Wednesday, December 27, 2006

காகிநாடா (L&T-ECC )



மேட்டூரில் வேலை முடிந்து சின்ன சின்ன வேலைகளையும் முடித்துவிட்டு அடுத்த இடத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் வந்தது வேலை மாற்றம் "காகிநாடாவிற்கு".

திரும்பவும் ஆந்திரா பக்கம்.

நாங்கள் எந்த புது பிராஜக்ட்க்கு போனாலும் முதலில் யார் அங்கு ரெசிடன்ட் இன்ஜினியர் என்று தான் பார்ப்போம்.ஏனென்றால் சிலர் தலைவலி,திருகுவலி எல்லாம் கொடுப்பவர்கள்.புதியவர்கள் என்றால் திரும்ப நம்மை நிரூபிக்கவேண்டுமே!

இந்த வேலை இடத்தில், அப்போது இருந்தவர் திரு ஞானசேகர் என்பவர்,இப்போதும் ஹைதராபாத் விமானநிலைய சைட்டில் வேலை செய்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.முதன்முதலில் ECC யில் வேலை ஆரம்பிக்கும் போது இவர் தலைமையில் கீழ் வேலை பார்த்தேன் பிறகு மறைமலை நகர் சைட்டிலும் வேலை பார்த்தேன்.மறைமலைநகர் சைட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவு நல்லுறவு இல்லாததால் எங்கே இங்கேயும் பிரச்சனை வருமோ? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டதால் அதெல்லாம் அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.அதற்கு பிறகு வருகிறேன்.

காக்கிநாடா என்றவுடனே வீட்டை காலி பண்ண ஆரம்பித்துவிட்டேன்.மனைவி பிறந்தகம் போய்விட்டதால் அவர்களுக்கு தேவையானவை எனக்கு தேவையில்லாதாக தோன்றுபவை அனைத்தையும் வெளியில் கொண்டு போட்டேன்.அப்படி போட்டவற்றில் சில எங்கள் கல்யாணத்திற்கு வந்தவை.அதில் அவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்,அதிலிருந்து வேலை இட மாற்றம் என்றால் வீட்டை காலி பண்ண என்னை விட மாட்டார்கள்.

தேதி குறித்து மேட்டூரிலிருந்து காகிநாடா போக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு,பெரிய பெட்டிகளை இங்கிருந்து அந்த சைட்டுக்கு போகும் கம்பெனி சாமன்கள் கூட அனுப்பிவிட்டேன்.கட்டுமானத்துறையில் இது ஒரு அனுகூலம்.வெளியிடங்கள் மூலம் அனுப்பினாலும் (ABT பார்சல்.. ) தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் கம்பெனி மூலம் அனுப்பும் போது பாதுகாப்பாகவும் விரைவாகவும் மற்றும் சேதமில்லாமலும் போய்விடும்.

போகும் வழியில் மனைவியை பார்த்துவிட்டு சென்னை வந்து அங்கிருந்து காகிநாடா போகும் ஒரே புகைவண்டி "சர்கார் எக்ஸ்பிரஸ்"யில் முன்பதிவு செய்தேன்.காகிநாடாவும் கிட்டத்தட்ட குண்டூர் மாதிரி தான்.மெயின் லயின் பாதையில் இருந்து பிரிந்து கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.

அவசரமில்லாத பயணம் மற்றும் வேறு வண்டிகளில் முன்பதிவு கிடைக்காத நேரத்தில் சர்காரில் பயணம் செய்யலாம்.நேர விரயம் ஆகும்.அதற்கு பதிலாக பல சமயம் நாங்கள் சென்னையில் இருந்து ராஜமுந்திரி வந்து அங்கிருந்து காகிநாடாவுக்கு 1மணி முப்பது நிமிடங்களுக்குள் பேருந்துவில் வந்துவிடுவோம்.

சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு பல வண்டிகள் இருக்கும்.முடிந்தவரை இரவில் பயணத்தை வைத்துக்கொண்டு காலை வேலைக்கு போய்விடுவோம்.


இந்த பிராஜக்ட் நாகர்சுனா உரத்தொழிற்சாலை கட்ட தேவையான சில கட்டங்களை கட்டவேண்டும்.அதில் இரண்டு சைலோ,ஒரு சிமினி மற்றும் மெக்கானிகல் எரக்ஷன் வேலைகள்.

வந்த முதல் நாள், ராஜமுந்திரி இறங்கி பேருந்து மூலம் காக்கிநாடா வந்து இறங்கினேன்.நகர பஸ் நிலையம் வரை போகாமல் நடுவிலேயே இறங்கி அங்கிருந்து ரிக்ஷா மூலம் எங்கள் குடியிருப்புக்கு போனேன்.முதலில் கண்ணில் பட்டது மெஸ் தான்.அதைச்சுற்றி பல வீடுகளை கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்தது.

மெஸ்ஸில் நான் முதன் முதலில் இந்த கம்பெனியில் வேலை பார்த்தபோது உதவியாளராக சேர்ந்த "திரு.சின்னையா" இப்போது குக் ஆக பதவி உயர்வு பெற்று அங்கு இருந்தார்.இடைப்பட்ட வருடங்களில் நல்ல தேர்ச்சி பெற்று நல்ல பெயருடன் இருந்தார்.ஒரு காலத்தில் சின்ன வயதில் வந்து வேலைக்கு சேர்ந்து பிறகு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருந்தார்.

மெஸ்ஸிலேயே எல்லா சாமான்களை வைத்துவிட்டு குளித்து,சாப்பிட்டுவிட்டு ஜீப்புக்காக காத்திருந்தேன்.வேலை இடம் மெஸ்ஸில் இருந்து 7 KM தள்ளி இருந்தது.

பல பழைய முகங்களை பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் இருந்தாலும்,முதல் நாள் அந்த ரெசிடென்ட் இன்ஜினியரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற கவலையும் வந்தது.ஏனென்றால் மனிதர் அந்த மாதிரி.

சுமார் மதியம் 12 மணிக்கு சைட் உள்ளே போனேன்.அலுவலகத்தில் முகத்தை காண்பித்துவிட்டு ரெசிடென்ட் இன்ஜினியரை பார்க்கலாம் என்று பார்த்தால் அவர் சைட்க்கு போய் இருப்பதாகவும், இன்னும் வரவில்லை என்றார்கள்.

மணி 1 ஆகியும் வரவில்லை,சரி நாமே தேடிப்போய் முகமன் செய்துவிடுவோம் என்று கிளம்பி சைட் உள்ளே போனேன்.

மீதி அடுத்த பதிவில்..

8 comments:

VSK said...

//கிளம்பி சைட் உள்ளே போனேன்.//

சீக்கிரம் வெளியே வந்து மீதிக் கதையைச் சொல்லுங்க திரு. குமார்!

வடுவூர் குமார் said...

வாங்க எஸ் கே ஐயா,
அடுத்தது அது தான்.
நன்றி

Unknown said...

பயனுள்ள நல்ல விஷயங்களை சொன்ன பதிவு. நன்றி குமார்.

வடுவூர் குமார் said...

வாங்க செல்வன்,
முதல் வருகைக்கு நன்றி

Anonymous said...

Please post the next entry. We are egrly awaiting for that...

வடுவூர் குமார் said...

அனானி
நன்றி- போட்டுவிட்டேன் அடுத்த பதிவை

வல்லிசிம்ஹன் said...

குமார் சுவையான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே.
அப்புறம் என்ன ஆச்சு.?

வல்லிசிம்ஹன் said...

இப்போதான் நாங்க பார்சல் செய்து ஊரு விட்டு ஊரு போகிற மாதிரி இருக்கே என்று நினைத்தேன்.
மேலதிகாரிகளும் அப்படியா:-)