Tuesday, October 28, 2008

துரோணா

புத்தகத்தை பிரித்த உடனே தூக்கம் வரும் ஆசாமிகளா? நீங்கள் தாராளமாய் போய் தூங்கலாம் இந்த படத்தில் ஏனென்றால் படம் ஆரம்பிக்கும் போதே புத்தகத்தை பிரிக்கிறார்கள்.





ரமலான் விடுமுறையில் ஒரு நாள் படம் பார்க்கலாம் என்று ஜபதெலியில் உள்ள அரங்குக்கு போனோம்,உள்ளே நுழையும் முன்பு தமிழ் படமா? ஹிந்தி படமா என்று விவாதிக்கும் போது ஹிந்தி வென்றது.இங்குள்ள குடும்பங்களில் குழந்தைகள் பல ஹிந்தியை பள்ளியில் படிப்பதாலும்,ஹிந்தி சினிமா சேனல்கள் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதாலும் பலர் அதை விரும்புகின்றனர்.பெரும்பாலான மக்கள் அதை விரும்பும் போது சரி "ராமன் தேடிய சீதை" யை விட்டுக்கொடுத்தேன்.

மிகக்குறைவான கூட்டம் படத்தின் பிரபலத்தை படம் முடிந்தவுடன் தான் உணரமுடிந்தது.அபிசேக்பச்சன் & நடிகை பெயர் தெரியவில்லை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமும் இல்லை.பல வருடங்களுக்கு பிறகு ஒரு இந்தி படம் பார்பதால் அர்த்தம் புரிந்துகொள்வதில் கஷ்டமாக இருந்தது.

படம் முடிந்த பிறகு உறவினர், ரித்திக்கு போட்டியாக அபிஷேக் இந்த படத்தில் ரித்திக் செய்திருந்து போல் செய்யமுயன்றிருக்கிறார் என்று சொன்னர்.இது குழந்தைகள் படம் முடிந்தால் குழந்தைகளை மட்டும் அனுப்பி பார்க்கவையுங்கள்.

Wednesday, October 22, 2008

மண் தோண்டும் பல்

மண் தோண்டுவதில் தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்? அதற்கு ஈடுகொடுக்கும்மாறு தொழிற்துறையும் போட்டி போட்டுக்கொண்டு இயந்திரங்களை தயாரித்து தள்ளுகிறது.அந்த வரிசையில் கீழே உள்ள இயந்திரமும் ஒன்று.இதை இவ்வளவு சமீபத்தில் பார்த்ததில்லை என்பதால் கண்ணில் பட்டதும் உடனே சுட்டுவிட்டேன்.

இதன் பயன்பாடுகள் கட்டுமானத்துறையில் அதுவும் தரைக்கு கீழே வேலை என்றால் அதிகம்,அதை இப்போது சொன்னால் ஒரு பெரிய தொடராகிவிடும்,அதனால் பிறகு விரிவாக சொல்கிறேன்.






சும்மா, மண்ணை அப்படியே கரைச்சு சாப்பிடுவேன் என்று சொல்கிற மாதிரி இருக்கா?

Tuesday, October 21, 2008

போக்குவரத்து - துபாய்

போக்குவரத்து நெரிசலுக்கு இப்போதைக்கு பிரபமானாலும் ஷேக் சயித் சாலையில் 100 கி.மீ வேகத்துக்கு போகும் போது அருமையாகத்தான் இருக்கு.இந்த நெரிசல்கள் எல்லாம் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். துபாய் அரசாங்கம் செய்யும் மெட்ரோ மற்றும் மேம்பாலங்கள் வேலை எல்லாம் துரிதமாக நடந்து வருகிறது.

இப்போது ஓரளவுக்கு நிலவியல் அறிவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.அவ்வப்போது சாலையில் தென்படும் (கீழே உள்ள படத்தில்) இட பலகைகளை பார்க்கும் போது,எதற்கு இரண்டு கலரில் பலகைகள் என்று யோசித்தேன்.



பிரவுன் பலகைகள் புதியவர்கள்/ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்காக வைத்துள்ளார்களாம்.வித்தியாசமாக இருந்தது.இதே மாதிரி வழிகாட்டும் பலகைகள் அல் அய்ன் மற்றும் ஃபுஜிரா போகும் போதும் கண்ணில் பட்டது.
இப்படி வித்தியாசமாக வைத்திருந்தாலும் அனிச்சையாக எந்த பலகையை பார்பது என்பது தெரியாமல் வாகன வேகத்தில் தடுமாறுவது இயற்கையாக நடந்தது.

Sunday, October 19, 2008

துபாய் - சில படங்கள்

அவ்வப்போது செல்லும் இடங்களில் பிடித்தமான காட்சியாக அமைந்தால் செல்பேசியில் சுட்டு வைப்பேன்,அதில் சில...

பலவிதமான பேரிச்சம்பழங்கள்.


நீ என்ன பெரிய பிஸ்தாவா? நம்மூரில் விலை அதிகமா? இங்கு போட்டிருக்கும் விலையோட 13.30 ஆல் பெருக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.


இது ஒரு கடைத்தொகுதியின் உள்ளே (ஜினெட்)

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.

Saturday, October 18, 2008

ஐயின் மிருககாட்சிச் சாலை

ரமலான் பெருவிழா காலத்தில் சில நாட்கள் தொடர்ந்தார்போல் விடுமுறை வந்தது அதை உள்ளூரில் இருக்கும் பலர் வண்டியை எடுத்துக்கொண்டு 300~400 கி.மீட்டர் என்று பக்கத்து ஊருக்கு போய் வருவார்கள்.அதே மாதிரி என் உறவினர்கள் என்னையும் அவர்கள் குடும்பத்துடன் ஓமன் போய் வரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் என்னிடம் இருப்பது வெறும் விசிட் விசா என்பதால் இங்கிருந்து போய் திரும்புவதில் பிரச்சனை இருக்கும் என்றார்கள்,அதற்குப் பதிலாக குழந்தைகளின் விருப்பப்படி அல் அயினில் இருக்கும் மிருககாட்சி சாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்து பாலைவனத்தை திரும்பவும் கடக்க ஆரம்பித்தோம்.



எங்கிருக்குது இந்த இடம்? கீழே உள்ள படத்தை பாருங்கள்



மறுபடியும் நீண்ட நெடும் சாலை எங்கு பார்த்தாலும் மணல் மற்றும் அங்கும் இங்குமாக வீடுகள்.

2 மணி நேரப்பயணம் சுகமாக இருந்தது.மொத்தமாக மணலாக இல்லாமல் ஒரு பகுதிக்கு மேல் சாலை இருபுறமும் புதர் போன்ற சில மரங்கள் தெண்பட்டன.

இது தான் முகப்பு பகுதி.



வாசலில் உள்ள பெயர் பலகை




மிருகக்காட்சி சாலையின் உள்ளே...









இது முடிந்து பக்கத்தில் உள்ள தீம் பார்கையும் ஒரு ரவுண்டு விட்டுவிட்டு வீடு திரும்பினோம்.
இங்கு மகிழுந்து மட்டும் இல்லை என்றால் ஒரு இடமும் போகமுடியாது.பொது போக்குவரத்து நகரத்துக்கு உள்ளே மாத்திரமே உண்டு.

Thursday, October 16, 2008

முதல் பனி

இன்று காலை வீட்டை வெளியில் வந்த உடனேயே ஒரே புகைமூட்டமாக இருக்குதே என்று பார்த்தால் "பனி".காலை மெது நடைக்கு உகந்தாக இருக்கும் என்று நினைத்தால்...நடந்த 10 நிமிடங்களுக்குள் வேர்க்க ஆரம்பித்துவிடுகிறது.10 நிமிடங்களுகுள் பனி இறங்கி சுத்தமாக மறைந்துவிடுகிறது.



கால நிலை மாற இந்த பனி ஒரு அறிகுறி போல் இருக்கு,அனுபவிப்போம் இதையும்.

Wednesday, October 15, 2008

துபாய் பற்றி தெரிந்துகொள்ளனுமா?

எதேச்சையாக கண்ணில் பட்ட இந்த ஆங்கில வலைப்பூ துபாயைப் பற்றி நிறைய தகவல்களை கொடுக்கிறது.

துபாய் வருவதற்கு ஆசைப்படுபவர்கள் இதை படிக்கலாம்.

இங்கு சொடுக்கவும்.

Tuesday, October 14, 2008

ஓட்டுனர் உரிமம்-துபாயில்

இங்கு வந்த நாள் முதலாக காலை என் உறவினர் என்னை வேலையிடத்தில் விட்டுவிட்டு செல்வார்,என்னதான் அவர் போகும் வழி என்றாலும் ஒவ்வொரு நாளும் அவருடன் வண்டியில் வரும் போது எனக்காக சீக்கிரம் கிளம்புவதும் அவர் மணைவியை அலுவலகத்தில் விடுவதுவும் பாதிக்கப்படுகிறதோ என்ற உள்ளுணர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறது.

சரியான பேருந்தோ அல்லது விரைவான சேவையில்லாததால் நானும் பல விதங்களில் வீட்டில் இருந்து வேலைக்கு வர முயற்சித்து இன்றுவரை தோல்வி தான் அடைந்துள்ளேன்.

காலை 7 மணிக்கு வீட்டிவிட்டு கிளம்பி பஸ் நிறுத்தத்துக்கு வந்தால் நான் போக வேண்டிய பஸ் எப்போது வரும் என்று சொல்லமுடியாத நிலை, வந்தாலும் ஏறுவதற்கு முடியுமா? என்று சொல்லமுடியாது.இப்படிப்பட்ட நிலையில் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்துவைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்துக்கொண்டிருக்கேன் அதைப் பற்றி அவ்வப்போது பலரிடம் பேசி அறிந்துவைத்திருந்தாலும் நேற்று இரவு லுலு கடைத்தொகுதிக்கு போன போது அங்கு இதற்கென்று ஒரு சின்ன அடைப்பு ஏற்படுத்தி அவர்களின் விபரங்களும் ஓட்டுனர் உரிமம் வாங்க எவ்வளவு செலவாகும் என்றும் போட்டிருந்தார்கள்...பார்த்துவையுங்கள்.

Student File = 20
Eye Test = 30
Learning Permit = 40
Admission Fee =200
LMV =1300 (for 20 lessons)
Assessment Test =100
Prelim. Lecture = 70
Road Test = 100
Signal Lecture = 70
Parking Test = 70
Cert&Ser.Charges = 100
LMV-4 lecture = 500
License Issue = 110
LMV issue Test = 70

Total = 2780 திராம்.

இது குறைந்த பட்சம்,உங்கள் திறமை அதிர்ஷ்டத்தை பொருத்து மாறும்.

இப்படி வாங்கும் உரிமம் 1 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது கூடுதல் தகவல்.
முடியுமா? எனபதை விட தேவையா என்பதே இப்போது தொக்கி நிற்கிறது.

Sunday, October 12, 2008

தமிழ் மேல் எவ்வளவு ஆசை!!!

இங்கு (துபாயில்) நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் "வீடு காலி"- விபரங்களை ஒட்ட ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளார்கள்,அதில் இப்படி ஒரு துண்டுப்பிரசுரம்.

என்ன ஆசை இவருக்கு தமிழ் மீது!! சரியான குசும்பனாக இருப்பார் போலும். :-)

சந்திரன் மேற்பரப்பு?

கீழே உள்ள படம் என்ன சந்திரன் மேற்பரப்பு மாதிரி இருக்கா?

அது தான் இல்லை,இங்கு உள்ள மணலின் மீது தண்ணீர் விட்டுவிட்டு மறு நாள் காலை வந்து பார்க்கும் போது இப்படி அழகாக மண் கொப்பளித்து இருந்தது.இதை பார்க்கும் போது ஏதோ மனிதன் நடமாடாத கிரகத்தின் மேற்பரப்பு போல் தோன்றியது.



படத்தின் மீது சொடுக்கிப் பாருங்கள் அதன் அருமை தெரியும்.

கி.மீட்டர் உயரமான கட்டிடம்

ஆடுதுறை என்ற பதிவர் இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார்.
படத்தை பாருங்கள்...1 கி.மீட்டர் உயரத்துக்கு ஒரு கட்டிடம் கட்டப்போகிறார்களாம் அதைச் சுற்றி 70,90 மாடி என்று மேலும் பலவிதமான கட்டிடங்களும் வரப்போகிறதாம்.

என்னைப்பொருத்த வரை...இது தேவையில்லாத உயரம் என்று தோன்றுகிறது,இங்கு நிலத்தேவை கட்டுப்பாடு அவ்வளவாக இல்லாத இடத்தில் அளவுக்கு அதிமான் உயரம் போவது வெறும் உலகச்சாதனை என்ற பெயர் மட்டுமே தாங்கி நிற்க உதவும்.



வான்வெளியிலும் கால்பதிக்கப்போவதாக இன்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன்,ஒருவேளை ராக்கேட் ஏவுவதற்கு இந்த கட்டிடம் உதவியாக இருக்குமோ என்னவோ? :-)


படங்கள்: உதவி கலீஜ் டைம்ஸ்

Saturday, October 11, 2008

கோர்பகான் கடற்கரை

மற்ற பெரும்பாலான தேசங்களுக்கு ஞாயிறு விடுமுறை என்றால் இங்கு வெள்ளி விடுமுறை.முதல் வெள்ளிக்கிழமையை எப்படி கொண்டாடுவது என்று பேச்சு நடக்கும் போது வீட்டு குழந்தைகள் ஏதோ பெயர் சொன்னார்கள்,ஒன்றும் விளங்கவில்லை.புதிய தேசத்தில் தலை நுழைத்து அங்கு உள்ளவர்கள் பேசும் போது கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்குமே அப்படி இருந்தது அப்போது.எங்கு போனாலும் சரி என்றேன்.அவர்கள் பேசும் போது ஃபுஜூரா என்ற பெயர் மட்டுமே கேட்ட மாதிரி இருந்தது. மதியம் சுமார் 2 மணிக்கு கிளம்பினோம்.பாலைவன பகுதியில் அருமையான சாலையின் மேல் வண்டி போக ஆரம்பித்தது.இந்த சாலையை எமிரேட் சாலை என்றார்கள்.எல்லா எமிரேட் சாலைகளையும் இணைப்பதால் அந்த பெயர் வந்திருக்கும் போல் இருக்கு.

கீழே உள்ள வரைப் படத்தை பாருங்கள்.



சுமார் 190 கி.மீட்டர் பயணம்,வண்டி எப்போதும் 100~120 கி.மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.இது தான் அந்த சாலையின் வேகக் கட்டுப்பாடு.சீரான நேர் சாலை.



கொஞ்ச தூரம் வந்த பிறகு மலைகள் தென்பட ஆரம்பித்தன இதன் கற்கள் பாளம் பாளமாக இருந்தது.எளிதாக உடைத்துவிடலாம் போல் தோனியது.பாலைவன மத்தியில் இந்த மலைகளால் அந்த இடம் கொஞ்சம் குளுமையாக இருப்பதாக தோனியது.







இன்று வரை மணல் கலந்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் அந்த மலைகளின் மேல் மணல் துகள்கள் படிவுகளை காணமுடிகிறது.

ஒரு வழியாக மாலை 4.15க்கு கடற்கரையை வந்து சேர்ந்தோம்,அவ்வளவாக கூட்டம் இல்லை.சில சேட்டன்மார்கள் மட்டும் கழுத்தளவு ஆழத்தில் நின்றுகொண்டு பந்து விளயாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.






ஒரு பக்கம் மலை மறு பக்கம் போர்ட் இதற்கிடையில் தண்ணீர், அலைகூட இல்லாமல் குளம் மாதிரி அமைதியாக இருந்தது.குளிப்பதற்கு பயமில்லாமல் குளிக்ககூடிய கடல் இது.அங்கு ஒரு படகை வைத்து ஒருவருக்கு 6 திராம் என்ற கட்டணத்தில் கடலில் கொஞ்ச தூரம் சென்று திருப்பி கொண்டுவிடுகிறார்கள்.ஒரு பங்களாதெஷி தான் ஓட்டுனர்.சுகமாக இருந்தது.

மாலை ஆறு மணிவரை தண்ணீரில் இருந்துவிட்டு பிறகு அங்கிருக்கும் ஒரு கடையில் பர்கரும் ஒரு குளிர்பானமும் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.பர்கர் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு சோகமாகி போகவேண்டிய நிகழ்ச்சி- தப்பித்தது 4 வயது பெண் குழந்தை.பெரியவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த குட்டிப்பெண் தன் அண்ணனை தேடி சாலை குறுக்கே போய் முதல் லேனில் நிற்க எதிரே வேகமான கார்-ஹாரனுடன்,நல்ல வேளை குழந்தை காரை நோக்கி ஓடாமல் நான் கத்தியதை பார்த்து என்னை திரும்பிப்பார்க்க...உடனே ஓடி அப்படியே அலேக்காக தூக்கி மறுபக்கம் வந்துவிட்டேன்.அவளின் பக்கத்தில் நான் இருந்ததால் செய்யமுடிந்தது.அவளின் அப்பா அப்படியே சிலையாகி என்னசெய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்.நம்மில் பலர் இந்த மாதிரி சம்யங்களில் எல்லாம் உறைந்து போவதை பல முறை நானே அனுபவித்திருக்கேன்.மூளை சொல்லும் வேகத்தில் நம்மால் செயல்படமுடிவதில்லயா? யோசிக்க வேண்டிய விஷயம்.

மறுபடியும் நீண்ட சாலைகள் வழி நெடுக மின்விளக்குகள், வாகனம் ஓட்ட பிரச்சனையே இருக்காது என்று நினைத்தால் தவறாக முடிய பல சான்ஸ் கொட்டிக்கிடக்கிறது.

பாதிவழியில் சித்தப்பா பையனுக்கு கொஞ்சம் மூடு அதிகமாகிவிட்டது போலும்,வண்டின் வேகத்தை 120,130,140,150,160.........165 என்று ஓட்டிக்காண்பித்தான். வண்டி 165 யில் ஓடிக்கொண்டிருக்கும் போது "பளிச்" என்று ஒரு மின்னல்.

இங்கு ரேடார் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டை மீறும் வண்டிகளை பிடிக்க நிறுவியிருக்கும் கேமிரா தன் பணியை செய்திருக்கும் போல் இருக்கு.இதுவரை அங்கிருந்து கடிதம் வரவில்லை என நினைக்கிறேன்.என்ன மூனு பாயின்ட் மற்றும் கட்டணம் கட்டவேண்டியிருக்கும்.

அவரின் தங்கமணிக்கு பயங்கர கோபம், மீதி பயணம் முழுவதும் அசாத்திய மௌனமாக கழிந்து வீடு திரும்பிய போது நள்ளிரவையும் கடந்திருந்தது.

Wednesday, October 08, 2008

புளகாங்கிதம்

துபாய்க்கு வந்து 20 நாளாகிறது,ஒவ்வொன்றாக சரி செய்யும் பணியில் இறங்கியிருக்கேன்,இதற்கிடையில் நண்பர்கள் குழாமும் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது।வலைப்பதிவர்கள்,உறவினர்கள் என்று பலர் எண்கள் தொலைப்பேசியை நிரப்ப ஆரம்பித்துள்ளது.

நேற்று வரை காலை நேரத்தில்,என் சித்தப்பா பையன் தன்னிடைய மகிழுந்துவில் என்னை என் வேலையிடத்தில் இறக்கிவிட்டு விடுவான், மாலை பேருந்து பிடித்து வீடு திரும்பிவிடுவேன்.என்னுடைய வேலையிடத்தில் இருந்து வீட்டுக்கு வர நேரடியாக பேருந்து இல்லை என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளும் புது புது தடங்களை பிடித்து அதன் மூலம் நிலவியலை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.எப்போதும் போர்ட் சயீட் (Port Saeed)வரை பேருந்தில் போய் அங்கிருந்து நடந்தே வீட்டுக்கு வந்துவிடுவேன்.நடைக்கு நடை அதே சமயத்தில் உடற்பயிற்சியுமாகிவிடும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தடம் எண் 34 ஐ எடுத்தேன்,இந்த பேருந்தும் அவ்வழியே தான் போனது,நான் இறங்கும் இடத்தில் வேண்டுமென்றே இறங்காமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம் என்று காத்திருந்தேன்.பேருந்து போகுது போகுது போய்கொண்டே இருந்தது,ஏனென்றால் அதற்கு அடுத்த நிறுத்தம் பக்கத்தில் ஏதும் இல்லை என்பதே.என்ன பிரச்சனையோ வீதியெங்கும் கார்கள், ஆமை வேகத்தில் சென்று நான் போகும் நேரத்தை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருந்தன.மாலை 6.03 ஏறிய நான், தடம் மாறிய இடத்தில் இறங்கும் போது மாலை 7 மணி.
நான் இருக்கும் வீட்டுக்கு போக எதிர்சாரியில் போய் அங்கிருந்து பேருந்து பிடிக்கவேண்டும்.சாலையை தாண்டி அந்த பக்கம் நடந்தேன்.இங்கு சாலையில், வேலை நடக்காத இடமே கிடையாது போலும். மெட்ரோ என்று சொல்லப்படுகிற ரயில் வண்டிக்கான தடம் சாலையின் மத்தியில் தயாராகிக்கொண்டு வருகிறது,அதற்காக அங்கங்கெங்கே சாலை தடுப்புகளை உருவாக்கிவைத்துள்ளார்கள்.அனேகமாக இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் தயாராகிவிடும் போல் உள்ளது.
இந்த பக்கம் மீண்டும் பேருந்துக்காக காத்திருந்தேன், பேருந்துகள் வந்தவுடன் நம்மூர் மாதிரி முட்டி மோதித்தான் ஏறவேண்டும் ஆனால் பெண்களுக்கு சிலர் சலுகை காட்டி கொஞ்சம் வழிவிடுகிறார்கள்.சில பேருந்துகளில் குறிப்பிட்ட அளவு தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.ஓட்டுனர் ஏறுவதற்கு முன்பே எவ்வளவு பேர் ஏறவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.சில பேருந்துகள் இவ்வாறு கட்டாயப்படுத்துவதில்லை.பேருந்துக்கான கட்டணம் 2 திராம்,எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம்.சிங்கை மாதிரி கார்டை தட்டி பிரயாணம் செய்யும் வசதி இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் ஓட்டுனரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கவேண்டியுள்ளது.ஏறும் பாதையில் இரண்டு கதவுகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் திறந்து ஏறுபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.

ஒருவழியாக 20 நிமிடங்கள் கழித்து ஏற இடம் கிடைத்த பேருந்தில் ஏறி வீட்டுக்கு பக்கத்தில் இறங்கினேன்.மணி 7.40. பேருந்து நிறுத்ததில் உள்ள பலகையில் அங்கு வரும் பேருந்துகளின் எண்கள் குறிக்கப்பெற்று இருக்கும் அதில் ஏதேச்சையாக பார்த்த போது நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வரும் ஒரு பேருந்தும் இருந்தது.அது தான் தடம் எண் 48.அதை பார்த்தவுடன் ஒரு பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததாக புளகாங்கிதம் அடைந்தேன்.இனிமேல் சித்தப்பா பையனை கொண்டுவிடச்சொல்ல வேண்டாம் என்று அவன் திரும்பி வந்ததும் சொன்னேன்.சரி முயற்சித்துப்பார் என்றான்.

