Thursday, January 18, 2007

கால்குலேட்டர்

திரு பாபுராஜ் வேலைக்கு ஆள் எடுக்க எத்தனிக்கும் போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டேன்.இங்கு வேலைக்கு வரும் ஆள் நான் ரிக்கர்/வெல்டர் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்லக்கூடாது.எல்லா வேலையும் கலந்து பார்க்கவேண்டும்.அதற்கு தயாராக இருந்தால் அழைத்து வா,இல்லாவிட்டால் வேண்டாம் என்றேன்.வேலை 12 மணி நேரம் அதனால் இரண்டு குரூப் வேண்டும் என்றேன்.

புதிதாக ஒரு ஒப்பந்த வேலை கிடைத்த தெம்பு,நாலு காசு பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு அவரை உந்த,தனக்கு தெரிந்த மற்றும் நண்பர்களைக்கொண்டு ஒரு சிறிய குழுவை தயார்படுத்தினார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்களை தயார்படுத்திய பிறகு கட்டிடம் மேலே போவதைக்கண்ட தலைமை அதிகாரி அந்த சைட் பக்கமே வரவில்லை.எல்லாவற்றையும் அலுவலகத்தில் இருந்தே கண்கானித்துக்கொண்டிருந்தார்.அவர் இப்படி இருந்ததும் எங்களுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாக இருந்தது.எங்கள் வேலையை நாங்கள் பழுதில்லாமல் பார்க்கமுடிந்தது.

இப்படிப்பட்ட ஒரு தலைமை அதிகாரியுடனும் மோத வேண்டிய சமயம் வந்தது.


(இடமிருந்து வலமாக:சம்சுதீன்,நான்,T.S.சங்கர்,ராஜேந்திரன்.)

பல கட்டுமானத்துறை வேலை இடங்கள் அலுவலகங்கள் ஒரு சிறிய அறை இருக்கும் அதற்கு பக்கத்தில் இன்னொரு அறை,தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைப்பதற்கென்று.கதவு என்று ஒன்று இருந்தாலும் வேலை ஆட்களும் நாங்களும் பகிர்ந்துகொள்ளும் மாதிரியே இருக்கும்.அதனால் வாசல் கதவை பூட்டமுடியாது.அதே மாதிரி நாங்கள் வரைப்படம் மற்றும் சில அலுவலக கடிதங்களை வைத்துக்கொள்ள மேஜை இருக்கும் ஆனால் பூட்டி வைக்க ஏதுவாக இருக்காது அதனால் எப்பவுமே திறந்துதான் இருக்கும்.

அன்றாட வேலைகளுக்கு உதவியாக இருக்க கால்குலேட்டர் (கம்பெனி செலவில்) வாங்கி எனது டிராவரில் வைத்திருந்தேன்.பல காலம் அப்படியே தான் இருந்தது.திடிரென்று ஒரு நாள் உபயோகப்படுத்தலாம் என்று தேடியபோது தான் காணாமல் போனது தெரிந்தது.

இப்படி நடப்பது எல்லா இடங்களில் சகஜம்.அதனால் நான் கவலைப்படவில்லை.சைட்டை விட்டு மாறுதல் ஆகி போகும் போது எங்கள் பேரில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

ஆனால் இந்த சைட்டில் பல கால்குலேட்டர்கள் காணாமல் போனதால் மற்றும் புதிதாக வாங்க ஆர்டர் போட வேண்டியிருந்ததால்,யார் யார் கால்குலேட்டர்கள் காணாமல் போயிருக்கிறது என்று கணக்கு எடுத்து,அதில் எவ்வளவு தொலைந்து போய்யிருக்கிறது என்று கணக்கு எடுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார்கள்.

தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு என்னாயிற்று?? வந்த விபரங்களை பார்த்துவிட்டு ரூல்ஸ் படி என்ன செய்யவேண்டும் என்று சைட்டில் உள்ள கணக்காயருக்கு கடிதம் அனுப்பிவிட்டனர்.ஆதாவது தொலைந்து போன ஒவ்வொரு கால்குலேட்டருக்கும் 50% பணத்தை தொலைத்தவர்களிடம் இருந்து இழப்பீடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அதை அப்படியே கணக்காயர் என்னிடம் சொன்னார்.

