சக தொழிலாள நண்பர் அன்புத்தொல்லையாக அவ்வப்போது வெளியில் போக கூப்பிட்டாலும் பெரும்பாலான நேரங்களில் அதை தவிர்த்துவிடுவேன் இருந்தாலும் சில சமயம் வேறு வழியில்லாமல் போக வேண்டிவந்துவிடுகிறது.ஒரு நாள் தான் லுலு கடைத்தொகுதிக்கு போவதாகவும் நீயும் வாயேன் என்றார்.அப்போது அரிசி வாங்க வேண்டிய நேரம் அத்தோடு லுலுவில் காய்கறிகள் கொஞ்சம் ஃப்ரிரஸ்ஸாக இருக்கும் என்பதால் ஒத்துக்கொண்டு போனேன்.மூவரும் அவரவர்க்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.
போன வாரம் ஒரு நாள் ஸ்கந்தப் போகலாம் என்றார் அதுவும் இரவில்.இரவில் அங்கு போய் என்ன பார்க்கப்போகிறீர்கள் அதுவும் கடற்கரையை தவிர அங்கு ஒன்றும் இல்லையே என்றேன்.அப்போதைக்கு அந்த பயணம் தள்ளிப்போடப்பட்டது.
நேற்று திரும்பவும் ஸ்கந்த(Qantab) பயணம் பற்றி பேச்சு வந்தது,எப்போது போகப்போகிறீர்கள் என்றேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பிறகு போகலாம் என்றார்.போவதற்கு மட்டுமே 20 நிமிடங்களுக்கு மேலாகும் அதுவும் வீட்டுக்கு போய்விட்டு போனால் சூரியன் மறைந்த பிறகு தான் அங்கு போ சேர முடியும் என்றேன்.
அப்படியென்றால் வேலை முடிந்த உடனே நேரடியாக கிளம்பிவிடலாம் என்றார்,சரி போகலாம் என்று மாலை 6 மணிக்கு கிளம்பினோம்.முத்ரா வரை போய் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு ஒரு 5 நிமிடம் இருங்கள் நான் போய் தொழுதுவிட்டு வருகிறேன் என்று போனார்.வித்தியாசமான கோணத்தில் முத்ரா படங்கள்.மலை மீது ஒரு சிறிய கோட்டை கூட உள்ளது.
அங்கிருந்து கிளம்பி ஸ்கந்த நோக்கி போனோம்,அப்போதே கொஞ்சம் இருட்டிவிட்டது இதற்கு மேல் அங்கு போய் என்ன பார்க்கப்போகிறேன் என்பதே என் நினைவாக இருந்தது,இதற்கிடையில் நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி கேக் மற்றும் பானங்களை வாங்கிக்கொண்டு வந்தார்.செலவு செய்யவிடவில்லை.தொடர்ந்த பயணம் ஸ்கந்தப் வந்த போது நன்றாக இருட்டிவிட்டது.ஏதோ ஒரு சாலை கடல்வரை வந்து முடிந்திருந்தது.அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தோம்.நிலா வெளிச்சம் கொஞ்சமாக இருந்தது மற்றபடி யாரோ நான்கு தொழிலாள்ர்கள் பாய்விரித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
கடற்கரை நோக்கி நின்ற போது....வாவ்!! என்னை அறியாமலே உள்ளம் குதூகலித்தது.இருண்ட வானம்,வடக்கு நோக்கி கடல்..நட்ட நடுவே சிறிய கரடி என்று அழைக்கப்படுகிற Ursa Miநொர் நட்சத்திர கூட்டம் தென்பட்டது.வால் போன்ற பகுதியில் நடுவில் இருக்கும் நட்சத்திரத்தின் துணை நட்சத்திரமும் தெரிந்தது.இது அனைத்தையும் என் தாத்தா எனக்கு காண்பித்த நாகப்பட்டின முற்றம் தான் ஞாபகத்துக்கு வந்தது.Polaris என்றழைக்கப்படும் நட்சத்திரம் கடல்மட்டத்தில் இருந்து 10 டிகிரி கோணத்தில் இருந்தது.
அன்னாந்து பார்த்தால் இதுவரை காணக்கிடைக்காத நட்சத்திர கூட்டங்கள் வெறும் கண்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது.என்னுடைய ஆர்வத்தை பார்த்த சிரியா நண்பர் தன்னிடம் இருக்கும் சில நெகிழிகளை கொண்டுவந்து கொடுத்து படுத்துக்கொண்டு பார் என்றார்.
தலைக்கு மேல் தெரிந்த செவ்வாய் செங்கதிர்களை வீசிக்கொண்டிருந்தது அத்தோடு பல பல நட்சத்திர தொகுதிகள் வானத்தை பிரம்மாண்டமாக்கிகொண்டிருந்தது.நகரங்களில் செயற்கை ஒளியில் இம்மாதிரியான காட்சிகளை நாம் காணமுடியாது.நிர்மால்யமான வானம் மற்றும் செயற்கை ஒளியில்லாமல் இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து வானத்தை பார்த்தால் கிடைக்கும் ஆனந்தம் சொல்லில் அடங்காது.கையில் தொலைநோக்கி எதுவும் இல்லாதது மிக பெரிய இழப்பாக தெரிந்தது.ஒன்றுமே பார்க்க முடியாது என்று வந்த எனக்கு மிகப்பெரிய பரிசாக நட்சத்திர வானம் பார்க்க கிடைத்தது.
கடற்கரையில் படுத்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ பேச்சு திசைமாறி Religion பக்கம் போய் அது தீவிரமாக போகும் முன்பே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.இதன் விளைவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வரும் வழியில் அங்குள்ள ஒரு Resort உள்ளே போய் பார்த்துவிட்டு அதன் பிறகு Diving Centre என்ற இடத்துக்கும் போய்விட்டு வந்தோம்.
No comments:
Post a Comment