இன்று காலை வழக்கம் போல் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு பஸ் நிறுத்தத்துக்கு 7.08க்கு வந்தேன்.சுமார் 30பேரில் இருந்து 50 பேர் வரை பல தேசத்து மனிதர்களும் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.சில சேர்ந்தே வந்தது,சில சேர்ந்தே வந்தாலும் நிற்காமல் போனது.என்னுடைய தடம் 48 மட்டும் கண்ணிலேயே காணும்,அதற்குள் என் உறவினர் கூப்பிட்டு பஸ் கிடைத்ததா? என்றார்,விபரம் சொன்னவுடன் நான் அங்கு வருகிறேன் அதற்குள் பஸ் வந்தால் போய்விடு இல்லாவிட்டால் நான் உன்னை கூப்பிட்டு போகிறேன் என்றான்.
மணி 7.40.. பஸ் வரவில்லை

மணி 8.00 பஸ் வரவில்லை.. தெருவே ஓ! என்று இருக்கிறது.



மணி 8.14 இப்போது தான் 48 தடம் வந்தது.சுமார் 78 நிமிடங்கள் பஸ் நிறுத்தத்திலேயே கழிந்தது.இதற்கிடையில் என் உறவினர் வந்துவிடுகிறேன் என்று சொன்னதால் பேருந்தில் ஏறாமல் அவருக்காக காத்திருந்து 8.45 க்கு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

இதை "குசும்பனிடம்" சொன்ன போது... இதெல்லாம் சகஜம் என்றார்.அனுபவம் பேசுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் முன்னாள் லண்டன் மேயர் பொது போக்குவரத்தை மேம்படுத்தி வசதி குறைந்த மக்களுக்கு உதவுமாறு செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்,அப்போது நினைத்தேன் இவருக்கும் ஏன் இந்த வேலை என்று?

இப்போது புரிகிறது. :-)
பி.குறிப்பு: ஓட்டுனர்களுக்கு பெரிய தேவை இங்குள்ளது விருப்பமுள்ளவர்கள் அவர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, October 07, 2008

ஊர் சுற்றல். (துபாய்)

துபாய் வந்த முதல் நாள் இரவு தூக்கத்தில் போய்விட்டது.கால வித்தியாசம் அவ்வளவாக தெரியாமல் மறுநாள் காலை எட்டு மணிக்கு தான் எழுந்தேன்.இன்று இங்கு விடுமுறை என்பதால் (எனக்கு) மெதுவாக வேலைகளை முடித்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு..சரி அப்படியே காலார நடந்துவிட்டு வரலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கொஞ்சம் திராமை பையில் வைத்துக்கொண்டு கிளம்பினேன்.எவ்வித இலக்கும் இல்லாமல் கால் போன போக்கில் காலை சுமார் பதினோரு மணிக்கு கிளம்பினேன்.

சரியான வெய்யில்; இருந்தாலும் காற்று அடித்துக்கொண்டு இருந்த்தால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை.பல குறுக்கு சந்துகள் மற்றும் சாலைகளை கடந்துபோய்கொண்டிருந்தேன்.ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு வீட்டிலும் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.மரம் என்று அங்கங்கே பேரிச்சை மரம் மற்றும் வேப்ப மரங்கள் இருந்தன.அந்த நிழலில் சில தொழிலாளர்கள் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள்.
ரமலான் மாதம் என்பதால் பொலிவிழந்த கடையின் வியாபரம் அப்பட்டமாக தெரிந்தது.

