்கள்.சில பேருந்துகளில் குறிப்பிட்ட அளவு தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.ஓட்டுனர் ஏறுவதற்கு முன்பே எவ்வளவு பேர் ஏறவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.சில பேருந்துகள் இவ்வாறு கட்டாயப்படுத்துவதில்லை.பேருந்துக்கான கட்டணம் 2 திராம்,எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம்.சிங்கை மாதிரி கார்டை தட்டி பிரயாணம் செய்யும் வசதி இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் ஓட்டுனரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கவேண்டியுள்ளது.ஏறும் பாதையில் இரண்டு கதவுகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் திறந்து ஏறுபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.
ஒருவழியாக 20 நிமிடங்கள் கழித்து ஏற இடம் கிடைத்த பேருந்தில் ஏறி வீட்டுக்கு பக்கத்தில் இறங்கினேன்.மணி 7.40. பேருந்து நிறுத்ததில் உள்ள பலகையில் அங்கு வரும் பேருந்துகளின் எண்கள் குறிக்கப்பெற்று இருக்கும் அதில் ஏதேச்சையாக பார்த்த போது நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வரும் ஒரு பேருந்தும் இருந்தது.அது தான் தடம் எண் 48.அதை பார்த்தவுடன் ஒரு பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததாக புளகாங்கிதம் அடைந்தேன்.இனிமேல் சித்தப்பா பையனை கொண்டுவிடச்சொல்ல வேண்டாம் என்று அவன் திரும்பி வந்ததும் சொன்னேன்.சரி முயற்சித்துப்பார் என்றான்.
இன்று காலை வழக்கம் போல் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு பஸ் நிறுத்தத்துக்கு 7.08க்கு வந்தேன்.சுமார் 30பேரில் இருந்து 50 பேர் வரை பல தேசத்து மனிதர்களும் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.சில சேர்ந்தே வந்தது,சில சேர்ந்தே வந்தாலும் நிற்காமல் போனது.என்னுடைய தடம் 48 மட்டும் கண்ணிலேயே காணும்,அதற்குள் என் உறவினர் கூப்பிட்டு பஸ் கிடைத்ததா? என்றார்,விபரம் சொன்னவுடன் நான் அங்கு வருகிறேன் அதற்குள் பஸ் வந்தால் போய்விடு இல்லாவிட்டால் நான் உன்னை கூப்பிட்டு போகிறேன் என்றான்.
மணி 7.40.. பஸ் வரவில்லை
மணி 8.00 பஸ் வரவில்லை.. தெருவே ஓ! என்று இருக்கிறது.
மணி 8.14 இப்போது தான் 48 தடம் வந்தது.சுமார் 78 நிமிடங்கள் பஸ் நிறுத்தத்திலேயே கழிந்தது.இதற்கிடையில் என் உறவினர் வந்துவிடுகிறேன் என்று சொன்னதால் பேருந்தில் ஏறாமல் அவருக்காக காத்திருந்து 8.45 க்கு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
இதை "குசும்பனிடம்" சொன்ன போது... இதெல்லாம் சகஜம் என்றார்.அனுபவம் பேசுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் முன்னாள் லண்டன் மேயர் பொது போக்குவரத்தை மேம்படுத்தி வசதி குறைந்த மக்களுக்கு உதவுமாறு செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்,அப்போது நினைத்தேன் இவருக்கும் ஏன் இந்த வேலை என்று?
இப்போது புரிகிறது. :-)
பி.குறிப்பு: ஓட்டுனர்களுக்கு பெரிய தேவை இங்குள்ளது விருப்பமுள்ளவர்கள் அவர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment