Saturday, June 28, 2008

ஒளிரும் புழுக்கள்.

நம்ம சகபதிவர் துளசி கோபால் குகைக்குள் போனதையும் அங்குள்ள ஒளிரும் புழுக்களைப் பற்றியும் இங்கு சொல்லியிருந்தார்.இதை படிக்கும் போது பிபிசி யில் போட்ட ஒரு நகர் படம் ஞாபகம் வந்தது அது உங்கள் பார்வைக்காக...

இதை எப்படி வெட்டிப்போட்டேன் என்பதை என்னுடைய லினக்ஸ் பதிவில் சொல்கிறேன்.



நன்றி: பிபிசி

Friday, June 27, 2008

நடப்பது.. நடக்கப்போவது(பாகம் 1)

இதற்கு முந்தைய பதிவு இங்கே

பல இடங்களுக்கு விண்ணப்பம் செய்தாலும் எங்கிருந்தும் பதில் வரவில்லை,அதன் பிறகு இணையத்தில் தேடிய போது பல வேலை விளம்பரங்கள் கண்ணில் பட்டன.

அதே சமயத்தில் வீடும் கைவிட்டுப்போனதால் ஒரு பெரிய மூச்சுடன் நிம்மதியாக இருந்தேன்.

அவ்வப்போது கண்ணில் படும் இணைய வேலை கொடுப்பதாக சொல்லும் நிறுவனத்தில் பதிவு செய்தாலும் எதில் இருந்தும் கூப்பிடுவதாக இல்லை.இப்படியே போய்கொண்டிருக்கும் நாட்களில் கத்தாரில் வேலை செய்யும் ஒருவர் ஜிடாக்கில் வந்தார்.அவரும் கட்டுமானத்துறையில் தான் இருந்தார் ஆனால் பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை.பொதுவாக அவரிடம் உரையாடிக்கொண்டு இருக்கும் போது சிங்கையில் வேலை விபரங்களை கேட்டார் அதோடு அங்கு தான் வரமுடியுமா? என்றும் கேட்டார். காலத்தின் கொடுமையை பாருங்கள் நான் அங்கு போகப்பார்க்கிறேன்,அவர் இங்கு வரப்பார்க்கிறார்!! இங்குள்ள நிலமையை சொன்னேன் அத்தோடு நான் முயற்சிக்கும் இடங்களை பற்றியும் சொன்னேன்.அவர் உள்ளூர் தினசரியின் இணைய தொடுப்புகளை கொடுத்து முயற்சிக்கச்சொன்னார்.அத்தோடு நில்லாமல் இங்கு ஏதாவது தினசரியில் விளம்பரம் வந்தால் அனுப்புகிறேன் என்று சொல்லி சிலவற்றையும் அனுப்பினார்.அனுப்பிய அவ்வளவு விண்ணப்பமும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.அங்கு போயே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் அவை எதுவும் என்னை பாதிக்கவில்லை.

இப்படி போய்கொண்டிருந்த நாட்களில் மற்றொரு விளம்பரத்தை நம் நண்பர் அனுப்பியிருந்தார் அது உள்ளூர் நாளிதழ் "கலீஜ்டைம்ஸில்" வந்திருந்தது. அதை பார்த்தவுடன் ஆச்சரியமான ஆச்சரியம் ஏனென்றால் என் தகுதிக்கு ஏற்ற வேலைக்காக இருந்த்து, அத்தோடு அது சிங்கப்பூரில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனம்.விண்ணப்பம் செய்வதற்கு முன்பு சின்னதாக குழப்பம்... சிங்கப்பூர் நிறுவனம், ஆள் தேடி விண்ணப்பித்ததோ துபாயில்...இங்கிருந்து நான் விண்ணப்பித்தால் கூப்பிடுவார்களா? மாட்டார்களா? என்று.இணையம் தான் இருக்கே!! கல்லை விட்டெரிந்து பார்ப்போம் என்று போட்டுவிட்டு மறந்துவிட்டேன்.இது நடந்தது போன வருடம் அக்டோபர்/நவம்பர் மாதம் இருக்கும்.



