Sunday, November 29, 2009

முன் ஜாக்கிரதை முத்தண்ணா!!

தான் செய்யும் எல்லா வேலையிலும் ஒருவித பரபரப்பு,அடுத்து அடுத்து அடுத்து என்று ஓடிக்கொண்டிருப்பது,நிலைகொள்ளாமல் தவிப்பது போன்ற நிலை,இப்படிப்பட்ட குணாதிசியங்களை கொண்ட நபர்களை கதைகளில் படித்திருந்தாலும் நேரில் கண்டதில்லை.இப்படிப்பட்ட குறையை நீக்க எண்ணிய இறைவன் அதையும் எனக்கு சமீபத்தில் பழக்கமான நண்பர் மூலம் காண்பித்தார்.

மஸ்கட் 3 வார விசா முடியும் நேரம் வந்தது.விசா முடியும் நேரத்தில் மற்றொரு விசா எடுக்க முடியும் என்றாலும் நாட்டை விட்டு வெளியே போய் திரும்ப வேண்டும் என்ற நியதி இருப்பதால் எங்கள் நிருவனம் என்னையும் என் சக தோழரையும் அபுதாபிக்கு அனுப்பி அங்கிருந்து திரும்ப மஸ்கட் வரவழைப்பதாக “பிளான்” பண்ணார்கள்.மஸ்கட்டில் இருந்து அபுதாபிக்கு போகனும் என்றாலும் விசா தேவைப்படும் அதன் தொடர்பில் ஒரு நிறுவனத்தை கேட்ட போது நீங்கள் மஸ்கட் வந்திருக்கும் விசா முறையில் அபுதாபிக்கு இங்கிருந்து விசா எடுக்க முடியாது என்றார்கள்.போச்சுடா! என்று நினைத்து அடுத்து திரும்பவும் சிங்கைக்கா? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஐடியா தோனியது.இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா தேவைப்படாத நாடுகள் சில மட்டுமே, அதனால் திரும்ப இந்தியாவுக்கு வருவது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நினைத்து அதையே நிறுவனத்திடம் சொன்ன போது “சரி” என்று ஒப்புக்கொண்டார்கள்.மறு நாள் பயணத்துக்கு முதல் நாள் பயணச்சீட்டு கிடைத்தது.மஸ்கட் விசா கிடைக்கும் வரை சென்னையில் இருந்து வேலை பார்க்க வேண்டும்.வேலை இருந்தால்!!

இரவு 12.45 க்கு எனக்கு விமானம் என் நண்பருக்கு 12.50 க்கு.நான் சென்னைக்கு என்றால் அவருக்கு கொச்சின்.டிக்கெட் கிடைத்தவுடனே எத்தனை மணிக்கு வாடகை மகிழுந்துவை வரச்சொல்ல வேண்டும் என்று நண்பருடன் ஆலோசித்துவிட்டு இரவு 10 மணி என்று முடிவு செய்தோம்.மஸ்கட்டில் கை நீட்டி மகிழுந்து நிறுத்தலாம் என்றாலும் நள்ளிரவில் நான் இருக்கும் இடத்துக்கு வருமா என்று தெரியவில்லை.தொலை பேசி மகிழுந்துவை வரச்சொல்லும் முறை இன்னும் பிரபலமாகவில்லை அல்லது இல்லாமல் கூட இருக்கலாம்.எங்களிடம் இருந்த ஓட்டுனரிடமே சொல்லி ஒரு வாடகை வண்டியை வரச்சொல்லியிருந்தோம்.அவரும் சரி என்று சொல்லியிருந்தார்.

அன்று மாலை வீட்டுக்கு தேவையான சில சாமான்கள் வாங்க கடை தொகுதிக்கு போயிருந்தோம்.என்னுடைய தேவைகள் மிக குறைவாக இருந்ததால் வாங்க வேண்டியவைகள் விரைவாகவே முடிந்தது.நம் தோழர் பலருடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்ததால் அள்ளி குவித்துக்கொண்டிருந்தார்.எனக்கோ அவருடைய Excess Baggage பற்றிய கவலை வந்தது.ஒரு காலத்தில் நானும் இப்படி வாங்கி சுட்டுக்கொண்ட ஞாபகம் வந்தது.அனுபவமே பாடம் எல்லோருக்கும்-அவருக்கும் கூடிய சீக்கிரம் வரும்.

