Wednesday, May 26, 2010

குஜராத் பூகம்பம்.

என்ன மேட்டரே ரொம்ப பழசா இருக்கே என்று பார்க்கிறீர்களா,நேற்று கூகிளிடம் ஏதோ தேடப்போய் இந்த பக்கம் சிக்கியது.படிக்க படிக்கப்படிக்க தார்மீக கோபங்கள் எங்கெங்கோ பாய்ந்தாலும் இந்த மாதிரி பொறியாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இருக்கும் வரை இது தீராத பிரச்சனை தான்.

டெல்லியில் மெட்ரோ கான்கிரீட் Corbel விழுந்ததும் இதே மாதிரியான ஆனால் கம்பியால் ஏற்பட்ட பிரச்சனை தான்.இதெல்லாம் படிக்கப்படிக்க அடுக்கு மாடி கட்டிடம் அல்லது கடை தொகுதிக்கு உள்ளே போகும் வாசலில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தான் போகனும் என்று நினைக்கிறேன்.போனா திரும்பி வருவதும் வராததும் அவர் கையில் தான் இருக்கு.

வெளி நாட்டில் ஏன் பல கட்டிடங்கள் விழவில்லையா?இந்தியர்களை மட்டும் குறை சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று என்னை சுட்டிக்காட்ட விரும்பினால்...கீழே உள்ள சுட்டிக்கு போய் முழுவதுமாக படித்துவிட்டு சொல்லவும்.சுருக்கமாக சொன்னால் பொறியாளர் படிப்புக்கு படித்துவிட்டு ஆரம்ப கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் கட்டிய கட்டிடங்கள் தான் இந்த மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை IIT குழுமம் ஆய்வு செய்து சொல்லியுள்ளது.

படித்துவிட்டு தலையில் கை வைத்துக்கொள்ளுங்கள்-குஜராத் பூகம்பம்

பொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்

Thursday, May 20, 2010

இசை கேட்டால்.....

மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போதே Airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கும்(மறு ஒளிபரப்பு) என்றும் அதுவும் நேற்று ஷ்ரீகாந்த் நன்றாக பாடி இருப்பதாகவும் சொன்னார்,அப்படியே Chat ஐ முடித்து தொலைக்காட்சியை ஆரம்பித்த போது ஓவியா பாடிக்கொன்டிருந்தார்.ஷ்ரீகாந்த் பாடிவிட்டாரா இல்லையா என்று தெரியாத நிலையில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

கடைசியாக வந்த அந்த இளம் சிங்கம் கர்சித்ததை தொண்டை அடைக்க பார்த்து மகிழ்ந்தேன்.என்ன குரல்! சித்ரா சொன்ன மாதிரி பெரிய பெரிய பாடகர்களே தொட யோசிக்கும் பாட்டை அனாயாசமாக பாடி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டான்.வயதுக்கு ஏற்காத இடங்களில் சிதறினாலும் மொத்தத்தில் "சூப்பர்" பாட்டுக்காரன் அவன் தான்.
Child Prodigy வகையில் வரும் ஷ்ரீகாந்த் மென்மேலும் வளர்ந்து ஒரு நல்ல பாடகனாக வரவேண்டும் என்பதே என் ஆசை.

ஒரு சாம்பிள்



யூடூபில் தேடினால் இன்னும் நிறைய கண்டு மகிழலாம்.

Wednesday, May 19, 2010

மார்ச் டூ மே

மார்ச்சில்




மே யில்

மலைக்கே முட்டு!



தினம் தினம் போய்வரும் பாதை அதுவும் வழியில் குறுக்கிடும் குன்றை வெட்டி அது மேலும் சரியாமல் இருக்க படத்தில் உள்ள மாதிரி ஒரு சப்போர்ர்ட்.இத்தொழிற்நுட்பம் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் இம்முறை பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.இந்நாள் வரை நேரிடையாக நான் மேற்பார்வை செய்யாத வேலைகளில் இதுவும் ஒன்று ஆனால் புரிந்துகொள்ள அவ்வளவு ஒன்றும் கடினமானது ஒன்றில்லை.

