Friday, January 19, 2007

தலைவருக்கு ஏற்ற தலைவி.

காலை 9 மணி வாக்கில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.முன் பின் கேட்டிராத குரல். ஏற்கனவே இங்கு வருவதாக சொல்லியிருந்ததால்,நலம் விசாரித்துவிட்டு எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று விஜாரித்துவிட்டு,உங்களுக்கு நேரம் இருந்தால் மாலை 7.30 மணி வாக்கில் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன்.திரு.கோவி.கண்ணனும் வருவதாக அவர் சொன்னார்.

ஆமாம் உங்கள் அறை எண்?

இன்னும் அறைக்கு போகவில்லை,போனதும் பிறகு தொலைபேசுகிறேன் என்றார்.
நன்றி என்று சொல்லிவைத்தேன்.

என் வீடு என்று ஒன்று இருந்திருந்தால் என் வீட்டுக்கே அழைத்துவந்திருக்கலாம் என்ற நினைப்பு உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது.என்ன பண்ணுவது ஹரி வரேன் என்ற போது வீடு இருந்தது அவரால் வரமுடியவில்லை இப்போது அதற்கு நேர் எதிராக இருந்தது.

மாலை வேலை முடிந்துவீட்டுக்கு மின் வண்டியில் ஏறும் போது வரை அவரிடம் இருந்து அழைப்பு வராததால்,சரி எங்கோ இருக்கிறார்கள் போலும் அதனால் அழைக்கமுடியவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்,எதற்கும் கோவியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிப்பார்ப்போம் என்று அனுப்பினேன்.

என்னுடைய பெயர் குழப்பத்தில் கொஞ்சம் தடுமாறிய பிறகு,அவருடன் பேசினேன்.அவரும் 7 மணிவாக்கில் அங்கு போகப்போவதாகச் சொன்னார்.அறை எண் தெரியாவிட்டாலும் அங்குள்ள வரவேற்பறையில் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.
அப்படியென்றால் நான் 7.30 போல் வருகிறேன் என்றேன்.

வீட்டிற்கு வந்து குளிக்க கிளம்பலாம் என்னும் போது அந்த நபரிடம் இருந்து அழைப்பு வந்தது.எங்கள் அறை எண் 1804.

அவரிடமும் 7.30 வாக்கில் வருவதாகச்சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
குளித்து,சந்தியாவந்தனம் முடித்து பேருந்து பிடிக்கும் சமயத்தில் மழை தூரலும் ஆரம்பித்தது.

சுமார் 35 நிமிடங்கள் பிரயாணம் செய்த பிறகு,உரிய இடத்தில் இறங்கி ஹோட்டலை அடைந்தேன்.மணி 7.35.

இதற்கிடையில் கோவியாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி,தான் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் வர 7.30 மணியாகிவிடும் என்று அந்த நபரிடம் சொல்லிவிடவும் என்றார்.அப்போது நான் இருக்கும் இடம் மற்றும் விடுதியை அடையப்போகும் நேரத்தை கணக்குப்பண்ணி பார்த்தபோது நானே அந்த சமய்த்துக்குத்தான் அங்கு போகமுடியும் என்று தெரிந்தது.அதையே கோவியாருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.

மின்தூக்கிக்குள் போனதும் தான் மண்டையில் உறைத்தது எந்த தளம் என்று கேட்க மறந்ததை.இருந்தாலும் பெரும் பாலான விடுதிகளில் அதன் தளமும் அறை என்னுடன் சேர்ந்திருக்கும் என்பதால் 4 வது மாடியா 18 வதா என்ற குழப்பம் வந்தது.மின்தூக்கியைவிட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்ட தமிழரிடம் 1804 எந்த மாடி? என்றேன்.

18வது மாடி.

நன்றி சொல்லிவிட்டு,1804 அறையின் அழைப்பானை அழுத்தியபோது 7.41.
திறந்தவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு.உள்ளே பார்த்தால் எனக்கு முன்பே கோவியார் அங்கிருந்தார்.

