Sunday, August 11, 2019

வாரிசு சான்றிதழ்.

# வாரிசு சான்றிதழ்
# Legal-heir

இதெற்கெல்லாம் நமக்கு தேவைப்படாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் காலம் போடும் கோலத்துக்கு யாரும் தப்பிக்க முடியாதே?

85 வயதை தாண்டிய தந்தை, 28 வருடங்களாக சர்கரை குறைபாடுடன் மற்றும் சில உபாதைகளுடன் நாட்களை தள்ளிக்கொண்டிருந்தார்.2013-14 காலகட்டத்தில் திரு செல்வன் எழுதிய பேலியோ புத்தகத்தை கொடுத்தேன் ஆனால் அவரை மாற்ற முயற்சிக்கவில்லை ஏனென்றால் அவரைப்பற்றி ஒரளவு தெரியும் என்பதால். படிப்பதில் ஆர்வம் என்பதால் முழு புத்தகத்தையும் படித்தபிறகு “ என்னடா! இவர் மேல்நாட்டு உணவு முறையை சார்ந்து எழுதியிருக்கார், இங்குள்ள நிலமைக்கு இது ஒத்துவராது” என்று ஒதுக்கிவிட்டார். இவ்வளவு வயதுக்கு பிறகு பெரிய முன்னேற்றம் இருக்காது என்பதால் அவரை கட்டாயப்படுத்தவில்லை .எந்த ஒரு விஷயமும் நாம் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு செய்யாவிட்டால் அதனுடன் ஒத்துபோக முடியாது.அதிலிருந்து தப்பிக்கவே மனது முயலும்.

இப்படியே போய்கொண்டிருந்த காலத்தில் போன வருடம் ஜூலை/ ஆகஸ்ட் மாதங்களில் உடல்நிலை ஒத்துழைக்காமல் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதும்  வருவதுமாக இருந்தோம்.நெஞ்சு கிட்ட வலி என்பார், ECG எடுத்து பார்த்தால் ஒன்றும் இருக்காது, இப்படியே பல முறை ஆனால் கடைசி வரை எதனால் அந்த வலி என்பதே தெரியாமல் நவம்பர் மாதம் போய் சேர்ந்துவிட்டார்.போவதற்கு முன்பு வரை நான் பக்கத்திலே இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தவர் சிறிது சிறிதாக நினைவு தப்பி நான் கஞ்சி எடுக்க வீட்டுக்கு போன நேரத்தில் மாரடைப்பு வந்து உயிர் பிரிந்துவிட்டது. நான் மருத்துவமனைக்கு திரும்பும் போது மருத்துவரும்,அங்கிருந்த செவிலியரும் செயற்கை சுவாசத்துக்காக CPR செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் முடியவில்லை. நான் அங்கு போவதற்கு முன்பே உயிர் போயிருக்க கூடும்.

காரியங்கள் ஒவ்வொன்றாக முடிய, மிச்ச நேரத்தில் அவருடைய நிதிநிலையை ஆராய்ந்த போது அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கி புத்தகங்களை  ஆராய்ந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே இந்த வேலையெல்லாம் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

முதலில் அவருடைய ஓய்வூதிய ஊதியத்தை மனைவி பெயருக்கு மாற்றவேண்டும் அதற்கான வேலையை ஆரம்பிக்கும் போது தான் போது தான் ஒவ்வொன்றாக புரிந்தது.முதலில் இறப்பு  சான்றிதழ், இதை நான் அவர் இறந்த மருத்துவமனையில் கேட்ட பொது தான் அவர்களே முழித்துகொண்டு தேவையான விவரங்களை கேட்டார்கள்.அது ஒரு 1 வாரத்தில் வந்துவிட்டது.

