Saturday, December 27, 2014

மடிகரி (1) - சுற்றுலா

இரண்டரை மாதத்துக்கு முன்பே “எனக்கு 60 கல்யாணம்,நீங்களெல்லாம் நிச்சயமாக வரனும்” என்று வேண்டுகோள் விடுத்த மும்பாய் உறவினர் தவறாமல் டிக்கெட் போடுவதென்றால் முன்னமே செய்துவிடவும் என்று சொல்லியிருந்தார்.அதை ஞாபகம் வைத்துக்கொண்டு IRCTC இணைய பக்கத்தில் சரியாக இரண்டு மாதம் வந்தவுடன் முயற்சித்தேன்.இரவு 12 மணி தாண்டியவுடன் தான் செய்யமுடியும் என்பதை மறுநாள் தான் தெரிந்துகொண்டேன் ஏனென்றால் காலை முயற்சிக்கும் போதே காத்திருப்பு பட்டியலில் இருந்தது.ஆவது ஆகட்டும் என்று 2AC யில் காத்திருக்கும் பட்டியலில் போட்டுவைத்தேன்.கிருஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் காத்திருப்பு பட்டியலில் முன்னேற்றமே இல்லாததால் கிளம்புவதற்கு சில நாட்கள் முன்பு கேன்சல் செய்துவிட்டோம்.

போட்ட லீவு வீணாக போகாமல் இருக்க வேறு எங்காவது போகலாம் என்ற போது கூர்க் போகலாம் என்று முடிவு செய்து தேவையான விபரங்களை இணையத்தில் இருந்து பெற்று சென்னை - மைசூர் - மடிகரி என்று முடிவு செய்தோம். மைசூர் வரை இரயிலில் அங்கிருந்து பஸ்ஸில் மடிகரி போவது என்று முடிவு செய்து காவேரி விரைவு ரயிலில் இரவு 9 மணிக்கு சென்னையில் கிளம்பி காலை 7 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்தோம்.KSRTC பேருந்துவில் முன்பதிவு செய்திருந்தோம்.காலை 10.15 மணிக்கு உள்ள பேருந்துவில் முன் பதிவு செய்திருந்தோம் ஆனால் அதற்கு முன்பே பல பேருந்துகள் இருப்பது அங்கு போனதும் தெரிந்தது. மடிகரிக்கு இல்லாவிட்டால் குஷால் நகர் (86 கி.மீ) வரை சென்று அங்கிருந்தும் செல்லமுடியும்.

மடிகரியில் தங்குவதற்கு விடுதி முன்பதிவு செய்யலாம் என்று இணையத்தில் தேடிய பல விடுதிகளில் என்னுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரு இடத்தை “Travelguru" மூலம் புக் செய்தேன்.கிளம்பும் நாளான்று இந்த ஹோட்டலுக்கு ஒரு முறை கூப்பிட்டு சரி செய்துகொள்ளலாம் என்று கேட்டால்,அப்படி ஒரு புக்கிங்கே இல்லை என்று சத்தியம் செய்தார்கள்.இதென்னடா கொடுமை என்று நினைத்து டிராவல் குருவுக்கு மும்பைக்கு போன் போட்டா அங்கு இங்கு என்று இழுத்து கடைசியில் வேறு ஒரு விடுதிக்கு மாற்றிக் கொடுத்தார்கள்.இனிமேல் இந்த இணைய முகவரை அனுகக்கூடாது என்று முடிவு செய்தேன்.

மைசூருக்கு சென்று சேர வேண்டிய ரயில் சரியாக செல்ல, Pre-Paid ஆட்டோவுக்கு ஒரு ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துகொண்டால் சேர வேண்டிய இடத்தை கேட்டு அதற்கான தொகையையும் அதிலேயே பிரிண்ட் செய்து கொடுத்துவிடுகிறார்கள்.நன்றாக இருக்கு. 25 ரூபாய் கொடுத்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள KSRTC முனையத்துக்கு சென்றோம்.மைசூரில் உள்ளூர் பேருந்துகளுக்கு தனி முனையம் உள்ளது அதனால் சரியாக சொல்லி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

KSRTC முனையத்துக்கு ஸ்டேஷனில் இருந்து 15 நிமிடம் தான் ஆனது.நான் முன்பதிவு செய்திருந்த வண்டி வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருவேண்டும் என்பதால் முணையத்தில் உள்ள உணவகத்திலேயே காலை சிற்றுண்டியை முடித்தோம்.10.15 மணி வண்டிக்கு சுமார் 9.45 க்கு பேருந்துவின் நடத்துனரிடம் இருந்து அழைப்பு வந்தது.வண்டியின் எண் , இருக்கும் இடம் எல்லாம் சொல்லி அங்கு வருமாறு அழைத்தார்.முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசினார்.

சரியாக 3 மணி நேர பயணம். 126 கி.மீ தூரம். மடிகரி வந்து சேர்ந்தோம். மற்றவரை அடுத்த பதிவில்.

No comments: