Tuesday, October 07, 2008

ஊர் சுற்றல். (துபாய்)

துபாய் வந்த முதல் நாள் இரவு தூக்கத்தில் போய்விட்டது.கால வித்தியாசம் அவ்வளவாக தெரியாமல் மறுநாள் காலை எட்டு மணிக்கு தான் எழுந்தேன்.இன்று இங்கு விடுமுறை என்பதால் (எனக்கு) மெதுவாக வேலைகளை முடித்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு..சரி அப்படியே காலார நடந்துவிட்டு வரலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கொஞ்சம் திராமை பையில் வைத்துக்கொண்டு கிளம்பினேன்.எவ்வித இலக்கும் இல்லாமல் கால் போன போக்கில் காலை சுமார் பதினோரு மணிக்கு கிளம்பினேன்.

சரியான வெய்யில்; இருந்தாலும் காற்று அடித்துக்கொண்டு இருந்த்தால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை.பல குறுக்கு சந்துகள் மற்றும் சாலைகளை கடந்துபோய்கொண்டிருந்தேன்.ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு வீட்டிலும் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.மரம் என்று அங்கங்கே பேரிச்சை மரம் மற்றும் வேப்ப மரங்கள் இருந்தன.அந்த நிழலில் சில தொழிலாளர்கள் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள்.
ரமலான் மாதம் என்பதால் பொலிவிழந்த கடையின் வியாபரம் அப்பட்டமாக தெரிந்தது.

என்கெங்கோ சுற்றிய பிறகு, தண்ணீரைத் தேடி ஓடும் ஆமைக்குஞ்சு மாதிரி,கிரீக் என்று சொல்லப்படும் தண்ணீர் பகுதியை அடைந்தேன்.படகுகளையே உணவகமாக மாற்றி வைத்திருக்கும் பல படகுகளை கரையில் அனைத்துவைத்திருந்தார்கள்.நோன்பு நேரம் என்பதால் எதிலும் ஆள் நடமாட்டம் இல்லை.
இப்பொது தான் கொஞ்சம் வெப்பத்தின் மகிமை தெரிந்து ஏதாவது குடிக்கலாம் என்று தோனியது.பொது இடங்களில் அவ்வாறு செய்யக்கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம் இருந்தது,தாகத்தோடு அதற்கு எதிர்புறம் உள்ள சாலையை கடந்து ஒரு அங்காடி உள்ளே நுழைந்தேன்.குளிர்பதனப்பட்ட கடைத்தொகுதி என்பதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது.கடைத்தொகுதியில் உள்ள ஒரு சுற்றுலா அட்டையில் அங்குள்ள மியூசியம் பற்றி போட்டிருந்தார்கள்.எங்கு போவது என்ற இலக்கு இல்லாத்தால்,சரி மியூசியம் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அங்கு கொஞ்சம் சுற்றிய பிறகு வெளியில் வந்த போது ஒரு சேட்டன் இன்னொருவரிடம் ஐசிஐசிஐ வங்கியின் கணக்கு திறக்க வழிமுறைகளை சொல்லி அவரிடம் ஒரு கணக்குக்காக மன்றாடிக்கொண்டு இருந்தார்.சேட்டனிடம் மியூசியத்துக்கான வழியை கேட்டேன்,அதற்கு அவர் நீங்கள் கிரீக்குக்கு அந்த பக்கம்(பர் துபாய்) போகனும் என்றார்.பேருந்து உண்டா? என்றேன்.இருக்கும் என்றார்,அதற்கு மேல் அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதால் நகர்ந்துவிட்டேன்.
இதுவரை நடந்துவந்துகொண்டிருக்கும் போதே வழி நெடுகிலும் அங்கெங்கே பே போன் என்று சொல்லப்படும் தொலைப்பேசிகள் இருந்தன ஆனால் அதில் பல அரத பழசாக இருந்தது.கையடக்க தொலைப்பேசி வந்துவிட்டதால் இதை யாருமே கண்டுகொள்ளவில்லை போலும்.அங்கு இங்கு என்று தேடி இதில் போட உபயோகிக்கும் தொலைப்பேசி அட்டையை ஒரு கடையில் வாங்கினேன்,அப்போது ஒருவர் ஒரு குளிர்பான பாட்டிலை வாங்கி மறக்காமல் ஒரு நெகிழிப் பையில் போட்டு மறைத்து எடுத்துப்போனார்.
புரிந்த்து.

நானும் அதே மாதிரி செய்து தண்ணீர் தாகத்தை தணித்துக்கொண்டேன்.

நான் வாங்கிய அட்டையை பல தொலைப்பேசியில் போட்டும் ஏதோ காரணத்தால் பேசமுடியவில்லை,பிழைச்செய்தியுடன் நின்றது.சரி நமக்கு தான் தெரியவில்லை என்று பக்கத்தில் உள்ள கடைத்தொகுதியில் தமிழ் வாசனை அடிக்கும் ஒருவரிடம் கேட்டேன்,இப்படி அட்டையை போடுங்க பிறகு அங்கு உள்ள திறையில் வரும்படி செய்யுங்கள் என்றார்.அதையே தான் அட்டையிலும் எழுதியிருக்கிறார்கள் ஆனால் திறையில் எதுவும் வரவில்லை என்றேன்.மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து மற்றொரு போனில் போட்டு திரையில் ஒன்றும் வராத நிலையில் 0 போட்டு அழைத்த போது தொடர்பு கிடைத்தது.என்னவோ போங்க என்று மனதுக்குள் நினைத்து நான் முன்னமே சொல்லாத உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் பேசினேன்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இப்படி ஒவ்வொரு மகிழுந்து நிறுத்தும் இடத்துக்கு பக்கத்தில் ஒட்டகம் மாதிரி நிறுத்திவைத்துள்ளார்கள்.மகிழுந்து நிறுத்தும் கட்டணம் இதன் மூலம் வசூலிக்கிறார்கள்,இது நம்ம சூரியனார் கொடுக்கும் வெப்பத்தின் மூலம் இயங்குகிறார்.



காலை முதல் மாலை வரை வாரி வழங்கும் சூரிய வெப்பம் இரவுக்கு சரியாக இருக்கும் போல்.

இன்னும் தொடரும்.....

2 comments:

Anonymous said...

தொடருங்கள்..

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி தூயா.