கிளம்ப வேண்டிய மாலை எல்லா சாமான்களையும் Pack செய்துவிட்டு வாடகை மகிழுந்துக்காக காத்திருந்தேன்.வரவேண்டிய மகிழுந்து வராமல் எங்கள் ஓட்டுனரே 8.45 க்கு வந்தார்.10 மணிக்கு தானே சொல்லியிருந்தோம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார் என்ற யோஜனையுடன் TV பார்த்துக்கொண்டிருந்தேன்.ஓட்டுனருக்கு மலையாளம் மட்டுமே பேச தெரியும் என்பதால் என் நண்பர் தான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து என் நண்பர் என்னிடம் இந்த ஓட்டுனரே நம்மை விமான நிலையத்தில் கொண்டுவிட்டுவிடுவார் என்றும் அதனால் நாம் 9 மணிக்கு கிளம்பலாமா? என்றார்.நாம் 10.50 க்கு விமான நிலையத்தில் இருந்தால் போதுமே எதற்கு அவ்வளவு சீக்கிரம் போக வேண்டும் என்றேன். இந்த ஓட்டுனர் நம்மை இறக்கிவிட்டு விட்டு வேறு ஒருவரை பிக்கப்செய்யனுமாம் என்றார். ஓட்டுனர் சந்தில் சிந்து பாடுகிறார் அதில் நமக்கு பிரச்சனை இல்லை என்பதால் “போகலாம்” என்றேன்.நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சீப்(Seeb) விமான நிலையம் 45 கி.மீட்டர்.120 கி.மீட்டர் வேகத்தில் வாகனம் போக முடியும் என்பதால் 30 நிமிடங்களுக்கு குறைவாகவே போய்விடலாம் என்று கணக்கு போட்டிருந்தோம் அதன்படி 9.50க்கெல்லாம் விமான் நிலையம் வந்துவிட்டோம்.விமானம் கிளம்ப இன்னும் 3 மணி நேரம் இருக்கு.



இவ்வளவு முன்னாடி வந்துவிட்டோம் உள்ளே நுழைவதற்கு முன்பு விமான நிலையத்தை சுற்றிப்பார்த்து என்னென்ன வசதிகள் இருக்கு பார்த்துவைத்துக்கொண்டால் பிரகு எப்பவாவது உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தில் என் நண்பரையும் கூப்பிட்டேன் அவரோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு தயாராக இருக்கும் வீரர் போல் தள்ளுவண்டியுடன் நுழைவாயிலை நோக்கி நின்றுகொண்டிருந்தார்.மனதுக்குள் சிரித்துக்கொண்டு நீங்கள் போவதென்றால் போங்கள் நான் சிறிது நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று நான் நேர் எதிர் திசையில் சென்றேன்.

சிறிய விமான நிலையம் என்பதால் அதிக கடைகள் இல்லை.10 நிமிடத்துக்குள் நுழைவாயிலுக்கு வந்தால் நண்பர் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.சரி போ என்று சமாதானப்படுத்திக்கொண்டு தள்ளுவண்டியுடன் உள்ளே நுழைந்தேன்.X ray செக்கிங் முடிந்து Boarding pass வாங்கும் இடத்துக்கு போனோம்.அதற்கு முன் என்னிடம் இருக்கும் Electronic பொருளின் அட்டையை பார்த்துவிட்டு அதன் மீது நெகிழி Wrapping செய்தால் பாதுகாப்பாக போய் சேரும் என்று அங்கிருந்த தொழிலாளர்கள் சொன்னார்கள்.ஒரு சுற்றுக்கு 700 பைசா வீதம் இரண்டு சுற்று சுற்றி கொடுத்தார்கள்.நண்பரும் தன்னுடைய சில சாமான்களுக்கும் செய்துகொண்டார்.அது முடிந்த உடனே கூட்டமே இல்லாத கவுண்டரில் இப்போதே பைகளை போட்டு Boarding Pass வாங்கிவிடலாம் என்று அவசரப்படுத்தினார்.இவர் நிலை புரிந்துவிட்டதால் மேலும் பேச்சு கொடுக்காமல் பைகளை போட்டுவிட்டு கை பையுடன் தள்ளு வண்டியில் அங்குள்ள கடைகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.திடிரென்று நண்பர் பேச்சே இல்லையே என்று தேடினால் அவரோ எமிகிரேசன் செய்ய தயாராகி அடுத்த நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தார்.இன்னும் 2.5 மணி நேரம் இருக்கு விமானம் கிளம்ப.

