இதற்கு முந்தைய பதிவில் சிமினி பற்றியும் அதை கட்டும் முறைப்பற்றியும் எழுதியிருந்தேன். இங்கு
இது கட்டும் வேலை ஆரம்பித்துவிட்டால் 24 மணிநேரமும், வாரம் முழுவதும் நடக்கும்.
ஒரு நாளுக்கு 2 அல்லது 3 மீட்டர் என்ற கணக்குப்படி ஏறிக்கொண்டு இருக்கும்.
அப்படி போய் கொண்டிருக்கும் போது ஒரு நாள் நாள் நான் இரவுப்பணியில் இருந்தேன். நாங்கள் இருந்த உயரம் சுமார் 74 மீட்டர். ஜனவரி மாதம் என்பதால் ஜெர்கின்ஸ் மற்றும் கம்பளி ஆடைகளை போட்டுக்கொண்டு கைகளுக்கு உறையும் அணிந்துகொண்டுதான் வேலைக்கு வருவோம். கீழேயே குளிர் தாங்கமுடியாது அதுவும் 74 மீட்டர் மேலே கேட்கவேண்டாம். எதுவும் தாக்கு பிடிக்கமுடியாது.வேறு வழி இல்லாததால் கட்டிடத்தின் மேலேயே இருந்தோம்.
எப்போதும் போல் தான் வேலை ஆரம்பித்தது. சுமார் 9 மணிவாக்கில் மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து லேசாக தூர ஆரம்பித்தது. இதெல்லாம் கட்டுமானத்துறையில் சகஜம் என்பதால் நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.மணி 10 வாக்கில் மழையின் வேகம் அதிகரித்தது அதோடு காற்றும் வீசத்தொடங்கியது.
முதலில் ஒன்றும் தெரியவில்லை, இதற்கிடையில் பல புதியதாக வேலையில் சேர்ந்தவர்கள் நாங்கள் நிற்கும் இடம் ஆடுகிறது என்று புகார் செய்யத்தொடங்கினார்கள்.கொஞ்ச நேரத்தில் அதை நாங்களும் உணர ஆரம்பித்தோம்.காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க சிமினியின் ஆட்டமும் அதிகரித்தது. இந்த மாதிரி சமயங்களில் மேல கீழே போகும் லிப்ட்டும் ஓட்டக்கூடாது. கீழே வர வேறு வழி கிடையாது அதனால் பயத்துடன் மேலேயே இருந்தோம்.
நிலமை சற்றும் மேம்படுவதற்கான அறிகுறி தெரியாததால் கான்கீரீட் போடுவதை நிறுத்த முடிவுசெய்தோம்.
ஆமாம் இதென்ன பயப்படக்கூடிய சமாச்சாரமா?
ஆமாங்க!!
நாங்க நிற்கிற,வேலை செய்கிற இடம் அத்தனையும் கீழே போட்டுள்ள கான்கீரீட் பலத்தில் உள்ளது.அது சரியாக இறுகாத சமயங்களில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போகக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
சிமினின் ஆட்டம் அதிகமாக இருந்ததாலும் கீழே போட்ட கான்கீரீட் இறுகாததாலும் வேலையை நிறுத்த முடிவுசெய்தோம்.காற்று நாங்கள் போட்டிருந்த பிளாஸ்டிக் தடுப்புகளை கிழித்துக்கொண்டு போக ரம்பித்ததால் வேலையை நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
காற்றின் வேகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒன்று நேர்ந்தால் மரம் முறிந்து விழுந்த மாதிரி ஆகிவிடும்.நான் கேள்விப்பட்டவரை இந்த மாதிரி எங்கும் நடந்ததில்லை.
வேலையைதான் நிறுத்திவிட்டோமே என்று உடனே வீட்டுக்கு போகமுடியாது.போட்ட கான்கீரீட் பக்கத்தில் உள்ள ஸ்டீல் பிளேட்டுடன் இறுகிக்கொள்ளாமல் இருக்க 1 மணிக்கு ஒரு முறை பிளாட்பாரத்தை உயர்த்த வேண்டும்.அதற்கு சில ஆட்களும் ஒரு மேற்பார்வையாளரும் அங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.
இவர்கள் நிலமைதான் கொடுமை,மன தைரியம் இல்லாதவர்கள் பாடு மிகக்கஷ்டம்.
நல்ல வேளை நாங்கள் நினைத்த மாதிரி அந்த காற்று / மழை எங்களை அவ்வளவாக தினறடிக்காமல் காலை 2 மணிபோல் நின்றுவிட்டது.கட்டிடத்துக்கும் எந்த சேதமும் இல்லை.அந்த ஆட்டத்தை இன்று நினைத்தாலும் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.
இதாவது கட்டிடத்தின் உள்ளே,மேட்டூரில் 187 மீட்டர் உயரத்தில் கட்டிடத்துக்கு வெளியே காற்றுப்புயலில் மாட்டியதை வேறொரு சமயத்தில் சொல்கிறேன்.
2 comments:
கொடுங்காத்தும் குளுரும் உயரமும் சேர்ந்தால் கேக்கவே வேணாம்.
வயித்துக்குள்ளெ பயம் 'ச்சிலீர்'ன்னு இருந்திருக்கும்.
ஆமாம்,
சரியாச்சொன்னீங்க.
நன்றி
Post a Comment