Thursday, March 15, 2007

Dome

புட்டபர்த்தியில் கேட்ட கிடைத்த அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
இந்த மருத்துவமனை கட்டுமானத்தில் கொஞ்சம் கஷ்டம் கொடுத்த வேலை என்றால் அது மத்தியில் உள்ள கூம்பு வடிவமான டோம் (Dome) தான்.



எப்போதுமே கட்டுமானத்துறையில் சதுரமாகவோ,செவ்வகமாகவோ இருந்தால் பிரச்சனை இருக்காது.வளைவுகள் வந்தால் கொஞ்சம் கஷ்டப்படுத்தும்.வளைவுகள் என்றாலே கஷ்டம் தானே!!
அதுவும் இந்த டோம் முப்பரிமானத்திலும்,ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டதாக இருந்ததால் சாரம் அடிக்கும் பணி மிக கடுமையாக இருந்தது.
அப்போது கம்பெனியில் ஆட்டோ கேட் சமாச்சாரம் எல்லாம் இல்லாததால்,மிகவும் கஷ்டப்பட்டோம்.
இதனை மேற்பார்வை செய்தவர்,திரு மீனாட்சி சுந்தரம் எனபவர்,உடம்பு மெலிந்தவர்,சிகரெட் பழக்கம் உள்ளவர்.அவருக்கு இந்த வேலையில் உதவ திரு ரமேஷ் பாபு என்பவர் வந்திருந்தார்.அவர் தான் எவ்வளவு இடைவெளியில் சாரம் போடவேண்டும்,எப்படி அதை செதுக்கவேண்டும் என்று பட்டியல் போட்டு கொடுத்தார்.
அப்படி எல்லா விபரங்களும் கொடுத்தும்,பல குத்தகைகாரர்களை விட்டும் இந்த பணியை மருத்துவமனையை திறக்கும் தேதிக்குள் முடிக்கமுடியாது போலிருந்தது.இரவு பகல் என வேலை நடந்தாலும் ஏதோ ஒரு சுணக்கம் அங்கு குடி கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் என் வேலை ஒரளவு முடிந்து வேறு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு நாள்,என்னுடைய மேல் அதிகாரி என்னை கூப்பிட்டு,அந்த டோமில் போய் பார்,அவர்களுக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது,மீனாட்சி சுந்தரத்தால் முழுவதுமாக மேற்பார்வையிட முடியவில்லையாம் என்றார்.

ஒருவர் மேற்பார்வை செய்துகொண்டிருக்கும் ஒரு வேலையில் மற்றொருவர் போய் பார்பதும் ,தலையிடுவதும் பின்னால் பிரச்சனையை கொடுக்கும் என்பதால் அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.

இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று அறிய,நேரடியாக மீனாட்சியிடம் போய்,"பாஸ் இங்கு வரச்சொன்னார் , உனக்கும் எதுவும் பிரச்சனையில்லையே?" என்றேன்.

நிச்சயமாக இல்லை,நான் தான் என்னால் முடியவில்லை என்று சொல்லி ஆள் கேட்டேன் என்றான்.

சரி என்று சாரம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்த அந்த மேல் பகுதிக்கு போய் வெறுமனே வேடிக்கை பார்த்து அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இப்படி செய்வதால் ஒரு நன்மை,அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உள்ள சிரமம் தெரியும்.அதை பாதி நிவர்த்தி செய்தாலே போதும் வேலை கொஞ்சம் வேகமாக நடைபெரும்.

அப்போது மேலே வந்த மீனாட்சியிடம்,இந்த வேலையை எப்படி பிளான் பண்ணியுள்ளீர்கள் என்றேன்?

மொத்த வேலையையும் 8 பாகமாக பிரித்திருக்கோம்.முட்டு கொடுத்திருக்கும் சாரத்துக்கு ஒரே பக்க அழுத்தம் வராமல் இருக்க எதிரெதிர் பக்கங்களில் கான்கிரீட் போடலாம் என்றுள்ளேன் என்றார்.

அன்றிருந்த நிலமையில் இன்னும் 1 மாதம் ஆனால் கூட முதல் பகுதியை கான்கிரீட் போட முடியாது போல் இருந்தது.

இப்படியே ஒரு வாரம் போனதும்,அந்த வேலையின் பிளானருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கும் இந்த வேலையை குறிப்பிட்ட தினத்தில் முடிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

அப்போது நான் அவரிடம் என் ஐயப்பாட்டை வைத்தேன்.

இது நாள் வரை நான் கான்கிரீட்டை கீழே இருந்து மேல் நோக்கி தான் போட உத்தேசித்திருந்தோம்.கீழ் பகுதியில் சார வேலை முடியவில்லை,அதற்கு பிறகு கம்பி கட்டி, கான்கிரீட் போட வேண்டும்.இப்போது எல்லா வேலைகளும் கீழ் பகுதியை நம்பியே இருக்கு.

இதற்கு மாற்றாக,நாம் மொத்த வேலையையும் 16 பாகங்களாக பிரித்து,மேல் பகுதியை மட்டும் கான்கிரீட் போடுவோம் அதற்குள் கீழ் பாக வேலை முடிந்திருக்கும் அதையும் தொடர்ந்து முடித்துவிடலாம் என்றேன்.

இதிலும் சில பிரச்சனைகளை எதிர்பார்த்து அதை அவரிடமும் சொல்லி தகுந்த இஞ்னியரிடம் மறு உறுதிப்படுத்தச்சொன்னேன்.ஏனென்றால் கான்கிரீரட்டை மேலிருந்து போடும் போது அதன் மொத்த எடையையும் அதை தாங்கிக்கொண்டிருக்கும் சாரம் உறுதியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் மொத்தமும் முடியும் முன்பே தரையில் இருக்கும்.