அஞ்சல் மற்றும் வங்கி கணக்கில் ஒரு கணக்கில் மட்டும் Nominee என்று யாருடைய பெயரும் போடாமல் இருப்பது தெரிந்தது.மற்ற கணக்கில் எல்லாம் nominee இருக்கும் பொது இது மட்டும் எப்படி இல்லாமல் போனது என்பது இதுவரை புரியாத புதிர்.இத்தனைக்கும் பலருக்கும் இது பற்றி ஆலோசனை சொன்னவர் தன் கணக்கில் எப்படி விட்டார் என்று தெரியவில்லை.சரி, அதை வாங்க என்ன செய்ய வேண்டும் என்ற விதிகளை கேட்ட போது முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றார்கள்.அதற்கு எப்படி எங்கு செல்ல வேண்டும் என்று கூகிளிடமும் மற்றும் பலரிடமும் கேட்டதில் , முகவர்கள் சுமார் 3௦௦௦ என்று ஆரம்பித்தார்கள்.முகநூலில் ஒரு குழுமத்தில் கேட்ட போதுஒரு சிறிய பொறி கிடைத்தது.ஆதாவது வேண்டிய அனைத்து Documents ஐ எடுத்துக்கொண்டு அரசாங்க E centre க்கு போய் ரூ 60 கொடுத்து அனைத்தையும் Scan செய்து apply செய்ய வேண்டும். இது தான் முதல் படி. அதற்கான எண் கொடுக்கப்படும் .இனி எல்லாமே இணையம் மூலம் என்று சொல்லப்பட்டாலும் நீங்கள் வருடிய அனைத்து documents ஐயும் உங்கள் பகுதி கிராம நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும்.அவர் ஒரு நாள் குறிப்பிட்டு அன்று வீட்டுக்கு வந்துபார்த்த பிறகு அடுத்த நிலைக்கு அனுப்புவார்.என் நிலையில் VAO Strike மற்றும் தேர்தல் வந்ததால் கிணற்றில் போட்ட கல் போல் இருந்தது.

சில மாதங்கள் கடந்த நிலையில் CM cell க்கு ஒரு விண்ணப்பம் மற்றும் தாசில்தாருக்கு ஒரு கடிதம் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது.எவ்வித பதிலும் இல்லாத நிலையில் ஒரு நாள் அந்த VAO வே அலைபேசியில் கூப்பிட்டார். அனைத்து Documents ஐயும் எடுத்துக்கொண்டு அவர் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்.எல்லாம் பார்த்த பிறகு அடுத்த நிலைக்கு போனது.ஒரு 10 கழித்து அலைபேசிக்கு ஒரு விவரம் வந்தது ஆதாவது என்னுடைய வாரிசு சான்றிதழ் விண்ணப்பம் ஒரு குறிப்பிட்ட ஆவணம் இல்லாததால் நிராகரிக்கபடுவதாக.என்ன ஆவணம் என்று விசாரித்தால் இறந்த என் அப்பாவின் அம்மா இறப்பு சான்றிதழ் தான் ஆவணம்.முதலிலேயே அந்த ஆவணம் இல்லை என்று சொல்லிவிட்டோம் இருந்தாலும் இப்போது கேட்கிறார்கள்.இறந்தவரின் மனைவி ஒரு உறுதி சான்றிதழ் கொடுத்தால் போதும் என்றார்கள்.அதை கொடுத்து அதை மறுபடியும் அதே E centre க்கு போய் வருடி ஏற்றிவிட்டார்கள்.ஒரு வழியாக எல்லா காரியங்களும் முடிந்தது.

VAO-RI-Thasildhar மூலமாக ஒருவழியாக சான்றிதழ் கிடைத்தது. இந்த வழிமுறைக்காக அரசாங்கம்  நிர்ணயம் செய்திருக்க கால அளவு என்னவோ பதினைத்து நாட்கள் தான் இருந்தாலும் பல தடைகளை தாண்டி கையில் கிடைக்க பல மாதங்களாகிவிடுகிறது.சில ஆவணங்கள் தேவையை முதலிலேயே கட்டாயப்படுத்திவிட்டால் அனாவசிய அலைச்சலை தவிர்க்கலாம்.

எல்லாம் சரி,அந்த CM Cell  மற்றும் தாசில்தாருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வந்ததா? வந்தது. CM  Cell : சார் உங்க complaint  பல்லாவரம் பகுதிக்கு போய்விட்டது ,உங்களுக்கு வாரிசு சான்றிதழ் கிடைத்துவிட்டதா? என்றார்

நான் : கிடைத்துவிட்டது .

அடுத்து தாசில்தார் அலுவலகத்தில் இருந்து .சான்றிதழ் கிடைத்துவிட்ட விபரத்தை சொன்னேன்.

அரசாங்க நடை முறை வேலை  செய்கிறது ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகு.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நம் மாநிலத்தில் ரொம்பவே படுத்துகிறார்கள். ஒரு ஆவணம் கிடைப்பதற்கு பல முறை நடக்க வேண்டியிருக்கிறது - இல்லை என்றால் லஞ்சம் கேட்கிறார்கள் - மரணச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் கேட்கும் நபர்கள் நம் ஊரில் மட்டுமே! தில்லியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை [முன்பு ஐந்து ரூபாய் - ஒரு சான்றிதழுக்கு] கட்டினால் ஒரு வாரம்/பத்து நாட்களுக்குள் எந்த வித கஷ்டமும் இன்றி கிடைத்து விடுகிறது.

வடுவூர் குமார் said...
This comment has been removed by the author.
வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட் நாகராஜ் , இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. என்ன,கால தாமதம் ஆகிறது.பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.