மேலே உள்ள மாதிரியெல்லாம் ஆவேசமாக போடலைங்க. :-)

போன வருடம் தீபாவளி சமயம், விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு போய் தீபாவளி கொண்டாடலாம் என்று நினைத்து தலைவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பித்தேன்.வர வேண்டிய புதிய வேலை கண்ணுக்கு மட்டுமே தெரிகிற மாதிரி இருக்கும் கானல் நீர் போல் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது. வேலை செய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனதாலும் சும்மா இப்படியே இருந்தால் தானாக மூளையில் சாகும் செல்லுக்கு நாமே தண்டனை கொடுத்து சாக அடிப்பது போல் இருந்தது. சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு தினமும் வந்து போவது வேறு உறுத்திக்கொண்டு இருந்தது.விடுமுறை கேட்டதும் தலைவர் நிம்மதி பெருமூச்சு விட்டு "போய் வாங்க தம்பி" ஆனால் நீ வந்ததும் என்னிடம் வேலையில்லை,அதனால் உன்னை அடுத்த வேலையிடத்துக்கு மாற்றல் செய்துவிடுகிறேன் என்றார்.ரொம்ப சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன்.

ஊருக்குப்போய் திரும்ப வந்தவுடன் பக்கத்தில் உள்ள ஒரு வேலையிடத்துக்கு மாற்றல் ஆனேன்.இங்கும் வேலை சரியாக தரப்படவில்லை.மிச்சம் மீதி வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன்.கமலஹாசன் கூட 8 மணி நேரம் நடித்துக்கொண்டு இருக்கமாட்டார்,ஆனால் எனக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டது. இந்த வேலை எனக்கு முன் அனுபவம் இல்லாத்தால் திறம்பட நடிக்க முடியாமல் புது தலைவரிடம் முழித்தேன்.சரியான கிறுக்கராக இருக்கும் என் புதிய தலைவருக்கும் எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி பெரிதாக ஆரம்பித்தது.

இவ்வேளையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. என் பெயரை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு என்னை நேர்கானலுக்கு அவர்கள் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள். நான் தான் கணக்கு வழக்கில்லாமல் உள்நாடு/வெளிநாடு என்று போட்டிருந்தால் இந்த அம்பு எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் நேர்காணலுக்கு போனேன்.

எப்போதும் போல் விசாரிப்புகள் முடிந்ததும் அவர் என்னை கேட்டார், "எப்படி உனக்கு நாங்கள் துபாயில் கொடுத்த விளம்பரம் மூலம் இங்கிருந்து விண்ணப்பித்தாய்?" என்று. அப்போது இவர்கள் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று பிடிபட ஆரம்பித்தது. இணையம் மூலம் கிடைத்தது என்றேன்.

Wednesday, June 25, 2008

நடந்தது .. நடப்பது .. நடக்கப்போவது.

நடந்தது...

ஒரு 3 வருடங்களுக்கு முன்பு என்னுடைய சித்தப்பா பையன் துபாயில் இருந்து சாட் செய்துகொண்டிருக்கும் போது, ஏதேச்சையாக என்னை துபாய் வரும்படி கூப்பிட்டான்.கட்டுமானத்துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஒரு 2 மாதம் விடுமுறை போட்டுவிட்டு வந்தால் நிச்சயம் வேலை வாங்கிவிடலாம் என்று சொன்னான்.அப்போது என் வீடு, என் தலைமேலும் தோளிலும் சேர்ந்து உட்கார்ந்து அழுத்திக்கொண்டு இருந்தது.அதை முதலில் இறக்காமல் சிங்கையைவிட்டு வெளியில் கிளம்பமுடியாது அதோடு வேறு சில இடைஞ்சல்களும் மறைமுகமாக இருந்ததால், அவனிடம் இப்போது நான் வரமுடியாது பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பேச்சு வார்த்தை நடந்த போது வேலைக்கு பிரச்சனையில்லாமல் இருந்தது,இருந்தாலும் வேலை சுவாரஸ்யம் இல்லாமல் போய்கொண்டிருந்தது.அவ்வப்போது சனிக்கிழமை செய்தித்தாள் மூலம் வேலை எங்காவது காலியாக இருக்கா? என்று பார்க்கும் போது துபாய் நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று கட்டம் கட்டி போட்டிருந்தன.இது சிங்கையில் அதிசியம் அதுவும் மத்திய கிழக்கு நாடுகள் சிங்கையில் இருந்து ஆட்கள் தேடுகிறார்களே என்று.சிங்கை ஆட்களுக்கு சம்பளம் அதிகம் என்பதால் பக்கத்தில் உள்ள நாடுகள் தேவைக்கு இந்தியாவையோ,மலேசியாவையோ அல்லது பிலிபைன்சில் தேடுவார்கள்.

நூல் விட்டு பார்க்கும் எண்ணத்துடன் உள்ளூர் நிறுவனத்துக்கு போட்டேன்.அந்த உள்ளூர் நிறுவன Advertisement யே ஒரு மாதிரி லொல்லாக இருந்தது.வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்களுக்கு இருமொழி (ஆதாவது ஆங்கிலம் மற்றும் சீனம்) தெரிந்திருக்கவேண்டும் என்று கேட்டிருந்த்து.வேலையோ மத்திய கிழக்கில், எதற்கு சீனம் அங்கு என்று மண்டையை குடைய,அதையே குறிப்பிட்டு உங்களுக்கு ஆட்சேபனையில்லாவிட்டால் சீனம் தெரியாத என்னை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்று போட்டிருந்தேன்.பதில் வரவில்லை. வேலைக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு லொல்லா? என்று நினைத்து என் கடிதத்தை கடாசியிருக்கலாம்.

அதோடு நில்லாமல் துபாய் கம்பெனி விளம்பரத்துக்கும் என்னுடைய தகவல்களை அனுப்பிவைத்தேன்.இரண்டு மாதம் கழித்து மின் அஞ்சலில் பதிலோடு கூடிய ஃபார்மும் அனுப்பி இன்றைய தேதிக்கு நேர்காணலுக்கு ஆர்சர்ட் சாலையில் உள்ள ஹோட்டலில் பார்க்கச்சொன்னார்கள் துபாய் நிறுவனத்தார்.

சொன்னதேதிக்கு போனேன்,நேர்காணல் முடிந்தது,சம்பளம் எவ்வளவு வேணும் என்று கேட்டபோது நிஜமாகவே திணறினேன்.அங்குள்ள நிலமை அவ்வளவாக தெரியாததால் முழித்தேன்.பிறகு ஏதோ சொல்லி சமாளித்தேன். என்னுடன் வந்த மற்றொரு பிலிபைன்ஸ் பொறியாளர் என்னிடம் வந்து எனக்கு அமெரிக்க டாலர் 5000 தருவதாகவும் ஒரே மாதத்தில் அங்கு போய் சேரவேண்டும் என்றார்.இங்குள்ள குடும்ப நிலமை மற்றும் அவர் வீட்டை ஒப்படைக்க ஆகும் காலம் எல்லாவற்றையும் கணக்கு பண்ணி கலங்கிப்போயிருந்தார்.

என்னை மட்டும் பிறகு தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.நானும் சரி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.கவலைப்படவில்லை ஏனென்றால் நான் போகப்போவதாக எண்ணமே இல்லையே!!
இதற்கிடையில் பிரிட்டன்காரர் ஒருவர் நெடு நெடு என்று வந்தார்,அவரை உடனே அழைத்து (அவருக்கு வரிசையெல்லாம் கிடையாது) வேலைக்கான ஆர்டரை கொடுத்த போது “கால்கரியாரின்” பதிவுகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. அனறு முழுவதும் வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன்.

இப்போது ஓரளவு அங்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து போனதால் வகை தொகையில்லாமல் மத்திய கிழக்கில் இருந்து வரும் அவ்வளவு நாடுகளுக்கும் விண்ணப்பித்தேன்.அதிலேயே 2 வருடம் ஓடிவிட்டது.வெகு சிலரே கூப்பிட்டனர் அதில் ஒருவர் கத்தாரில் இருந்து இந்தூர் நேரத்தில் இரவு 12 மணிக்கு கூப்பிட்டு சம்பள பேரம் நடத்தினார்.நான் தூக்க கலக்கத்தில் இருப்பதால் காலையில் கூப்பிடுங்கள் என்றேன்,அப்போது தான் சிங்கையில் என்ன நேரம் என்றார்!!! இப்படியும் ஒரு அங்கு வேலைசெய்யும் பெங்காலிக்காரர். :-(

அதன் பிறகு எந்தவித தகவலும் இல்லை,மற்றும் அங்கிருந்து வரும் விளம்பரங்களும் குறைந்துவிட்டன.

பதிவு அதிக நீளமானது போல் இருக்கு,அடுத்த பதிவில் மீதியை சொல்லிவிடுகிறேன்.