என்கெங்கோ சுற்றிய பிறகு, தண்ணீரைத் தேடி ஓடும் ஆமைக்குஞ்சு மாதிரி,கிரீக் என்று சொல்லப்படும் தண்ணீர் பகுதியை அடைந்தேன்.படகுகளையே உணவகமாக மாற்றி வைத்திருக்கும் பல படகுகளை கரையில் அனைத்துவைத்திருந்தார்கள்.நோன்பு நேரம் என்பதால் எதிலும் ஆள் நடமாட்டம் இல்லை.
இப்பொது தான் கொஞ்சம் வெப்பத்தின் மகிமை தெரிந்து ஏதாவது குடிக்கலாம் என்று தோனியது.பொது இடங்களில் அவ்வாறு செய்யக்கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம் இருந்தது,தாகத்தோடு அதற்கு எதிர்புறம் உள்ள சாலையை கடந்து ஒரு அங்காடி உள்ளே நுழைந்தேன்.குளிர்பதனப்பட்ட கடைத்தொகுதி என்பதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது.கடைத்தொகுதியில் உள்ள ஒரு சுற்றுலா அட்டையில் அங்குள்ள மியூசியம் பற்றி போட்டிருந்தார்கள்.எங்கு போவது என்ற இலக்கு இல்லாத்தால்,சரி மியூசியம் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அங்கு கொஞ்சம் சுற்றிய பிறகு வெளியில் வந்த போது ஒரு சேட்டன் இன்னொருவரிடம் ஐசிஐசிஐ வங்கியின் கணக்கு திறக்க வழிமுறைகளை சொல்லி அவரிடம் ஒரு கணக்குக்காக மன்றாடிக்கொண்டு இருந்தார்.சேட்டனிடம் மியூசியத்துக்கான வழியை கேட்டேன்,அதற்கு அவர் நீங்கள் கிரீக்குக்கு அந்த பக்கம்(பர் துபாய்) போகனும் என்றார்.பேருந்து உண்டா? என்றேன்.இருக்கும் என்றார்,அதற்கு மேல் அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதால் நகர்ந்துவிட்டேன்.
இதுவரை நடந்துவந்துகொண்டிருக்கும் போதே வழி நெடுகிலும் அங்கெங்கே பே போன் என்று சொல்லப்படும் தொலைப்பேசிகள் இருந்தன ஆனால் அதில் பல அரத பழசாக இருந்தது.கையடக்க தொலைப்பேசி வந்துவிட்டதால் இதை யாருமே கண்டுகொள்ளவில்லை போலும்.அங்கு இங்கு என்று தேடி இதில் போட உபயோகிக்கும் தொலைப்பேசி அட்டையை ஒரு கடையில் வாங்கினேன்,அப்போது ஒருவர் ஒரு குளிர்பான பாட்டிலை வாங்கி மறக்காமல் ஒரு நெகிழிப் பையில் போட்டு மறைத்து எடுத்துப்போனார்.
புரிந்த்து.

நானும் அதே மாதிரி செய்து தண்ணீர் தாகத்தை தணித்துக்கொண்டேன்.

நான் வாங்கிய அட்டையை பல தொலைப்பேசியில் போட்டும் ஏதோ காரணத்தால் பேசமுடியவில்லை,பிழைச்செய்தியுடன் நின்றது.சரி நமக்கு தான் தெரியவில்லை என்று பக்கத்தில் உள்ள கடைத்தொகுதியில் தமிழ் வாசனை அடிக்கும் ஒருவரிடம் கேட்டேன்,இப்படி அட்டையை போடுங்க பிறகு அங்கு உள்ள திறையில் வரும்படி செய்யுங்கள் என்றார்.அதையே தான் அட்டையிலும் எழுதியிருக்கிறார்கள் ஆனால் திறையில் எதுவும் வரவில்லை என்றேன்.மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து மற்றொரு போனில் போட்டு திரையில் ஒன்றும் வராத நிலையில் 0 போட்டு அழைத்த போது தொடர்பு கிடைத்தது.என்னவோ போங்க என்று மனதுக்குள் நினைத்து நான் முன்னமே சொல்லாத உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் பேசினேன்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்,இப்படி ஒவ்வொரு மகிழுந்து நிறுத்தும் இடத்துக்கு பக்கத்தில் ஒட்டகம் மாதிரி நிறுத்திவைத்துள்ளார்கள்.மகிழுந்து நிறுத்தும் கட்டணம் இதன் மூலம் வசூலிக்கிறார்கள்,இது நம்ம சூரியனார் கொடுக்கும் வெப்பத்தின் மூலம் இயங்குகிறார்.



காலை முதல் மாலை வரை வாரி வழங்கும் சூரிய வெப்பம் இரவுக்கு சரியாக இருக்கும் போல்.

இன்னும் தொடரும்.....

Thursday, October 02, 2008

துபாய்க்கு வந்தாச்சு.

போன வெள்ளிக்கிழமை (19.9.08)சிங்கப்பூர் விமானச்சேவை மூலம் மாலை 4.50க்கு கிளம்பவேண்டிய வானூர்தி ஏதோ சிறு மின்சேவை கோளாற்றால் சுமார் 3 நிமிடம் தாமதமாக கிளம்பி ஓடு பாதைக்கு வந்தது.விமானம் முழுவதும் நிரம்ப இன்னும் சிலரே தேவைப்படுவதை பார்க்கும் போது இந்த தடத்தில் இவ்வளவு பேர்களா? என்று ஆச்சரியப்பட்டேன்.பயணச்சீட்டு போடும் போதே ஜன்னல் சீட்டு வேணும் என்று கேட்டது தப்போ என்று நினைக்கும் படி கே 61 ஆதாவது வானூர்தின் கடைசி இருக்கை கொடுத்திருந்தார்கள்.பக்கத்துக்கு சீட்டுக்கு ஆளில்லாததால் கொஞ்சம் சௌகரியமாக இருந்தது.