பொது விதியாக, ஓரிடம் சரிகிறது என்றால் அது சரியும் திசைக்கு எதிர்புறத்தில் முட்டு கொடுத்து அது மேலும் சரியாமல் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த வேலையில் சரியக்கூடிய திசையில் எவ்வித முட்டும் கண்ணுக்குத்தெரியாது,அப்படியென்றால் இந்த சுவர் எப்படி அந்த மண்ணை சரிவில் இருந்து தாங்கிப்பிடிக்கிறது? அது தான் தொழிற்நுட்பம்.

இந்த தொழிற்நுட்பத்துக்கு MSE என்று பெயர்: ஆதாவது Mechanically Stabilized Earth- இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால் மண்ணிற்கு நீட்சித்தன்மையை கொடுப்பது.மண்ணினால் தள்ளப்படும் விசையை அதே மண்ணைக்கொண்டு தாங்கிப்பிடிக்கக்கூடிய செயல் முறை.மேலை நாடுகளில் பல தரப்பட்ட முறையில் 1980 களிலேயே பல இடங்களில் பல தரப்பட்ட சாமான்கள் மூலம் முயற்சித்து வெற்றிகொள்ளப்பட்ட தொழிற்நுட்பம் இது.

முதலில் பக்கவாட்டு சுவர் Precast முறைப்படி சிறிய சிறிய பாகங்களாக கொண்டுவருவார்கள் அதை முதலில் நிறுத்தி அதற்கு தற்காலிக முட்டு கொடுப்பார்கள் அதன் பிறகு அதோடு Steel Flats அல்லது சிறிய கம்பி வலைகளை பொருத்துவார்கள்.



நன்றி:ரியின்ஃபோர்ஸேட் எர்த்(படங்கள்)



இந்த கம்பிவலை தான் பக்கவாட்டு சுவர் வெளியே போகாமல் இழுத்துபிடித்துக்கொள்ளும்.சுவரின் உயரத்தை வைத்து இந்த வலை நீளம் இருக்கும்.பொறியாளர்களின் மதிப்பு படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த வலை சுவர் நீளத்துக்கு குறுக்குவாட்டில் இருக்கும்.படிப்படியாக தரமான மண்ணை போட்டு Compact செய்துகொண்டே போகனும்.இந்த மண் இறுக்கம் தான் தான் அந்த கம்பிவலையையும் மண்ணையும் ஒன்றாக்கி சுவர் வெளிப்பக்கம் சாயாமல் இருக்க உதவும்.

இப்படியெல்லாம் எழுதினா பலருக்கு புரிய வாய்ப்பில்லை தான் ஆனால் சென்னை தி.நகர் பாலம்,போத்தீஸ் பக்கம் இறங்கும் இடத்தில் உள்ள பாலத்தின் பகுதி இம்முறையில் தான் கட்டப்பட்டுள்ளது,என்றாவது அந்த பக்கம் போகும் போது ஞாபகம் இருந்தால் பாருங்கள்.இத்தொழிற்நுட்பம் இந்தியாவில் பல இடங்களிலும் கையாளப்படுவருகிறது.என்ன தான் தொழிற்நுட்பம் அதன் வேலையை செய்தாலும் முறையான கண்காணிப்பு இல்லாவிட்டால் மழை நீர் உட்புகுந்து அந்த இரும்பு வலைகளை துருபிடிக்க வைத்து அதன் செயல் திறனை குறைக்கும் வாய்ப்புள்ளது.

Thursday, May 13, 2010

சென்னையில் வீடு வாங்கியிருக்கிறீர்களா?

சொன்னா நம்பமாட்டீங்க,சமீபத்தில் நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று சுமார் 1 வருடமாக அலைகிறேன்..ஹூகும் முடியவில்லை.எப்படியும் பேங்க் லோன் போட்டே ஆகனும் என்ற நிலை இருந்தாலும் நான் பார்க்கிற அல்லது எனக்கு காண்பிக்கிப்படுகிற வீடுகள் அவ்வளவும் சில முக்கியமான விஷயங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டியுள்ளது.சென்னைக்கு உள்ளே கட்டப்படும் பல வீடுகள் நடுத்தர குத்தகைக்காரர்களாகவே அல்லது பில்டர்ஸ்களாலேயே கட்டப்படுகிறது.இவர்கள் வேலையை எடுத்து முன் அனுபவம் உள்ள குத்தகைக்காரர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் அதன் பிறகு அவ்வப்போது உள் நுழைந்து பார்பதோடு சரி.எனக்கு தெரிந்த அளவில் தரக்கட்டுப்பாடு என்பது அதுவாக நிகழ்தாலொழிய இவர்களால் கொடுக்க இயலாது ஏனென்றால் இவர்கள் சொல்லும் காரணம்
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.

நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).

உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.

உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.

இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.

ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??

ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.

சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.

வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.

இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.

ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???

மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)

இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.

Wednesday, May 05, 2010

உபயம்

சற்று முன் போரூர் சந்திப்பில் நின்றிருந்த போது எதேச்சயையாக இந்த போர்ட் கண்ணில்பட்டது,சிக்னல் பச்சை விழுவதற்குள் கேமிராவை உயிர்ப்பித்து தட்டினேன்.

கோவில்களில் தான் உபயதாரர்களின் விளம்பரம் இருக்கும் என்று பார்த்தால்!!



மலிவு விலையில்...

வர வர கட்டிடங்கள் உயரமாகிக்கொண்டு போய் கொண்டிருக்கும் வேளையில் அதற்காக செய்யப்படும் வேலைகளிலும் அபாயங்கள் நிறைந்துவருகின்றன அதில் ஒன்று தான் இந்த சுற்றுச்சுவர் கண்ணாடி துடைக்கும் வேலை.சில வருடங்கள் வரை கண்டோலா என்று சொல்லப்படுகிற தொங்கும் மேடை மூலம் சுத்தம் செய்து வந்தார்கள்.இம்மேடை இரு சிறுமோட்டார்கள் மூலம் கூறையின் மேலிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இரும்பு கம்பி மூலம் நகரும் தன்மையுடையது.இம்முறை ஓரளவுக்கே பாதுகாப்புடையது இதுவும் தன் கட்டுப்பாடை இழந்து பல மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.மேலே சொன்ன முறையை மேம்படுத்தி ஒழித்து மோட்டார் இல்லாமல் இரு கயிறுகள் மூலமே சுத்தம்செய்யும் வேலையை கொண்டுவந்தார்கள்.இம்முறையில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே வேலை செய்யமுடியும்.முதன் முறையாக இவ்வேலையை சிங்கையில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அறிமுகபடுத்தினார்கள்.இதன் பாதகங்கள் பற்றிய முழு விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.




கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.



கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"



நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.

Sunday, May 02, 2010

திண்டுக்கல்லில் கொட்டிய மழை.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுகல்லில் கொட்டிய மழையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக செய்தித்தாளில் பார்த்தேன்.அன்று சாயங்காலம் சென்னை கடற்கடற்கரையில் இருந்தேன்.வீட்டை விட்டுகிளம்பும் போதே மேற்கு பக்கம் மேக மூட்டம் மழைக்கான கட்டியம் கூறினாலும் அன்று சில தூரல்களுடன் முடிந்துவிட்டது.

சென்னை கடற்கரையில் இருந்து அலை பேசியில் எடுத்த படம் இது.

400 கி.மீட்டர் பயணம்.

மே 1 & 2 விடுமுறை வருகிறது எங்காவது போகலாமா என்று மச்சினர் சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்தாலும் முடிவெடுக்கமுடியாமால் அந்த சமயத்தில் மனதுக்கு தோன்றிய இடத்தை சொல்லி அதில் திருவண்ணாமலையை தேர்ந்தெடுத்தோம்.கூகிளில் அவ்விடத்துக்கு எப்படி போகனும்என்று தேடிய போது சென்னை---மதுராந்தகம்--திண்டிவனம்--திருவண்ணாமலை என்று போட்டிருந்தது,பயண தூரம் 182 கி.மீட்டர் என்றும் 3.86 மணி நேரம் ஆகும் என்று விபரங்கள் தெளிவாக இருந்தன.இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள கூகிள் எர்த்தில் திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து எப்படி போகனும் என்ற விபரங்களை வண்டி செலுத்தப்போகும் மச்சினருக்கு காண்பித்தேன்.

மதிய சாப்பாடுக்கு பிறகு சுமார் 12.45 க்கு கிளம்பி வடபழனியை விட்டு ஒருவழியாக நீந்தி தாம்பரம் வரவே 45 நிமிடங்களுக்கு மேலாக ஆகிவிட்டிருந்தது.இது இப்படி இருந்தாலும் சாலையில் நடைபெரும் சாகச நிகழ்சிகள் இந்த குறையை போக்கி சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சிகளையும் தந்தது.கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஆபீஸ் ரோலிங் சேர் பைக்கில் பயணிக்கிறது.