Tuesday, June 24, 2008

கோபுர தரிசனம்.

போன பதிவில் திருவண்ணாமலை படங்கள் போட்டிருந்தேன் அதன் தொடர்ச்சி கீழே..

கோபுர தரிசனம் நல்லது என்று பெரியோர்கள் சொல்லக்கேட்டிருக்கேன்.. அந்த நல்லது உங்களுக்கும் நடந்தால் மகிழ்ச்சி தான்.







Sunday, June 22, 2008

திருவண்ணாமலை

பலருக்கு முக்தி கொடுத்துக்கொண்டு இருக்கும் இத்தலத்தை காணும் பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை ஆனால் சமீபத்தில்(நேற்று) எடுத்த படங்கள் கிடைத்தது. என்னை மாதிரி பலர் இருக்ககூடும் என்பதால் அதை இங்கு வெளியிடுகிறேன்,பார்த்து மகிழுங்கள்.








இன்னும் நிறைய படங்கள் இருப்பதால் முடிந்தால் அடுத்த பதிவில் போடுகிறேன்.

Saturday, June 21, 2008

காதலாகிக் கனிந்து..

தலைப்பு கவிதை மாதிரி இருக்கா?
அது என் தப்பு இல்லை, இது பாலகுமாரனனின் சுயசரிதை போல் எழுதிய புத்தகத்தின் தலைப்பு.



ஆரம்பத்தில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் தான் படிக்க ஆரம்பித்தேன்,சில வரிகள் படித்தவுடன் ஆர்வம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.என்ன தான் இவர் என்னவிட மூத்தவர் என்றாலும் பெரும்பாலான நிகழ்வுகள் எனக்கு நேர்ந்த மாதிரியே இருப்பதால் படிக்கப் படிக்க ஆர்வம் கூடுகிறது.அப்படி படித்த ஒரு பத்தியை தான் கீழே கொடுத்துள்ளேன்.திகவின் ஆதிக்கம் பெருகிய காலத்தில் இந்த மாதிரி ஆட்கள் கோவில்கள் பக்கத்தில் இருந்து கொண்டு பகுத்தறிவை வழங்கிக்கொண்டு இருப்பார்கள்.




இந்த நாவலில் பெரும் பகுதியை அவருடைய குரு விசிறிச்சாமியார் என்று புகழப்பட்ட “யோகிராம்சுரத்குமார்” க்கு ஒதுக்கிட்டார்.அவருடன் இவருக்கு உள்ள அனுபவம் இவரிடம் மறைமுகமாக கொண்டுவிட்ட காஞ்சிப்பெரியவர் என்று சுவாரஸ்யமான நிகழ்வுகளை அருமையாக வரிசைப்படுத்தியுள்ளார்.இவர் குமாரனுக்கு விசிறிச்சாமியார் முன்னின்று பூணூல் கல்யாணம் செய்துவைத்தது ஆச்சரியப்படவைக்கிறது.அந்த நிகழ்வு குறுந்தட்டில் இருக்காம்,யாராவது தெரிந்தால் யூடியூபில் ஏத்துங்கப்பா.

பாலகுமாரன் சினிமாவில் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள்,அவரது மனைவி சுகவீனம் அடைந்து பிழைத்தது மற்றும் இவர் திறந்த மார்புச்சிகிச்சை செய்துகொண்டது மற்றும் புகைப்பதற்கு எதிராகவும் சொல்லியுள்ளார் நாள் ஒன்றுக்கு 120 குச்சி பிடித்தவர்.இப்போது விட்டுவிட்டார் என்பது ஆறுதல் செய்தி.

பாலகுமாரனை பற்றி அறிந்துகொள்ள படிக்கலாம்.

Friday, June 20, 2008

தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி

சற்று முன் இங்கு தமிழ் செய்தியில் சொன்ன செய்தி இது.முடிந்தால் நாளை இதன் நகர் படத்தை போடுகிறேன்.

இங்கு தொழிலாளர்கள் வருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் விளைவில் கப்பம் கட்ட வீடு / மனை என்று பலவற்றை அடகுவைக்கும் நிலைக்கு சிங்கை அரசாங்கம் செமத்தியாக ஆப்பு வைக்கப்போகிறது.அப்ப இதுவரை கொடுத்த பணம்?? அது அவ்வளவு தான்.