அதை Confirm செய்துகொண்ட பிறகு கான்கிரீட்டை மேலிருந்து கீழ் கொண்டு வந்தோம்.வேலையையும் திறப்பு விழாவுக்கு முன்பே முடித்துவிட்டோம்.

அந்த மகிழ்சியில் எங்கள் அக்கால Regional Manager, இன்னாள் தலைமை அதிகாரி அனுப்பிய கடிதம் கீழே உள்ளது.







11 comments:

VSK said...

பெரு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!

சாயிராம்!

வடுவூர் குமார் said...

எஸ் கே ஐயா,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

துளசி கோபால் said...

சமயோசிதமா ஐடியாக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிச்சதுக்குப்
பாராட்டுக்கள். மேலதிகாரி கூப்புட்டுப் பாராட்டும்போது மனசுக்கு எவ்வளோ மகிழ்ச்சியா
இருந்துருக்கும்ன்றதை ஊகிக்க முடியுது.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா வணக்கம். தங்கள் சாதனைக்கு பாராட்டுக்கள். குறைந்த செலவு கட்டுமான தொழில்நுட்பம் குறித்து தங்களுக்கு அனுபவம் உள்ளதா (லாரி பேக்கர், ப்ளை-ஆஷ் இத்யாதி) விவேகானந்த கேந்திரத்தில் இந்த முறையில் சில விசயங்களை செய்து வருகிறோம். அண்மையில் வார்தாவில் 'கிராமங்களுக்கான அறிவியல் மையம்' (Science for villages) சென்றிருந்தேன். அங்கு ஒரு அருமையான கட்டுமான தொழில்நுட்பம் பார்த்தேன். மண் கோப்பை போன்ற அமைப்புகளை ஒன்றுக்குள் ஒன்றாக கொடுத்து கூரை செய்திருந்தார்கள். கடுமையான வெயிலிலும் அக்கட்டிடத்தினுள் நல்ல குளிர்ச்சியாக இருந்தது. சாயி அமைப்பினர் இந்த தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ளனரா?

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
ஒரு காலத்தில் நான் சைட் வேலைக்கு லாயக்கில்லை என்று துரத்தப்பட்டவன் தான்.
எப்படியோ இந்த மாதிரி சில்லறை ஐடியாக்கால் வேலை செய்த்தால்,கொஞ்சம் மேலே போனேன்.
இதே மாதிரி கடிதம் அங்கு வேலை செய்த அவ்வளவு பேருக்கும் கிடைத்தது.
நேற்று ஏதோ தேடப்போய் இது கிடைத்தது.

வடுவூர் குமார் said...

ஐயா அரவிந்தன் நீலகண்டன்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
குறைந்த செலவு கட்டுமானம்? இது வரை அப்படிப்பட்ட அனுபவம் இல்லை.என்னுடை சோதனைகள் எல்லாமே L&T-ECC யில் தான் நடந்தது.
கிராமங்களுக்கான அறிவியல் மையம் - என்ற தகவல் எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.
மா.சிவகுமார் சொல்லியபடி குறைந்த செலவில் வீடு கட்டுவதைப்பற்றி அவ்வப்போது யோசித்து வருகிறேன்.
உங்கள் தகவல்களுக்கும் நன்றி.
ஊருக்கு திரும்பும் போது பயனளிக்கலாம்.

வடுவூர் குமார் said...

சொல்ல மறந்துவிட்டேன், திரு நீலகண்டன், சாய் அமைப்புடன் எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை.அவர்கள் எவ்வளவு தூரம் செயல்படுகிறார்கள் என்ற தகவலும் இல்லை.
நான் அங்கு வேலை செய்யும் போது தான் சில மேம்பாட்டு பணிகளை பார்க்கமுடிந்தது.

வைசா said...

நல்ல ஐடியா, குமார். ஆனால், மேலிருந்து கீழாக கான்கிரீட்டை போட்டுக் கொண்டு வந்தால் அதன் பலம் பாதிக்கப்பட மாட்டாதா?

வைசா

வடுவூர் குமார் said...

வாங்க வைசா,
தேவையான கம்பி மற்றும் கான்கிரீட் முட்டும் சரியாக இருந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்த மாதிரி தான்.
என்னுடைய கவலை எல்லாம் சாரத்தின் மேல் தான்.அதை சரியாக Design செய்திருந்ததால் பிரச்சனையில்லாமல் போனது.

கபீரன்பன் said...

நான் கேள்விப்பட்டிருந்தது முதலில் விதானத்தின் மேல் பாதியை கீழேயே precast செய்து பின்னர் அதை மேலேற்றினர் என்று. அப்படி இல்லை என்பது புரிந்தது. ஆனால் அப்படியும் செய்திருக்க முடியுமா?

//இதே மாதிரி கடிதம் அங்கு வேலை செய்த அவ்வளவு பேருக்கும் கிடைத்தது //

Greatly appreciate your honesty

வடுவூர் குமார் said...

இல்லை கபீரன்பன்.
அப்படி செய்யவில்லை.அதன் வளைவுகள் முப்பரிமானத்தில் இருந்ததாலும்,சைட்டில் அவ்வளவு வசதிகள் இல்லாத்தாலும்,இம்முறையை பயண்படுத்தினோம்.
அந்த கும்பம் கூட மேலேயே இருந்து செய்தது தான்.