இப்படியே விமானத்துக்குள் நுழையும் வரையில் ஒரு படி முன்னேயே நின்றுகொண்டிருந்தார்.எனக்கிருந்த கவலையெல்லாம் விமானம் கிளம்பின பிறகு இவர் என்ன செய்துகொண்டிருப்போரோ என்று தான்.

இது முதல் முறை நடந்தது,இதன் மூலம் என்னை பற்றி ஓரளவு புரிந்துகொண்டு என்னை அவசரப்படுத்த மாட்டார் என்று நினைத்திருந்தேன்.சிலரை மாற்றுவது என்பது கடினம் என்பது இரண்டாவது முறை சென்னை வரும் போது (அவர் வரவில்லை,விமானப்பயணம் அவருக்கு விருப்பம் இல்லையாம்,பயம் போலும்)தெரிந்தது.



மஸ்கட் போய் 1 வாரம் தான் ஆனது அதற்குள் இன்னும் 9 நாட்கள் விடுமுறை வருகிறது என்று அலுவலக மெயில் வந்தவுடன் தலையில் கைவைத்து யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.என்னதான் ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு போவது எனக்கே அயர்சியாக இருந்தாலும் என்னுடைய Presence தேவைப்படும் வேலை வந்ததால் அவசியம் போக நேரிட்டது.என்னுடைய விமானம் 10.10 என்பதால் காலை 7.30 மணிக்கு டேக்ஸி எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து அதன்படி காரியங்கள் செய்துகொண்டிருந்தேன்.நம்முடைய முத்தண்ணா “ஏன் நீ 7 மணிகே கிளம்பக்கூடாது?” என்று கேட்டு முதல் நாள் இரவே எனக்காக டென்ஷன் ஆனார்.ஒருவரை புரிந்துகொண்டுவிட்டால் அவர் செயல் மீது ஆத்திரம் வராமல் மாறாக புன்னகையே வருகிறது.

2 comments:

Anonymous said...

அன்று மாலை வீட்டுக்கு தேவையான சில சாமான்கள் வாங்க கடை தொகுதிக்கு போயிருந்தோம்.என்னுடைய தேவைகள் மிக குறைவாக இருந்ததால் வாங்க வேண்டியவைகள் விரைவாகவே முடிந்தது.நம் தோழர் பலருடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்ததால் அள்ளி குவித்துக்கொண்டிருந்தார்.எனக்கோ அவருடைய Excess Baggage பற்றிய கவலை வந்தது.ஒரு காலத்தில் நானும் இப்படி வாங்கி சுட்டுக்கொண்ட ஞாபகம் வந்தது.அனுபவமே பாடம் எல்லோருக்கும்-அவருக்கும் கூடிய சீக்கிரம் வரும். -- ungalukku yen kavalai vanthathu? Neengalum appo munjakirathia muthanaava? All are like this only and it depends on experiance we have faced..Trying to be cautious is not a mistake or to be made fun..

வடுவூர் குமார் said...

அனானி,அவர் எச்சரிக்கையாய் இருப்பதில் எனக்கென்ன பிரச்சனை? அதில் என்னை இழுக்காத வரை.
உங்கள் கருத்துக்கு நன்றி.