இனிமேல் அந்த அளவுக்கு கொடுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.இவ்வளவு கால தாமதமாக கொண்டுவந்தாலும் தொழிலாளர்கள் படும் அவஸ்தை அரசாங்க கண்ணுக்கு தெரிவதே நல்ல செய்தி தானே??

தொழிலாளர்கள் நலனை காக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கத்தை மனமார வாழ்த்துவோம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

Monday, June 16, 2008

துக்ளக் கேள்வி - பதில்.

ஊரில் இருக்கும் வரை அதுவும் துக்ளக் கிடைக்கும் இடமாக இருந்தால் வாங்காமல் இருக்கமாட்டேன்.அதில் எதை ரசிக்கிறனோ இல்லையோ கேள்வி பதில் எல்லோரும் ரசிக்கும் படி இருக்கும்.

இங்கு வந்த பிறகு அவ்வப்போது வாங்குவது உண்டு அதுவும் கொஞ்ச நாளில் விட்டுப்போனது.சிரங்கூன் சாலை போவது குறைந்தது,உள்ளூர் அரசியலை இங்கிருந்து படித்து என்னவாகப்போகிறது என்ற எண்ணம் அதோடில்லாமல் வயசானதும் காரணமாக இருக்ககூடும்.

என் வேலை இடம் ஜூரோங் பக்கத்துக்கு மாறிய பிறகு சாப்பிட்டு முடிந்தவுடன் இருக்கும் நேரத்தை பக்கத்தில் உள்ள நூலகத்தில் கழிப்பேன்.அப்படி செலவழிக்கும் நேரத்தில் பல வார துக்ளக்குகள் கண்ணில் பட்டது. அப்படியே அள்ளிவிடலாமா? என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டு ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு புத்தகமாக படித்துவருகிறேன்.
அப்படி இன்று ஒரு கேள்வி - பதில் தான் கீழே...


கேள்வி: "துக்ளக்" க்கு போட்டியாக நீங்கள் எந்த பத்திரிக்கையை சொல்வீர்கள்?

பதில்: பாம்பு பஞ்சாங்கம்.

சிரிப்பை அடக்கமுடியாமல் அவசரம் அவசரமாக வெளியே ஓடிவந்துவிட்டேன்.

துகளக் மிக மிக இளைத்துவிட்டது,கொஞ்சம் வேகமாக காற்று அடித்தால் அவ்வளவு தான்.

Sunday, June 15, 2008

தமிழ்நெட் 99

நேற்று நடந்துமுடிந்த பதிவர் கலந்துரையாடலின் போது பாரி அரசிடம் இருந்து இந்த தட்டச்சு ஒட்டியை இலவசமாக பெற்றேன்.எவ்வளவு முறை கேட்டும் அதற்காக பணம் பெற்றுக்கொள்ளவில்லை.

இதை நடைமுறைக்கு கொண்டுவந்த முறையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும்/ விளைவுகளையும் விளக்கிச்சொன்னார்.

இதை முயற்சிக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு இதை முயற்சித்தேன் (ஒட்டியிலாமல்) கொஞ்ச நேரத்தில் சோர்வைக்கொண்டு வந்துவிட்டது.புதிய முறை அல்லவா?(எனக்கு).

நேற்று இந்த ஒட்டி கைக்கு வந்ததும், இன்று மதியம் முயற்சிக்கலாம் என்று கை கொண்டு ஆரம்பித்துள்ளேன்,வெற்றி அடைகின்றேனா? என்று இனிமேல் தான் பார்க்கனும்.

கணினி திருவிழா

எப்படியும் ஓராண்டில் குறைந்த பட்சம் இரண்டுதடவையாவது நடைபெரும் வழக்கம் கொண்டது இத்திருவிழா.இங்கு இச்சமயத்தில் சில பொருட்கள் குறைந்தவிலையில் கிடைக்கும்,தேடி அலையவேண்டும்.

இம்முறை என் கண்ணில் பட்டவரை GPS யின் விற்பனை அதிகமாவது போல் தோன்றியது.விலை 300 வெள்ளிக்கு கீழ் இல்லை. (1 வெள்ளி= 30 ரூபாய்).கார் கைவசம் இல்லாத்தால் இதைப்பற்றி கவலைப்படவில்லை.மற்றபடி வழக்கம் போல் மடிக்கணினி,கேமிரா & LCD,Plasma தொலைக்காட்சி திரைகளில் மக்கள் கூட்டம் காணமுடிந்தது.

