எங்கள் வீட்டில் 3 அறை.கழிவறையுடன் இருக்கும் அறையில் முதலில் ஒரு தமிழர் இருந்தார் இப்போது ஒரு மலேசியர் இருக்கார்.இரண்டாவது அறையில் நான்.மூன்றாவது அறை ஒரு பிலிபினோவுக்காக ஒதுக்கப்பட்டது ஆனால் என்ன காரணமோ அவன் இங்கு கொஞ்ச நாள் மட்டும் தங்கிவிட்டு போய்விட்டான்.அவன் போன பிறகு அந்த அறை சும்மாவாகவே தூசிகளை சேமித்துக்கொண்டிருந்தது.இப்படிப்பட்ட சமயத்தில் வேறு ஒரு புது வேலைக்காக துபாய் மற்றும் அபுதாபியில் இருந்த சில ஊழியர்களை இங்கு கொண்டு வந்தது நிர்வாகம்.புதிதாக வருபவர்களுக்கு முதலில் ஹோட்டலில் தங்கவைப்பதாக முடிவு செய்திருந்தார்கள் அதன் பிறகு ஒரு நாள் வாடகை 33 ரியால் என்பதை கணக்கு போட்டு சும்மா இருந்த இந்த அறைக்கு அந்த பாக்கிஸ்தானியை மாற்றிவிட்டார்கள்.இந்த வீடு எடுக்கும் போதே நான் வெஜிடேரியன் என்பதால் என்னை முன்னிருத்தியே மற்றவர்களை தேர்வுசெய்தார்கள் ஆனால் இப்போது இருக்கும் "தல" அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் மூன்றாமவரை இங்கு மாற்றிவிட்டார்.
பாவம் அந்த பாக்கிஸ்தானி உள்ளே சமைக்க இடம் இல்லாமல் வெளியில் போய் சாப்பிடவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருந்தார்.இதற்கிடையில் பாக்கிஸ்தானியின் ஒப்பந்தப்படி ஒரு வாரத்தில் வேறு வீடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு சிரியா நாட்டுக்காரர் ஒரு மாதத்துக்காக அங்கு வருகிறார் என்று மறைமுகமாக சொல்லப்பட்டது.நேரிடையாக சொல்லப்படாதது வருத்தத்தை தந்தாலும் இன்னும் 6 மாதம் தான் இருக்கு எதற்கு சண்டை போட வேண்டும் என்று விட்டுவிட்டேன்.
சிரியாகாரர் தான் வரும் போது மனைவியுடன் தன் மகிழுந்துவில் ஷார்ஜாவில் இருந்து வந்திருந்தார்.மஸ்கட் முழுவதும் மனைவியுடன் சுற்றிப்பார்க்க வசதியாக ஒரு வாரம் வெளியில் தங்கியிருந்தார்.மனைவி கிளம்புவதற்கு முன்பு தான் தங்கப்போகும் அறைக்கு அழைத்து வந்து காண்பித்தார்.
இந்த சிரியாக்காரரை ஒரே ஒரு முறை துபாயில் வேலை செய்யும் போது பார்த்திருந்தாலும் அவ்வளவாக பேசியதில்லை.நல்ல எட்டு கட்டை குரல் வளம்,பக்கத்தில் இருப்பவருடன் பேசினாலே இரண்டு வீடு தள்ளி இருப்பவர்கள் கூட கேட்கலாம்.எளிமையாக இருப்பவர்- தான் காபி போட்ட GASக்கு கூட காசு கொடுத்துவிடுகிறேன் என்று சொல்பவர்.இஸ்லாம் மற்றும் அவருடைய கடவுள் பராக்கிரமங்களை நான் ஹெட் போன் போட்டு படம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சொல்வார்.அவ்வப்போது தருமி பதிவுகள் ஞாபகம் வந்தாலும் அவர் சொல்வதை பொருமையுடன் கேட்டுக்கொண்டிருப்பேன்.
அவர் வாழ்கை முறை வித்தியாசமாக இருந்தது.மாலை வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் தூக்கம் அதன் பிறகு இரவு 9 மணிக்கு எழுந்து மெது நடை ஓட்டம் அதனால் வந்த வேர்வையை நீக்க குளியல்,குளித்ததால் வந்த சுறு சுறுப்பால் 11 மணிக்கு மேல் சாப்பாடு,சாப்பிட்டதால் தூக்கம் வராமல் 2 மணி வரை தொலைக்காட்சி.இவ்வளவும் முடிந்தபிறகு தூங்கி காலை 7 அல்லது 7.30 மணிக்கு எழுந்து அலுவலகத்துக்கு 8.30 வருவார்.ஏன் இப்படி என்ற கேட்ட ஒரு நாள்,என்னுடைய நேரப்படி இரவு 10.30 தூங்கி விடியற்காலை 3 மணிக்கெல்லாம் முழிப்பு வந்ததாக சொன்னார்.
ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்த பிறகு என்னிடம் வந்து சாமான்கள் வாங்க என்கேயாவது போகனுமா? என்று அன்புத்தொல்லை பண்ணுவார்.நானும் "ஒன்றும் இல்லை" இப்போது என்று சொல்லி தப்பித்து வந்தேன்.ஒரு நாள் சரி போய் தான் பார்க்கலாம் என்று என்னுடைய இரவு சாப்பாடு 8 மணிக்கு முடித்துவிட்டு அவருடன் 8.30 வெளியில் கிளம்பினேன்.மகிழுந்து ஓட்டுவது என்றால் அவ்வளவு இஷ்டம் போல் அவருக்கு.எங்கு போகலாம் என்றார்?உங்களுக்கு என்ன வாங்கவேண்டுமோ அங்கேயே போகலாம் என்றேன்.
வண்டி 100 ~120 கிமீட்டர் வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்கொண்டிருந்தது.40 கி மீட்டர் தள்ளி உள்ள சீஃப் என்று சொல்லக்கூடிய விமான நிலையத்தையும் தாண்டி போய்கொண்டிருந்த்து.வழி நெடுகே நம்மூர் மக்கள் சொல்வது போல் நம்மூரில் படித்து அமெரிக்கர்களுக்கு வேலை செய்வது,அங்கு நல்ல பெரிய பதவிகளில் இருப்பது மற்றும் பணம் சேர்த்த பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பி வந்து இங்குள்ள அரசியல் நிலையை கண்டு வெம்பி வெடிப்பது என்று வரிசையாக சொல்லிக்கொண்டு வந்தார்.ஆச்சரியமான ஒற்றுமை என்னை திகைக்கவைத்தது.சீஃப் க்கு பக்கத்தில் உள்ள சிட்டி சென்டருக்கு போய் 6 ரியாலுக்கு சாமான் வாங்கிவிட்டு திரும்ப ஒரு 45 கிமீட்டர் ஓட்டி வீடு வந்து சேரும் போது மணி 10.30.சரியாக நான் தூங்கும் நேரத்துக்கு கொண்டுவந்து விட்டார்.என்னதான் பெட்ரோல் விலை குறைவு என்றாலும் வெறும் 6 ரியாலுக்காக சுமார் 90 கி மீட்டர் ஓட்டிப்போய் கொண்டுவிட்டார்.நேரத்தை போக்க பேசவேண்டும் அதை யாராவது கேட்கவேண்டும் அத்தோடு வண்டி ஓட்டவேண்டும் என்று காசு கூட வீணாக்குவதை பற்றி கவலைப்படாமல் இயற்கையையும் அசுத்தப்படுத்திகிறார்களே என்று வருத்தமாக இருந்தது.மற்றொரு முறை இதை அனுமதிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
வார இறுதி விடுமுறை இங்கு இரண்டு நாட்கள்.என்னிடமும் அந்த மலேசியரிடமும் வாகனம் இல்லாத்தால் வெளியிடம் போக பொது முறையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஆனால் நம்ம சிரியாகாரருக்கு மகிழுந்து இருக்கு,குடும்பம் ஷார்ஜாவில் இருக்கு அத்தோடு இரண்டு தேசத்துக்கு போய் வர விசா கெடுபிடி அவ்வளவாக கிடையாது.இந்த காரணங்களாலேயே வார இறுதி நாட்களில் குடும்பத்தை கண்டு வர சுமார் 1000 கிமீட்டர் வண்டி ஓட்டுகிறார்.இப்படி போய் வருவதால் சாதரண நாட்களில் அவரால் சும்மா இருக்க முடிவதில்லையோ என்னவோ!!
அதன் பிறகு பல முறை வெளியில் போக கேட்டாலும் அவர் மனம் நோகாமல் வேறு வேலை இருப்பதாக சொல்லிவிடுவேன்.
நினைப்பதெல்லாம் எங்கு நடக்குது? மீதி அடுத்த பதிவில்.
2 comments:
//இஸ்லாம் மற்றும் அவருடைய கடவுள் பராக்கிரமங்களை நான் ஹெட் போன் போட்டு படம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சொல்வார்.அவ்வப்போது தருமி பதிவுகள் ஞாபகம் வந்தாலும் அவர் சொல்வதை பொருமையுடன் கேட்டுக்கொண்டிருப்பேன்.//
:)
வாங்க கோவி,நீங்களாவது வெளிப்படையாக சிரிக்கிறீங்க நான் மனதுக்குள் சிரிச்சுகிட்டேன்.அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை பதிவாக போடலை,போட்டால் இன்னும் வேடிக்கையாகிவிடும்
Post a Comment