கிளம்பிய உடனே மலேசிய எல்லை வந்துவிடுவதால் ஜோகூர் வழியாக அப்படியே நேராக போய் இந்தோனேசியாவின் வட எல்லையை தொட்டுவிட்டு இந்தியா பக்கம் போகிறது.7 மணி நேரப்பயணம் அலுங்காமல் குலுங்காமல் சென்னை/பெங்களூர் வழியாக துபாய் வந்தடைந்தது. இரவு 8.05க்கு இறங்கவேண்டிய விமானம் சுமார் 7.50க்கே இறங்கியிருந்தது.

சென்னைக்கு மேல்




மாலை நேர வெய்யில் என்பதால் இந்த அந்தமான் நிகோபார் தீவை காணமுடிந்தது.





சென்னை முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் எதையும் பார்க்கமுடியவில்லை.10000 மீட்டருக்கு மேல் அவ்வளவாக மேகம் இல்லை.முன்பக்கம் இருக்கும் சின்னத்திரை மூலம் விமானம் பயணப்படும் இடமும் வேகமும் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.துபாய் நிலையை தொடுவதற்கு முன்பே அங்குள்ள சீதோஸ்ண நிலையை சொல்லி அவர்கள் நாட்டு நேரத்தையும் சொன்னார்கள்.சிங்கைக்கும் துபாய்க்கும் 4 மணி நேர வித்தியாசம்.



பூத் நாத் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.





துபாய் இறங்க 20 நிமிடங்கள் இருக்கும் போது வெளியில் நீள் கோட்டில் மஞ்சள் விளக்குகள் தென்பட்டன,அது சாலையாக இருக்ககூடும் என்று தோன்றினாலும் அருகில் ஒரு கட்டிடமும் காணப்படவில்லை.இவ்வளவு நீள சாலைக்கு இந்த மாதிரி ஏன் விளக்கைப்போட்டு மின்சாரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.இதற்கான விடையை அடுத்த வாரம் அந்த சாலையில் பயணிக்கும் போது தெரிந்துகொண்டேன்.

இறங்கிய சில வினாடிகளில் விமானத்தைவிட்டு வெளியே வந்தேன்,நடந்தேன் நடந்தேன்.. நடந்தேன் ... சுமார் 20 நிமிடங்கள்,அவ்வளவு பெரிய நடை அத்யன் பிறகு 3 மாடி அளவுக்கு கீழிறங்க வேண்டியிருந்தது.வயதானவர்களுக்கு சிறிது கஷ்டமாக இருக்கும்.3 மாடி கீழிறங்கிய பிறகு மீண்டிம் நடை,இப்பகுதியில் ஓரிடத்தில் வயதானவர்களுக்கு இலவசமாக வண்டி இருப்பதாக ஒரு அறிவிப்பை பார்த்தேன் ஆனால் வண்டி எதுவும் கண்ணில் படவில்லை.‌

பெட்டி சேகரிக்கும் இடத்துக்கு போகும் போது அனிச்சையாக இடது பக்கம் திரும்பிய போது விசா கொடுக்கும் இடம் என்று போட்டிருந்தது,அதில் பல நாடுகளை பிரித்துவைத்து பாக்கிஸ்தானையையும் இந்தியாவும் இணைத்துவைத்திருந்தார்கள்.கூட்டம் அதிகமாக இல்லாத்தால் ஒரு முத்திரை குத்திவிட்டு கண் விழிப்படலம் பிடிப்பதற்கு பக்கத்தில் அனுப்பினார்கள்.சரியான தகவல் பலகைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.ஆங்கிலம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாமல் இருப்பதும் புதியவர்களுக்கு ஒரு சவால்.
எல்லாம் ஒருவழியாக முடிந்து வெளியில் வரும் போது இரவு 8.35தாகியிருந்தது.சித்தப்பா பையன் ,மனைவி மற்றும் குழந்தைகள் வந்து வரவேற்றது நெகிழ்வாக இருந்தது.


காரில் 10 நிமிடங்களுக்கு பயணம் செய்து வீட்டை அடைந்தேன் அன்றிரவு பக்கத்திலேயே இருந்த சரவன பவனில் விருந்துடன் முடிந்தது...துபாயில் முதல் நாள்.

கணினி கைவசப்படாததால் இந்த பதிவை வெளியிடத்தில் இருந்து பண்ணவேண்டியிருந்தது.
மற்றபதிவுகள் கொஞ்சம் தாமதமாகவே வரும்,பொருத்துக்கொள்ளுங்கள்.