புட்டபர்த்தி மருத்துவமனை பணிகள்ஆரம்பிக்கும் முன்பே சின்னச்சின்ன நில சம்பந்தமாக சிக்கல்கள் தோன்றிய வண்ணம் இருந்தது.அதை சிறுகச்சிறுக சீர்படுத்தி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
வேலை ஆரம்பிக்கும் போது முழுமையான வரைப்படம் கைக்கு வரவில்லை.இருப்பதை வைத்து எங்கெங்கு செய்ய முடியுமோ அதை செய்து வந்தோம்.
இந்த கட்டிடத்தின் மேற்பார்வைக்காக லண்டனில் இருந்து ஒரு பொறியாளர் வரவழைக்கப்பட்டது,அவரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததாலோ என்னவோ,அவர் திரும்ப போய்விட்டார்.மேற்பார்வை முழுவதும் எங்கள் இன்ஜினியர்களிடம் கொடுக்கப்பட்டது.எங்கள் கம்பெனியில் (லார்சன் அண்ட் டூப்ரோ- இ சி சி)சுமார் 60 பேரும்,அதை தவிர குத்தகைக்காரர்களும் வேலை ஆட்களும் இருந்தார்கள்.இப்போது இருக்கும் இடத்துக்கு எதிராக ஒரு இடத்தில் கொஞ்ச பேர் தங்குவதற்கு மெஸ்ஸ¤டன் கூடிய இடம் கட்டப்பட்டது.
தங்கள் மனைவியுடன் இருப்பவர்கள் கொஞ்ச பேர் புட்டபர்த்தியிலும்,கொஞ்ச பேர் "கொத்தச்செருவு" என்ற இடத்திலும் தங்கவைக்கப்பட்டனர்.இங்கும் இட நெருக்கடி ஏற்பட தர்மாவரத்திலும் வீடு பார்த்தார்கள்.
இந்த கொத்தச்செருவு,சென்னையில் இருந்து பஸ்ஸில் வரும் போது புட்டபர்த்திக்கு திரும்பும் ஒரு சாலையில் உள்ளது.2 கோவில்கள்,ஞாயிறு சந்தை,காய்ந்த காய்கறிகள் கிடைக்கும் இடம்.மிகவும் சிறிய ஊர்.தூசிக்கு பஞ்சமே கிடையாது.பத்து தடவை ஹாப் ஸ்டெப் ஜம் செய்தால் ஊரை விட்டு வெளியே வந்துவிடலாம்.
நான் வந்த சமயம் அவ்வளவு ஸ்டாப் வராததால் எனக்கு கொத்தச்செருவிலேயே வீடு கிடைத்தது.பக்கத்தில் இருந்த இன்னொரு வீடு மற்றொரு இன்ஜினியருக்கு கொடுக்கப்பட்டது.
பக்கத்துவீட்டில் தங்கியிருந்த இன்ஜினியருக்கு அப்போது தான் குழந்தை பிறந்து 2~3 மாதங்கள் இருக்கும்,அழைத்து வந்த நேரம் வெப்பம் அதிகமாக இருந்ததால் மிகவும் தினறியது.இரண்டு நாட்களில் ஜுரம் வந்து உடலில் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டு,பிரிந்து போனது.தனது குழந்தையை கூட்டி வந்த 1 வாரத்துக்குள் எல்லாம் முடிந்துவிட்டது.சோகத்தில் ஆழ்ந்தோம்.வெளிநாட்டில்/மாநிலத்தில் இருந்து வருபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்,அதை குழந்தைகள் செய்ய மறுப்பார்கள்,அதன் வினைதான் மேல் சொன்னது.குழந்தை கொஞ்சம் குண்டாக இருந்தால் பிழைத்துக்கொள்ளும்,மற்றபடி கஷ்டம் தான்.
இப்படிப்பட்ட சமயத்தில் எங்கள் குழந்தைக்கும் அம்மை போட்டியது,அதே டிஹைடிறேசன் வந்து அவனும் ஒரு அறையில் படுத்துக்கொண்டிருந்தான்.மருத்துவரிடம் காட்டி தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு,நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.மேற்கொண்டு என்ன நடக்குமோ என்று.மற்ற மாநிலத்தில் இருந்துவரும் இளம் குழந்தைகளுக்கு முதலில் இங்குள்ள வெப்பம் மற்றும் சீதோஷ்ணநிலை அவ்வளவாக ஒத்துப்போவதில்லை.
சரியான மருத்துவமனை கிடையாது.வீடு தான் மருத்துவமனை,மருத்துவர் கொடுக்கும் மருத்துகளை பார்க்கும் போது அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாது.பஞ்சகச்சம் கட்டிய மருத்துவர் வேஷ்டியை பார்க்கும் போதே ஏதேதோ தோனும்.இருந்தாலும் அவர் தான் அந்த ஊருக்கு ஆபத்தாண்டவர்.
இந்த சூழ்நிலையில் என் பையனின் நிலை என்னாகுமே என்று கவலை ஏற்பட்டது.திரும்பவும் ஊருக்கே திரும்ப அனுப்பிவிடலாமா என்று ஏகப்பட்ட குழப்பம்.மருத்துவரும் இன்னும் 2 நாட்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.
நிறைய தண்ணீர் மற்றும் இளநீர் கொடுத்து காப்பாற்றிவிட்டோம்.கூச்சம் இல்லாமல் சொல்கிறேன்,இந்த நிலையில் மனைவியின் பங்கு மிக மிக அதிகம்.
பக்கத்துவீட்டு குழந்தை இறந்து,நம் வீட்டிலும் குழந்தை இப்படி கிடக்கும் போது எப்படியிருக்கும்?வேதனை தான்.
குழந்தையை பறிகொடுத்த அவர் மாற்றல் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்கு போய்விட்டார்.
கொஞ்சம் வழிமாறிவிட்டேன்,திரும்ப மருத்துவமனை கட்டுமானத்துக்குள் போவோம்.
அடுத்த பதிவில்.
4 comments:
வேறு மாநிலத்தில் அல்லது நாட்டில் போய் இருக்கின்றபோது குறுகிய காலத்துக்குள்ளேயே இழப்பு ஏற்படுவதென்பது மகா கொடுமை.
நெஞ்சைத் தொடும் நிகழ்வு இது.
வைசா
ஆமாங்க வைசா,பல கனவுகளுடன் வந்து இறங்கி ஒரு வாரத்துக்குள் மகளை பறிகொடுத்தவரின் மனநிலை- சொல்லிப்புரிய வைக்க முடியாது.
தமிழ்நாட்டில் இருந்து போவோர் சற்று கவனமாக இருக்கவேண்டும்.இங்கு அடிக்கும் வெப்பம் மற்றும் அந்த பாறைகளில் தேங்கி பிறகு வெளியேறும் வெப்பம் நம்மை அறியாமலே நம் உடலில் தண்ணீர் இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.இதனால் தான் குழந்தைகள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.
வருகைக்கு நன்றி.
அன்மையில் உங்கள் பதிவுகளை பார்க்கமுடிவதில்லையே?
சோகமாக, சுவையாகப் போகிறது பதிவு!
மருத்துவ அறிவு நம்மவர்களுக்கு இன்னும் சரியான முரையில் இல்லை என்பதே சோகம்!
வாங்க எஸ் கே ஐயா,
ஆந்திராவில் பல கிராமங்களில் மருத்துவமனை என்று ஒன்றை பார்க்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டும்.
பல இந்திய கிராமங்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது.
1994க்கு பிறகு அந்த ஊர் கொஞ்சம் முன்னேறியிருக்கும் என நினைக்கிறேன்.
Post a Comment