ஒரே Lane க்குள் இருவண்டிகள் பயணிக்கும் திறமையா அல்லது அனுசரனையா என்று தெரியாமல் ஒரு வழியாக திண்டிவனம் அடைந்தோம்.ஊருக்கு தகுந்த மாதிரி சாலைகள் என்ற நியதி போலும்,முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு வண்டிகளின் தரத்தை சோதனை செய்யும் களமாக இருக்கிறது.திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரு லேன் வழித்தடம் அதனால் வாகனங்களின் வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்படுகிறது.திருவண்ணாமலை அடைவதற்கு முன்பு செஞ்சி கோட்டையை கடக்கவேண்டும்.இருமலைகளை இணைக்கும் ஒரு சுவர் சீனப்பெருஞ்சுவர் போல் இருக்கு.சாலை வழித்தடத்துக்காக அதை உடைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நடந்தே மேலே போகனும் என்பதாலும் வெய்யிலின் கடுமை காரணமாகவும் தூரத்தில் இருந்து படம் எடுப்பதோடு நிறுத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.





பல சுற்றுலா தளங்களை அடைய சரியான வழிகாட்டி இல்லாதது சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கிறது.அரசாங்க வருவாயை பெருக்க பல சுற்றுலா தளங்கள் இருந்தும் அதனை சரியாக பராமரிக்காமல் இருக்கிறமோ என்று தோனுகிறது.இந்த மாதிரி இடங்களில் தமிழோடு கூடிய ஆங்கில விபரங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.இங்கு தமிழை மட்டும் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல.

திருவண்ணாமலையிலும் பல விபர பலகைகள் சிரிதாகவோ அல்லது கண்ணில் படாத இடத்திலோ வைத்து புதியவர்களை திண்டாடவைக்கிறார்கள்.இங்கு என்னனென்ன பார்க்கவேண்டும் என்று பட்டியல் போடும் போது ஞாபகம் வந்த ஒரே வலைப்பதிவு நம் சுவாமி ஓம்காரருடையது தான்.தேவையான விபரங்களை எடுத்துக்கொண்டுஅதனை வைத்து சில இடங்களுக்கு போனோம்.அங்கு எடுத்த சில படங்கள்.... கீழே.





பிராதனகோபுரத்தின் வாயிலின் இருபுற சுவற்றில் உள்ள சிற்பங்கள்.




இந்த அம்மன் சன்னிதியில் ஒரு தூணில் வித்தியாசமான ஒரு சிற்பத்தை பார்த்தேன் ஆதாவது அந்தக்கால DD யில் வரும் சுழலும் பந்து போன்றது,இன்னும் இலகுவாக சொல்லனும் என்றால் கொரிய சின்னம் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது- வண்ணம் இல்லாமல்.








கீழே உள்ள படம் நடைபாதையில் இருந்தது.பல பாஷைகளின் கலவை போல் இருக்கிறது.



கோவில் தரிசனம் முடித்த பிறகு ரமனாஸ்ரமம் போனோம்.வாசலிலேயே சில இஸ்லாமியர்களை கண்டது ஆச்சரியமாக இருந்தது.மிகப்பெரிய விளம்பர பலகையில் அங்குள்ள கட்டிட விபரங்களை கொடுத்துள்ளதால் பல கட்டிட விபரங்கள் வாசலில் எழுதப்படவில்லை.நிர்வாண அறைக்கும் குளியறறை மட்டும் விதிவிலக்கு.எங்கெங்கு காணினும் பலவித மயில்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்தது.அசாதரண அமைதி ஒரு சில இடங்களில்.

திரும்ப வரும் போது திண்டிவனத்தில் இருந்து பஞ்சவடி போகலாம் என்று நினைத்து பாண்டிச்சேரி சாலையில் போனோம் பொன்னோம் போய்க்கொண்டே இருந்தோம்.இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத்தாலும் மணி 9 மணியாகிவிட்டதாலும் அப்படியே திரும்ப சென்னை வந்த போது இரவு மணி 11.15 ஆனது.