சில படங்கள்...








எவ்வித சாமான்கள் வாங்கும் எண்ணம் இல்லாத்தால் அப்படியே சுற்றிவிட்டு மணியை பார்த்தால் மாலை 5.15.பதிவர் கூட்டம் 6 மணி என்பதால் அப்படியே கணக்கு போட்டேன்,சரியான சமயத்துக்கு போய்விடலாம் என்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். 5.30 க்கு சிட்டிஹால் நிலையம். மின்வண்டி எடுத்து பெடோக் வந்த போது 5.45.கோவியார் சொன்ன பேருந்து வெளியில் உள்ள நிறுத்தமா? அல்லது பேருந்து நிலையத்தின் உள்ளேயே என்று பார்த்தபோது அதற்கு இன்னும் நடந்து நிலையத்தின் உள்ளே போகனும் என்று தெரிந்தது.தேடிப்பிடித்து பேருந்துக்கான இடத்தை அடைந்தபோது மிகப்பெரிய வரிசை நின்றிருந்தது.அதற்குள் மணி ஆறாகியிருந்தது.செந்தில் நாதனை கூப்பிட்டு நிலவரத்தை சொல்லி வர சிறிது நேரம் ஆகும் என்று சொன்னேன்.பேருந்து வந்து அங்கு போய் சேரும் போது மணி 6.30 க்கு மேலாகியிருந்தது.

மற்றவை.... கோவி பதிவில் பார்க்கவும்.

Friday, June 13, 2008

ரஜினி மந்திரவாதியா?

இந்த சலனப்படம் ஏதேச்சயாக பார்க்க நேர்ந்தது.இங்குள்ள தொலைக்காட்சியில் “நாம்” நிகழ்ச்சியில் போட்டார்கள்.

பலருடன் நடிந்த அனுபவம் இந்த அனுபம் கேருக்கு, அவர் நம் நடிகர் ரஜினிகாந்தைப்பற்றி சொல்லியுள்ளதை கீழே உள்ள நகர் படத்தில் பார்க்கவும்.



Hats Off Mr Rajinikanth.

நன்றி: வசந்தம் சென்ரல்.

Tuesday, June 10, 2008

யோகா - சிங்கையில்

ஊர் முழுக்க,அல்ல உலகம் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கும் இந்த யோகா சிங்கையில் கல்லூரிகளுக்குள்ளும் பரவ ஆரம்பித்துவிட்டது.

போன வாரம் செய்தியில் வந்த தொகுப்பு இது,பார்த்து மகிழுங்கள்.





நன்றி: வசந்தம் சென்ரல்

Sunday, June 08, 2008

பிரமிட்

ஒரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது,ஆதாவது (சரியான) அளவில் செய்யப்படும் பிரமிடுகளின் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் அதன் தன்மைகாட்டிலும் அதிக சக்தியை பெருகிறது என்பது தான்.அதன் விளக்கங்கள் அவ்வளவாக கொடுக்காத்தால் மேற்கொண்டு அதை ஆராயாமல் விட்டுவிட்டேன்.அதில் அவர் சொல்லியிருந்த ஒரு விஷயம் ஒரு சவர பிலேடை 10 வருடங்களாக முனை மழங்காமல் உபயோகித்து வருவதாக.அந்த நபர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்பது மட்டுமே ஞாபகம் வந்தது.தொடர்பு கொள்ள முகவரியில்லாத்தால் அப்படியே விட்டுப்போனது.

போன வாரம் நூலகம் போன போது கீழ் கண்ட மாதிரி ஒரு புத்தகத்தை பார்த்ததும் மீண்டும் ஆரம்பித்தது இதன் மீதான ஆர்வம்.

முகப்பு பக்கம்.



அதை எப்படி செய்வது என்ற அளவுகள் கீழே



இதில் சொல்லியுள்ள அவ்வளவையும் நம்ப முடியுமா? அப்படியே உண்மையாக இருந்தாலும் இன்னுமா? பட்டா போடாம இருப்பாங்க? என்ற எண்ணத்துடம் படித்துக்கொண்டிருந்தேன்.கீழே உள்ள பத்தியை படித்ததும் அப்படியே தூக்கிப்போட்டது. நிஜமாக இருக்குமோ!!