முன்பே ஏதோ வலைதலத்தில் அவருடைய சிங்கை விசிட் படங்கள் இருந்ததால் அவருக்கும் முகமண் செய்துவிட்டு நாற்காலயில் அமர்ந்தேன்.
பேச ஆரம்பிக்கும் முன்பே கோவியார் தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தார்.நல்லவேளை, இல்லாவிட்டால் நான் சந்திக்கப்போகும் நபரின் பெண்ணோ என்று அனுமானித்திருப்பேன்.

பல பல விஷயங்களை பற்றி பேசினோம்.எப்படி வலைப்பூவில் நுழைந்தது,அதற்கு முன்பு யார் யாரோடெல்லாம் நட்பு கிடைத்தது என்று சொன்னார்.
இந்திய பயணங்கள் போது யார் யாரோடு எல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி சொன்னார்.அதற்கிடையில் தன்னுடைய மறுபாதி அமெரிக்கா போனபோது அங்கு சந்தித்த
இலவசகொத்தனார்
இரவிசங்கர் (கண்ணபிரான்)
இன்னும் சிலருடைய பெயர்களைச்சொன்னார் ஞாபகத்தில் இல்லை.விட்டவர்கள் மன்னிக்கவும்.

கோவியாரின் துணைவி மறக்காமல் .... தொடரில் வந்த கைவிரல் பற்றியும் கேட்டார்.பின்னூட்டம் போடாமல் ரசிக்கும் ரசிகைகளில் ஒருவர் போலும்.பலதை ஞாபகம் வைத்துகேட்டுக்கொண்டிருந்தார்.அப்பு கமல்ஹாசன் யை கம்பேர் செய்து விரலையும் காட்டினார்..மறுபாதி.

கோவியார்,அவர்களிடம் புத்தகம் போடும் எண்ணத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே நான் மறுபாதியிடம் உங்கள் தொழிலைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டேன்.சொன்னவுடன் அதில் எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை கேட்டேன்.பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.

வலைப்பூ எழுதுபவர்கள் சந்தித்தால் சாப்பிட்டதை எழுதியே ஆகவேண்டும்.:-))
அதையும் ஏன் விடுவானே..

போன சிறிது நேரத்திலேயே,மறுபாதி பெரிய பெரிய பலாப்பழச் சுளை (எனக்குப்பிடித்த பழங்களில் ஒன்று) கொடுத்து உபசரித்தார்,கூடவே மைசூர் பாகும் வந்தது.

இப்படி போய்கொண்டிருக்கும் போதே,அறையில் உள்ள மின்சாரத்தில் கோளாறு,சிங்கையில் கேள்விப்படாத மின்துண்டிப்பு ஏற்பட்டது.அறை கதவை திறந்து வைத்துக்கொண்டு பேசினோம்.இடையில் விடுதியின் நிர்வாகத்துக்கு தொலைபேசி விபரத்தை சொன்னபிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து மின் இணைப்பு வந்தது.
குழுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு சுமார் 9 மணிவாக்கில் இரவு உணவு உண்ண பக்கத்தில் உள்ள "ஆனந்த பவன்" போனோம்.சாப்பிடோம்.

இலவச காபி கிடைத்தது.இது எப்படி கிடைத்தது என்பதை என்னைவிட அவர்கள் சுவாரஸ்யமாக எழுதுவார்கள் என்பதால்,நகர்ந்துவிடுகிறேன்.

இந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே வலைப்பூவில் பின்னூட்டம் பற்றிய பேச்சு எழுந்தது.
நல்ல பதிவு
படித்துவிட்டேன்,அப்புறம் வந்து பின்னூட்டம் இடுகிறேன்
.
இப்படி பலவற்றை பேசி சிரித்தோம்.

திரு SK மற்றும் திரு ஞானவெட்டியான்,திரு சிவகுமார்,திரு ஹரிஹரன்,திரு பாலபாரதி,திரு.PKB,திரு சிவபாலன்..இவர்கள் பதிவைப்பற்றியும் பேசினோம்.(சிலருடைய பெயர்கள் உடனே ஞாபகம் வரவில்லை,மன்னிக்கவும்)

"நாளை சனிக்கிழமை" இதை மட்டும் எழுதி ஒரு பதிவு போட்டால் போது பின்னூட்டம் குவியும் என்று உதவிக்குறிப்பு கொடுத்தார் அந்த பதிவர்.இன்றும் அதை நினைத்து அலுவலகம் மற்றும் ரயிலில் சிரித்துக்கொண்டு வருகிறேன்.அன்று இரவு தூங்குவதற்க்கு கூட நேரமாகிவிட்டது.நிறைய சிரித்தால் மனது மிகவும் fresh ஆக ஆகிவிட்டது.
எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி 10.40 .

ஆமாம் அது "யார்" என்று சொல்லவில்லையே என்கிறீர்களா?

அங்கங்கு உதவி குறிப்புகள் இருந்தாலும்...

அவர்தான் நமது வலைப்பூவின் பின்னூடத்தலைவி "திருமதி.துளசி கோபால்"

மறுபாதி மறுபாதி என்று இங்கு அழைத்தை தவறாகக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்,அவர் தான் திரு.கோபால்.

ஒரு சின்ன பின்குறிப்பு: திரு கோபாலுக்கு படிக்க பிடித்தது "பின்னூட்டம்" தான்.

தலைவருக்கு ஏற்ற தலைவி??

மிச்சம் மற்றவர்கள் பதிவில் வரும்.வரலாம்.

8 comments:

கோவி.கண்ணன் [GK] said...

எல்லாத்தையும் அப்படியே எழுதிட்டிங்க, நான் எழுத ஒன்றும் இல்லை.

துளசியம்மா அவர்கள் கோணத்தில் எழுதுவாங்க படிக்க ஆவலாக இருக்கிறது.

கட்டுரை சுவையாக இருக்கிறது !

நன்றி குமார் !

வடுவூர் குமார் said...

என்ன அப்படி சொல்லி தப்பிக்கலாம் என்று பார்கிறீர்களா?
உன் காபி "மோசம்"- இதை ஆவலுடன் அவர்கள் பாணியில் படிக்க காத்திருக்கேன்.
தெரிந்த பலவற்றை உங்களுக்காக ஒதுக்கிட்டேனே!!
வருகைக்கு நன்றி

இலவசக்கொத்தனார் said...

கோபால் நம்மளை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே! :))

வடுவூர் குமார் said...

இல்லங்க இலவசகொத்தனாரே.
பழகியவரை,அப்படிப்பட்டவர் இல்லை அவர்.
மனதில் தோன்றுவதை "பட்"

Anonymous said...

நல்ல பதிவு :)

அவ்வளவு தானா? உங்களை கொஞ்சத்தில்

பார்க்கத்தவறிவிட்டேன்.

மற்றவர்களைப் பார்த்தேன்.

டீச்சரின் பதிவுக்கு காத்திருக்கிறேன்.

அன்புடன்
சிங்கை நாதன்

thiru said...

//வலைப்பூவில் பின்னூட்டம் பற்றிய பேச்சு எழுந்தது.
நல்ல பதிவு
படித்துவிட்டேன்,அப்புறம் வந்து பின்னூட்டம் இடுகிறேன்.
இப்படி பலவற்றை பேசி சிரித்தோம்.//

நல்ல பதிவு! :))

படித்துவிட்டேன்,அப்புறம் வந்து பின்னூட்டம் இடுகிறேன். :)))

வடுவூர் குமார் said...

வாங்க சிங்கை நாதன்.
மத்தவங்களுக்கு பங்கு கொடுக்கவேண்டாமா?அதனால் தான் பலவற்றை எழுதவில்லை.
அப்படியா?
நான் கிளம்பும் போது இரவு 9.40 ஆகிவிட்டது.
இங்கு தானே இருக்கோம்,பிரிதொரு சமயத்தில் சந்திப்போம்.

வடுவூர் குமார் said...

வாங்க திரு
ஹோட்டல் என்பதையும் மறந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
நம்ம தலைவி பதிவை கட்டாயம் படிக்கவேண்டும், அப்போது அதன் உண்மை விளைவு தெரியும்.