நான் கட்டமுடியாது என்று சொன்னேன்.ஒரு சைட்டின் கணக்காயர் வேலை இடத்துக்கு மற்றும் பாதுகாப்புக்கும் தேவையான உபகரணங்களையும் கொடுக்கவேண்டும் அல்லது ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.இங்கு அந்த இரண்டும் செய்யப்படவில்லை.சைட் ஆபீசுக்கு பூட்டு கிடையாது வைத்துக்கொள்ளும் மேஜைக்கும் பூட்டும் வசதி கிடையாது.தவறு உங்களிடம் இருக்கும் போது நான் ஏன் பணம் கட்டவேண்டும்? என்று கேட்டேன்.

இந்த மாதிரி விவகாரங்களை மேல் அலுவலகத்துக்கு எழுதுவதற்கு முன்பு இங்குள்ள தலைமை அதிகாரியிடம் கேட்டு தான் அனுப்புவார்கள்.அதுவும் இங்கு பின்பற்றவில்லை.

இப்படியே இந்த இழு பறி போய்கொண்டிருந்த போது ஆடிட்டிங் வந்ததால் அதை மூட வேண்டிய அவசியம் வந்தது.கணக்காயார் கூப்பிட்டு தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தை காண்பித்து என்னிடம் கொடுத்தார்.

இது மேலும் கோபத்தை வரவழைத்தது.அதை இந்த கையில் வாங்கி அடுத்த சில நாட்களில் எங்கள் ரீஜனல் இன்ஜினியருக்கு(இன்று அவர் தலைமை நிர்வாகி) மேல் சொன்னவற்றையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினேன்.

இப்படிதான் கம்பெனியில் லாபத்தை பெருக்கவேண்டுமென்றால் நான் 50% என்ன? கால்குலேட்டரின் முழுவிலையையும் கொடுக்கிறேன் என்று முடித்திருந்தேன்.அப்படியே முழு தொகையையும் கட்டினேன்.

இந்த கடிதம் அவர் கைக்கு கிடைத்த மறுவாரமே அது எங்கள் சைட்டின் அதிகாரி திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துக்கு திருப்பி அனுப்பபட்டது.அதைப்பார்த்தவுடன் அவருக்கு கோபம் ஏற்பட்டிற்க வேண்டும்,கூப்பிட்டனுப்பினார்.

ஏன் இந்த மாதிரி பண்ணாய்? என்றார்.

ஏன் சார் உங்களுக்கு நடந்ததே தெரியாதா?

கணக்காயார் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நீ இப்படி மேலிடத்துக்கு எழுதுவதற்கு முன்பு என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றார்.

உங்களுக்கு தெரியாத விஷயமென்றால் உங்களிடம் சொல்லலாம்.தெரிந்த விஷயத்துக்கு எதற்கு உங்களிடம் வரவேண்டும் என்பதால் வரவில்லை என்றேன்.

அதன் பிறகு, கம்பெனி சட்டதிட்டங்கள் ஒரு தனி நபருக்காக மாற்றமுடியாது என்றும்,நீ இப்படி கொடுப்பதால் யாரும் உன்னிடம் வந்து மீதி பணத்தை வாங்கிக்கொள் என்று கெஞ்சப்போவதில்லை என்றார்.இது ஒரு மகா சமுத்திர கம்பெனி இதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படபோவதில்லை என்றார்.

உண்மை தான்.இருந்தாலும் என் வரையில் சரி என்பதால் முழுவதையும் கட்டி கம்பெனி லாபத்தில் கொஞ்சம் கூட்டினேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,சைட் வேலை என்பதில் ஓரளவு தான் சட்ட திட்டங்களை செயல்படுத்தமுடியும்.மீற வேண்டிய இடத்தில் மீறித்தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?