நான் சுமார் 17 வருடங்களாக தியானம் செய்து வருகிறேன் (அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கேன்). பல சமயங்களில் தூங்குகிறேனா? இல்லை என்ன செய்கிறேன்? என்று புரியாத நிலையில் தான் உள்ளேன்.பல நாட்கள் ஒரே எண்ணக்குவியல்களாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட இந்த நாட்களில் இந்த கை தூக்கி கும்பிடும் பழக்கம் எப்படியோ என்னையும் தொற்றிக்கொண்டது.என் மகன் கூட இதை கண்டுபிடித்து,”அப்பா,இது சந்தியாவந்தனத்தில் இல்லையே?” என்றான். ஏதோ சொல்லி மழுப்பிவிட்டேன்.இதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கு என்பதை இப்புத்தகம் படித்தபிறகே அறிந்தேன்.சில நிகழ்வுகளுக்கு நம் உடல் தன்னைத்தானே மாற்றி அமைத்துக்கொள்கிறது போலும்.

இந்த புத்தகத்தில் கண்ட மேல் விபரங்கள் பல ஆராய்சிக்கு உட்பட்டவை,படித்து பயன்பெருங்கள்.



நன்றி:திரு டி.வி.பாலு.

ஆனந்தவிகடன் படித்த அந்த காலத்தில் யூடியூப் இல்லாததால் முயற்சித்தவர்களை காணமுடியவில்லை.

இப்போது அதை காண ஒரு சுட்டி கீழே..

QA/QC பொறியாளர் தேவை

நேற்று ஒரு நண்பர் தொலைப்பேசியில் அழைத்து அவருக்கு மேற் சொன்ன பொறியாளர் தேவைப்படுவதாக சொன்னார்.

உங்களுக்கு தெரிந்தவர் அல்லது உங்களுக்கு அவ்வேலை பார்க்க இஷ்டம் இருந்தால், எனக்கு மின் அஞ்சல் / பின்னூட்டம் அனுப்பவும்.

இது Structural Steel fabrication/erection யில் தரக்கட்டுப்பாடு செய்யவேண்டிய வேலை.வேலை இடம் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில்.
இந்த வேலையில் முன் அனுபவம் இருப்பவர்கள்/நிரந்தரவாசத்தகுதி இருப்பவர்கள் தொடர்ப்பு கொள்ளவும்.

Tuesday, June 03, 2008

நாக்கு சுழல மறுக்கிறது.

நம்மில் பலருக்கு "ழ" வர மறுப்பது போல் இங்கிருக்கும் பல சீனர்களுக்கு "ர" வராது,அதுவும் கொஞ்சம் வயதானவர்களுக்கு அதுவும் ஆங்கில வாசனை கொஞ்சம் குறைவாக இருக்கும் இந்த மாதிரி ஆன்டிகளுக்கு ரொம்பவே படுத்தும்.

இங்குள்ள ஆங்கில வானொலியில் சில வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி கூப்பிட்டு கலாய்ப்பாங்க, அதில் ஒன்று தான் இது... கேட்டு மகிழுங்கள்.



இதுல கேட்க முடியாட்டி கீழே மற்றொரு தொடுப்பு.

98.7FM Funny talk.. Hehehe!! -

small காக்/big காக் என்பதை கேட்டு முகம் சுளிக்கவேண்டாம். அது "coke" ங்க. :-)

Sunday, June 01, 2008

பாதி கிணறு தாண்டிய சிங்கை அனுராதா

நம் தமிழ் வலைப்பதிவுகளை படித்து வருபவர்களுக்கு “அனுராதா” இந்த பெயர் மிகப்பரிட்சயம்.
கேன்சர் என்ற கிருமியுடன் போராடி வெற்றி பெற்றவர் என்பதை அவர் தொடர் பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும்.

போன வெள்ளியன்று “டுடே” நாளிதழை பார்க்கும் போது கீழே உள்ள படமும் செய்திகளும் கண்ணில் பட்டது.இவருடைய வலிகளும் ஆலோசனைகளும் அவருடைய வலைப்பூக்களில் சொல்லியுள்ளார் ஆனால் இவரால் பாதி கிணறு மட்டுமே தாண்டமுடிந்தது என்பது சோகக்கதை.

மற்ற விபரங்கள் படத்தின் மீது சொடுக்கிப்பார்க்கவும்.



நன்றி: டுடே மற்றும் லின் யான்குயின்.